முகப்பு தினதியானம் ஜனவரி என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்

என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்

ஜனவரி 14

“என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்”  சங் 17:5

நமது பாவங்களும், தவறுகளும், நஷ்டங்களும், புத்தியீனங்களும் மன்னிக்கிற தேவனண்டையில் நம்மை நடத்த வேண்டும். தேவ வல்லமையையும் தேவ ஞானத்தையும் பெற்றுக்கொள்ள அதுவே சிறந்த வழி. முறிந்த வில்லைப்போல் பலவீனர்களாயிருக்கலாம். அநேகர் விழுந்தார்கள். அநேகர் விழலாம், அல்லது பின்வாங்கி போயிருக்கலாம். சோதனைகள் வரும்போது விழுந்துவிட கூடியவர்களாய் இருக்கலாம். சாத்தான் விழித்திருக்கிறான்.சோதனைகள் கடுமையாகி, நமது பலவீனமான வாழ்க்கையைச் சோதிக்கும்போது கர்த்தரிடத்தில் வந்து அவரை அண்டிக்கொள்வோம். அனுதினமும் என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும் என்று ஜெபிப்போமாக. எந்த வேளையிலும் சோதனையிலும் கொந்தளிப்பிலும், அமைதியான வேளையிலும் நம்முடைய நடைகளை அவர் ஸ்திரப்படுத்தவேண்டும்.

கர்த்தர் நம்மை தாங்கிவிட்டால் நாம் துணிகரத்தில் விழுந்துவிடுவோம். அல்லது அவிசுவாசத்தில் மாண்டு போவோம். சுய நீதியையும் பெலத்தையும் பாராட்டுவோம். அக்கிரமத்தில் விழுந்து பின்வாங்கி போவோம். இன்றுவரை கர்த்தர் நம்மை காத்தால்தான் நாம் பத்திரமாய் இருக்கிறோம். நமது பலவீனத்தையும் சுயத்தையும் அவரிடம் ஒப்படைத்து அவரின் பெரிய ஒத்தாசையை நாடும்போது அவரின் பெரிய பெலத்தைப் பெறுவோம். நம்மையும் உலகத்தையும் நம்பும்போது நாம் விசுவாசத்தைவிட்டு விலகி விடுவோம். மன தாழ்மையோடும் விசுவாசத்தோடும் அவரிடம் வரும்போது நமது பாதைகளைச் செம்மையாக்கி விசுவாசத்தில் நிற்கவும் பெலன் தருகிறார்.

அன்பானவர்களே, தேவ ஒத்தாசையை அனுதினமும் தேடாவிட்டால் சாத்தானால் ஜெயிக்கப்பட்டு மோசம் போவீர்கள். உங்களைப் பரிசோதித்துப் பாருங்கள். விழித்திருந்து ஜெபியுங்கள்.

சுத்த தேவ ஆவியே
சுத்தம் ஞானம் தாருமேன்
மோசம் அணுகும்போது
என்னைத் தாங்கும் அப்போது.