Home Blog Page 33

நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்

யூன் 23

“நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.” நீதி. 11:28

இவர்கள் இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கர்த்தர் தமது நீதியைக் கொடுக்கிறார். அவர்களில் அவர் தம்முடைய ஆவியை வைத்திருக்கிறார். கிறிஸ்துவினால் நீதிமான்களாய் தேவ சமுகத்தில் நிற்கிறார்கள். அவர்கள் மனிதர்முன் நேர்மையாய் நடந்து தேவ மகிமைக்காக கனி கொடுக்கிறவர்கள். மரத்தின் வேருக்கும் கிளைகளுக்கும் உள்ள உறவுப்போன்று அவர்கள் இயேசுவோடு இணைக்கப்பட்டு, ஐக்கியம் கொள்கின்றனர். அவரால் ஆதரிக்கப்பட்டு, அவருடைய நிறைவிலிருந்துத் தங்களுக்குத் தேவையானதப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ஜீவன், அழகு, பெலன், செழிப்பு ஆகியவைகளுக்கு அவர்தான் ஊற்று. கிறிஸ்துவை விட்டுப் பிரிந்தால் அவர்கள் கனியற்று வாடிப் பட்டுப்போய்விடுவார்கள்.

அத்திமரச் சாறானது எப்படி கிளைகளுக்கு போகிறதோ அப்படியே அவர்களுக்கு வேண்டியதை அவர் கொடுக்கிறார். மேலும் தமது கிருபையாகிய பனியையும், ஆசீர்வாதமாகிய மழையையும், அவர்கள்மேல் பொழியப்பண்ணுகிறார். ஆகவே, இவர்கள் செழிப்பாகி கனி கொடுத்து வளர்கிறார்கள். அவர் அவர்களைத் துன்பத்தினால் நெருக்கினாலும் அதிக கனிகளைக் கொடுக்கும்படித்தான் அப்படி செய்கிறார். கோடைக்காற்று கிளைகளை ஒடித்து, மூடுபனி அவைகளை முறித்தாலும், அவர்களின் ஜீவனோ வேரில் இருக்கும். அது கிறிஸ்துவோடு தேவனில் மறைந்திருக்கிறது. அன்பர்களே! கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருப்பதனால் நாம் செழிப்புள்ளவர்களாகிறோம் என்பதை கவனியுங்கள். நமது மார்க்கம் மெய்மார்க்கம் என்பதற்கு இது அத்தாட்சி.

நீதியின் விருட்சங்களாய்
ஒங்கி வளருவோம்
விசுவாசம் அன்போடு
பரதீசில் கனிகொடுப்போம்.

ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு

யூன் 22

“ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு.” பிலி. 2:14

சுவிசேஷத்தைப் பிடித்துக்கொண்டு கிறிஸ்துவானவரைக் குறித்த வாக்குத்தத்தத்திலும் அவருடைய கிரியையிலும் உள்ள ஜீவனை இது வெளிப்படுத்துகிறது. குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்டவர்களுக்கு ஜீவனை தேவனுடைய இலவச ஈவாகக் கொடுக்கிறது. வசனம் ஆவியானவரின் வல்லமையினால் ஜீவனை அளிக்கப் பயன்படுகிறது. இந்த ஜீவ வசனம்தான் தேவ தயவிலும், கிறிஸ்துவின் ஐக்கியத்திலும், ஆவியானவரைப் பெறுவதிலும், ஜீவ வழியில் சேர்ப்பதிலும், ஆக்கினைத் தீர்ப்புக்கு விலக்குவதிலும், நித்திய மகிமைக்கு சேர்ப்பதிலும் நம்மை நடத்துகிறது. இந்தச் சுவிசேஷம் நமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்காக நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வசனத்தை நாம் அந்தகாரத்தில் வெளிச்சத்தைப்போலவும், பசியினால் வருந்தும் பாவிக்கு உணவுப்போலவும், ஆயுள் குற்றவாளிக்கு மன்னிப்புப்போலவும், மீட்கப்பட்டவர்களுக்கு சட்ட நூலாகவும் தூக்கிப் பிடிக்க வேண்டும். தேவ ஊழியத்தில் பரிசுத்த நடத்தையாலும், கனியுள்ள வாழ்க்கையினாலும், அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். அன்பர்களே, சுவிசேஷத்தை ஜீவனுள்ள வசனமாக ஏற்றுக்கொள்வோமாக. அதைப் பிறர்க்குச் சொல்லுவது நம்முடைய கடமையென்று எண்ணுவோமாக. அந்தக் கடமையைச் சரியானபடி நிறைவேற்றுகிறோமா என்று நம்மை நாமே கேட்போமாக. அச்சிட்டுள்ள அவர் வசனத்தை வாங்கிப் பிறர்க்குக் கொடுப்பதினாலும் அவ்வாறு செய்பவர்களுக்கு உதவி செய்வதினாலும் ஜீவ வசனத்தைத் தூக்கிப் பிடிப்போமாக.

நன்றி உள்ளவர்களாய் என்றும்
சேவை செய்வோம் அவருக்கு
நம் இயேசுவைப் புகழ்ந்து
நம்மையே அவருக்குக் கொடுப்போம்.

கர்த்தரிடத்தில் கிருபை உண்டு

யூன் 21

“கர்த்தரிடத்தில் கிருபை உண்டு.” சங். 130:7

கர்த்தர் நமக்குக் கிருபை அளிக்கிறார். அவரிடத்தில் கிருபை வாசம்பண்ணுகிறது. அவரின் குணத்தில் கிருபையும் ஒன்று. இரக்கம் காட்டுவதே அவருக்கு மகிழ்ச்சி. அவரிடத்தில் இருக்கும் கிருபை பூரணமானது. கிருபை காண்பிப்பதில் இப்போதிருப்பதுப்போல் இதற்கு முன்பு இருந்ததில்லை. இனி அவர் இருக்கப்போவதுமில்லை. தேவன் கிருபையில் அதிக உருக்கமானவர். அதிக இரக்கமுள்ளவர். பலவகைகளில் அவர் கிருபையை நம்மீது காட்டுகிறார். எல்லாருக்கும் தேவையானது அவரிடத்தில் உண்டு. பின்வாங்கிப்போனவர்களைச் சீர்ப்படுத்தும் கிருபை அவரிடத்தில் உண்டு. விசுவாசிகளைப் பாதுகாக்கிற கிருபை அவரிடத்தில் உண்டு.

பாவத்தை மன்னிக்கிற இரக்கம், சுவிசேஷ சிலாக்கியங்களை அனுபவிக்கச் செய்கிற சிலாக்கியம், ஜெபிக்கிற ஆத்துமாவுக்கு இரங்குகிற இரக்கம் இந்தக் கிருபையில்தான் உண்டு. அவர் கிருபை நிறைந்தவர் மட்டுமல்ல, அதைக் காட்ட, கொடுக்க அவர் பிரயாசப்படுகிறார். அந்தக் கிருபையை மேன்மைப்படுத்த மகிமைப்படுத்த, வேண்டுமென்பதே அவர் முழு நோக்கம். அவரில் கிருபையிருப்பதினால் நிர்பந்தர் தைரியமாய் அவரிடம் சேரலாம். அது பயப்படுகிறவர்களைத் தைரியப்படுத்துகிறது. தேவனிடமிருந்து நன்மையைப் பெற அவர்கள் ஒன்றும் கொண்டு செல்லவில்லை. இந்தக் கிருபை பின்வாங்கிக் கெட்டுப்போனவர்களைத் திரும்ப வரும்படி அழைக்கிறது. Nhதனையில் அகப்பட்டு கிறிஸ்தவனை எல்லா துன்பத்திலும் வருத்தத்திலும் மகிழ்ச்சியாக்குகிறது. அவரின் கிருபை தேவனைப்போலவே நித்தியானது, அளவற்றது என்பதை மறக்கக்கூடாது. கிருபை எப்பொழுதும் சிங்காசனத்தில்மேல் ஆட்சி செய்கிறது. எந்தப் பாவியும் இரக்கம் பெறலாம்.

கர்த்தரை நம்பு பாவி
அவர் இரக்கம் மாபெரிது
அவர் கிருபை நாடு
அவர் பெலன் பெரியது.

கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு

யூன் 20

“‘கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு.” உபா. 32:9

தேவன் என் பங்கு என்று சொல்லும்போது நாம் நன்றியறிதலாலும், சந்தோஷத்தாலும் நிரப்பப்படுகிறோம். தேவன் தம் ஜனங்களுடைய பங்கென்பதே நம்மை அதிசயத்தினாலும், ஆச்சரியத்தினாலும், நிரப்பத்தக்கது. அவர் எவ்வளவோ பெரியவர். இவர்கள் எவ்வளவோ அற்பர். அவர் எவ்வளவோ பரிசுத்தர். மகிமை நிறைந்தவர். இவர்கள் எவ்வளவோ கொடியவர்கள். ஆனால் பூமியில் எல்லாரயும் பார்க்கிறவர் இந்த ஜனத்தை மட்டும் தனக்காகத் தெரிந்துகொண்டார். கொடுர பகைவன் வலையிலிருந்து மீட்டு தம் பக்கம் இழுத்து, தமது நேசத்தை அவர்கள்மேல் வைத்து, தமக்குச் சொந்தம் பாராட்டுகிறார். தம்முடைய ஆலயமாக அவர்களில் வாசம்செய்து அவர்களைத் தம் பிள்ளைகளாக ஆதரித்து, அவர்களை மோட்சகரை சேர்ப்பார். அவர்கள் கர்த்தருடைய பங்கு. அவருடைய சுதந்தரம். அவருடைய திராட்சத்தோட்டம். அவருடைய பூங்கா.

விசுவாசியே! கர்த்தர் உன்னைத் தம் பங்கென்று நினைத்து உன்மேல் கவனம் வைத்ததை நினைத்துப்பார். முன்னே நீ திரிந்து அலைந்த ஆடாய் இருந்தாய். இப்போது உன் ஆத்தும மேய்ப்பனும், கண்காணியுமானவரிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறாய். தேவதூதர்களையே அவர் தம் பங்கென்றும் ஆபரணங்களென்றும் சொல்லவில்லை. ஆனால் உன்னை அப்படி சொல்லி அழைத்திருக்கிறார். ஆகவே அவரோடு உண்மையான மணவாட்டியாக அவருடன் ஐக்கியப்பட்டு நடந்து பரமவீடு போய்ச்சேர கவனமாயிரு. அவரின் கிருபைக்குச் செலுத்தவேண்டியதைச் செலுத்து. ஏனென்றால் தேவனின் சுத்த தயவால் நீ மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கிறாய்.

தேவ பக்தர்கள் அவர் பங்கு
இராப்பகல் அவர்களைக் காப்பார்
அதே இயேசுவின் களிப்பு
அதில் அவர் மகிழ்வார்.

நான் இரக்கம் பெற்றேன்

யூன் 19

“நான் இரக்கம் பெற்றேன்.” 1.தீமோ. 1:13

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவைத் தூஷித்து அவரைத் துன்பப்படுத்தி, அவருடைய ஊழியத்திற்குச் சேதம் உண்டாக்குகிறவனாய் இருந்தான். கர்த்தரோ இனி விசுவாசிக்க போகிறவர்களுக்கு மாதிரியாக அவனுக்கு இரக்கம் காட்டினார். இதனால் நிர்ப்பந்தனுக்கும் இரக்கம் கிடைக்குமென்றும், அவர் தமது சித்தத்தின்படி பாவிகளுக்கு இரக்கம் காட்டுகிறவர் என்றும் நாம் அறிந்துக்கொள்கிறோம். இரக்கத்தைத் தேடாத பவுலுக்கே இரக்கம் கிடைக்கும்போது இதைத் தேடுகிற எவருக்கும் கிடைக்கும் என்பது எத்தனை நிச்சயம். கர்த்தர் காட்டினதும், பவுல் பெற்றுக்கொண்டதுமான இரக்கம், கொடுமையான எண்ணிக்கைக்கு அடங்காததான எல்லா பாவத்தையும் பூரணமாக மன்னித்துவிடுமென்று காட்டுகிறது.

மனசாட்சி எவ்வளவாய்க் கலக்கப்பட்டாலும் இந்த இரக்கம் பூரண சமாதானத்தைக் கொடுக்கிறது. அது உள்ளான பரிசுத்தத்தைத் தந்து நமது நடக்கையைச் சுத்தம்பண்ணுகிறது. அது கிறிஸ்துவைப் பற்றின அறிவைச் சகலத்துக்கும் மேலாக எண்ணி அதை நாடித்தேடவும் மற்ற எல்லாவற்றையும் குப்பையென்று உதறி தள்ளவும் செய்கிறது. அது வியாகுலத்தைச் சகித்து ஆத்துமாவைப் பெலன் பெற செய்கிறது. அது தேவ நேசத்துக்கும் ஆத்தும இரட்சிப்பைப்பற்றின கவலைக்கும் நம்மை நடத்தி இயேசுவின் சபையோடு பலவித பாசத்தால் நம்மை சேர்த்து கட்டுகிறது. அன்பரே, நீ இரக்கம் பெற்றவனா? அந்த இரக்கம் பவுலுக்குச் செய்ததை உனக்கும் செய்திருக்கிறதா? எங்கே இரக்கம் இருக்கிறதோ அங்கே கனிகள் இருக்கும். இத்தனை நம்மைகளுக்கும் காரணமாகிய இரக்கம் எவ்வளவு விலையேறப்பெற்றது.

இரக்கத்திற்கு அபாத்திரன்
நீரோ இரக்கமுள்ளவர்
எல்லாரிலும் நான் நிர்ப்பந்தன்
ஏழைக்கிரங்குவீர் தேவா.

தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்

யூன் 18

“தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.” யோபு 15:4

பக்தன் யோபுக்கு, விரோதமாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தை, நம்மில் அநேகருக்கு விரோதமாகவும் சொல்லப்படலாம். ஜெபமானது விசேஷித்த சிலாக்கியமாக எண்ணப்பட்டு, புத்திரசுவிகார ஆவியினால் அந்தச் சிலாக்கியத்தை அனுபவித்தாலும் நாம் இந்த உலக சிந்தைக்கு இடங்கொடுத்தால் அது இன்பமான காரியமாயிராமல் பாரமான கடமையாய் விடும். நாம் வெறுப்பு உள்ளவர்களாய் குளிர்ந்து உயிரற்றுப்போகிறதினால் கர்த்தரை விட்டு தூர விலகிப் போகிறோம். சரியானபடி இவை நம்மை அவர் சமுகம் கொண்டுப்போக வேண்டும்.

தேவ சமுகத்தில் நம்மை வழிநடத்த, நல்ல இருதயம்வேண்டும். நல்ல நேரம் வரட்டும், ஏற்ற சமயம் கிடைக்கட்டுமென்று இல்லாமல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் சமுகம் தேடி போக வேண்டும். ஜெபம் குறையும்போது நாம் ஆவியின் சிந்தை உடையவர்களாய் இருந்தாலும் சீக்கிரம் குளிர்ந்து கவலையற்று பெலனற்றுப்போவோம். பாவம் நமக்குள் பெலன்கொண்டு நற்குணங்கள் குறைந்து, ஜெபத்தியானம் குறைந்து, தேவ சமாதானம் கலைந்துப்போகும். நம் ஆசைகள் மாம்சத்துக்கு உரியவைகளாகும். ஆகவே மெய்மார்க்கம் வாடிவதங்கி, அழிந்துப்போகிற உலக பொருளை பெரிதென்றெண்ணி, கிருபையின் எத்தனங்கள் பலனற்றதாகி, சாத்தான் நம்மேல் வெற்றி அடைவான். ஜெபத்தியானத்தைக் குறைப்பது வேத வசனத்துக்கு நேர் விரோதமானதாகும். அதனால் சாத்தானுக்கு இடங்கொடுத்து, பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துவதால், எல்லாம் கேடாய் முடியும்.

ஜெபியாதவனுக்கு
மகிழ்ச்சி ஏது?
கேளாதவனுக்கு
கிடைப்பதெப்படி?

தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது

யூன் 17

“தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது.” லூக்கா 17:21

தேவன் தமது சிங்காசனத்தை மனிதனுடைய இருதயங்களில் வைக்கிறார். அவர் பூமியின்மேல் ஆளுகை செய்தாலும் அவர்களுக்குள் அரசாளுகிறார். ஒரு தேவனுடைய பிள்ளை ஒரே சமயத்தில், தேவ வாசஸ்தலமாயும், அவர் ஆலயமாயும், அவரின் இராஜ்யமாயும் இருக்கிறான். அவர் நமக்குள் வாசம் செய்து அரசாளுகிறார். மறு பிறப்பில் அவர் நம்மைச் சொந்தமாக்கி, நம்மை முற்றும்முடிய அவரின் ஊழிய மகிமைக்கும், புகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுக்கும்போது நமக்குள் அரசாளுகிறார். அவர் இப்படி அரசாளுகிறதினால், தேவனோடு ஒப்புரவாகுதலும், தேவனாடு நேசமாகுதலும், தேவசித்தத்திற்கு முற்றும் கீழ்ப்படிதலும் அடங்கியிருக்கிறது.

இவையெல்லாம் அவரின் கிரியைகளினாலும், தயவினாலும், ஆவியானவரின் தேற்றுதலினாலும் உண்டாகிறது. கர்த்தர் ஆளுகைச் செய்யும் இடத்தில், ஆத்துமா குற்றம் நீங்கி, தேவ சமாதானத்தை அனுபவித்து, பிதாவின் மகிமையை உணர்ந்து ஆனந்தங்கொள்ளுகிறது. ஒருவன் ஆண்டவரின் ஆளுகைக்குள் வரும்போது இருதயத்தில் பகை கொல்லப்பட்டு மனதில் இருள் நீங்க மாய்மாலம் நீங்கி, தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற சிந்தைப் பிறக்கிறது. தேவ சித்தமே அவனுக்குப் பிரமாணம். கிறிஸ்து முடித்த கிரியை அவனுக்கு அருமை. தேவ மகிமை அவன் நாடும் மகிமை. அவன் விரோதி அவனுக்கு சிநேகிதனாகிறான். இராஜதுரோகி உத்தம குடிமகனாகிறான். அந்நியன் அருமையான பிள்ளையாகிறான். தேவ இராஜ்யம் நமக்குள் இருந்தால், தேவ வாக்குகளைப் பிடித்தவர்களாய் தேவனுக்கு பிரியமாய் நடக்கப் பார்க்க வேண்டும்.

கர்த்தாவே என்னை ஆளும்,
என் பாவம் கழுவும்,
சமாதானத்தை அளியும்,
தேவ மகிழ்ச்சியாய் நிரப்பும்.

உலகம் அவரை அறியவில்லை

யூன் 16

“உலகம் அவரை அறியவில்லை.” 1.யோவான் 3:1

ஆண்டவர் இயேசு பூமியில் வாழ்ந்தபோது உலகம் அவரை அறியவில்லை. இப்போது மனிதரில் அநேகர் அவரை அறியவில்லை. தேவனுடைய இருதயத்தில் பொங்கி, மாம்சத்தில் வாசம்பண்ணும்படி செய்து அவரைத் துக்கமுள்ளவராக்கின அன்பை அவர்கள் அறியார்கள். கெட்டு, தீட்டுப்பட்டுப்போன மனிதனுக்கு அவர் காட்டுகிற அன்பான குணமும், பட்சமும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களை ஏற்றுக்கொள்ள அவருக்கிருக்கிற மனதைப்பற்றியும், அவர்களை வழி நடத்த அவருக்கிருக்கும் தீர்மானத்தைப்பற்றியும் அவர்களுக்கு அடைக்கலம் தர அவருக்கிருக்கும் இரட்சிப்பைப்பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. அவர் எவ்வளவு மகிமையுடையவரென்றும், அவரின் அதிகாரம் எப்படிப்பட்டதென்றும், அவரின் இரத்தத்தின் வல்லமையென்ன என்றும், அவர்கள் அறிவார்கள். அவர் எவ்வளவு தாழ்மையுள்ளவர் என்றும் எத்தனை பாடுகளை அனுபவித்தாரென்றும், கெட்டுப் போனவர்களை எப்படி இரட்சிக்கிறாரென்றும் அவர்கள் அறியார்கள். கிறிஸ்துவை நேசியாதவனும் விசுவாசியாதவனும் அவரை அறியான்.

அவரை அறிகிற எவரும், அவரை அறிவர். அத்தகையோர் அவர் சொல்வதை விசுவாசித்து, மகத்துவம் உள்ள வழியில் நடந்து அவர் உண்மையுள்ளவரென்றும் மகிழ்வர். இயேசுவை நாம் அறிய வேண்டுமானால், அவர் நமக்கு வெளிப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் மனதுக்கு வெளிச்சம் தந்து, அவரின் தன்மையைக் காட்டி, அவர் வார்த்தையை நம் மனதில் தங்கும்படி செய்வார். இல்லையேல் நாம் அவரை அறிந்துக்கொள்ள முடியாது. நாம் தினந்தோறும் அவரின் மகிமையைக் கண்டு கர்த்தருடைய ஆவியினால் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவருடைய சாயலாக மாற்றப்படுவோமாக.

சுத்த ஆவியை எனக்குத்தந்து
தேவ சுதனை எனக்குக் காண்பியும்
தெளிவாய் என் கண்களுக்கு
அவர் மகிமையை வெளிப்படுத்தும்.

அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்

யூன் 15

“அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்.” ரோமர் 8:14

தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்கள்தான், தேவனுடைய புத்திரர், தேவ பிள்ளைகளை ஆவியானவர் எந்த இலக்கை நோக்கி நடத்துகிறார்? தங்களுக்கு இரட்சகர் தேவையென்று அறியவும், கிறிஸ்து இயேசு தங்களுக்கு மிகவும் ஏற்றவர் என்று காணவும், அவர் நிறைவேற்றின கிரியை போதுமென்று பிடிக்கவும், அவரின் ஜீவனையும் வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்ளவுமே அவர்களை நடத்துகிறார். சுருங்கக் கூறினால், தங்களை வெறுத்து, பாவத்தை விட்டு மனந்திரும்பி, உலகைவிட்டு பரிசுத்தத்தை வாஞ்சித்து கர்த்தருக்கு ஊழியம் செய்து, மகிமைக்கு தங்களை ஒப்புக்கொடுக்கவே அவர்களை நடத்துகிறார்.

இப்படி தேவாவியினால் நடத்தப்படுகிறவர்கள்தான் தேவபுத்திரர். இவர்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பே முன் குறிக்கப்பட்டவர்கள். இப்போது இவர்கள் உன்னதமான தேவனுடைய பிள்ளைகளென்று அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் தேவனால் பிறந்தவர்கள். தேவனால் போதிக்கப்பட்டவர்கள். பிள்ளைகளாக நடத்தப்படுகிறவர்கள். தேவனுக்குச் சுதந்தரவாளிகள். கிறிஸ்துவின் கூட்டாளிகள். மேலான கனத்தில் பங்கு பெறவும், பரலோக ஆனந்தத்தை அனுபவிக்கவும் அழைக்கப்பட்டவர்கள்.

அன்பர்களே! நாம் ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்களா? அவர் இன்று நம்மை கிறிஸ்துவினிடம் நடத்தினாரா? நமக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுத்தாரா? கிறிஸ்து நமக்கு அருமையானவரா? நாம் தேவபுத்திரரானால் பயமில்லை. நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்.

குமாரனுடய ஆவி
அடையட்டும் பாவி
உம்மைவிட்டு விலகேன்
ஓருக்காலும் உம்மை விடேன்.

அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்

யூன் 14

“அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.” மத். 27:35

பிதா அவரை ஒப்புக்கொடுத்தார். யூதாஸ் காட்டிக்கொடுத்தான். அப்போதுதான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவரின் மரணத்தில் தேவன் கொண்ட நோக்கம் என்னவென்று நாம் யோசிக்க வேண்டும். தமது நீதிக்குத் திருப்தியுண்டாக தம்முடைய இரட்சிப்பில் தம் ஜனங்களுக்கு பங்கம் வராது காக்க, தம் ஞானத்தையும், இரக்கத்தையும் வெளிப்படுத்த நம்முடைய பாவங்களை நீக்கி அன்பின் ஆச்சரியங்களை விளக்க வேண்டுமென்பதே அவர் நோக்கம். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் நமக்குக் காட்டினது என்ன? அவர் குழந்தைப்போன்ற கீழ்ப்படிதல், பிதாவினிடத்தில் அவர் உறுதியாக வைத்த நம்பிக்கை, துன்பத்தில் காட்டின பொறுமை. சாந்தத்தோடு கூடிய மன்னிக்கிற குணம். தம் மக்கள்மீது வைத்த ஆச்சரியமான அன்பு. தேவ சித்தத்திற்கு அவர் கீழிருந்த விதம் போன்ற பலவற்றை நாம் பார்க்கிறோம்.

இவற்றிற்குப் பதிலாக மனிதனிடத்திலிருந்து இவருக்கு கிடைத்ததோ, கொடிய நன்றி கேடு. சொல்லி முடியா கொடுரம். அளவுக்கு மீறிய பெருமை. மிக மிஞ்சின அறிவீனம். உறுதியற்ற குணம். இவைகளைத்தான் தேவனுக்கு முன் காட்டினார்கள். பொருளாசையின் வலிமையும், தன்மையும் யூதாசினிடத்தில் பார்க்கிறோம். சுய நீதிக்குள் மறைந்துக்கிடக்கிற பொறாமையும், கொடுமையும் பரிசேயரிடத்தில் பார்க்கிறோம். மனுஷனுக்குப் பயப்படுகிற பயத்தால் உண்டாகும் கேட்டைப் பிலாத்துவிடம் பார்க்கிறோம். நல்லோரிடத்தில் காணப்படுகிற பெலவீனம் அவருடைய சீஷர்களிடத்திலும் காணப்படுகிறது. பாவத்தின் தன்மை மனிதரிடத்தில் தௌவாய்க் காணப்படுகிறது. மனிதருடைய சரியான தன்மையும் வெளியாகிறது.

ஜீவாமிர்தம் இதுவல்லோ
அளவில் அடங்கா அன்பு
பாவிக்கடைக்கலம் இதுவல்லோ
தூதர் பாடும் பாட்டு.

Popular Posts

My Favorites

அவர் மரணத்தைப் பரிகரித்தார்

அக்டோபர் 26 "அவர் மரணத்தைப் பரிகரித்தார்" 2.தீமோ.1:10 நமக்குப் பெரிய விரோதி மரணம். என்ன செய்தாலும் நாம் அதனிடமிருந்து தப்பிக்கொள்ள முடியாது. மரணம் உலகத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் வாரிக்கொண்டு போய்விடும். தேவ பிள்ளைகளையும்கூட அது விட்டுவைக்காது. நமது...