அக்டோபர் 26
“அவர் மரணத்தைப் பரிகரித்தார்” 2.தீமோ.1:10
நமக்குப் பெரிய விரோதி மரணம். என்ன செய்தாலும் நாம் அதனிடமிருந்து தப்பிக்கொள்ள முடியாது. மரணம் உலகத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் வாரிக்கொண்டு போய்விடும். தேவ பிள்ளைகளையும்கூட அது விட்டுவைக்காது. நமது நண்பர்களையும், பிள்ளைகளையும்கூட அது விட்டுவைக்காது. நாம் அன்பாக நேசிக்கிறவர்களையும் அது நம்மிடமிருந்து அது பிரித்துவிடும். மரணம் மகா கொடிய பகைவன். நம்மைப் பயத்தால் நிரப்பி எப்பொழுதும் நம்மை நடுங்கச் செய்கிற நமது விரோதி. ஆனாலும் இந்த மரணச்சத்துருவுக்கு மேலான ஒரு பெரிய நண்பர் உண்டு. இந்த தயவுள்ள நண்பர் நம்மை நன்றாகத் தெரிந்தவர். அளவில்லாமல் நம்மை நேசிக்கிறார். நமக்கு இரக்கம் காட்டி, மனுக்குலத்தின் மீட்புக்காக தம்மையே ஒப்புக்கொடுத்தார். நம்மைத் தப்புவிக்க வேண்டுமென்று சந்தோஷமாகப் பூமிக்கு இறங்கி வந்தார்.
நமக்காகப் பெருந்துன்பத்தைச் சகித்தார். சொல்லிமுடியாத வண்ணமாகப் பாடுகள்பட்டார். இப்பாடுகளினால் நமது கடைசிச் சத்துருவாகிய மரணத்தை ஜெயித்தார். சாவின் கூரை ஒடித்தார். அவர் மரணத்தை ஜெயித்ததால், நாம் மரணத்திற்குப் பயப்பட வேண்டியதில்லை. மரணம் இப்பொழுது உறங்கிக்கிடக்கிறது. அதை அவர் மாற்றிப் போட்டதினால், அதைச் சிறையாக்கி, அதனால் சிறைப்படுத்தப்பட்டோரை விடுதலை செய்தார். அதன் பயங்கரத்தை நீக்கினார். இப்பொழுது அது திவ்விய மகிமை நிறைந்து அவர் சாவின் கூரை ஒடித்ததினால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார். நீதி திருப்தியடைந்தது. துரைத்தனங்களையும் வல்லமைகளையும் அழித்தார். சாத்தானுடைய கரங்களிலுள்ள திறவுகோலைப் பறித்து விட்டார். நித்திய இரட்சிப்பைச் சம்பாதித்தார். இயேசு நமக்குள் இருந்தால் நமக்குச் சாவு இல்லை.
நம் பரமநேசரை நம்பி
அவர் வாழ்க்கையைப் பின்பற்றினால்
மரணத்தின் பயம் நமக்கில்லை
கல்லறையும் அச்சுறுத்தாதே.