முகப்பு தினதியானம் செப்டம்பர் ஏன் சந்தேகப்பட்டாய்

ஏன் சந்தேகப்பட்டாய்

செப்டம்பர் 06

“ஏன் சந்தேகப்பட்டாய்” மத். 14:31

இந்த வார்த்தை பேதுருவைப் பார்த்து கேட்கபட்டதென்றாலும் நமக்கும் ஏற்றதே. நம்மில் சந்தேகப்படாதவர், அடிக்கடி சந்தேகப்படாதவர் யார்? சந்தேகத்தை பாவம் என்று எல்லாருமே உணருகிறார்களா? ஆம், அது பாவம்தான். நம்முடைய சந்தேகங்கள் எல்லாமே அவிசுவாசத்திலிருந்து உண்டானவைகள்தான். இது ஆண்டவரின் அன்பு, உத்தமம், நீதி இவைகளின் பேரில் சந்தேகிக்கச் செய்கிறது. அவரின் வசனத்தைவிட வேறு ஏதும் தெளிவாய் பேச முடியுமா? அவர் வார்த்தையில் நம்முடைய நம்பிக்கை, சந்தோஷம், சமாதானம், இவைகளைக் காட்டிலும், திடமான அஸ்திபாரம் வேறு ஏதாகிலும் உண்டா?

தம்மிடத்தில் வருகிற எந்தப் பாவியையும் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பேன் என்று வாக்களிக்கவில்லையா? எந்தப் பரிசுத்தவானையும் அரவணைத்துப் பாதுகாத்து நடத்துவேன் என்று சொல்லவில்லையா? தம்முடைய மக்கள் செய்யும் விண்ணப்பங்களுக்கு உத்தரவு அருளுகிறவிதத்தை அவருடைய வசனத்தின்மூலமும், வேதாகமத்தின் சரித்திரங்கள்மூலமும் நடைமுறையில் காட்டவில்லையா? அவர் எப்போதாவது நம்மை மோசம் போக்கினதுண்டா? அவர் பரியாசம்பண்ணப்படத்தக்கவரா? அவர் மாறாதவர் அல்லவா? தேவ பிள்ளையே, உன் சந்தேகத்திற்குச் சாக்கு சொல்லாதே. சந்தேகிப்பது பாவம் என்பதை அறிக்கையிட்டு எப்பொழுதும் முழு இருதயத்தோடும் அவரை நம்பக் கிருபை தரவேண்டும் என்று ஜெபித்து கேள். சந்தேகம் ஆத்துமாவைப் பெலவீனப்படுத்தும், ஆவிக்கு ஆயாசம் உண்டாக்கும் சந்தேகம், கீழ்ப்படிதல் தடுத்துப்போடும். ஆகவே, அதை எதிர்த்து போராடு.

எப்பக்கம் எனக்குச்
சத்துருக்கள் மிகுதி
அபயம் என்ற தேவவாக்கு
இருப்பது என்றும் உறுதி.