முகப்பு தினதியானம் அக்டோபர் அவர் நெறிந்த நாணலை முறியார்

அவர் நெறிந்த நாணலை முறியார்

அக்டோபர் 29

“அவர் நெறிந்த நாணலை முறியார்” மத்.12:20

அருள் நாதர் இயேசுவின் மனம் எத்தனை மென்மையானது. அவர் குணம் சாந்தமானது. ஆகையால் எவராயினும் அவரிடம் வர அச்சங்கொள்ள வேண்டாம். எந்தப் பெலவீனனும், எந்நேரத்திலும், எப்பிரச்சனையுடனும் அவரிடம் பயமின்றி வரலாம். நம் உள்ளத்தில் எழும்பும் ஆசைகள் சிறிய விசுவாசத்துடன் ஆரம்பிக்கும்பொழுது அவற்றை கவனித்து தேவன் ஏற்றுக்கொள்வார்.

நாம் பெலவீனர், எளிதில் சோர்ந்துவிடுவோம் என்று அவர் அறிந்திருக்கிறபடியால் நசுங்கிப்போகும் நாணலைப்போல் நம்மை முறித்துவிடாமல் மென்மையாக நடத்துவார். அவர் நொறுங்கினதைக் கட்டி பெலப்படுத்துவார். சீராக்குவார். நமது நல்விருப்பங்களை உற்சாகப்படுத்தி, நாம் எவ்வளவு எளியவராயிருப்பினும் நம்மை அங்கீகரிப்பார். தகுதியற்ற நம்மை தகுதியுள்ளவர்களாக்குவார். நமது ஜெபங்கள் குறையுள்ளவைகளாயிருப்பினும் அவர் ஏற்பார்.

நமது ஆத்துமா துவளும்போது அவர் நம்மை ஆற்றித்தேற்றி பெலன் தருவார். அச்சம் நீக்கி உற்சாகம் தருவார். நம்மை மேய்த்து நடத்தும் மேய்ப்பராயிருக்கிறார். தமது அரியணைக்கு அழைத்துச் செல்லும் மன்னரும் அவரே. தாமும் நெரிந்த நாணலை முறியார். பிறரும் அதை முறிக்கவிடார்.

அன்பானவர்களே, சாத்தானாலும் உலகத்தினாலும் நீர் நொறுக்கப்பட்டிருக்கிறீரா? உங்கள் பெலவீனத்தையும், தகுதியின்மையையும் உணருகிறீர்களா? பயப்படாதேயுங்கள். இயேசு கிறிஸ்து சாந்தமுள்ளவர். அன்பு நிறைந்தவர், கிருபை உள்ளவர், எவரையும் அவர் புறக்கணியார். எவரிடமும் அசட்டையாயிரார். காயத்தைக் கழுவி சுத்தம் செய்து தம்மிடமல் சேர்த்துக்கொள்ளுவார்.

மங்கின திரியை அனணயார்
எங்குமவர் அன்பு தருவார்
தங்குவார் என்னருகில் இயேசு
தாங்குவார் இன்பதுன்பத்திலும்.