யூன் 28
“காலத்தை அறிந்தவர்களாய்…” ரோ. 13:11
நிகழ்காலத்தை நாம் அறிவோம். இது நமக்குத் தெரிய வேண்டியது. ஆனால் எதிர்காலத்தைப்பற்றி நமக்கேதும் தெரியாது. இது சாத்தானுடைய வல்லமைக்கு ஏற்ற காலம். அவன் சுறுசுறுப்புள்ளவன். ஜாக்கிரதையுள்ளவன். பிடிவாதமுள்ளவன். இது உலகத்திற்கு மோசத்தைக் கொண்டு வரும் காலம். இந்த உலகம் உறங்கிக்கொண்டு இருக்கிறது. அல்லது மயங்கிக் கிடக்கிறது. அல்லது தேவ காரியத்துக்கு விரோதமாய் மூர்க்கங்கொண்டிருக்கிறது. ஆனால் தேவன் பொறுமையாய் இருக்கும் காலம்.
நீதி இப்போது காத்திருக்கிறது. கிருபை சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறது. இரக்கம் பட்சமாய் எச்சரிக்கிறது. இது அனுக்கிரக காலம். இதுவே இரட்சணிய நாள் என்று சொல்லியிருக்கிறது. இது சபை தன் கடமையை நிறைவேற்ற வேண்டிய காலம். பொழுதடையப் போகிறது. காலத்தை நழுவ விடக்கூடாது. இது முக்கியமான காலம். நன்மை செய்யவேண்டிய தருணங்கள் அநேகமுண்டு. விடா முயற்சியோடு உழைக்க நம்மைத் தைரியப்படுத்துகிற காரியங்கள் அநேகமுண்டு நம்மேல் விழுந்த பொறுப்போ பெரியது. ஆதலால் காலத்தை அறிவோமாக. வேத வசனத்தையும், பிற காரியங்களையும் கவனித்தால் காலத்தின் உண்மைநிலை தெரியவரும். ஆகவே, சோம்பலாய் இருக்கிறவர்களை எழுப்பி விடுகிறதினாலும், எல்லா சமயத்தையும் நம்மை செய்வதிலும் நாம் பயன்படுத்துவோமாக. நன்மை செய்யும் காலமும், நன்மை பெறும் காலமும் குறுகினதுதான் என்று மறக்க வேண்டாம். எந்தக் காலத்தையும், எந்தச் சமயத்தையும் நம்மாலாகமட்டும் உபயோகித்துச் செம்மையாய்ப் பின்பற்றுவோமாக. தற்காலத்தின் முடிவு பயங்கரமாய் இருக்கும். விழித்திருந்து உதார மனதோடு ஜாக்கிரதையாய் உழைப்பது நமது கடமை.
தேவா கிருபையளியுமே
நலத்தைப் போதியும்
நீர் கொடுத்ததைப் பயன்படுத்தி
உம்மை தொழச் செய்யும்.