முகப்பு வலைப்பதிவு பக்கம் 3

ஓர் அனுபவம்! ஓர் அறிமுகம்! ஓர் அழைப்பு!

ஓர் அனுபவம்!

ஒவ்வொருவருக்கும் பலவிதமான அனுபவங்கள் உண்டு. கிராமத்திலுள்ள ஒருவர் முதல் முறையாக பட்டணத்திற்குச் சென்று சுற்றிப்பார்ப்பது ஓர் ஆச்சரியமான அனுபவமாக இருக்கும். தாய் நாட்டை விட்டுகடல் கடந்து கப்பலிலோ, அதிலும் சிறப்பாக ஆகாய விமானத்திலோ வெளி நாடுகளுக்குச் சென்று திரும்புவது மகிழ்ச்சிகரமான ஒரு அனுபவமாக இருக்கும். பெருந் தலைவர் ஒருவர் நம் வீட்டிற்கு வந்து தங்கிச் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும் அல்லவா? பத்து மாதங்கள் சுமந்து குழந்தையைப் பெற்றெடுப்பது ஒரு பெண்மணிக்கு விலையேறப்பெற்ற அனுபவமாக இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒருவர் தன்னுடைய கடின உழைப்பு, அயராத முயற்சி. கட்டுப்பாடு, திறமை காரணமாக போட்டியில் வெற்றி பெறுவது பெருமிதம் அடையக்கூடிய அனுபவமாக இருக்கும்.

மேற்கூறிய அனுபவங்களை விடயெல்லாம்சிறப்பானது ஆன்மீக அனுபவமாகும். ஒவ்வொரு மனிதனும் இறைவனோடு தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொண்டு அவரோடு நிலையான உறவிற்குள் வருவது எல்லாரும் பெற வேண்டிய ஓர் ஒப்பற்ற அனுபவமாகும்! மனித உள்ளத்தில் இறைவன் தங்க விரும்புகிறார். மனிதன், இறைவனின் அவதாரமாகிய இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக் கொள்வது ஓர் உன்னதமான அனுபவமாகும். இருள் இருந்த இடத்தில் வெளிச்சம் வருவதைப் போலவும் வெறுமையும் குறைவும் மாறி நிறைவடைவதைப் போலவும் உயிரற்ற நிலைமாறி உயிர் பெறுவதைப்போலவும் இந்த அனுபவம் மறக்க முடியாத மகத்தான ஓர் அனுபவமாகும். உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறதா? நீங்கள் இந்த ஆன்மீக அனுபவத்தைப் பெற விரும்புகிறீர்களா?

ஓர் அறிமுகம்!

2000 ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் மனிதனாக அவதரித்த இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளுதல் அவசியம். இயேசு கிறிஸ்துவை, வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஓர் மகாத்மாவாக மக்கள் கருதுகின்றனர். இயேசு கிறிஸ்துவை அல்லாமல் மக்கள் மறுமை வாழ்வில் மோட்ச பாக்கியத்தை அடைய முடியாது. இயேசு கிறிஸ்துவை நீங்கள் நம்புவதும் அவரை ஏற்றுக்கொள்வதும் அவரைத் தொடர்ந்து பின்பற்றுவதும் ஓர் அற்புதமான புதிய வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஓரளவிற்கு கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரைப் பற்றிய சரியான உண்மைகளை தெரிந்துகொள்வது உங்களுடைய வாழ்வை நிறைவுபடுத்தும் வாய்ப்பாக அமையமுடியும். இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார்!

ஓர் அழைப்பு!

இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் சோர்வுறச் செய்யும் சூழ்நிலைகள் பல உண்டு’ விடுதலைக்காகவும் ஏங்கி நிற்கும் மக்களை ஆண்டவராகிய இயேசு அழைக்கிறார் “வருந்தி மன பாரத்தினால் சோர்வுற்றவர்களே! என்னிடத்தில் வாருங்கள். நான் உங்கள் உள்ளத்தை இளைப்பாற்றி உங்களுக்கு என் ஆறுதலை அருளிச் செய்வேன்’ என்று ஆண்டவர் இயேசு அன்புடன் அழைக்கிறார். இவ்வுலக வாழ்க்கையோடு மனித வாழ்க்கை முடிவு பெறுவதில்லை. மரணத்திற்குப் பின் உள்ள நித்திய வாழ்வை மோட்சத்தில் நீங்கள் அவருடன் என்றென்றும் வாழவேண்டும் என்று உங்களை அழைக்கிறார். இவ்வுலக வாழ்க்கையின் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறுவது ஆசீர்வாதமே. அதற்கு மேலாக உலகத்தின் பல கவர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் பரிசுத்தமாய் வாழ்வதற்கென தம்முடைய வழிகளில் நடக்க ‘நீ என்னை பின்பற்றி வா’ என்று இயேசு இன்று உங்களை அழைக்கிறார்!

கடமையா – பாசமா

கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும், ஏனெனில் நியூயார்க் நகரிலிருந்து வரும் இரயில் பாலத்தைக் கடந்து செல்லவேண்டும்.

பாலத்தை அவருடைய பையன் பீட்டர் பாலம் மூடப்படுவதைப் பார்க்க ஓடோடி வந்தான். வந்த வேகத்தில் திடீரென கால் தவறி நதியில் விழுந்துவிட்டான். மறுவினாடியே இரயில் பாலத்தை நெருங்கிவிட்ட கூ சீழ்க்கையை அவர் கேட்டார். ஆனாலும் இரயில் இன்னும் கண்களுக்குப் புலப்படவில்லை. தான் உடனடியாகப் பாலத்தை மூடவேண்டியதை அவர் அறிவார். தவறினால் இரயில் பயணிகள் விபத்திற்குள்ளாவார்கள்! நதியில் விழுந்த பையனைக் காப்பாற்றுவதா அல்லது பாலத்தை மூடி இரயிலுக்கு வழியை அமைப்பதா? கடமையா – பாசமா? திரு. அல்பர்ட் என்ன செய்வார்?

உடைந்த உள்ளத்தோடு பையன் நதியில் மூழ்கிப்போவதைப் பார்த்தப்படி பாலம் மூடப்பட அதை முறைப்படி இயக்கினார். குடமை பாசத்தை வென்றுவிட்டது. இரயில் பாலத்தைக் கடந்ததும் நதியில் குதித்து பீட்டரின் உடலைக் கரைக்கு கொண்டுவந்தார். ஐயோ! காலம் கடந்து விட்டது. பையன் இறந்துவிட்டான்….

இந் நிகழ்ச்சி நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. கதறி அழும் தகப்பனாருடன் நம் உள்ளம் கலந்து விடுகிறதில்லையா? பையனைக் காப்பாற்ற எவ்வளவாய் ஏங்கினார். சிக்கலான நேரம், திடீர் தீர்மானம் செய்யவேண்டும். சொந்தப் பையனா அல்லது பயணிகளின் உயிரா? இரண்டையும் செய்ய இவரால் இயலாது. பையனின் உயிரைப் பொருட்படுத்தாமல், இரயில் இரும்புப் பாதையின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, பாலத்தை இயக்கினார். விபரம் அறிந்ததும் எவ்வாறு பயணிகள் திரு. ஆல்பர்ட் அவர்களுக்கு ஆறுதல், நன்றி கூறியிருப்பார்கள்!

இப்போது மற்றொரு முக்கியமான காட்சியை நம் மனக்கண் முன்பாகக் கொண்டுவருவோமாக. இங்கு கீழ்ப்படிதல் மட்டுமல்ல, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட தெய்வீக அன்பும் வெளிப்படுத்தப்படுகிறது. முழு இருதயத்தோடும் கல்வாரிக் காட்சியை நோக்குவோமாக! பரமபிதா தமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, மனித இனத்திற்கு இரட்சிப்பாகிய விடுதலையை உண்டாக்கி வைத்திருக்கிறார். இது இலவசம். பாவிகள் மீட்படைய இதுவே வழி. ஒன்று நம் பாவத்திற்கான தண்டனையை நாமே அடைந்து அழியவேண்டும் அல்லது பரமபிதா தம் திருக்குமாரனை உலகத்திற்கு அனுப்பி தண்டனை முழுவதையும் அவர்மேல் சுமத்த வேண்டும். ஆண்டவருக்கு நன்றி! ஒப்பற்ற அவரது அன்பு வெளிப்பட்டது.

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (இயேசுவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ.3:16).

திரு. ஆல்பர்ட் தன் பையனை நதிக்கு அனுப்பவில்லை. கால் தவறி தானே விழுந்துவிட்டான். ஆனால் பரமபிதா தம் திருக்குமாரனை அனுப்பினார் (1.யோ.4:14). தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை (இயேசு கிறிஸ்துவை) இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது (1.யோ.4:9).

அருமையான நண்பரே! தேவ அன்புக்கு உம்முடைய உள்ளம் நன்றி செலுத்துகிறதில்லையா? உமக்காக உம் நல்வாழ்வுக்காக உமது பாவப் பிரச்சனைக்காக அவர் தம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் உயிரைக் கொடுத்தார் அல்லவா! நீர் அடையவேண்டிய தண்டனையைத் தாமே முன் வந்து ஏற்றுக்கொண்ட அருமை நாதராம் இயேசு பெருமானுக்கு உம்மையே ஜீவபலியாக, காணிக்கையாக அவரது மலரடிகளில் படைக்கமாட்டீரா? உம்மை அரவணைக்க, ஆசீர்வதிக்க, உமது பாவங்களை மன்னிக்க அவர் காத்திருக்கிறார். இயேசு பெருமான் சிலுவையில் சிந்திய இரத்தம் உம் பாவபாரத்தை நீக்கும். மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு இரட்சகர் இன்றும் உம் உள்ளத்தின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். திறந்துவிடுங்கள்.

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் (மத்.24:15)

மன அழுத்தம், ஆபத்தா?

நாம் வாழ்கின்ற இந்த உலகம் நிலையற்றதாக. வேகமான ஓட்டத்தில் மாறிக்கொண்டிருக்கின்றது. அந்த ஓட்டத்தோடு போகும் நம்முடைய அன்றாட வாழ்வில். மன அழுத்தமானது ஒரு எதிர்மறையான பகுதியாக அமைந்துவிட்டது. மன அழுத்தம் என்பதை விளக்கப்படுத்தும் போது வாழ்வில் திணிக்கப்படுகின்ற மேலதிக நம் தாக்கங்கள் தேவைகள் மற்றும் பாரங்களால், மக்களில் ஏற்படுகின்ற எதிர்விளைவு என குறிப்பிடலாம்.

லண்டனில் சுமார் 5.000,000 மக்கள் தங்கள் வேலைகளினால் மிக அதிகமான மன அழுத்தத்தை அனுபவிப்பதாக அறிக்கைகள் குறிப்படுகின்றன. 2004 மற்றும் 2005 இல் மொத்தமாக 12.8 மில்லியன் வேலை நாட்கள் மன அழுத்தம் காரணமாக இழக்கப்பட்டுள்ளன. மனஅழுத்தமானது ஒரு ஆரோக்கிய சமூகத்திற்கு பெரிதான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

தோற்றம்:

மன அழுத்தம் ஏற்படும் வேளையில், நாம் நம் வாழ்வை சிந்தித்துப்பார்க்க வேண்டும். மன அழுத்தமானது நம் சுயத்தால், உள்ளான மனதின் காரியங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அல்லது நம் மேல் சுமத்தப்பட்ட ஒன்றாக அமையலாம். எப்படி அமைந்தாலும், அடிப்படைக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இருப்பதில்லை. மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால். அதனால் அவனுக்கு என்ன லாபம்? என இயேசு கிறிஸ்து கேட்ட கேள்வியே அந்த அடிப்படைக் கொள்கை (மாற்கு 8:36)
இது நமக்கு நிஜமான சவாலோடு அமைகின்றது. முன அழுத்தங்கள் நிறைந்த வாழ்விலிருந்து. சூழ்நிலையிலிருந்து வெற்றி பெற அல்லது தப்புவதற்கு முக்கிய விஷயமாக அமைவது எது? இந்த பூமியில் நம்முடைய வாழ்க்கைக் காலமானது. நித்தியத்திற்கு ஒரு படியேறுகின்ற ஒரு குறுகிய பயணமே. நாம் நித்தியவாழ்வைக் குறித்ததான காரியங்களுக்கு நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவோமானால். நம் வாழ்வு வேறொரு தோற்றத்தில் காணப்படும். இந்த உலகின் அழுத்தங்கள். உடைமைகள். தகுதிகள் யாவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. ஏனெனில். நம் வாழ்க்கை முறைக்கேற்ப நம் ஆத்மா. நித்திய காலமும் இருக்கப் போகும் இடத்தின் முடிவு பரலோகம் அல்லது நரகம் ஆகும்.

ஆயத்தமா?

இது ஒரு மிக முக்கியமான விஷயமாகும். எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு நித்திய இடத்திற்கு செல்ல வேண்டியது தவிர்க்க முடியாத கட்டாயமான ஒன்று. நல்ல இடத்தை அடைவதற்குரிய முன்னேற்றப்பாடுகளை செய்து, தயாரான நிலையில் இருந்தால் தான் பரலோகத்தினுள் போக முடியும். அதற்கு நாம் எப்படி தயாராக முடியும்?

நமது பாவங்களை தேவனிடத்தில் அறிக்கைவிட்டு. பாவ வழிகளை விட்டு விலகி மனம் திரும்ப வேண்டும். கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து அவர் சொல்லிய வழிப்படி நாம் வாழ வேண்டும் (அவரை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்). தன்னிடத்தில் விசுவாசம் வைக்கிறவர்கள் எவர்களோ, அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனையை தன்மீது சுமந்து கிறிஸ்து இயேசு சிலுவையில் மரித்தார். அதன்பின், நமக்கு ஜீவன் கொடுக்கும்படி தேவனாக உயிர்தெழுந்தார். நமக்காக பாடுகள் பட்டு மரித்து, உயிர்தெழுந்து நமக்கு ஜீவன் தந்த கிறிஸ்துவை நாம் தொடர்ந்து பின்பற்றி வாழ வேண்டும். அப்போது தான். நமது வாழ்வில் பரலோகத்தை நாம் நிச்சயத்துடன் நோக்கிப் பார்க்க முடியும்.

இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால். அழுத்தங்கள் நிறைந்த உலகில் வெற்றி பெறுவதோ. உயிர்வாழ்வதோ முக்கியமல்ல. இரட்சிப்பை அடைவதும், நித்தியத்திற்கான ஆயத்தங்களை செய்வதுமே பெரிய காரியம். இயேசு கிறிஸ்து மூலமாக இரட்சிப்பைப் பெற்ற மனிதன். எவ்வித அழுத்தங்களுமில்லாமல், பரிபூரணம் நிறைந்துள்ள பரலோகத்தை, நித்திய எதிர்காலமாக நோக்கிப் போக முடியும். அங்கு நித்திய மகிழ்ச்சி உண்டு.

அதே வேளை, தேவனை விசுவாசிக்காமல் உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி வாழ்பவர்கள் நித்திய நரகத்தை அடைவார்கள். அங்கே (நரகத்தில்) நித்தியமான மன அழுத்தங்களால் அவதிப்படுவர் என்பதையும் வேதாகமம் நமக்கு எச்சரிக்கின்றது.
இதை வாசிக்கின்ற உனது நிலை என்ன? உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி மன அழுத்தங்களாலேயே சாகப் (மடிய) போகின்றாயா? அல்லது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாக கிடைக்கும் நித்திய வாழ்க்கையை நோக்கி வாழப்போகின்றாயா?

மீட்பு

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோ.3:23-24)

புதிதாக ஒருவர் உங்களை சந்திக்க வந்தால் அவர் மதிப்புக்குரியவர் என எண்ணி வீட்டுக்குள் வரவேற்று தேனீர் அருந்தக்கொடுப்பீர்கள். விருந்தினரை வரவேற்று அவர்களை உபசரிப்பது நமது கலாச்சாரம். சில சமயங்களில் அவருக்கு உதவி புரியவும் முன்வருவோம்.

இதுபோன்ற நற்பழக்க வழக்கங்களை, கெடுதியானதும் துன்பம் நிறைந்ததுமான சூழ்நிலைகளில் மனிதர்கள் மறந்து விடுவதுண்டு. இவ்விதமான சூழ்நிலையில் அநேக மதிப்பிற்குரியவர்களும் கூட மிகவும் முரட்டுத்தனம் உள்ளவர்களாகவும், கொடுமையானவர்களுமாய் மாறிவிடுகிறார்கள். பசியுற்றவர்கள் திருடுவார்கள், பயமுற்றவர்கள் தங்கள் அயலாரைக் காயப்படுத்துவார்கள். பொய்யும், பகையும் நம் சூழ்நிலைகளை கெடுத்துவிடும். அனுபவங்கள் மற்றவர்களைக் குறித்து சந்தேகப்படவும் தீமையான எண்ணங்கொள்ளவும் வழிநடத்திவிடுகின்றது. இவ்வாறு நாடுகளுக்கிடையேயும் கெடுதியான இருளான எண்ணங்கள் காணப்படுகின்றது. நீங்கள் எப்படிப்பட்ட கசப்பானவர்கள்? உங்கள் எதிரியைவிட நீங்கள் முன்னேற முயற்சிக்கும்போது அவனுடைய அழிவைக்கண்டு நகைப்பதில்லையா? பள்ளிப்படிப்பிலும் கூட மற்றவர்களைக் குறித்த கரிசனை, பாரம் இல்லாது உங்களுடைய வெற்றியைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதில்லையா? உணவருந்தும்போதும் சுவையான ஆகாரத்தையே விரும்பி அதைப் பெற்றுக்கொள்ள துடிப்பதில்லையா? நீங்கள் ‘தூஆ’ செய்யும்போது உங்களுடைய பிரச்சனைகளுக்காகவே அதிகநேரம் இறைவனிடம் (அல்லாவிடம்) கேட்பது இல்லையா?

இயற்கையாகவே மனிதன் சுயநலமும், தயக்கமும், தீய நாவும் உடையவனாக இருக்கிறான். ஏனெனில் இறைவனின் இரக்கம் அவனில் வாசம் செய்வதேயில்லை. பிறர் உனக்கு எதிராக யாதொரு காரியத்தையும் செய்யும்போது இறைவன் உன்னில் அன்பு கூர்ந்ததுபோல நீ அவர்களில் அன்பு கூறுவதேயில்லை. நாமெல்லாரும் பாவம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து சாத்தானின் சோதனைகளைக் கண்டு நகைக்கிறவர்களாய் காணப்படுகிறோம். இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நமக்கு பிரியமில்லை. மேலும், நம்மைப் படைத்தவரைப்பற்றிய எண்ணமும் நம்மில் இல்லை. நாம் நமது பாவங்களை விட்டுவிட மனமில்லாத அளவிற்கு நமது பாவத்தை விரும்புகிறோம். நமது எல்லா உறுப்புகளும் பாவம் நிறைந்ததாக இருப்பதால், நீதியும் நித்தியமுமான இறைவனின் கோபாக்கினைக்குப் பாத்திரராயிருக்கிறோம். நாம் நமது பாவங்கள் சிலவற்றை அறிந்திருக்கலாம். ஆயினும் இறைவன் நம் ஆன்மாக்களின் ஆழத்தையும் அறிந்திருக்கிறார். நமது பாவங்கள் அனைத்தும் அவருக்கு முன்னிருக்கின்றன. அவருடைய கட்டளையே நம்மை நியாயம் தீர்க்கிறது. அதன் தீர்ப்போ, “இப்பாவி தள்ளப்பட்டு இழக்கப்பட்டிருக்கிறான்” என்பதே.

மனிதத் தன்மைக்கு வேறுபட்ட தன்மையுடையவர் ஒருவர் இருக்கிறார். இவரே நமது பாவக்கட்டுகளைத் தகர்த்தெறிந்தவர். தம்மைப் பகைத்தவர்களையும் தம்மில் நிலைத் திருந்தவர்களையும் அவர் நேசித்தார். இறைவனுடைய மகிமை அவர் ஊடாக முடிவின்றிப் பிரகாசித்தது.

இந்த பாவமற்ற மனிதன் இயேசு கிறிஸ்துவே. இவர் நமதாண்டவர். கன்னிகையான மரியாளிடத்தில் இறைவனுடைய ஆவியினால் பிறந்தவர். அவருடைய உள்ளம் அன்பினாலும், சத்தியத்தினாலும் நிறைந்திருந்தது. அவரைக் குறித்து ரசூல்கள் கூறியதாவது, “அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14) மனிதனை, பிசாசின் தந்திரங்களிலிருந்து விடுவிக்கவும், இறைஅன்பினால் மனிதனை நிரப்பவும் அவர் இவ்வுலகத்தில் வந்தார். அவர் ஊழியம் கொள்ளும்படிவராமல், ஊழியம் செய்யவும், எல்லாரையும் மீட்டுக்கொள்ளும் பொருட்டுத் தம் உயிரையே மீட்புப் பொருளாகக் கொடுக்கவும் வந்தார்.

தமது மகத்தான அன்பிலே, கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்து, அவைகளுக்கான விலையை செலுத்தி, இறைவனுடைய கோபாக்கினையை நமக்குப் பதிலாக தாமே சகித்தார். நம்மை நித்திய அழிவிலிருந்து காப்பாற்ற, அவர் மரித்ததினிமித்தம் நம் மெய் மீட்பரானார். தம்மிடத்தில் சுகம் பெற்றவர்களிடத்தில் அவர் கூலி கேட்கவில்லை. மரித்தவர்களை உயிருள்ளவர்களாய் எழுப்பினார். “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று உனக்கும் கூறுகிறார். உன்னிடம் நோன்பையோ, நற்கிரியைகளையோ அல்லது பலியையோ அவர் கேட்கவில்லை. உன்னை இறை சமாதானத்தில் ஆதரித்து, தம் சொந்த விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவுகிறார். உன் இரட்சகரில் நம்பிக்கைவை, அப்போது உன்னுடைய விசுவாசத்தினால் நீ பிழைத்துள்ளாய் என்பதை நீ அறிந்து கொள்வாய்.

தம், நன்மையும் இரக்கமும் நிறைந்த கண்களினால் கடவுள் உன்னையும் மற்றெல்லா பாவிகளையும் பார்க்கிறார் என்பதனை நீ ஒருபோதும் மறந்துவிடாதே. நீ நல்லவன் என்பதால் உன்னை அவர் அவ்வாறு நோக்குகிறாறென்றல்ல, உன்னை நீயே மீட்டுக் கொள்ள முடியாதென்பதை அவர் அறிவார். சகல அங்கலாய்ப்பில் இருந்தும், துன்பத்தின் கண்ணியிலிருந்தும் உன்னை தூக்கியெடுக்க நித்தியமான கிறிஸ்து உன்னிடத்தில் வந்தார். கிறிஸ்துவண்டை வா! நீ சத்தியத்தைக் கண்டு கொள்வாய். இறை நீதியையும் பெற்றுக் கொள்வாய். கடவுள் உன்னைத் தள்ளிவிடாமல் அன்போடுன்னை வரவேற்கிறார். நீ அவரை உலக இரட்சகர் என நம்பியிருந்தால், இறைவன் உன்னை நீதிமானாகக் காண்கிறார். அன்புள்ள நண்பா, இறைவன் உன்னை நேசிக்கிறார். அதுமட்டுமல்ல, உன்னை சுத்தமாக்கவும் சித்தம் கொண்டுள்ளார். தாமதியாமல், அவர் உனக்கு அளிக்கும் அருளுக்காக அவருக்கு நன்றி செலுத்து. இறைவன் மகத்தானவரென்றும், தம்முடைய மீட்பின் நிமித்தம் மக்களை இலவசமாய் நீதிமானாக்குகிறாரென்றும் மற்றவர்களுக்குச் சொல். அவர்கள் மீட்பைப் பெற்றுக்கொள்ளவும், அளவில்லா அன்பினாலும், மகிழ்ச்சியினாலும், மேலும் நன்றியுள்ள இருதயத்தினாலும் நிரப்பப்படவும் உன் நம்பிக்கையினால் அவர்களுக்கு அறிவூட்டு.

நீ உன் தீய பழக்கவழக்கங்களிலேயே உழன்று கொண்டிராமல் அவைகளை விட்டு கிறிஸ்துவோடு வாழவும் அவருடைய பலத்தினால் தூய வாழ்வு வாழவும், கிறிஸ்து உன்னை உன் தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க வல்லவராயிருக்கிறார். இதற்கு சந்தேகமேயில்லை. கிறிஸ்துவின் மீட்பு ஒரு முற்றுப்பெற்ற ஒரு வேலை. உன் வாழ்வை அதோடு தொடர்புள்ள போராட்டங்களோடும், சிக்கல்களோடும், தோல்விகளோடும் அவருக்கு அர்ப்பணி. அப்போது அவர் தமது காயப்பட்ட கரங்களை உன்மேல் வைத்து உன்னை ஆசீர்வதித்து, தமது சமாதானத்தை உன் சரீரத்திலும், தமது மகிழ்ச்சியை உன் உள்ளத்திலும், தமது சுத்திகரிப்பை உன் மனச்சாட்சியிலும் ஊற்றுவார் என்பதை நீ அறிந்து கொள்வாய். கிறிஸ்துவினுடைய அன்பின்விளைவை மக்கள் உன் வாழ்விலும் உன் வாழ்வினூடாகவும் கண்டு கொள்வார்கள்.

Popular Posts

My Favorites