முகப்பு தினதியானம் ஏப்ரல் ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்

ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்

ஏப்ரல் 19

“ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்” மத். 15:25

இந்த வார்த்தை ஒர் ஏழை ஸ்திரீயினுடைய இருதயத்திலிருந்துப் பிறந்த ஜெபம் இது. கிறிஸ்துவின் இதயத்துக்குள் சென்றது. இது சுருக்க ஜெபமானாலும் சகலத்தையும் அடங்கிய ஜெபம். எந்த வேளைக்கும் இது ஏற்றதானாலும் சில சந்தர்ப்பங்களில் மிகவும் ஏற்றது. நமது பெலவீனத்தை அறிந்து உணருகிறது பெரிய இரக்கம். அப்போதுதான் கர்த்தரின் பெலனுக்காய் இருதயத்திலிருந்து கெஞ்சுவோம். நாம் செய்ய வேண்டிய எந்தக் காரியத்திலும், சகிக்க வேண்டிய எந்தச் சோதனையிலும், நாம் படவேண்டிய எத்துன்பத்திலும், ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபிக்கலாம். நமக்கு தேவ ஒத்தாசை தேவை. அதைக் கொடுப்பேன் என்று வாக்களித்திருக்கிறார். அதைத் தேடிப் பெற்றுக்கொள்வது நமது கடமை.

முழு மனதோடு இயேசுவுடன் இருக்க உதவி செய்யும். எப்போதும் சந்தோஷமாய் உமது சித்தம் நிறைவேற்ற உதவி செய்யும். எல்லா வருத்தங்களையும் கடந்து பரம அழைப்பிற்குரிய பந்தயப் பொருளை இலக்காக வைத்து ஓடும்படி கிருபை செய்யும். வாழ்வில் நன்றி நிறைந்த உள்ளத்தோடு உம்மைப் போற்றி தாழ்வில் பொறுமையாய் உமது சித்தம் தேட உதவி செய்யும். என் சத்துருக்களை ஜெயிக்க உதவி செய்யும். சோதனைகளை மேற்கொள்ள உதவி செய்யும். என் மரண நாள் மட்டும் உம் பாதத்தில் அமைதியோடு காத்திருக்க உதவி செய்யும் என்று தினந்தோறும் ஜெபிப்போமாக. இப்படி விசுவாசத்தோடு உணர்ந்து ஜெபிப்போமானால், கர்த்தர் எனக்குச் சகாயர், மனிதன் எனக்கு என்ன செய்வான். நான் பயப்படேன் என்று அனுதினமும் சொல்லலாம்.

கர்த்தாவே கிருபை புரியும்
நான் ஏதுமற்ற பாவி
உமக்காக உழைத்து மரிக்க
உமதாவி அளியும்.