Home Blog Page 27

என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்

ஓகஸ்ட் 20

“என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்” ஏசாயா 51:5

இந்த நம்பிக்கை நல்லது. ஏனென்றால், அந்தப் புயம் சர்வ வல்லமையில் பலப்பட்டு, சர்வ ஞானத்தால் நடத்தப்பட்டு, உருக்கமான அன்பினால் பிரயோகிக்கப்படுகிறது. நாம் சாயும்படி நம்மை ஆதரிக்க அப்புயம் உள்ளது. நமக்காக கிரியை செய்யவும், நமக்கு வேண்டியதை சேர்த்து வைக்கவும், அது நீட்டப்பட்டிருக்கிறது. நமக்காகப் போராடவும், சத்துருவின் கையிலிருந்து விடுவிக்கவும், பெலவீனத்தின்போது நம்மை ஆதரிக்கவும், வியாதியிலும், கண்ணீரிலும் இருந்து நம்மைத் தூக்கி விடவும், இந்தக் கரம் நமக்கு நீட்டப்பட்டிருக்கிறது. இது பிதாவின் சர்வ வல்லமையான கரம். இந்தப் புயம் வானத்தையும், பூமியையும் தாங்கும் புயம்.

நம்முடைய சகோதரனுடைய புயமானாலும், பாதாளத்தின் வாசல்களை அடைத்து, துஷ்ட ஆவிகளைப் பிடித்து அடக்குகிற புயம். இந்தப் புயத்தின்மேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நமது கரத்தின்மேல் நம்பிக்கை வைப்பது வீண். மற்று எதிலும் நமது நம்பிக்கை வளர்ந்துவிட கூடாது. எப்போதும் எதிலும் கர்த்தரின் புயத்திலேயே நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். தேவ வசனம் இப்படிச் சொல்கிறது. தேவன் அதுதான் சரி என்று கட்டளையிட்டிருக்கிறார். அவர்கள் அந்தகாரத்திலும், வருத்தத்திலும் என்னை நம்புவார்கள். என்னுடைய வாக்குத்தத்தங்கள் அவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்கும். அது அவர்களுக்குத் தேவையென்று அறிவார். மற்றவை எல்லாம் அவர்களை மோசப்படுத்திவிடும். தேவன் கூறியுள்ளார். அதை நிச்சயமாகவே நிறைவேற்றுவார். தேவனுடைய வல்லமையான கரத்தில் நம்பிக்கை வைத்து அவருடைய மகத்துவமான செயலைப் பின்பற்றி, அவரின் கரத்தின் கிரியையை நம்பியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் பாக்கியராய் இருக்கமாட்டோம்.

சகலத்தையும் சிருஷ்டித்த
தேவனுடைய கரமே
எங்கள் பெலன் அடைக்கலம்
என்றும் எங்கள் துணையே.

என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று

ஓகஸ்ட் 19

“என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று” சங்.77:2

கர்த்தர் தமது ஜனத்திற்கு தேவையானதும் போதுமானதுமான ஆறுதலைச் சவதரித்து வைத்திருக்கிறார். தம் பிள்ளைகளின் அவசர நேரத்தில் தேவைப்படுகிற ஆறுதல் சொல்பவர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் சில வேளைகளில் அவர்கள் ஆறுதல் மொழிகளைக் கேட்க மறுக்கின்றனர். ஒருவேளை தேவன் அவர்கள் விக்கிரமாகப் பாவித்த ஒன்றை அவர்களிடமிருந்து எடுத்துப்போட்டிருப்பார். விசுவாசத்தினால் ஜீவனம்பண்ணும்படி தம் முகத்தை மறைத்திருக்கலாம். அல்லது இவ்வுலக காரியங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கலாம். தாங்கள் நம்பியிருந்தவற்றின்மேல் மாயை என்று எழுதி இருக்கலாம். யோனாவைப்போல் இவர்கள் கோபத்திற்கு இடம் கொடுத்து இருப்பார்கள்.

அல்லது பெருமை தங்களிலே ஆளும்படி இடம் கொடுத்திருப்பார்கள். ராகேலைப்போல கவலைக்கும் அதிகம் இடங்கொடுத்திருப்பார்கள். அல்லது சோதனைக்குள் விழுந்திருப்பார்கள். தவறுகளை அதிகம் செய்திருப்பார்கள். இது முழுவதும் தவறு. சுவிசேஷத்தில் உனக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார். மோட்சத்தின் மேன்மையைப் பார். சங்கீதக்காரன் இவ்வாறு தன்னையே நோக்கி, தன்னைத் தேற்றிக் கொண்டான். தன் பாவத்திற்காகத் துக்கப்பட்டான். தன் எண்ணத்தையும், நடத்தையையும் சீர்திருத்திக் கொண்டான். நமக்குப் போதனையாகவும், எச்சரிப்பாகவும் விழிப்பு உணர்ச்சி ஏற்படவும் இந்தச் சங்கீதத்தை எழுதியிருக்கிறான். ஆறுதலைப் பெறக்கூடியவர்களும் தங்குள் தவறுகளால் ஆறுதலை அனுபவியாமல் போகிறார்கள். கர்த்தரின் ஜனங்கள் அடிக்கடி தங்களையே வாதித்துக் கொள்கிறார்கள். ஆறுதலின் பாத்திரத்தைத் தங்களைவிட்டு அகற்றி தாங்கள் அதற்குப் பாத்திரர் அல்ல என்கிறார்கள்.

சகல நன்மைக்கும் ஊற்றே
துக்கம் நீங்கி ஆற்றிடும்
மறுமையில் சேரும்போது
வாழ்ந்தென்றும் சுகிப்பேன்.

உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்

ஓகஸ்ட் 18

“உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்” உன்.1:4

சுபாவப்படி உத்தமர் ஒருவரும் இல்லை. ஒருவரும் தேவனுக்குரியதைத் தேவனுக்கும் மனுஷருக்குரியதை மனுஷருக்கும் செலுத்தப் பார்க்கிறதில்லை. இப்படி செய்வதுதான் உத்தமம். இது கிருபையிலிருந்து உண்டாகிறது. உத்தமமே மறுபடியும் பிறந்தவர்க்கு அத்தாட்சி. உத்தமமானவர்கள் எப்பொழுதும் தேவனுடைய கண்கள் தங்கள் பேரில் இருக்கிறதென்றும், தாங்கள் தேவ வசனத்தின்படி நமக்கக் கடமைப்பட்டவர்கள் என்றும், தாங்கள் தேட வேண்டியது, தேவ தயவு என்றும், அவர் நிதானிப்பே மிகவும் முக்கியம் என்றும் எண்ணுவார்கள். உத்தமர்கள் ஆண்டவர் இயேசுவை வெகுவாய் நேசித்து அவரை அறிந்து அவரை மகிமைப்படுத்துவார்குள். உத்தமமாய் தேவனை நேசித்து, அதற்கு சாட்சியாக அவர் சமுகத்தில் சந்தோஷித்து சகலத்திலும் அவரில் பிரியமாய் நாடி வாழ்வார்கள்.

உத்தமர்கள் தேவனைக் குறித்து எப்போதும் சந்தோஷமாய் பேசப் பிரயாசப்பட்டு, அவருக்காக எதையும் செய்யவும், உலகத்தையும் பாவத்தையும், வெறுத்து தேவனுக்கு எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள். கர்த்தரை மகிமைப்படுத்தி அவரைக் கனம்பண்ணுவதைவிட வேறு எதையும் மிகவும் முக்கியமானதாய் நினைக்கமாட்டார்கள். அன்பரே, நீ உத்தமனா? இயேசுவை நேசிக்கிறாயா? உத்தம இருதயத்தோடு அவரை நேசிக்கிறாயா? எல்லாவற்றிலும் அதிகமாய் நேசிக்கிறாயா? நீ அவரை நேசிக்கவில்லையென்றால் நீ உத்தமன் அல்ல. ஒருவன் கர்த்தாகிய இயேசு கிறிஸ்துவில் அன்பு கூராவிட்டால் அவர் சபிக்கப்பட்டவன். கர்த்தர் வருகிறார். என்று அப்போஸ்தலன் இடும் சாபம் எவ்வளவு பயங்கரமானது.

இயேசுவே என் நோவில் நீ
சஞ்சீவி, மரணத்தில் ஜவீன்
உமது வாயின் வார்த்தைகள்
என் ஆத்துமாவுக்கு அமிர்தம்.

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்

ஓகஸ்ட் 17

“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” கொலோ. 4:2

எப்போதும் ஜெபம் அவசியம். அது எப்பொழுதும் பயனுள்ளதுதான். நாம் தேவனுக்கு முன்பாக நம்முடைய ஜெபத்தை சுருக்கி விடுகிறோம். இது பாவம். இது தேவனைக் கனவீனப்படுத்தி, நம்மை பெலவீனப்படுத்துகிறது. ஜெபிக்கும்போது தேவ குணத்திற்கு ஸ்தோத்திரம் சொல்லுகிறோம். அவர் எங்கும் இருக்கிறதை விசுவாசிக்கிறோம். நமது தேவைகளைச் சந்திக்கும் தஞ்சமாக நுழைகிறோம். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு உண்மையைத் தெரிந்தெடுக்கிறோம். ஜெபத்தில் உள்ளான எண்ணங்களைத் தேவனுக்குச் சொல்லுகிறோம். நமக்கு இருக்கும் சந்தோஷத்தையும், துக்கத்தையும், நன்றியையும், துயரத்தையும் விவரித்துச் சொல்லுகிறோம். நமது குற்றங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்று தேவனிடம் கிருபையைப் பெற்றுக் கொள்ளுகிறோம். நமது விருப்பங்களை வெளியிட்டு நம்முடைய நிலையை அவருக்கு முன்பாக விவரிக்கிறோம்.

ஜெபம் என்பது தேவனுக்கும் நமக்கும் நடுவே செல்லுகிற வாய்க்கால். அதன் வழியேதான் நாம் தேவனுக்கு விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் தெரிவிக்கிறோம். அவர் நமக்கு அறிவையும், பலத்தையும், ஆறுதலையும், கிருபையையும் அனுப்புகிறார். ஜெபிப்பது நமது கடமை. இது பெரிய சிலாக்கியம். நமது வேலைகள் ஜெபத்தை அசட்டை செய்யும்படி நம்மை ஏவும். ஆனால் ஜெபத்தில் உறுதியாயும், கருத்தாயும், நம்பிக்கையாயும், விசுவாசமாயும், விடாமுயற்சியுள்ளவர்களாயும், பொறுமையுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். தேவன் ஜெபத்தை விரும்புகிறார். சாத்தானோ அதைப் பகைக்கிறான். நாம் எப்பொழுதும் முழங்காலில் இராவிட்டாலும் ஜெபசிந்தை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். இது அவசியம், பிரயோஜனமானது. தேவன் அங்கிகரிக்கத்தக்கது. மெய்க் கிறிஸ்தவன் அதை மதிக்கிறான்.

ஜெபியாவிட்டால் கெடுவேன்
கிருபைத் தாரும் கெஞ்ச
உம்மைச் சந்திக்க வருகையில்
என்னிடம் நீர் வாரும்.

உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்

ஓகஸ்ட் 16

“உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்” சங்கீதம் 89:16

இவர்கள் தேவனுடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். நமக்கென்று ஒரு நீதியே கிடையாது. அவரே நமக்கு நீதியைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். இந்த நீதியை இலவசமாய்த் தருகிறார். இந்த நீதியை விசுவாசத்தினால் பெற்றுக்கொள்கிறோம். நமது கிறிஸ்தவ மார்க்கம் விசேஷமானது. நம்முடைய தலையாகிய கிறிஸ்துவின் ஞானத்தினால் நாம் ஞானிகளாகிறோம். நம்முடைய மூத்த சகோதரன் இயேசுவால் நாம் ஐசுவரியவான்களாகிறோம். நம்முடைய இரட்சகரின் நீதியால் நாம் நீதிமான்களாகிறோம். இந்தச் செய்தி நியாயப்பிரமாணத்தை மேன்மைப்படுத்தி, ஆத்துமாவைச் சந்தோஷத்தால் நிரப்புகிறது. இந்த நீதியில் நாம் குற்றவாளி என்று தீர்க்கிற நியாயப்பரமாணத்தின் வல்லமைக்கும் சாத்தானுடைய பொல்லாத தந்திரத்திற்கும், கொடிய உலகத்துக்கும், மரணத்தின் பயங்கர வேதனைக்கும் மேலாக உயர்த்தப்படுகிறோம்.

இது சமாதானத்திற்கும் தேவ நேசத்திற்கும் புத்திரசுவிகாரத்திற்கும் தேவ சமுகத்து நம்பிக்கைக்கும், கிறிஸ்துவோடு உன்னத ஸ்தலத்தில் உட்காருகிறதற்கும், நித்திய மகிமைக்கும் நம்மை உயர்த்துகிறது. இது தேவனுடைய தன்மைபற்றியும், கிறிஸ்துவின் அன்பான கிரியைபற்றியும் மேலான எண்ணம் கொள்ளச் செய்கிறது. நாம் இந்த நீதியை மதித்து, நித்தம் தரித்துக் கொண்டு தேவன் நம்மை அங்கீகரிக்கிறதற்கு நன்றி சொல்வோமாக. இந்த நீதி நம்முடைய கலியாண வஸ்திரம், அழியாத கேடகம், பரம வாழ்வை நம்மை சுதந்தரிக்கச் செய்யும் பத்திரம். இந்த நன்மை நம்மை ஷேமப்படுத்தி, ஆறுதல்படுத்தி, பலப்படுத்தி, மேன்மைப்படுத்துகிறது.

எல்லாரும் பட்டு வஸ்திரம்
உடுத்தி மகிழட்டும்
என் போர்வை கிறிஸ்துவின் நீதியே
இது என்றும் எனக்குள்ளதே.

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்

ஓகஸ்ட் 15

“அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்” 1.சாமு. 2:9

பரிசுத்தமாக்கப்பட்டவர்களே பரிசுத்தர்கள். தம்முடைய புகழ்ச்சிக்காக பிதாவினால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்டவர்கள். உலகத்திலிருந்து எடுத்து பரிசுத்தாவியானவரால் நிரப்பி சுத்திகரிக்கப்பட்டவர்கள். இயேசு உலகத்தாரல்லாததுபோல இவர்களும் உலகத்தாரல்லாதவர்கள். இந்தப் பாக்கியம் இவர்களுக்கு இருந்தாலும்,இவர்கள் முற்றிலும்பலவீனமானவர்கள். இவர்களை எப்போதும் காதுகாக்க வேண்டியது அவசியம். தேவன்தான் இவர்களைப் பாதுகாக்கக் கூடியவர் உலகத்து மனிதனால் இது முடியாது. அவர்களும் பலவீனர்தானே.

இவர்களின் பாதைகள் கரடுமுரடானது. முள்ளுள்ளது. மோசமானது. இவர்களுக்குத் திரளான சத்துருக்கள் இருக்கிறார்கள். ஆயினும் இவர்கள் விழிப்புள்ளவர்கள். தைரியமானவர்கள். வெட்கப்படாதவர்கள். காரணம் கர்த்தர் இவர்களைக் காக்கிறார். கொடுமைக்கும், துணிகரத்திற்கும், கவலைக்கும், அழிவுக்கும் இவர்களைக் காக்கிறார். தம்முடைய ஆவியானவராலும், வல்லமையினாலும், தேவ தூதர்களாலும், துன்பங்களினின்றும், நஷ்டங்களினின்றும், மார்க்கப்பேதங்களினின்றும் இவர்களைக் காக்கிறார். தேவன் யாரைக் காக்கிறாரோ, அவர்கள்தான் பத்திரமாய் இருப்பார்கள். தமது பரிசுத்தவான்கள் எல்லாரையும் காக்கிறார். விசுவாசிகளை மாத்திரம் காக்கிறபடியால் பெயர் கிறிஸ்தவர்கள் கெட்டழிவார்கள். விசுவாசத்தினாலும், தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையினாலும் இவர்கள் காக்கப்படுகிறார்கள். என்னை ஆதரித்தருளும், அப்போது நான் இரட்சிக்கப்படுவேன்.

இயேசுவே நீர் உத்தமர்
என் நடையைக் காத்தருளும்
உம்மோடு நடப்பேன்
மோட்சம்பேறு அடைவேன்.

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்

ஓகஸ்ட் 14

“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்”  லூக்கா 6:38

இந்த வசனத்தைப் போதித்தவர் அதன்படியும் செய்து காட்டினார். நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே. அவர் ஐசுவரியம் உள்ளவராய் இருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படி உங்கள் நிமித்தமாகத் தரித்திரர் ஆனாரே. இதில் கண்டிருக்கிற வாக்குத்தத்தத்திற்கு அவர் ஒரு நல்ல உதாரணம். அவர் மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆனால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

கொடு என்பது கட்டளை. உதாரத்துவமாய் கொடு. உன்னால் கூடுமானவரையும் எல்லா நல்ல காரியத்துக்கும் கொடு. நல்ல நோக்கத்தோடு கொடு. ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பி கொடு. இது என் கடமை. மனுஷருக்கு இதனால் ஆசீர் கிடைக்கும்.தேவனுக்கு இதனால் மகிமை வரும் என்று எண்ணிக்கொடு. கொடுக்கப்படும் என்பது வாக்குத்தத்தம். இப்படிச் சொன்னது யார்? சொன்னதை நிறைவேற்றக் கூடியவர். எப்படியென்றால், அவர் ஐசுவரியமுள்ளவர். செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர். ஏனெனில் அவர் உண்மையுள்ளவர். நிறைவேற்றக் கூடியவர். உதாரத்துவமாய் கொடுக்கும் எவருக்கும் இப்படி வாக்குக் கொடுக்கப்படுகிறது. இது ஆத்துமாவுக்கும் சரீரத்துக்கம் இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றது. கொடுங்கள் அப்போது அமுக்கி குலுக்கி சரித்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். சில விதைகளை விதைக்கிறோம். ஆனால் எவ்வளவோ தானியங்களை அறுவடை செய்கிறோம். உன் உதாரகுணம் இயேசுவில் விசுவாசம் வைத்து அவருடைய நாமத்தை நேசிக்கிறதிலிருந்துப் பிறக்கிறதா?

நீ வாழவேண்டுமானால்
உதாரமாகக் கொடு
உலகத்தான் சேர்த்து வைப்பான்.
கிறிஸ்தவன் கொடுத்துப் பூரிப்பான்.

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்

ஓகஸ்ட் 13

“நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்” உபா. 14:1

என்ன ஒர் ஆச்சரியமான உறவிது. தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்! இவர்கள் யார்? அவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள். இது இவர்களுக்குள்ளே புது சுபாவத்தையும், புது விருப்பங்களையும், புது ஆசைகளையும், புது எண்ணங்களையும், புது செய்கைகளையும் உண்டுபண்ணும். இவர்கள் தேவனால் போதிக்கப்பட்டவர்கள். இவர்கள் புத்திரசுவிகார ஆவியைப் பெற்றவர்கள். இவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. ஒரு பிள்ளை தகப்பன் சொன்னதை நம்பி தகப்பன் கற்பிப்பதைச் செய்து தகப்பன் அனுப்பும் இடத்துக்கும் சென்று, அவர் வாக்குமாறாதவர் என்றும், அவர் கொடுப்பார் என்றும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். இது எத்தனை ஆறுதலைக் கொடுக்கிறது. உன்னைச் சிநேகிதனற்றவனென்று சொல்லாதே. நீ அநாதை பிள்ளை அல்ல. அவர் உன் தகப்பன். ஒப்பற்ற தகப்பன். மாறாத தகப்பன். மனம் கலங்காதே.

உன் வறுமையில் பிதாவின் சம்பத்தையும், நிந்தையில் உனது கனமான உறவையும் உன் வியாதியில் பரம வீட்டையும் மரணத்தில் முடிவில்லா நித்திய வாழ்வையும் நினைத்துக்கொள். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியதென்று பாருங்கள். நாம் எல்லாரும் இப்பொழுது பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாய் இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை. ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாய் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.

இந்தக் கிருபைத் தாரும்
அது என்னை நடத்தட்டும்
என் நா உம்மைத் துதிக்கும்
என் இதயம் உம்மை நேசிக்கும்.

உன் உக்கிராணக் கணக்கையொப்புவி

ஓகஸ்ட் 12

“உன் உக்கிராணக் கணக்கையொப்புவி”  லூக்கா 16:2

நமக்கெல்லாருக்கும் ஒவ்வொரு வேலையைத் தேவன் வைத்திருக்கிறார். அது பொறுப்பான நம்பிக்கையுள்ள வேலை. அந்த வேலைக்கு தலையும், மனமும், கைகளும், கால்களும் வேண்டும். இந்த உக்கிராணக்காரன் சுறுசுறுப்பும், உண்மையும் ஜாக்கிரதையுமாய் இருந்து கணக்கொப்புவிக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். நாம் எல்லாரும் கணக்கு கொடுக்கவேண்டியவர்கள். வெகு சீக்கிரத்தில் நாம் கணக்கொப்புவிக்கவேண்டும். நமது எஜமான் சீக்கிரம் வரப்போகிறார். அப்போது அவரை எதிர்கொண்டு போகாமல் பின்னடைவோமா? நம்முடைய செல்வாக்கு, பணம், யோசனைகள், செயல்கள் இவைகளை எப்படி பயன்படுத்தினோம். ஆத்துமாவின் வேலைகளில் என்ன பங்கேற்றோம்? எப்படி தேவனுக்குரிய காரியங்களில் நாம் ஈடுபட்டோம். இவைகளையெல்லாம் குறித்து கணக்கொப்புவிக்க வேண்டும்.

நண்பரே, நீ ஒர் உக்கிராணக்காரன் என்பது உனக்குத் தெரியுமா? வேதம் உன் எஜமான் இயேசு கொடுத்த சட்டம். உன் நடக்கைக்குப் பிரமாணம். இதைத் தியானிக்கிறாயா? உன் எஜமானுடைய கண் உன்மேல் இருக்கிறது. இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுகிறாயா? இந்த வசனத்துக்குப் பயப்படுகிறாயா? கர்த்தருடைய நாள் சமீபித்து வருகிறது. நம்முடைய கணக்குகளை ஒப்புவிக்க வேண்டிய வேளை நெருங்கிவிட்டது. இப்பொழுது உன் காரியம் எப்படியிருந்தாலும் உண்மையுள்ள உக்கிராணக்காரனுக்கு அப்போது தேவனால் புகழ்ச்சி கிடைக்கும். இப்போதாவது உன் பொறுப்பை உணர்ந்து, அதற்கு ஏற்றதாய் நடந்தால் எவ்வளவு நலம்!

நியாயாதிபதியாம் கர்த்தாவே
உமக்குமுன் நான் நிற்பேன்
அப்போது குற்றமற்றுவனாக
விளங்கி மகிழ்வேன்.

Popular Posts

My Favorites

நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி

மார்ச் 15 "நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி." தீத்து 1:3 உத்தம கிறிஸ்தவன் ஒருவன் இப்படித்தான் ஜீவியம் செய்ய வேண்டும். அவன் இருதயம் கீழான உலக காரியத்தைப்பற்றாமல் நித்திய ஜீவனுக்கென்று இயேசுவின் இரக்கத்தையே நோக்கிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்தவனின்...