நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்
யூலை 19
“நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்” சங். 41:11
எல்லா விசுவாசிக்கும் இது தெரிந்ததே. ஆயினும் இதைச் சரியாக புரிந்துகொள்ள எவரும் முயற்சிப்பது இல்லை. தேவன் நம்மேல் பிரியமாயிராவிட்டால் நாம் இன்னும் பாவத்தில் செத்துக்கிடப்போம். அல்லது குற்றமுள்ள மனட்சாட்சியோடே வாழுவோம். அல்லது அவநம்பிக்கைக்கு இடங்கொடுத்து கெட்டழிவோம். நம்முடைய சத்துருவும் நமதுமேல் ஜெயம் அடைவான். சாத்தான் நம்மைவிட அதிக ஞானமும், வல்லமையும் திறமையும் அனுபவமும் உள்ளவன். நம்முடைய பெலவீனத்திலும், பயத்திலும் அவன் நம்மை மேற்கொள்வான். நம்முடைய உள்ளான பலம் அவனுக்குத் தெரிந்திருப்பதனாலும் நம்மை அவன் வசப்படுத்துவான். நம்மைப் பாவத்திற்கு இழுத்து விழுவதற்கு முயற்சிகள் செய்து, நம்மை அவநம்பிக்கைக்கொள்ள செய்வான். ஆயினும் அவன் மேற்கொள்வதில்லை.
கர்த்தர் நம்மேல் பிரியமாய் இல்லாதிருந்தால் அவன் நிச்சயமாக நம்மை மேற்கொள்வான். இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார். பரிசுத்தாவியானவர் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நம்முடைய பரம பிதாவும் தம்முடைய உண்மையான வாக்கை நிறைவேற்றி சாத்தானை தடுத்து மட்டுப்படுத்தியுள்ளார். போராட்ட வேளையில் அவர் தமது கேடகத்தால் நம்மை மறைத்து யுத்தத்தின் அகோரத்தில் நம்மைப் பாதுகாக்கிறார். நம்முடைய வேலைக்குத் தேவையான பெலனை அளித்து, அவர் கிருபை நமக்குப் போதும் என்று காட்டுகிறார். அநேகர் விழுந்தாலும் நாம் நிற்கிறோம். அநேகர் பின்வாங்கிப்போனாலும் நாம் உறுதியாய் இருக்கிறோம். இந்த இரவு அவருடைய இரக்கத்திற்கு ஞாபகக் குறிகளாய் இருக்கிறோம். நாம் தேவனுக்குப் பிரியமான பிள்ளையென்று நாம் ஒவ்வொருவரும் சொல்லலாம்.
கர்த்தர் விடுவிப்பார் என்று
அவரை நம்பி இருப்பேன்
அப்போ அவர் பக்தரோடு
என்றும் களித்து நிற்பேன்.
அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்
யூலை 18
“அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்” யோவான் 17:10
பிதாவை மகிமைப்படுத்துகிறதுதான் இயேசுவின் கிரியை. பிதா அவரில் மகிமைப்படுகிறார். இயேசுவை மகிமைப்படுத்துவது அவருடைய வேலையாய் இருக்குமானால் இயேசு நம்மில் மகிமைப்படுவார். அவருடைய இரத்தம் நம்மை மன்னித்து சமாதானப்படுத்தி, சகல பாவங்களிலிருந்தும் நாம் பூரணராய் நீதிமானாக்கப்படுவதனால் மகிமைப்படும். அவருடைய வல்லமை நாம் உலகத்தினின்று பிரிந்து நித்திய ஜீவனுக்கென்று காக்கப்படுவதனால் மகிமைப்படும். நாம் உயிர்பிக்கப்பட்டு அனுபவிக்கும் எண்ணில்லா நன்மைகளால் அவர் இரக்கமும், நாம் விடுவிக்கப்பட்டு சந்தோஷப்படுவதில் அவர் வார்த்தையும், நாம் அவரோடு ஐக்கியப்பட்டு ஒன்றாவதில் அவருடைய சிந்தையும் மகிமைப்படும்.
நம்முடைய ஜெபங்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் கிடைக்கும் உத்தரவில் அவருடைய உண்மையும், நாம் தைரியமாய் நம்பிக்கையோடு கிருபாசனத்தண்டை சேருவதில் அவருடைய அன்பும், துன்பத்தில் நமக்கு வேண்டியதைத் தந்து ஆதரிப்பதில் அவருடைய தயையும் மகிமைப்படும். நம்முடைய துக்கங்களிலும் வருத்தங்களிலும் அவருடைய உருக்கமும், நம்முடைய பெலவீனங்களிலும் முரட்டாட்டத்திலும் நம்மை தாங்குகிறதில் மரணத்திலும் நம்முடைய நித்திய இரட்சிப்பிலும் அவருடைய கிருபையும் மகிமைப்படுகிறது. நாம் எதிர்பார்க்கிறதெல்லாம் அவரிடத்திலிருந்துதான் வரவேண்டும். அவருடைய சபை அவருடைய மகிமையானதால் அவர் அதை மகிமையுள்ளதாக்குவார். அதை அவர் மாசு திரை ஒன்றுமில்லாமல் மகிமையுள்ள சபையாக தமக்கு முன் நிறுத்துவார். இயேசு என்னில் மகிமைப்படுகிறார் என்பது எத்தனை அருமையான சத்தியம்.
என்னில் உம் மகிமை
தங்கிட அருளும்
உமக்காகவே பிழைப்பேன்
உமக்கென்றே சாவேன்.
அக்கிரம விஷயங்கள் என்மேல் வல்லமை கொண்டது
யூலை 17
“அக்கிரம விஷயங்கள் என்மேல் வல்லமை கொண்டது” சங். 65:3
தேவபிள்ளை யுத்தம் செய்கிறவன். பாவம் அவனில் வாசம் பண்ணி அவனில் கிரியை செய்து சில நேரங்களில் அவனை மேற்கொள்கிறது. அவன் பாவத்திற்கு முற்றும் நீங்கலானவன் அல்ல. ஒவ்வொரு நாளும் பாவத்திற்கு எதிராக விழித்திருந்து போர் செய்ய வேண்டியவன். அக்கிரம கிரியைகள் சில சமயங்களில் நமதுமேல் வல்லமை கொள்ளலாம். அப்பொழுது நமது சமாதானம் குறைந்து அவிசுவாசம் பலத்துப்போம். தேவன் மேலுள்ள பாசம் விலகி, ஜெபம் பண்ணமுடியாமல் வாய் அடைப்பட்டுத் துதியின் சத்தம் ஓய்ந்துபோம். அப்போது நமது ஆத்துமா பெலவீனப்பட்டுத் தீட்டாகி நமக்கும், தேவனுக்கும் நடுவே மந்தாரம் உண்டாகி, அவர் முகத்தைப் பார்க்கவும், அவன் அன்பை ருசிக்கவும் கூடாதவர்கள் ஆகிவிடுகிறோம்.
நாம் பாவத்திற்கு இணங்கி அது நம்மை மேற்கொள்ளும்போது நமக்குள் பரிசுத்தாவியானவர் நம்மை கடிந்துக்கொள்வார். கலக்கமும் வருத்தமும் தேவ சமுகத்தில் நம்மைப் பிடிக்கும். நாம் நம்மைத் தாழ்த்தி பாவத்தை அறிக்கையிட்டு தேவனண்டைக்குத் திரும்ப அவசியம் ஏற்படும். இப்படிப்பட்ட சம்பவத்தைத் தேவன் நமக்கு நன்மையாக பலிக்கச் செய்தால் நாம் பாவத்தை அதிகமாய்ப் பகைத்து தேவனுக்குமுன் நம்மை அருவருப்போம். அதிக விழிப்பும் ஜெப சிந்தையும் உள்ளவர்களாகுவோம். நம்மைக் குறித்து வைராக்கியம் கொண்டு பொல்லாங்காய் தோன்றுகிற யாவையும் விட்டு விலகப் பார்ப்போம். தேவன் நம்மை அப்படிப்பட்ட நிலைமையிலிருந்து விடுவிக்கும்போது நாம் தேவனுடைய நீடிய சாந்தத்தையும் இரக்கத்தையும் மன்னிப்பருளும் நேசத்தையும் பெறுவதால் ஸ்தோத்திரித்து அவரை வணங்குவோம். தாழ்மையை அணிந்து தேவனுக்கு முன்பாக பணிந்த சிந்தையோடு நடப்போம்.
என் அக்கிரமம் பெருகி,
என் ஆத்துமா தொய்யுது
என் இச்சை அடக்கும் தேவா
என்னை முற்றும் புதுப்பியும்.
இனி குழந்தைகளாய் இராமல்
யூலை 16
“இனி குழந்தைகளாய் இராமல்” எபேசி. 4:14
இந்த வசனம் ஓரே நிலையையல்ல வளர்ச்சியைக் குறிக்கிறது. நாம் எப்போதும் பிள்ளைகளைப்போல இருந்தாலும் அறிவில் பெரியவர்களாய் இருக்கவேண்டும். கர்த்தர் தம்முடைய ஜனங்கள் வளர்வதற்கேற்ற சூழ்நிலையை உண்டாக்கியிருப்பதுமல்லாமல், அவர்கள் வளர வேண்டும் என்று கற்பிக்கிறார். நாம் அறிவில் வளர வேண்டும். சிறு பிள்ளைகள் சிறிய காரியங்களில் திருப்தியடைகிறார்கள். நாம் அப்படி இருக்கக்கூடாது. நாம் பலப்பட்டு கிறிஸ்துவிலுள்ள கிருபையில் பெலப்பட வேண்டும். நம் சத்துருக்களுக்கு எதிராகத் திடன் அடைந்து கர்த்தருடைய காரியத்தில் தைரியம் பெற்று திவ்வி காரியங்களில் உறுதியாய் இருக்க வேண்டும்.
நம்முடைய விசுவாசமும், நம்பிக்கையும், வைராக்கியமும் அன்பும் பெருகவேண்டும். நாம் இருக்கிறபடியே இருக்கக்கூடாது. குழந்தைகளாகவும் வளரவேண்டும். நாம் வளரும்படி ஞானத்திலும், பக்தியிலும் பெருக வேண்டும். நாம் வளரும்படிக்கு கிறிஸ்துவை உள்கொண்டு சகல கிருபைகளையும் முயற்சி செய்து தேவனோடு ஐக்கியப்பட வேண்டும். நாம் வளரும்படிக்கு தேவன் தம்முடைய வசனத்தையும், நியமங்களையும், தமது குமாரனையும் தந்திருக்கிறார். நாம் பூரணராகும்படிக்குத் தம்முடைய ஊழியக்காரரையும் தாம் செய்து முடித்த கிரியைகளையும், தம்முடைய சத்துருக்களையும்கூட பயன்படுத்துகிறார். நாம் திராட்சை செடிபோலவும், தொழுவத்தில் உள்ள கன்றுகுட்டிகளைப்போலவும் வளருவோம் என்று வாக்குக்கொடுத்திருக்கிறார். ஆதலால் வளர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு வாக்கியத்தில் கண்டிருக்கிற எச்சரிக்கையை ஏற்றுக்கொள்வோமாக. நாம் குழந்தைகளாய் இருக்ககூடாது.
பிதாவே எப்போதும்
குழந்தைகள் போலிராமல்
எங்கள் ஒளி மென்மேலும்
பிரகாசிக்க செய்யும்.
பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்
யூலை 15
“பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” 1.கொரி. 5:8
இந்த இடத்தில் பஸ்கா பண்டிகையைக் குறித்தே பவுல் அப்போஸ்தலன் கூறுகிறான். பஸ்கா ஆட்டுக்குட்டி முதலாவது கொல்லப்பட்டு கதவின் நிலைகளில் இரத்தம் தெளிக்கப்பட்டபோது எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகள் அழிந்தார்கள். இஸ்ரவேலர் விடுதலை அடைந்தார்கள். நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி. அவருடைய இரத்தம் நமக்காகச் சிந்தப்பட்டு நம்மேல் தெளிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய சத்துருக்கள் அழிந்துப் போனார்கள். நமக்கு இரட்சிப்பு கிடைத்தது. இஸ்ரவேலர் பஸ்காவின் இரத்தம் சிந்தப்பட்ட ஆட்டுக்குட்டியைப் புசித்தார்கள். இரத்தம் சிந்தி நம்மை மீட்ட கிறிஸ்துவை நாம் உள்கொள்ளு வேண்டும். ஆகவே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
அது நமக்காகச் சிலுவையில் அறையப்பட்டுப் பலியிடப்பட்ட கிறிஸ்துவை புசிக்கிற பண்டிகை. அவர் நம்மை மீட்கும் பொருளாக மாத்திரமல்ல பஸ்காவுமாய் இருக்கிறார். அவருடைய மகிமையைப் பற்றியும் அவர் நிறைவேற்றின கிரியைப்பற்றியும் அவர் முடித்த வெற்றியைப்பற்றியும் அவருக்குக் கிடைத்த நித்திய கனத்தைப்பற்றியும், விசுவாசமுள்ள சிந்தையால் நம்முடைய ஆத்துமா போஷிக்கப்படுகிறது. நம்முடைய கண்களை நித்தம் கிறிஸ்துவண்டைக்கு உயர்த்த வேண்டும். மனம் அவரையே தியானிக்க வேண்டும். இதயம் அவரையே உள்கொள்ள வேண்டும். அவர் ஜீவன் அளிக்கும் தேவன். என்னைப் புசிக்கிறவன் என்னால் பிழைப்பான் என்கிறார். நாம் ஆசரிக்க வேண்டிய பண்டிகையின் சாரம் கிறிஸ்துதான். ஆதலால் நாம் தினந்தோறும் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். அதிக ஜெபத்தோடும், ஸ்தோத்திரத்தோடும், விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும், தாழ்மையோடும், பயபக்தியோடும், உத்தம மனஸ்தாபத்தோடும், மெய்யான சந்தோஷத்தோடும் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். தேவன் கற்பித்திருக்கிறபடியால் நாம் அதை ஆதரிக்க வேண்டும். அதை ஆசரிப்பதால் இரட்சகர் மகிமைப்படுகிறபடியால் அதை ஆசரிக்க வேண்டும்.
இயேசுவே உள்கொண்டு
ஆனந்தம் கொள்வோமாக
ஜீவன் சுகம் பெலன்
எல்லாம் அவரால் வரும்.
கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்
யூலை 14
“கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்” சங். 97:1
கர்த்தர் உன் இரட்சகர். அவர் உன் தன்மையைத் தரித்திருக்கிறார். அவர் உன்னை நன்றாய் அறிவார். ஒரு தாய் தன் ஒரே மகனை நேசிக்கிறதிலும் அவர் உன்னை அதிகமாய் நேசிக்கிறார். அவர் செய்கிற சகலத்திலும், அவர் அனுமதிக்கிற சகலத்திலும் உன் நலத்தையே விரும்புகிறார். அவர் சர்வ லோகத்தையும் ஆண்டு நடத்துகிறார். சிம்மாசனங்களும், அதிகாரங்களும், துரைத்தனங்களும் அவருக்குக் கீழ்ப்படிகிறபடியால் அவரே எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுகை செய்கிறார். அவர் ஆளுகையில் அவருடைய ஞானமும், வல்லமையும், நீதியும், இரக்கமும், ஏகாதிபதியமும் ஒன்றுபோல விளங்குகிறது. பரிசுத்தமும் பாக்கியமும் தமது பிள்ளைகளுடைய நித்திய சேமமும் விருத்தியாக வேண்டுமென்றே ஆளுகை செய்கிறார்.
அவர் தம்முடைய சத்துருக்களின்மேல் ஆளுகை செய்து அவர்களுடைய இரகசிய தந்திரங்களை அவமாக்கி அவர்களுடைய சத்துவத்தைக் கொண்டு தமது சித்தத்தை முடிக்கிறார். தம்முடைய சிநேகிதர்மேல் ஆளுகை செய்து பொல்லாங்கினின்று அவர்களைக் காப்பாற்றி அவர்களின் காரியங்களை நடத்தி தம்முடைய வாக்கை நிறைவேற்றுகிறார். கர்த்தர் இராஜரீகம்பண்ணுகிறார். சாத்தான் உன்னைப்பிடிக்க கண்ணிவைக்கும்போதும், பாவம் உன்னைக் கீழே விழத்தள்ளும்போதும் இதை நினை. நற்செல் உனக்கு விரோதிகளை உண்டாக்கி, உன் ஒழுங்குகளைக் குலைத்து, உன் நன்மைகளைக் கெடுத்து, உன் விசுவாசத்தைச் சோதிக்கும்போது இதை நினை. புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் உண்டாகி, சத்துருக்கள் உன்னை வெறுத்து, வியாதி உன்னை வருத்தி, மரணப் படுக்கையில் இருக்கும்போதும் இதை நினை. சகலத்திற்கும் மேலாக இரட்சகர் ஆளுகை செய்கிறபடியால் உனக்குப் பயம் இல்லையென்று நினைத்துச் சந்தோஷப்படு.
கர்த்தர் இராஜாதி இராஜன்
மகிழ்ந்து அவரைப் போற்று,
சுத்தாவி என் உள்ளத்தில்
தங்கும் இது என் மன்றாட்டு.
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்
யூலை 13
“இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்.” எபேசியர் 2:4
பாவத்தினால் வரும் நம்முடைய நிர்பந்தம் பெரியது. ஆகிலும் தேவனுடைய இரக்கத்தைப்போல அவ்வளவு பெரியதல்ல. நமது துன்பங்கள் அநேகம். தேவ இரக்கம் அவைகளுக்கெல்லாம் மருந்து. இரக்கம் என்பது தேவனுக்கு இருக்கும் ஐசுவரியம். அதைத் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுக்கிறார். அது துன்பப்பட்ட தம்முடைய பிள்ளைகளுக்கு அவர் காட்டும் தயவு. அதைக் கொண்டுதான் நம்முடைய துன்பங்களை அவர் சரியாய் அறிந்து உணருகிறார். பழைய ஏற்பாட்டில் அவருடைய ஜனங்களைப்ற்றி, அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார். அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார். அவர் தமது அன்பின் நிமித்தம் அவர்களுடைய பரிதாபத்தின் நிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாள்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்து வந்தாரென்று சொல்லப்பட்டிருக்கிறது.
தேவ இரக்கம் அளவற்றது. அது இரட்சகர்மூலமாய்ப் பாய்கிறது. நம்முடைய துக்கத்தை ஆற்றுகிறதினாலும் நம்முடைய குறைவுகளை நீக்குகிறதினாலும், நம்முடைய பாவங்களை மன்னிக்கிறதினாலும் நம்முடைய வருத்தங்களை அகற்றுகிறதினாலும் அலைந்து திரிகிற நம்மைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கிறதினாலும் அது மகிமைப்படுகிறது. அன்பர்களே, இந்த நாளில் தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். அவர் உனக்க இரக்கம் வைத்திருக்கிறார். உனக்கு தேவையான இரக்கம் அவரிடத்தில் உண்டு. நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்கிறார். அவர் வாக்கை நம்பு. அவர் சமுகத்தில் இரக்கத்திற்காக கெஞ்சு. தமது இரக்கத்தை உன்னிடத்தில் மகிமைப்படுத்த வேண்டுமென்று கேள். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் ஐசுவரிய சம்பன்னர் என்பதே உனக்கு போதுமான தைரியம். ஆகவே இன்று அவர் வார்த்தையை நம்பி அவரைக் கனப்படுத்து.
பூமிக்கு வானம் எப்படி
உயர்ந்து இருக்கிறதோ,
அவர் இரக்கம் அப்படி
நமது பாவம் மூடாதோ?
அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்
யூலை 12
“அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்” ஏசாயா 8:14
இது இயேசுவைப்பற்றி ஏசாயா கூறிய வார்த்தைகள். தேவ கோபாக்கினைக்குத் தப்பித்து, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கும் சாத்தானுடைய பொல்லாத சோதனைக்கும் நாம் தப்பி சுகமாயிருக்கப்பட்ட பரிசுத்த ஸ்தலம் அவர்தான். சத்துருக்களுக்கும், புயலுக்கும், துன்பங்களுக்கும் நாம் தப்பி ஓடவேண்டிய அடைக்கலப் பட்டணம் அவர்தான். இந்தப் பரிசுத்த ஸ்தலத்தில்தான் நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும், அங்கீகாரத்தோடும் கிருபாசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனை நாம் ஆராதிக்கலாம். கிறிஸ்துவினாலே தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்தி நாம் அறிய வேண்டிய காரியங்களைப்பற்றி நமக்குப் போதிப்பார். இந்தப் பரிசுத்த ஸ்தலத்தில் நமக்கு வேண்டிய சகலமும் பயத்தினின்று விடுதலையும், சத்துருக்களை எதிர்க்க பலனும் துன்பங்களின் உதவியும், துக்கங்களால் உள்ளான பரிசுத்தமும், இந்த உலகத்தில் இருக்கும் மட்டும் சுகமும் கிடைக்குமென்று எதிர்பார்க்கலாம்.
நண்பரே, எவ்வகை துன்பத்திலும் நீ இயேசுவண்டை போக வேண்டும். உன் தேவை யாவையும் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள பார்க்க வேண்டும். தேவன் உனக்கு எண்ணளவு கிருபையுள்ளவரென்று காட்டி எல்லா மெய் விசுவாசிகளுக்கும் கிடைக்கும் பாக்கியம் இன்னதென்று அவர் விவரிக்கிறார். அவர் உன் பரிசுத்த ஸ்தலமாய் இருக்கிறாரா? நீ தேவனைக் கிறிஸ்துவுக்குள் எப்போதாவது சந்தித்ததுண்டா? நீ கிறிஸ்துவில் தேவனைத் துதிப்பது உண்டா? அவர் உனக்குப் பரிசுத்த ஸ்தலமானால் அவரை மகிமைப்படுத்தப் பார். எந்த ஆசீர்வாதத்தையும் அவரிலே பெற்றுக்கொள்ளத் தேடு. எந்தத் துன்பத்திலும் மோசத்திலும் அவரண்டை போய் அப்படிப்பட்ட மகிமையின் நிலை உனக்குக் கிடைத்ததற்காக அவரை ஸ்தோத்திரி. இங்கே நீ சுகபத்திரமாய் இருக்கலாம். இங்கே உனக்குச் சமாதானம் உண்டு. கிருபையும் இருக்கும்.
இயேசுவில் எனக்கு
சுகம் பெலன் யாவும் உண்டு
இரட்சகரே நீரே என்றும்
என் அடைக்கலமாய் இரும்.
என்னை நோக்கிப் பாரும்
யூலை 11
“என்னை நோக்கிப் பாரும்” சங். 119:132
ஒரு சிறு பிள்ளை தன் தகப்பன் தன்னைக் கவனிக்கும்படி கேட்கிறது. தேவன் செய்கிறதெல்லாம் சுலபமாக செய்கிறார். நம்முடைய வருத்தங்களை நீக்கி துன்பத்தினின்று நம்மை விடுதலையாக்க நமக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர அவர் நம்மைப் பார்த்தால் போதும். அவர் பார்வை யோபைத் தாழ்மைப்படுத்தி கிதியோனைப் பலப்படுத்தி, பேதுருவை மனந்திரும்பச் செய்து, சாகிற ஸ்தேவானைச் சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரப்பிற்று. பார்ப்பது என்பது தயவு காட்டுவது ஆகும். சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுஞ்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன். தேவன் நம்மை நோக்கிப் பார்க்க வேண்டுமானால் நம்முடைய கண்களை அவரண்டைக்கு உயர்த்த வேண்டும். அவர் நம்மைப் பார்த்து நமதுமேல் கிருபையாய் இருக்க வேண்டுமானால் நாம் விசுவாசத்தோடு அவரை நோக்கி கெஞ்ச வேண்டும்.
அன்பர்களே, தேவனுடைய கண் உங்கள் மேலிருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அது இன்னதென்று உணருகிறீர்களா? அது இன்னதென்று உணருகிறீர்களா? அவர் இரக்கமாய் உங்களைக் கண்ணோக்குவாரானால் உங்கள் பயங்கள் நீங்கிப்போம். உங்கள் அந்தகாரம் விலகும். நீங்கள் ஒளியினாலும் பரிசுத்த நம்பிக்கையினாலும் நிரம்பப்படுவீர்கள். இவ்வளவு நாம் தேவனிடத்தில் கேட்கலாமென்று நினைக்கிறீர்களா? நாம் பெற்றுக்கொள்வதற்கு இது அதிகமென்று நினைத்தாலும் அவர் கொடுப்பதற்கு இது அதிகமல்ல. நாம் அவரோடு ஒப்புரவானோம் என்று இது காட்டுகிறது. அவர் நம்மேல் அக்கறை வைத்துள்ளாரென்று இது நிரூபிக்கும். இது நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். இந்த இரவில் நீயும்கூட என்னை நோக்கிப் பாரும் ஆண்டவரே என்று சொல்லி படுக்கைக்குச் செல்.
உமது அடிமையைப் பாரும்
மன்னித்து மகிழ்ச்சி அளியும்
உமது சமுகம் காட்டியே
அமர்ந்து தூங்கச் செய்யும்..













