முகப்பு தினதியானம் கிறிஸ்துவுடன் எழுந்திரு

கிறிஸ்துவுடன் எழுந்திரு

மார்ச் 20

“கிறிஸ்துவுடன் எழுந்திரு.” கொலோ. 3:1

இயேசுவானவர் நமது பிணையாளியாகையால் நமக்கு பதிலாக மரித்தார். தம்முடைய ஜனங்கள் எல்லார் சார்பாகவும் மரித்தார். அப்படியே எல்லாருக்காகவும் உயிர்த்தெழுந்தார். அவர் மரித்தபோது அவருடைய ஜனங்கள் எல்லாரும் மரித்தார்கள். அவர் உயிர்த்தெழுந்தபோது அவர்கள் எல்லாரும் அவரோடு உயிர்த்தெழுந்தார்கள். இதனால்தான் கிறிஸ்துவிலுள்ள ஜீவ ஆவியினால் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு, நம்பிக்கையினாலும் ஆசையினாலும், அன்பினாலும் எழுந்து அவரோடு பரத்திற்கு ஏறுகிறோம். அவருடைய ஜீவன் நம்மில் வெளிப்படும்போது, உயிர்த்த கிறிஸ்துவின் ஜீவன் நம்மில் வெளிப்படுத்த வேண்டியவர்களாகிறோம். பாவத்திற்கு நாம் செத்தவர்களாயும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்துவின்மூலம் தேவனுக்குப் பிழைத்திருக்கிறவர்களாயும் நம்மை எண்ணிக்கொள்ள வேண்டும்.

விசுவாசிகள் எல்லாரையும் அவர் எழுப்பி கிறிஸ்துவோடுகூட தமது வலது பாரிசத்தில் உட்காரப்பண்ணினார் என்று சொல்லியிருக்கிறது. கிறிஸ்துவும் அவருடைய ஜனங்களும் ஒன்றுதான். அவுர் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினபோதும், உயிர்த்தெழுந்தபோதும், தமது இரத்தத்தால் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தபோதும் அவர்களுக்கு முதலாளியாகத்தான் அப்படி செய்தார். அவரின் மரணத்தின்மூலம் அவர்கள் பிழைக்கிறார்கள். அவருடைய ஐக்கியமாகத்தான் பிழைக்கிறார்கள். அவருக்கு கனம் மகிமையும் உண்டாகத்தான் பிழைக்கிறார்கள். கிறிஸ்துவோடு எழுப்பப்பட்டவர்கள் உலகத்தை பிடித்துக்கொண்டிருப்பது சரியல்ல. அவர்களின் ஆசையும், பாசமும், எண்ணமும், தியானமும் பரலோகத்தில் தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுடைய சிரசும், பங்கும், ஜீவனுமானவர் அங்கேதான் இருக்கிறார்.

கிறிஸ்துவோடு எழுந்து
அதை உணர்ந்த பக்தரே
கீழானதை இகழ்ந்து
மேலானதை நாடுவீரே.