பெப்ரவரி 06
“விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்.” புல. 4:2
இரட்சகராகிய இயேசு தம்முடைய ஜனங்களுக்கு அருமையாயிருக்கிறதுபோல, அவர்களும் தமது ஆபரணங்களென்றும் தமது விசேஷித்த பொக்கிஷங்களென்றும், நமது பங்கென்றும் அவர் சொல்லுகிறார். அவர்கள்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு ஆச்சரியமானது. தமது பிள்ளைகளை மிகவும் வேண்டியவர்களாய் எண்ணியபடியால், தனது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவர்களை மீட்டார். அவ்வளவு உயர்ந்த விலைக்கொடுத்து மீட்டதால் அவர்களைக் கைவிடவே மாட்டார். நேசர் தமது ஜனங்களுக்கு அருமையாயிருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? அவர் அவர்களுக்கு எவ்வளவோ உதவிகளையும், நன்மைகளையும் செய்கிறார். பல வழிகளில் அவர்களோடு ஐக்கியப்படுகிறார். அவர் எவ்வளவோ அருமையானவர். நாம் அவர் பார்வையில் அருமையாயிருப்பதுதான் அதிக ஆச்சரியம்.
நாம் எவ்வளவு பாவிகள், எவ்வளவு நிர்பந்தர், எவ்வளவு கொடியவர்கள், எவ்வளவு நிர்விசாரிகள். அவரின் வழிகள் நம்முடையவைகள் அல்ல. அவருடைய நினைவுகள் நம்முடைய நினைவுகள் அல்ல. அப்படியருந்தும் நம்மை, அருமையான பிள்ளைகளாக, அழகான மனையாட்டிகளாகப் பாவிக்கிறார். அவ்வளவுக்கு அதிகமாய் அவர் நம்மை நேசிக்கிறார். இது மகிமை நிறைந்த சத்தியம். மனிதர் நம்மைக் குறித்து என்ன நினைத்தாலும் அவர் நம்மை விலையேறப்பெற்றவர்களாய் நினைக்கிறார். நாம் விலையேறப்பெற்றதால்தான் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானவர்கள். இந்தச் சிந்தையோடு இந்த இரவில் படுக்கைக்குச் செல்வோமாக. பரிசுத்தவான்கள் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானவர்கள்தான். அவர்கள் மரணமும் அருமையானதுதான்.
இயேசு சொல்வதைக் கேள்
அவரை விட்டுப் பிரியாதே
பிழைத்தும் செத்தும் பக்தர்
அவருக்கு அருமையானவர்களே.