முகப்பு தினதியானம் அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து

அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து

யூலை 01

“அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து.” சங்.103:3

தினந்தோறும் நாம் பாவம் செய்கிறபடியால் தினந்தோறும் நமக்கு மன்னிப்பு தேவைப்படுகிறது. நம்முடைய பாவம் கொடிய தன்மை உடையது. இரத்தக் கிரயத்தைக் கொடுத்து, நம்மை மீட்ட ஆண்டவருக்கு விரோதமாக நாம் பாவம் செய்கிறோம். தன் எஜமான் வீட்டில் வாசம் செய்து அவருடைய போஜனத்தை அவரோடு புசித்து, அவருடைய உதாரத்துவத்தால் சகலத்தையும் பெற்று அனுபவிக்கிற ஊழியக்காரன், இப்படி தனக்கு தயவு காட்டுகிற எஜமானுக்கு விரோதமாய் பாவம் செய்கிறதுபோல நாமும் பாவம் செய்கிறோம். பாசமாய் வளர்க்கப்பட்ட பிள்ளை, ஒரு நல்ல பட்சமுள்ள அன்பான தகப்பனுக்கு விரோதமாய் பாவம் செய்கிறதுப்போலவே நாமும் பாவம் செய்கிறோம்.

நம்முடைய பாவங்கள் அநேகம். அடிக்கடி செய்கிறோம். அது பல வகையானது. அவைகளினின்று தப்ப முடியாது. ஆயினும் கர்த்தர் நம்முடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறார். நிறைவாயும், இலவசமாயும், எவ்வித குறைவுவராமல் மன்னிக்கிற தேவனைப்போல வேறு ஒருவரும் இல்லை. இந்த மன்னிப்பு இயேசுவின் இரத்தத்தால் கொள்ளப்பட்டது. அவர் மன்னிப்பைத்தரும்போது பாவத்தின்மேல் பகையும், துக்கமும், அதை விட்டுவிலகுதலும் உண்டாகவேண்டும். தேவன் நம்மைப் பலமுறை மன்னித்து கொண்டே இருக்கிறார். தகப்பனைப்போல் அன்பாயும், பலமுறையும் மன்னிக்கிறார். தேவன் இரக்கமாய் மன்னிக்கிறார் என்று சாட்சி கொடுத்த தாவீது பெரிய பாவி. அவன் விபசாரம் செய்து மோசம்பண்ணி, கொலைக்கும் ஆளாகி, அது தெய்வ செயல் என்று சொல்லி வெகு காலம் பாவத்தில் உறங்கிக்கிடந்தான். ஆனால் அவன் மனசாட்சி குத்தினபோது தேவனுக்குமுன் பாவங்களை அறிக்கையிட்டான். இதை வாசிக்கிறவரே, நீர் பாவமன்னிப்பு பெற்றதுண்டா? நீர் குற்றவாளி அல்லவா? தேவன் உமக்கு மன்னிக்க காத்திருக்கிறார். பாவத்தை அறிக்கை செய்து, ஜெபம்பண்ணு. இயேசுவின் புண்ணியத்தைச் சொல்லி, கெஞ்சி மன்னிப்பைப் பெற்றுக்கொள்வீராக.

இயேசுவே உமது அருளை
சொல்வது என் பெருமை
அதை என்றும் போற்றவே
மன்னிப்பளித்துக் காருமேன்.