முகப்பு தினதியானம் தேவ குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்

தேவ குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்

பெப்ரவரி 18

“தேவ குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.” 1.தெச. 1:10

நம்மை மீட்டுக்கொள்ளவே கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார். நம்மைப்பரிசுத்தமாக்க இயேசு பரிசுத்தாவியை அனுப்பினார். அவரே திரும்ப வந்து நம்மை அழைத்துக்கொண்டு தாம் இருக்கும் இடத்தில் சேர்த்துக்கொள்ளப் போகிறார். இது மகிழ்ச்சிக்குரிய மகிமையான காரியம். புதிய ஏற்பாட்டில் தேவ ஜனங்களுக்கு இதை அடிக்கடி சொல்லியிருக்கிறார். இதுவே நமது நம்பிக்கை. மிக அவசியமான ஒன்றும் மிக முக்கியமானதுமாகையால் இதையே அடிக்கடி தியானிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

நாம் அவருடைய ஊழியர். நம்மிடம் கணக்கு கேட்க நமது எஜமான் வரப்போகிறார். நாம் அவரின் பிள்ளைகள். நம்மை அவரோடு சேர்த்துக்கொள்ள நமது தகப்பன் திரும்ப வரப்போகிறார். நாம் அவரின் மணவாட்டிகள். நம்மை அவரோடு இணைத்துக்கொள்ளும் மணவாளனாய்த் திரும்பவும் வரப்போகிறார். அவர் திடீரென்று வருவார். எதிர்பாராதபோது வருவார். திருடனைப்போல் வருவார். நாமோ நித்திரை மயக்கம் கொண்டு மற்றவர்களைப்போல் தூங்குகிறர்களாயிராமல் எப்போதும் விழித்திருந்து தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். பொழுது விடியும்முன் அவர் வருவார். அவர் நிச்சயம் திட்டமாக சீக்கிரம் வருவார்.

அவர் பரலோகத்திற்குப் போனவிதமாகவே திரும்ப வரும்போது நாம் சந்தோஷப்படுவோமா? ஒருவேளை அவர் வருகை தாமதப்பட்டால் நாம் அவரோடிருக்க சந்தோஷத்தோடே அவரிடம் போவோம். இதற்கு நாம் உடனே ஆயத்தப்படுவோமாக.

துன்பம் துக்கம் பாவம் யாவும்
இரட்சகராலே நீங்கும்
பொறுமையாய் காத்திருப்போம்
அப்போ பெரும் மகிழ்ச்சி அடைவோம்.