முகப்பு தினதியானம் தேவப்பிரியர்

தேவப்பிரியர்

யூன் 09

“தேவப்பிரியர்.” ரோமர் 1:2

தேவப்பிரியர் இன்னாரென்று எப்படித் தெரியும். இயேசுவில் அவர்கள் வைக்கும் விசுவாசத்தினாலும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதனாலும் தெரியும். தேவப்பிரியர் என்ற பெயர் கிடைப்பது பெரிய சிலாக்கியம். இதுவே எல்லா நன்மைகளுக்கும் காரணம். தேவப்பிரியர் என்பது தேவனை சிநேகிப்பதினாலும் அவருடைய மகிமைக்காக வைராக்கியம் காட்டுவதினாலும் தெரிந்துக்கொள்ளக்கூடியது. அவரின் சித்தம் செய்து பொறுமையாய்ச் சகிக்கிறதினாலும் தெரிந்துக்கொள்ள முடியும். அவர்களுக்குக் கிடைக்கும் மேன்மை என்ன? அவர்கள் தேவனுடையப் பிள்ளைகளாகிறார்கள். இயேசுவுக்குச் சகோதரராக ஒப்புக்கொள்ளப்படுகிறார்கள். தேவனுக்குக் கூட்டாளிகளாக அவரோடு சஞ்சரிக்கிறார்கள். அவர்களுக்குள் ஆவியானவர் தங்கியிருக்கிறார்.
திவ்ய செயல், அவர்களைத் தற்காத்து அவர்களுக்குத் துணை நின்று அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் சுதந்தரித்து வைத்திருக்கிறது. தேவத்தூதர்கள் அவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்கள். இவர்கள் சகலத்திற்கும் சுதந்தரவாளிகள். இவர்களுக்குக் கிடைப்பது என்ன? வெற்றி. எல்லா சத்துருக்களின் மேலும் ஜெயம். எல்லா அடிமை நுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வியாதிகளிலிருந்து சுகம் அடைவர்.

பரிசுத்த பாக்கியத்தைத் தேவனோடுகூட அனுபவித்து இயேசுவைப்போல் இருப்பார்கள். மகிமையின் சிங்காசனம், அலங்காரமான கிரீடம், மோட்சானந்த கின்னரம் அவர்களுக்குக் கிடைக்கும். இவர்கள் செய்ய வேண்டிய கடமை, தேவனுக்காகவும் அவர் ஊழியத்திற்காகவும் தீர்மானமாய் பிரயாசப்படுதல் வேண்டும். முழுவதும் தேவனுக்கும் அவர் ஊழியத்திற்கும் தங்களை ஒப்புவிக்கவேண்டும். அவர் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நியமங்களை நேசித்து நடக்க வேண்டும். அவருடைய சித்தத்தைப் பெரிதாக மதித்து, சகலத்திலும், அவருடைய ஜனங்களுக்கு ஒத்து நடக்க வேண்டும். இதை வாசிக்கிறவரே, நீர் தேவனுக்குப் பிரியமானவர்தானா? நீர் அவரை நேசிக்கிறீரா? அவரோடு சஞ்சரித்து வருகிறீரா?.

இயேசுவின் நாமத்தில் எழுந்து
அவர் கைமேல் சார்வேன்
அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து
என் அன்பைக் காண்பிப்பேன்.