முகப்பு தினதியானம் நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்

நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்

யூன் 23

“நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.” நீதி. 11:28

இவர்கள் இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கர்த்தர் தமது நீதியைக் கொடுக்கிறார். அவர்களில் அவர் தம்முடைய ஆவியை வைத்திருக்கிறார். கிறிஸ்துவினால் நீதிமான்களாய் தேவ சமுகத்தில் நிற்கிறார்கள். அவர்கள் மனிதர்முன் நேர்மையாய் நடந்து தேவ மகிமைக்காக கனி கொடுக்கிறவர்கள். மரத்தின் வேருக்கும் கிளைகளுக்கும் உள்ள உறவுப்போன்று அவர்கள் இயேசுவோடு இணைக்கப்பட்டு, ஐக்கியம் கொள்கின்றனர். அவரால் ஆதரிக்கப்பட்டு, அவருடைய நிறைவிலிருந்துத் தங்களுக்குத் தேவையானதப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ஜீவன், அழகு, பெலன், செழிப்பு ஆகியவைகளுக்கு அவர்தான் ஊற்று. கிறிஸ்துவை விட்டுப் பிரிந்தால் அவர்கள் கனியற்று வாடிப் பட்டுப்போய்விடுவார்கள்.

அத்திமரச் சாறானது எப்படி கிளைகளுக்கு போகிறதோ அப்படியே அவர்களுக்கு வேண்டியதை அவர் கொடுக்கிறார். மேலும் தமது கிருபையாகிய பனியையும், ஆசீர்வாதமாகிய மழையையும், அவர்கள்மேல் பொழியப்பண்ணுகிறார். ஆகவே, இவர்கள் செழிப்பாகி கனி கொடுத்து வளர்கிறார்கள். அவர் அவர்களைத் துன்பத்தினால் நெருக்கினாலும் அதிக கனிகளைக் கொடுக்கும்படித்தான் அப்படி செய்கிறார். கோடைக்காற்று கிளைகளை ஒடித்து, மூடுபனி அவைகளை முறித்தாலும், அவர்களின் ஜீவனோ வேரில் இருக்கும். அது கிறிஸ்துவோடு தேவனில் மறைந்திருக்கிறது. அன்பர்களே! கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருப்பதனால் நாம் செழிப்புள்ளவர்களாகிறோம் என்பதை கவனியுங்கள். நமது மார்க்கம் மெய்மார்க்கம் என்பதற்கு இது அத்தாட்சி.

நீதியின் விருட்சங்களாய்
ஒங்கி வளருவோம்
விசுவாசம் அன்போடு
பரதீசில் கனிகொடுப்போம்.