முகப்பு தினதியானம் டிசம்பர் எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்

எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்

டிசம்பர் 08

“எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்” ஓசியா 8:2

தேவனை அறிந்திருப்பது மிகவும் நல்லது. அவர் நமக்குப் போதிப்பதினால், நாம் அவரை அறிந்துகொள்ளுகிறோம். இயேசுவே நாம் அறிந்துகொண்டால்தான் நாம் தேவனை அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், அவர்தான் பிதாவை நமக்கு வெளிப்படுத்தினார். வேத வசனம் அவரை வெளிப்படுத்துகிறவிதமாய், இயேசுவை சுவிசேஷங்கள் வெளிப்படுத்துகின்றன. அவ்வண்ணமாக அவரை அப்படியே அறிந்துகொள்வோமானால். அந்த அறிவு நமக்கு மகிழ்ச்சியையும் ஞானத்தையும் தரும். நமக்கு அமைதியும் கிடைக்கும், அப்பொழுதுதான் அவருடைய இரக்கம், உருக்கம், தயவு, வல்லமை, அன்பு, நட்பு, உபகாரச் சிந்தை ஆகியவையும் வசனத்தின்மேல் நமக்கு நம்பிக்கையும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்மேல் நாம் நம்பிக்கை கொண்டால் அவருடைய தன்மைகளை நேசிப்போம். அவருடைய மக்களோடு ஐக்கியம் கொள்வோம். ஜெபிப்போம், வேத வசனத்தின்படி நடப்போம். தொடர்ந்து அவற்றைத் தியானிப்போம். அவரின் சித்தத்தில் பிரியப்படுவோம். நித்திய ஜீவனைப் பெறுவோம். இயேசு சொன்னார், ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். நாம் தேவனை அறிந்துகொள்ள வேண்டுமானால், அவருடைய வசனத்தை அறிய வேண்டும். அவருடைய செயல்களைக் கவனிக்க வேண்டும். அவருடைய பணிகளைச் செய்ய வேண்டும். அவருடைய தூய ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும். இன்றிரவு நாம் தேவனிடத்தில், தேவனே நான் உம்மை அறிந்து இருக்கிறேன். உம்மிடம் மிகவும் அன்பு செலுத்துவேன் என்று சொல்லக்கூடுமா?

தேவாவியே வாருமே
உம் வார்த்தை தெளிவாக்குமே
தேவனே அறியக் காட்டிடும்
கர்த்தாவே, உம்மைக் காட்டிடும்.