முகப்பு தினதியானம் ஜனவரி என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்

என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்

ஜனவரி 13

“என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” மாற்கு 9:24

நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளது. அவிசுவாசமோ மிகவும் பலமுள்ளது. தேவன் சொல்வதை நம்பாமல்போவது பாவத்தின் இயல்பு. வேத வாக்கியங்களை ஒரு கிறிஸ்தவன் முற்றிலும் நம்புகிறது நல்லது. சில வேளைகளில் தேவன் சொல்கிறது மிகவும் நல்லதாயிருக்கும்போது அது உண்மைதானோவென்று சந்தேகிக்க வேண்டியதாயிருக்கிறது. நாம் செய்த பாவங்களை நினைத்து, இவ்வளவு பெரிய மகிமையான காரியங்கள் நமக்குக் கிடைக்குமோவென்று சந்தேகம் கொள்ளுகிறோம். வேதம் சொல்லுகிறபடி, நல்ல தேவன் பெரிய பாவிக்கு பெரிய நன்மைகளை வாக்களிக்கிறார் என்று நம்புவது சுலபமல்ல. நாம் அவைகளை உறுதியாய் நம்பி, நமக்குச் சொந்தமாக்கி கொண்டு, நமக்குரியதாகச் சொல்லி ஜெபிக்கிறதும் அவ்வளவு எளிதல்ல. எங்கே துணிகரத்துக்கு இடங் கொடுக்கிறோமோ என்று பயந்து அவிசுவாசத்துக்குள்ளாகி விடுகிறோம். சாத்தான் சொல்வதைக் கேட்டு சந்தேகத்திற்கும் பயத்திற்கும் இடம் கொடுத்து விடுகிறோம். நான் சத்தியத்தை சொன்னால் ஏன் நம்புவதில்லையென இரட்சகர் கேட்கிறார். வாக்குத்தத்தம் உண்மைதானா? அது பாவிகளுக்குரியதா? கிருபையினின்று அது பிறந்திருக்கிறா? தேவ அன்பும் இரக்கமும் மேன்மை அடைய அது நமக்குக் கொடுக்கப்பட்டதா?

அப்படியானால் தேவ வார்த்தைகளை நம்பி பற்றிக்கொள்ளவும், தேவன் சொன்னபடியே செய்வாரென விசுவாசிக்கவும் வேண்டும். பாவங்களை நாம் எங்கே கொண்டுபோட வேண்டியதோ, அங்கே நம்முடைய அவிசுவாசத்தையும் கொண்டு போடவேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிடில் இயேசுவிடம்தான் கொண்டு போகவேண்டும். அதை அவரிடம் அறிக்கையிட்டு சீஷர்களைப்போல் ‘கர்த்தாவே எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்’ என்று கெஞ்சுவோமாக. அல்லது மேலே அந்த மனிதன் சொன்னதுபோல, ‘என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும்’ என்று கேட்போம்.

பிழைகளெல்லாம் மன்னித்திரே
விசுவாசிக்க செய்யுமே
உம்முடையவன் என்று சொல்லி
முத்திரை என்மேல் வையுமே