ஓகஸ்ட் 27
“தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்”. நீதி. 2:8
விசுவாசி நடக்க வேண்டிய பாதை சத்துருக்களின் தேசத்திலும் இருக்கிறது. இது மிக துன்பம் நிறைந்தது. இது மிகவும் களைத்துப் போகக்கூடிய பிரயாணம். வருத்தம் நிறைந்தது. விசுவாசியின் பெலவீனம் அதிக வருத்தத்தைக் கூட்டுகிறது. உள்ளான போராட்டமும் அவன் வழியைக் கடினப்படுத்துகிறது. ஆகிலும் நாம் சேர வேண்டிய நகரத்திற்கு அந்த ஒரு பாதைதான் உண்டு. இந்தப் பாதை இளைப்பாறுதலுக்கும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட சுதந்திரத்திற்கும் நடத்துகிறது. இந்தப் பாதையில் கர்த்தரும் தம்முடைய பரிசுத்தவான்களுடன்கூட நடக்கிறார். அவர்களின் குறைவுகளைப் போக்கி அவர்களுடைய நிலைமைக்குத்தக்கதாக இரக்கம் பாராட்டுகிறார்.
சத்துருக்கள் இவர்களை மேற்கொள்ள முடியாமல் தற்காக்கிறார். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை அவர்களுக்கு நேரிடுவதில்லை. தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையோடுகூட அதற்கு தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் என்று எக்கொடிய சோதனையைப்பற்றியும் சொல்லலாம். சாத்தான் உங்களைக் குற்றப்படுத்தும்போது பின்வாங்கிப் போகாமலும், பாதுகாக்கிறார். அவர்களுடைய பெலவீனத்தில் தம்முடைய பெலனைப் பூரணப்படுத்தி தம்முடைய கிருபை அவர்களுக்குப் போதும் என்று ரூபிக்கிறார். விழிப்பாய் அவர்களைக் கவனித்து பலத்த கையால் தாங்கி, அன்பான மனதால் அவர்களைத் தாங்குகிறார். அன்பரே, இன்றுவரை அவர் உங்களைப் பாதுகாத்து வந்ததை கவனித்துப் பாருங்கள். இனிமேலும் அவர் உங்களைப் பாதுகாப்பார் என்று நம்புங்கள். பரிசுத்தவான்களைப் பராமரிப்பதும் அவர்களின் பாதைகளைப் பாதுகாப்பதுமே அவருடைய வேலை.
இயேசுவின் கரத்தில் பக்தர்
என்றும் சுகமாய் இருப்பர்
அவரால் துன்பங்களைக்
கடந்து என்றும் சுகித்திருப்பர்.