அக்டோபர் 17
“சர்வ வல்லவருடைய சிட்சை” யோபு 5:17
தேவனுடைய பிள்ளை எவரானாலும் அவருக்குத் தேவனுடைய சிட்சை உண்டு. அவர் சர்வ வல்லவருடைய அன்பினால் சிட்சிக்கப்படுகிறார். தேவன் அதிக ஞானமாகவே எப்போதும் சிட்சிக்கிறார். தேவ கிருபை நமக்கு அதிகமாக விளங்கவும், நல்வழிகளில் நாம் வளரவும், கனிதரும் வாழ்க்கையில் விளங்கவும் நம்மை அவர் சிட்சிக்கிறதுண்டு. நம்மைத் தாம் நேசிக்கிறதினால்தான் கர்த்தர் நம்மைச் சிட்சிக்கிறார். ஆதலால், நமக்குத் துன்பங்கள் நேரிடுகையில் நாம் அவைகளைத் தவறாக எண்ணலாகாது. அவைகள் யாவும் இரக்கங்கள். நமது நன்மைக்காகவே வருகிறவை. அவைகள் நமக்கு அவசியம் தேவை. கிருபையும் இரக்கமும், நிறைந்தவர் நமது பரமபிதா. அவர் நமக்கு என்றும் தீங்கு நினையார், அனுமதியார்.
நமக்குச் சோதனைகள் வரும்பொழுது எக்குற்றத்திற்காகத் தேவன் நம்மைத் திருத்த ஆசிக்கிறார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவர் ஞானமாக நம்மைச் சிட்சிக்கிறார் என்பதை அறிக்கையிட்டு, அதை அவர் நமக்கு ஆசீர்வாதமாக மாற்ற வேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். கர்த்தர் விரும்பும் கோல் துளிர்த்துப் பூத்துக் கனிகொடுக்கும். இளக்காரம் பெற்ற அடிமையாக இருப்பதைவிட, சிட்சை பெற்ற பிள்ளையாயிருப்பது நலம். இக்காலத்தில் நமக்கு நேரிடும் சிட்சை இனிவரும் நன்மைகளுக்கும், மகிமைக்கும், கடமைகளுக்கும் நம்மை நடத்தும். தேவனுடைய சிட்சை எல்லாம் நலம்தான். நாம் அவற்றால் நன்மையையே பெறுகிறோம். இன்று சிட்சை நமக்குத் துன்பமாய் காணப்பட்டாலும், இனிவரும் காலங்களில் அதனால் நமக்கு நீதியும், சமாதானமும் கிடைக்கும்.
கர்த்தாவே, என் துன்பத்தை
இன்பமாக மாற்றியருளும்
உம் சிட்சை ஆசீர்வாதமே
அதென்னைத் தூய்மையாக்கும்.