முகப்பு தினதியானம் டிசம்பர் இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது

இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது

டிசம்பர் 07

“இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது” ஆதி. 42:36

எவைகள் எல்லாம் விரோதமாக நேரிடுகின்றன? இழப்புகள், கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், நோய்கள் இவைகளெல்லாமே. உனக்கும் இவைகள் விரோதமாய் இருக்கின்றனவா? இல்லை இல்லை இவைகள் உன்னைப் பாவத்திற்கு இழுத்துச் சென்றால், உன்னை உலகத்தோடு ஐக்கியப்படுத்தினால், உன் தேவனுக்கு உன்னைப் பகைவனாக்கினால், உனக்கு அவரிடமிருந்து கிடைக்கும் நன்மைகளைத் திருப்பினால், இவைகளெல்லாம் உனக்கு விரோதிகள் எனலாம். ஆனால், இவை உன்னை உலகத்தை வெறுக்கும்படி செய்து, உன் தேவனண்டைக்கு உன்னை அழைத்துச் சென்று, இரட்சகராக நல்லவராகக்காட்டி, அவருடைய வசனங்களை மதிக்கச் செய்து, பரலோகத்தின்மேல் உன்னை வாஞ்சை கொள்ளச் செய்தால் இவை உனக்கு விரோதமானவை அல்ல. அனுகூலமானவைகளே.

கிருபைகள் நிறைந்த தெய்வ செயலின் ஒழுங்குப்படி, அவைகள் நடக்கின்றனவென்றும், அவைகளை உன் பரம பிதா உன் நன்மைக்கென்றே அனுப்புகிறார் என்பதையும் மறந்துவிடாதே. ஆகவே, முறுமுறுக்காதே. நீ முறுமுறுப்பது வேத வசனத்தை அறியாததினாலும், உன் பாவங்களை மறந்துவிடுவதினாலும் அவிசுவாசத்தினாலும் ஆகும். முறுமுறுப்பது, தேவனின் கிருபையும், அவர் கருத்து உள்ளவர். இரக்கம் உள்ளவர் என்பதையும் மறுப்பதாகும். உலகில் துன்பங்கள் வரத்தான் செய்யும். சோதனைகள் சூழும். விரோதங்கள் எழும். ஆனாலும், உனக்கு நன்மைகளைக் கொண்டு வரவே அவை அனுப்பப்படுகின்றன. அன்பானவனே, துன்பங்கள், சோதனைகள் வரும்போது தேவனைக் குறித்து தவறான எண்ணங்கள் கொள்ளாதே. யாவும் நன்மைக்கென்றே நடக்கின்றன. நாம் தவறான எண்ணங்கொண்டு அவர் வாக்குகளை மறக்கிறோம். இனி அவ்வாறு செய்யாதிருப்போமாக.

பக்தருக்கு பயம் ஏன்?
அவன் முறுமுறுப்பதேன்?
எத்துன்பம் வரினும் அதில்
தேவனிருப்பார். அஞ்சாதே.