ஓகஸ்ட் 17
“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” கொலோ. 4:2
எப்போதும் ஜெபம் அவசியம். அது எப்பொழுதும் பயனுள்ளதுதான். நாம் தேவனுக்கு முன்பாக நம்முடைய ஜெபத்தை சுருக்கி விடுகிறோம். இது பாவம். இது தேவனைக் கனவீனப்படுத்தி, நம்மை பெலவீனப்படுத்துகிறது. ஜெபிக்கும்போது தேவ குணத்திற்கு ஸ்தோத்திரம் சொல்லுகிறோம். அவர் எங்கும் இருக்கிறதை விசுவாசிக்கிறோம். நமது தேவைகளைச் சந்திக்கும் தஞ்சமாக நுழைகிறோம். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு உண்மையைத் தெரிந்தெடுக்கிறோம். ஜெபத்தில் உள்ளான எண்ணங்களைத் தேவனுக்குச் சொல்லுகிறோம். நமக்கு இருக்கும் சந்தோஷத்தையும், துக்கத்தையும், நன்றியையும், துயரத்தையும் விவரித்துச் சொல்லுகிறோம். நமது குற்றங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்று தேவனிடம் கிருபையைப் பெற்றுக் கொள்ளுகிறோம். நமது விருப்பங்களை வெளியிட்டு நம்முடைய நிலையை அவருக்கு முன்பாக விவரிக்கிறோம்.
ஜெபம் என்பது தேவனுக்கும் நமக்கும் நடுவே செல்லுகிற வாய்க்கால். அதன் வழியேதான் நாம் தேவனுக்கு விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் தெரிவிக்கிறோம். அவர் நமக்கு அறிவையும், பலத்தையும், ஆறுதலையும், கிருபையையும் அனுப்புகிறார். ஜெபிப்பது நமது கடமை. இது பெரிய சிலாக்கியம். நமது வேலைகள் ஜெபத்தை அசட்டை செய்யும்படி நம்மை ஏவும். ஆனால் ஜெபத்தில் உறுதியாயும், கருத்தாயும், நம்பிக்கையாயும், விசுவாசமாயும், விடாமுயற்சியுள்ளவர்களாயும், பொறுமையுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். தேவன் ஜெபத்தை விரும்புகிறார். சாத்தானோ அதைப் பகைக்கிறான். நாம் எப்பொழுதும் முழங்காலில் இராவிட்டாலும் ஜெபசிந்தை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். இது அவசியம், பிரயோஜனமானது. தேவன் அங்கிகரிக்கத்தக்கது. மெய்க் கிறிஸ்தவன் அதை மதிக்கிறான்.
ஜெபியாவிட்டால் கெடுவேன்
கிருபைத் தாரும் கெஞ்ச
உம்மைச் சந்திக்க வருகையில்
என்னிடம் நீர் வாரும்.