முகப்பு தினதியானம் புத்திரசுவிகாரத்தின் ஆவி.

புத்திரசுவிகாரத்தின் ஆவி.

பெப்ரவரி 02

“புத்திரசுவிகாரத்தின் ஆவி.” ரோமர் 8:15

பாவிகளாகிய நம்மை இரக்கத்திற்காகக் கெஞ்சும்படி செய்கிறவர் ஆவியானவரே. பிறகு நேசிக்கும் பிள்ளைகளாகும்படி நம்முடன் உறவாடுகிறவரும் இவரே. யேகோவாவின் கிருபை நிறைந்த குணநலன்களை நமக்கு வெளிப்படுத்தி, நமது இதயத்தில் அவரில் வாஞ்சைக்கொள்ளும்படி செய்து பிதாவின் அன்பை நமது உள்ளங்களில் ஊற்றி அப்பா பிதாவே என்று நம்மை அழைக்கச் செய்கிறவதும் இந்த ஆவியானவரே. உலக தோற்றத்திற்கு முன்னே புத்திரசுவிகாரத்தின் சிலாக்கியத்திற்கு நாம் முன் குறிக்கபட்டிருந்தாலும்,பரிசுத்தாவியானவரின் துணைக் கொண்டுதான் சகலத்தையும் அறிய முடியும்.

ஆவியானவர்தான் இருதயத்தைத் திருப்பி, மேலான சிந்தனைகளைக் தந்து, உள்ளத்தைச் சுத்திகரித்து, நோக்கங்களைச் சீர்ப்படுத்தி, சத்தியத்தில் நடத்துகிறார். மேலும் பாவத்தைச் சுட்டிக்காட்டி உணர்த்தி, மனந்திரும்பச் செய்து சமாதானத்தினாலும், உத்தமத்தாலும் நிரப்புகிறார். அவர் நம்மை நடத்தும்போது ஜெபம் இனிமையாகிவிடும். தியானம் பிரயோஜனமாகிவிடும். விசேஷமான வெளிப்பாடுகள் ஆனந்தங்கொடுக்கும்.

நண்பரே, இந்தப் புத்திரசுவிகார ஆவியானவர் உன்னிடத்தி; உண்டா? பிள்ளையைத் தகப்பனிடம் நடத்துகிறதுப்போல நடத்துகிற ஆவியானவரை நாடுகிறாயா? ஆற்றி தேற்றி உன்னை அணைக்கும்போது அவரோடு இசைந்துப் போகிறாயா? அவரால் எழுதப்பட்ட தேவ வசனத்தை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிகிறாயா? அவர் ஜெபிக்க சொல்கிறபடி அவருடன் சேர்ந்து ஜெபிக்கிறாயா?

கர்த்தாவே உம் ஆவியை
என் உள்ளத்தில் ஊதிவிடும்
உமதன்பால் என்னை ஆள்கொள்ளும்
உம்மை விடேன் எந்நாளும்.