யூன் 29
“கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்.” கொலோ 1:27
தேவபிள்ளைகளுடைய நம்பிக்கை மகிமையைப் பற்றினது. அந்த நம்பிக்கையின் தன்மை நமக்குப் புரியாத ஒன்றாய் இருக்கலாம். அந்த மகிமையின் மகத்துவம் நமக்கு விளங்காததுப்போல் இருக்கும். அதில் சுதந்தரம் ஓர் இராஜ்யம், கிரீடம், சந்தோஷம் ஆகியவை அடங்கியிருக்கின்றன. அது மகிமையின் கிரீடம். கனமகிமை, நித்திய மகிமை. நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மகிமை, நம்மை உடுத்துகிற மகிமை. நமக்குள் இருக்கும் மகிமையும், வல்லமையும், ஞானமும், அறிவும் சேர்ந்திருக்கும் மகிமை. அது சரீரத்தைப் போற்றி ஆத்துமாவை நிரப்பும். அந்த மகிமை நமக்குள் இருக்கும் மகிமை. அது வெளிப்படக் காத்திருக்கிறது.
இந்த நம்பிக்கை அல்லது எதிர்பார்க்குதல் கிருபையில் ஆரம்பித்து, பரிசுத்த ஆவியானவரால் உண்டாகி, விசுவாசத்தினால் பெருகி, தேவவாக்கையும், ஆணையையும் பிடித்து, தேவன் குறித்த காலத்திற்காக காத்திருந்து அதைப் பெற்றவனைச் சுத்திகரிக்கிறது. கிறிஸ்து நம்மில் இருப்பதுதான் இந்த நம்பிக்கையின் அத்தாட்சி. தேவன் தம்முடைய ஜனங்களில் தம்முடைய வசனத்தைக் கொண்டும், கிருபையைக் கொண்டும், தம்முடைய வசனத்தைக் கொண்டும், வாசம் செய்கிறார். ஓர் அரசனைப்போல் நம்மில் ஆட்சி செய்கிறார். குடும்பத்தில் தலைவனைப்போல் கண்காணிக்கிறார். வீட்டில் எஜமானனைப்போல் எல்லாவற்றையும் தம்முடையதாக்குகிறார். மரத்தின் சாரத்தைப்போல் வளரப்பண்ணுகிறார். ஆகவே நமது ஆலயத்தில் உள்ள தேவனைப்போல் நாம் அவரை ஆராதிக்க வேண்டும். கிறிஸ்து உங்களில் வாசம்பண்ணினால் உங்கள் எண்ணங்களிலும், விருப்பங்களிலும், பாசங்களிலும், நோக்கங்களிலும் அவர் வாசம் செய்ய வேண்டும். உங்களுக்கு மகிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டா? நீங்கள் எதிர்பார்க்கிற மகிமை தேவனோடு ஐக்கியப்படுகிறதா?
என்னில் தங்கும் இயேசுவே
நீர் சொல்லி முடியாத ஈவே
மோட்ச நம்பிக்கை தாரும்
அவ்வடையாளம் வேணும்.