முகப்பு தினதியானம் டிசம்பர் பெத்லகேமில் இயேசு பிறந்தார்

பெத்லகேமில் இயேசு பிறந்தார்

டிசம்பர் 25

“பெத்லகேமில் இயேசு பிறந்தார்” (மத்.2:1)

இயேசு கிறிஸ்து எப்பொழுது எந்த நாளில் பிறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாது. அது நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பிறந்தார் என்ற செய்திமட்டும் மிகத் தெளிவாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் பிறந்தார், எக்காரியத்திற்காக அவர் பிறந்தார் என்பதுவும் நமக்குத் தெரியும். அவர் தேவனோடு நித்திய காலமாக இருக்கிறார். தேவனோடுகூட அவருக்குச் சமமானவராக இருக்கிறார். அப்படிப்பட்டவரே மனித உருவெடுத்தார். மரியாளுடைய கர்ப்பத்தில், பரிசுத்த ஆவியானவரால் உருவாகிக் கர்ப்பந்தரிக்கப்பட்டார். இவரே பெத்லகேமில் பிறந்தார். பெலவீனமான ஏழைக்குழந்தையாயிருந்தபோதிலும், சர்வ வல்லமையுள்ள தேவனாகவும், நித்திய பிதாவாகவும், சமாதானத்தின் பிரபுவாகவும் இருந்தார். தெய்வீகமும் மனுஷத் தன்மையும் அவரில் ஒன்றாகக் காணப்பட்டன.

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய அவர், நம்முடைய சுபாவத்தைத் தரித்துக்கொண்டார். இரட்சிப்பின் செயலை நிறைவேற்ற மனுஷனானார். பாவிகளை மீட்கவே உலகில் வந்தார். இதுவே அவர் வந்ததின் முக்கிய நோக்கம். அவருடைய முக்கிய ஊழியம். இதற்காகவே வந்தார். பாடுகள்பட்டார், மரித்து உயிர்த்தெழுந்தார். நாம் மறுபடியம் பிறக்கவே, இவர் ஒருமுறை பிறந்தார். நாம் இரண்டாம் மரணத்திற்கு ஆளாகாதிருப்பதற்காக, அவர் ஒருமுறை மரித்தார். அவருடைய அன்பு அளவற்றது. அதற்கு ஈடு இணையில்லை. வெற்றி வேந்தராய் உயிர்த்தும் எழுந்தார். பரத்துக்கேறினார். மகிமையோடு திரும்பவும் வருவார். நியாயத்தீர்ப்பளிப்பதற்காகவுமே இயேசு பெத்லகேமில் பிறந்தார். உனது இரட்சிப்பைப் பெத்லகேமிலிருந்து பெற்றுக்கொள். இதுவே இந்த நாளின் மகிழ்ச்சி. வல்லமையோடும் மகிமையோடும் இயேசு இவ்வுலகை நியாயத்தீர்க்கத் திரும்பவும் வருவார்.

இறைவன் மானிடனானது
இகத்திற்கு மகிழ்ச்சியாம்
இகத்தில் சமாதானமும்
இறைவன் நாட்டில் மேன்மையாம்