முகப்பு தினதியானம் செப்டம்பர் அதனால் என்னை மறந்தார்கள்

அதனால் என்னை மறந்தார்கள்

செப்டம்பர் 19

“அதனால் என்னை மறந்தார்கள்” ஓசியா 13:6

ஆண்டவர் இஸ்வேலரை ஏன் கானான் தேசத்திற்குக் கொண்டுவந்தார்? அவர்களுக்கு ஏன் வளமான, செழிப்பான வாழ்வைத் தந்தார்? அவர்கள் அவருடைய மக்கள் என்பதற்காகவே. ஆனால் அவர்கள் தன்னலத்திற்கு இடம் கொடுத்து, பெருமையையும், மேட்டிமையையும் அடைந்தார்கள். அவர்களுக்கு எண்ணிலடங்கா நன்மைகளைச் செய்த தேவனை மறந்தார்கள். நாம் எப்பொழுதும் துன்பத்தை அல்ல நன்மையையே நாடித் தேடுகிறோம். ஆனால் சோதனைகளை அனுபவித்து வெற்றி பெற்றவர்களோ, நன்மையோ தீமையோ எது வந்தாலும் ஒரே சீராக இருப்பார்கள். நம்முடைய இதயம் தேவனைவிட்டு வழுவிக் கீழான காரியங்களில் பாசம் வைக்கிறது. மாம்ச இச்சைகளுக்கு இடம் கொடுக்கும்பொழுது ஆவிக்குரிய கடமைகளுக்கும், முயற்சிகளுக்கும் தகுதியில்லாதவர்களாகிறோம். பரத்துக்கடுத்த காரியங்கள் நமக்கு மகிழ்வளிப்பதில்லை. மாம்சத்தைப் பெரிதுபடுத்துவதில் பலன் இல்லை.

தேவ கிருபையையும், அவர் நமக்குச் செய்த சிறப்பான நன்மைகளையும் மறந்துவிடுகிறோம். தேவனுக்குரிய கடமைகளைச் செய்யத் தவறிவிடுகிறோம். நமது இருதயம் கடினமாகிறது. தேவ அன்பை மறந்துவிடுகிறோம். நமது மனட்சாட்சி மழுங்கிவிடுகிறன. மனம் கடினமாகிறது. இவ்வாறு நாம் ஆவதற்குச் சாத்தானும் துணை செய்கிறான். வேதவசனங்களையும், வேதவசனங்களையும், தேவனுடைய கிருபாசனத்தையும் வெறுக்கிறோம். ஜெபவாழ்வு மறைகிறது. உலகப்பற்று அதிகமாகிறது. அன்பரே, நமக்கு ஆண்டவர் காட்டின அன்பையும், நாம் அவருக்குச் செய்யவேண்டிய கடமைகளையும் மறவாதிருப்போம். நம்முடைய தவறுகளை உணர்ந்து, விழிப்புடன் இருப்போம். நன்றியறில் உள்ளவர்களாக வாழ்வோம். மரணபரியந்தம் நம்மை நடத்தவல்ல ஆண்டவரை மறவாதிருப்போம்.

உம் நல்ல பாதைதனை விட்டேன்,
சமாதானமின்றிக் கெட்டேன்
இயேசுவின் பாதம் இனிப்பிடிப்பேன்
மீண்டும் சுகித்து வாழ்ந்திடுவேன்.