நவம்பர் 14
“அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்” அப். 9:11
பவுல் பரிசேயனாக இருந்தபொழுது எழுதப்பட்ட ஜெபங்களைமட்டும் வாசித்து வந்திருப்பான். இப்பொழுதுதான் அவர் மெய்யாகவே ஜெபம் செய்கிறான். இயேசு கிறிஸ்துவில் அவன் புதிய மனிதன் ஆனபடியினாலே அவனுடைய ஆவி புத்துயிரடைந்தது. ஆண்டவர்தாமே அவனுக்குப் போதகர். தனக்கு இரட்சிப்பு வேண்டும் என்று உணர்ந்து, அதற்காக ஜெபம்பண்ணினான். மறுபிறப்பு வேண்டும் என்று உணர்ந்து, அதற்காக ஜெபம்பண்ணினான். மறுபிறப்பு அடைந்தவர்கள்தான் மெய்யாகவே ஜெபம் செய்வார்கள். உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்துமாக்கள் தங்கள் இருதயதாபங்களைக் கர்த்தருக்கு முன்பாக ஊற்றிவிடுவார்கள். ஜெபம் இல்லாவிட்டால் தாங்கள் கெட்டுப்போவார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். ஜெபம் செய்யாவிடில் அவர்கள் சுமக்கும் பாரச் சுமைகளே அவர்களை நசுக்கிப்போடும். அவர்களது இதயம் நிறைந்திருக்கிறபடியால், உள்ளே உள்ள கருத்துக்களை வெளியே கொட்டவேண்டும். ஆதலால் நாம் ஜெபிக்கும்பொழுது ஜெபத்தில் நம் எண்ணங்களைச் சொல்லி ஜெபிக்க வேண்டும்.
வார்த்தைகள் வராவிட்டாலும் ஜெபிக்கலாம். ஏன் என்றால் ஜெபம் உள்ளத்திலிருந்து வருவது. உதடுகளிலிருந்தல்ல. இதை வாசிக்கும் நண்பனே, இதற்குமுன் நீ ஜெபம் செய்யவில்லை. அக்கிரமத்திலும், பாவத்திலும் செத்துக் கிடந்தாய். பரிசுத்த ஆவியானவரால் நீ உயிர்ப்பிக்கப்பட்டபொழுது, ஜெபம் செய்ய ஆரம்பித்தாய். ஆனால் இப்பொழுது அனலற்றுப் போனாய். நீ ஜெபிக்காவிட்டால் பிழைக்கமாட்டாய். கர்த்தர் தமது மக்கள் செய்யும் ஜெபங்களைக் கேட்டு, ஆச்சரியப்பட்டு, சபையைத் துன்புறுத்தின ஒருவனின் ஜெபத்தைக் கேள் என்று கூறுகிறார். ஜெபிக்கும் ஆத்துமாவை அவர் கவனிக்கிறார். ஆகவே, நீயும் இடைவிடாமல் ஜெபம் செய். ஜெபிக்கும் மனதைத் தாரும் என்று தேவனிடம் கேள்.
ஜெபமே ஜீவன்
ஜெபம் ஜெயம்
ஜெபிக்கும் அவா
தாரும் தேவா.