அக்டோபர் 16
“நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்கள்” தீத்து 2:14
தேவனுடைய சுத்தக் கிருபையால் நாம் இரட்சிக்கப்பட அவருடைய மகிமையைத் தேட வேண்டும். நற்கிரியைகளுக்காகத்தான் நாம் கிறிஸ்து இயேசுவில் புது சிருஷடிகளாக்கப்பட்டோம். தேவனுடைய செயல்களில் சிருஷ்டிகளாகிய நாம் நன்மைகளைப் பெறக் கவனத்துடனிருக்க வேண்டும். நற்கிரியை செய்தால் மட்டும் போதாது, அதற்காகப் பக்திவைராக்கியமும் உள்ளவர்களாயிருக்க வேண்டும். அப்படியே மற்றவர்களையும் உற்சாகப்படுத்த வேண்டும். நமக்காகத் தம்மையே கொடுத்தவருக்கு நாம் எதையும் செய்யத் தயங்கக்கூடாது. நம்முடைய எண்ணங்களும், செயல்களும் தேவ வசனத்தால் நடத்தப்பட்டு, அவருக்கே மகிமையைக் கொண்டு வருகிறவைகளாக இருக்க வேண்டும்.
தேவன் நம்மைத் தெரிந்து கொண்டார் என்று நாம் பெருமையடைதல் கூடாது. நாம் பிதாவின்மேல் வைத்திருக்கும் அன்புக்குச் சமமாக அவருடைய மக்களுக்குப் பணிசெய்வதில் தவறக் கூடாது. தேவன் நமக்கு எதையும் செய்வார் என்ற எண்ணத்தோடு எக்காரியத்தையும் செய்தல் கூடாது. தேவனுக்கு நாம் பிள்ளைகள். அவர் நம்மை நேசிக்கிறார். நாமும் அவரை முழுமனத்தோடு நேசிக்க வேண்டும். இச்சிந்தையோடுதான் நாம் எதையும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், அதன் பலனை நாம் பெறுவோம். மோசேயைப் போல இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருப்போம். பவுலைப்போல் அதிகமாக உழைப்போம். நான் அல்ல, என்னில் உள்ள தேவகிருபை தான் என்று மனதாரச் சொல்லுவோம். தேவகிருபையை உள்ளத்தில் அனுபவிக்கிறவர்களாக, எப்பொழுதும் அவரை நேசித்து, அவருக்காகப் பக்திவைராக்கியம் கொண்டவர்களாக, நற்கிரியைகளைச் செய்வதில் இறங்குவோம்.
நான் பிழைப்பது உமக்கென்று
உம் முகத்தையே என்றும் நோக்கி
என் செயலிலெல்லாம் என்றும்
நான் உம்மையே சேவித்திட அருளும்.