அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

மார்ச் 19

“அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்.” சங். 23:3

காணாமற் போன ஆட்டைப்போல் விழி தப்பினோன். நாம் எப்போதும் அலைந்து திரிய ஏதுவானவர்கள். அப்படி அலைந்துதிரியும்போது அந்த நல்ல மேய்ப்பர் நம்மைத் தேடி கண்டுபிடிக்குகும் வரையில், நாம் சரியான பாதைக்குத் திரும்புகிறதேயில்லை. அவருடைய பார்வையோ, அலைந்து தரிகிற ஆட்டின்மேல்தான் இருக்கிறது. அவருடைய உள்ளமோ காணாமற்போன ஆட்டின்மேலே இருக்கிறது. அதைக் கண்டு அதன்மேல் அன்புகாட்ட தகுந்த நேரம் வரும் என்றே காத்திருக்கிறார். நயமாயும், பயமாயும், கண்டித்தும், போபித்தும் அதைப்பின் தொடர்ந்து போய் கண்டுபிடித்து வருகிறார்.

தொழுவத்தைவிட்டு அலைந்து திரிவது, புத்தியீனமென்று அந்த ஆத்துமா உணரும்போது, அலைந்து திரிகிறதினால் மனவருத்தமடைந்து, உள்ளுக்குள்ளே ஜெபித்து, எப்போது திரும்பலாமென்று கவலைப்பட்டு மேய்ப்பனின் அடிகளைத் தேடி வந்து, தன் பாவத்தையும், அறியாமையையும் அறிக்கையிட்டு, இரக்கத்திற்காக கெஞ்சி, உம்முடைய இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்குத் திரும்ப கட்டளையிடும் என்று சத்தமிடும். மேய்ப்பனோ தன் கரத்தினால் அதைத் தூக்கி, தோளின்மேல் போட்டு அன்பாய்க் கண்டித்து தொழுவத்திற்குக் கொண்டு போகிறான். கிருபையால்தான் இப்படி திருப்ப ஏதுவுண்டு.

மேய்ப்பனுடைய கரிசனையில்தான் அலைந்து திரிகிற ஆத்துமா சீரடையும். சீர்ப்பட்டவன் மேய்ப்பனால் சுத்தமாக்கப்படுகிறார். அவன் மனம் மிருதுவாகிறது. பாவத்தின்மேல் பகை ஏற்படுகிறது. தன்னைத்தான் வெறுத்து தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறான். மேய்ப்பனின் இரக்கமே நம்மை இப்படி நடத்துகிறது. நம்மை மீட்டு மேய்ப்பனின் இரக்கத்தை அனுதினமும் நினைப்போமாக.

வழி தப்பி திரிய
என் இருதயம் பார்க்கிறது
உமக்கே அதைப் படைக்கிறேன்
அதை நீரே திருத்துமேன்.

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்

மார்ச் 11

“அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரில் அன்புகூருகிறோம்.”
1.யோவான் 4:19

நாம் தேவனை நேசிக்கும் நேசம் அவர் நமதுபேரில் வைத்த நேசத்தின் தயைதான். நாம் இந்த ஜீவகாலத்தில் அவரை நேசிக்கும்படி, அவர் நித்திய காலமாய் நம்மை நேசித்தார். நேசிக்க வேண்டிய தகுதி ஒன்றும் நம்மில் இல்லாதிருந்தும் நம்மை அவர் நேசித்தார். அவர் அளவற்ற அன்பு நிறைந்தவரானபடியால், நாம் அவரை நேசிப்பது நம்முடைய கடமை. அவரின் அன்பு நமக்கு வெளிப்பட்டபடியினாலே தான் அவரை நாம் நேசிக்க ஏவப்படுகிறோம். அவரின் அன்பு நமது இருதயத்தில் ஊற்றப்பட்டபடியால்தான் நாம் அவரை நேசிக்கிறோம் சாபத்தின்படி ஒருவனும் தேவனை நேசிக்கிறதில்லை. தன் மாம்சத்தின்படி ஒருவனும் தேவனை நேசிக்கவும் முடியாது. ஏனென்றால் மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவ பிரமாணத்திற்கு அடங்கியிருக்கிறதுமில்லை. அடங்கியிருக்கவும் மாட்டாது.

நாம் தேவனை நேசித்தால், அல்லது மனதார நேசிக்க விரும்பினால், நமது இருதயம் மாற்றப்பட்டதற்கு அது ஓர் அத்தாட்சி. அந்த மாறுதல் அவர் நம்மை நேசித்ததின் பலன். எந்தப் பரம நம்மையும் அவருடைய அன்பிலிருந்து பாய்கிறது. அவரில் உண்டாகியதெதுவும் உடன் படிக்கைக்குரிய ஆசீர்வாதமானதால் திரும்ப அவரண்டைக்கே நம்மை நடத்துகிறது. அவரின் வார்த்தையில் வைக்கிற  விசுவாசமும், அவர் இரக்கத்தில் நமக்கு நம்பிக்கையும், அவர் பிள்ளைகளிடத்தில் நாம் வைக்கிற அன்பும், அவர் சேவைகளில் நமக்கிருக்கும் வைராக்கியமும், பாவத்திற்காக நாம் படும் துக்கமும், பரிசுத்தத்தின்மேல் நமக்கிருக்கும் வாஞ்சையும் அவர் நம்மை நேசிக்கிறார் என்பதற்கு அத்தாட்சிகள். நம்மைப்போல பாவிகள் தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்லப்படுவதற்கு இணையான அன்புண்டோ.

நீர் என்னை நேசிக்கிறீரென்பதை
நான் சந்தேகிக்கக் கூடாது
உம்மை நேசிக்கச் செய்யுமேன்
என் நேசம் வர்த்திக்கப்பண்ணுமேன்.

கிறிஸ்துவுடன் எழுந்திரு

மார்ச் 20

“கிறிஸ்துவுடன் எழுந்திரு.” கொலோ. 3:1

இயேசுவானவர் நமது பிணையாளியாகையால் நமக்கு பதிலாக மரித்தார். தம்முடைய ஜனங்கள் எல்லார் சார்பாகவும் மரித்தார். அப்படியே எல்லாருக்காகவும் உயிர்த்தெழுந்தார். அவர் மரித்தபோது அவருடைய ஜனங்கள் எல்லாரும் மரித்தார்கள். அவர் உயிர்த்தெழுந்தபோது அவர்கள் எல்லாரும் அவரோடு உயிர்த்தெழுந்தார்கள். இதனால்தான் கிறிஸ்துவிலுள்ள ஜீவ ஆவியினால் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு, நம்பிக்கையினாலும் ஆசையினாலும், அன்பினாலும் எழுந்து அவரோடு பரத்திற்கு ஏறுகிறோம். அவருடைய ஜீவன் நம்மில் வெளிப்படும்போது, உயிர்த்த கிறிஸ்துவின் ஜீவன் நம்மில் வெளிப்படுத்த வேண்டியவர்களாகிறோம். பாவத்திற்கு நாம் செத்தவர்களாயும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்துவின்மூலம் தேவனுக்குப் பிழைத்திருக்கிறவர்களாயும் நம்மை எண்ணிக்கொள்ள வேண்டும்.

விசுவாசிகள் எல்லாரையும் அவர் எழுப்பி கிறிஸ்துவோடுகூட தமது வலது பாரிசத்தில் உட்காரப்பண்ணினார் என்று சொல்லியிருக்கிறது. கிறிஸ்துவும் அவருடைய ஜனங்களும் ஒன்றுதான். அவுர் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினபோதும், உயிர்த்தெழுந்தபோதும், தமது இரத்தத்தால் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தபோதும் அவர்களுக்கு முதலாளியாகத்தான் அப்படி செய்தார். அவரின் மரணத்தின்மூலம் அவர்கள் பிழைக்கிறார்கள். அவருடைய ஐக்கியமாகத்தான் பிழைக்கிறார்கள். அவருக்கு கனம் மகிமையும் உண்டாகத்தான் பிழைக்கிறார்கள். கிறிஸ்துவோடு எழுப்பப்பட்டவர்கள் உலகத்தை பிடித்துக்கொண்டிருப்பது சரியல்ல. அவர்களின் ஆசையும், பாசமும், எண்ணமும், தியானமும் பரலோகத்தில் தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுடைய சிரசும், பங்கும், ஜீவனுமானவர் அங்கேதான் இருக்கிறார்.

கிறிஸ்துவோடு எழுந்து
அதை உணர்ந்த பக்தரே
கீழானதை இகழ்ந்து
மேலானதை நாடுவீரே.

நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி

மார்ச் 15

“நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி.” தீத்து 1:3

உத்தம கிறிஸ்தவன் ஒருவன் இப்படித்தான் ஜீவியம் செய்ய வேண்டும். அவன் இருதயம் கீழான உலக காரியத்தைப்பற்றாமல் நித்திய ஜீவனுக்கென்று இயேசுவின் இரக்கத்தையே நோக்கிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்தவனின் முழு நம்பிக்கைதான் அவன் ஆத்துமாவுக்கத் தைலமாகவும் மருந்தாகவும் இருக்கிறது. அவன் மறுமையில் தேவனோடு பூரண வாழ்வுள்ளவனாய் இருப்பேன் என்றே நம்பியிருக்கிறான். தான் நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி, சமாதானம் இவைகளை அனுபவிப்பான். தனக்கு நித்திய ஜீவன் நிச்சயமாகவே கிடைக்குமென்று நம்புகிறான்.

பொய்யுரையாத தேவன் வாக்களித்திருக்கிறார். உலகம் உண்டாகுமுன்னே அநாதியாய் முன் குறித்திருக்கிறார். விசுவாச சபைக்குக் கீரீடமான இயேசுவுக்கு வாக்களித்திருக்கிறார். சுவிசேஷமும் அதற்கு சாட்சியிடுகிறது. தேவன் நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்குpறது. கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டருக்கு இந்த நித்திய ஜீவன் உண்டு. முற்கனி நமக்குக் கிடைத்திருக்கிறது. மகிமையான அறுப்பு கிடைக்கும். நம்பிக்கையில் வளர்ந்தே நாம் தனிந்தோறும் ஜீவித்து வருகிறோம். இந்த நம்பிக்கை துன்பத்தில் வழிநடத்தி நித்திய போராட்டத்தில் நம்மை உயிர்ப்பித்து மோசம் வரும்போது நம்மைக் காக்கிறது. இரட்சிப்பு என்னும் தலைச்சீரா இதுவே. விசுவாசியே மரணத்தையல்ல, நித்திய ஜீவனுக்காக நீ எதிர்நோக்க வேண்டியது, பரம தேசத்தையே அதை அனுபவிப்போம் என்ற நம்பிக்கையும் அதை நிச்சயித்துக் கொள்வோம் என்ற எதிர்பார்த்தலும்தான் விசுவாசம்.

எது வந்தாலும் எது போனாலும்
எது மாறிக் கெட்டாலும்
பேரின்பத்தை நோக்குவேன்
மோட்ச நம்பிக்கைப் பிடிப்பேன்.

நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?

மார்ச் 08

“நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?.” யோவான் 6:67

ஆண்டவர் இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, அவருடைய சீஷர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி போய்விட்டார்கள். அதேப் போல பலர் இந்நாளிலும் அவரை விட்டுப்போய்விட மனதுள்ளவர்களாயிருக்கிறார்கள். அநேகர் லோத்தின் மனைவிப்போல திரும்பிப் பார்க்கிறார்கள். பெத்தேலிலிருந்து வந்த தீர்க்கதரிசியைப்போல் சோதனைக்கு இடங்கொடுத்து விடுகிறார்கள். எத்தனைப் பேர் தோமைவைப்போல ஆண்டவரை நேசித்து பிறகு விசுவாசத்தை விட்டு போய்விடுகிறார்கள். ஆனால் நீங்களோ இளைப்பாறுதலில் பிரவேசிக்கும்வரை அவரை விட்டு பின் வாங்கவே கூடாது என்று தீர்மானியுங்கள்.

இயேசுவை விட்டுப் போகிறது பின்மாறிப்போகிறது ஆகும். இது ஒளியைவிட்டு இருளுக்கும், நிறைவை விட்டு குறைவுக்கும், பாக்கியத்தை விட்டு நிர்ப்பந்தத்துக்கும், ஜீவனை விட்டு மரணத்திற்கும் செல்வதாகும். கிறிஸ்துவை விட்டு போனால், வேறு யாரிடம் போவோம்? உலகமும் அதில் உள்ள பொருள்களும், நிலையான ஆத்துமாவுக்கு சமமாகாது. நம்மில் சிலர் நான் தேவ பிள்ளை என்று சொல்லி உலகத்தை இச்சித்து அதன்பின் சென்று விடுவதால் பின்வாங்கிப் போகிறோம் என்று அறியாதிருக்கிறோம். எச்சரிக்கையாயிருங்கள். எப்போதும் நாம் விழித்திருக்க வேண்டும். தேவனைவிட்டு விலகுகிறோமா என்று எல்லா காரியங்களிலும் சோதித்துப் பார்க்க வேண்டும். தன்னை நிற்கிறவன் என்று சொல்லுகிறவன், தான் விழாதபடி எச்சரிக்கையாயிருக்கடவன்.

ஒரு நிமிஷமாவது இரட்சகரை விட்டு பரிந்து போவதற்கு வழியே இல்லை. அவரை விட்டு பின் வாங்கிப் போவது புத்தியீனம். அவருடைய நியமங்களை அசட்டை செய்வது தவறு. அவருக்கு முதுகைக் காட்டுவது துரோகம். ஆத்துமாவே உன்னையும் பார்த்து, நீ என்னை விட்டுப் போகிறாயா என்று அவர் கேட்கிறார்.

ஒன்றை தேவை என்றீரே
அதை எனக்குத் தாருமே
நான் உம்மை விட்டு,
ஒருபோதும் விலகாதிருக்கட்டும்.

Popular Posts

My Favorites

நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்

மார்ச் 27 "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்." யாக் 4:3 கொடுப்பதில் தேவன் மமற்றவரா? அவர் சொல் தவறி போகுமா? இல்லை போகாது. ஆனால் பாவத்திற்கு இடங்கொடுக்கவோ, மதியீனத்திற்கு சம்மதிக்கவோ அவர் சொல்லுவில்லை. நமது ஜெபங்களுக்கு எல்லாம்...