முகப்பு தினதியானம் டிசம்பர் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்

நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்

டிசம்பர் 15

“நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்” (எரேமி.3:19)

கர்த்தர் நமக்கு தந்தையாய் இருக்கிற உறவை நாம் அறிந்து உணர்ந்து அவரண்டை சேரவேண்டும். நமது உறவை நாம் அறிக்கை செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அவர் செய்வதுபோல் எவராலும் செய்ய முடியாது. எப்படிப்பட்ட துர்ச்செயலையும் அவர் மன்னிப்பார். எப்படிப்பட்டவராயினும் பிதாவை நேசிக்க முடியும். எந்த இனத்தவராயினும், எப்பேர்ப்பட்ட பாவியாயினும் பிதா ஏற்றுக்கொள்ளுவார். அவர்களின்மேல் தேவன் தயவைக் காட்டுகிறார். அவர் பொறுமையாய் இருக்கிறார். அவர் நமக்குத் தம்மிடம் சேர்த்துக் கொண்டு, நம்மை ஆசீர்வதிக்கிறார். அதனால் அவர் மகிழ்ச்சியடைகிறார்.

தேவன் சர்வ வல்லவராயிருந்து பெலவீனராகிய நாமெல்லாம் அவரைப் பிதாவே என்று அழைக்க வேண்டுமென்று விரும்புகிறார். இது தேவன் நம்மேல் வைத்திருக்கும் பாசத்தைக் குறிக்கிறது. ஆகவே, நம் தகப்பனாக அவரை நினைத்து, அவரை நோக்கி ஜெபிப்போமாக. தகப்பனுக்குப் பணி செய்வதுபோல அவருக்கு உழைப்போமாக. தகப்பனிடம் நன்மையை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பபோல அவரையே நாம் எதிர்பார்திருப்போம். நமது நம்பிக்கை முழுவதுமாக அவர்மேலேயே இருக்கட்டும் நாம் அவரையே நேசிப்போம். நம்மைப் புத்திரராக அவர் எற்றுக்கொண்டதை எண்ணி அவரைப் போற்றுவோம். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று சாட்சி கூறுவதற்காக, அவர் நமக்கு அப்பா, பிதாவே என்று அவரை அழைக்கக்கூடிய உறவையும் உரிமையையும் தந்திருக்கிறார். அவருடைய உறவில்லாமல், நாம் அவருடைய பிள்ளைகளாக முடியாது. பிரியமானவனே, தேவனைப்பற்றி இவ்வெண்ணத்திற்காக மகிழ்வோம். அவரைப் பிதாவே என்றழைத்துப் போற்றுவோம். என்றும் இவ்வுரிமைக்குப் பாத்திரராயிருக்கப் பாடுபடுவோம்.

அப்பா, பிதாவே, என்று
உம்மை அழைக்கும்பேறு
உம்மாலே எங்கட்குக் கிடைத்ததால்
உம்மைப் போற்றுகிறோம், பிதாவே.