பெப்ரவரி 20
“என் ஆலோசனை நிற்கும்.” ஏசாயா 46:10
மனுஷன் செய்யும் யோசனை சரியற்றதும் புத்தியற்றதுமாய் காணலாம். அவனுக்கிருக்கும் அறிவு குறைவுள்ளது. மனதும் ஒழுங்கற்றது. ஆனால் கர்த்தரின் யோசனையோ, அளவற்ற ஞானமும் சர்வ வல்லமையுள்ளதாயிருக்கும். மனிதர் தங்களின் காரியங்களைத் தகாத நோக்கத்தோடு முடிவு செய்கிறார்கள். ஆகவே அவர்கள் தத்தளித்து கலங்குகின்றனர். தேவத் தீர்மானங்களோ அமர்ந்த, உறுதியுள்ள, நித்திய யோசனையிலிருந்துண்டாகி, நீதி, கிருபை, பரிசுத்தம், உண்மை, அன்பு இவைகளால் நடத்தப்படுகிறது. மனிதனுடைய யோசனை அடிக்கடி விருதாவாய் போய் விடலாம். தேவ யோசனை மட்டும் என்றுமே விருதாவாகாது. மனித யோசனை பிறரைத் தீமைக்கு வழி நடத்தலாம். தேவ யோசனையோ சகலமும் நம்மைக்கே என்றிருக்கிறது. அவரின் யோசனையில் நமக்கு நித்திய நன்மையும் அடங்கியிருக்கிறது. இம்மைக்குரிய சகல சம்பவங்களும் அவருடைய எண்ணத்தில் அடங்கியிருக்கிறது.
ஆதலால் எதற்கும் நாம் கலங்க வேண்டிய அவசியமில்லை. கொடுமை, அநியாயம், போராட்டம் இருக்கலாம். சுழல் காற்றிலும் பூசலிலும் நடத்துபோகிற நமது தேவன், ‘என் யோசனை நிலைநிற்கும்” ‘எனக்குப் பிரியமானதையெல்லாம் செய்வேன்” என்கிறார். அன்பரே, நமது தேவன் எப்போதும் எவ்விடத்திலும் கிரியை செய்கிறார் என்று மறந்து போகாதீர்கள். வானத்திலும், பூமியிலும் அவர் தமது சித்தப்படியே செய்து, நம்மை பார்த்து, நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறியுங்கள் என்கிறார்.
என் குறைவை தேவன் நீக்கி
இறங்கி என்னை இரட்சிப்பார்
தம் ஆலோசனைப்படி நடத்தி
மோட்சக் கரை சேர்ப்பார்.