சமாதானம் சமாதானம்

ஏப்ரல் 05

“சமாதானம் சமாதானம்.” ஏசாயா 57:19

இவ்விதமான மிருதுவான அமைதி தரும் வார்த்தைகளைத்தான் சுவிசேஷம் நமக்குச் சொல்லுகிறது. நமக்கு வரும் எத்துன்ப நேரத்திலும், சோதனையிலும், வியாதியிலும், வருத்தத்திலும் அது நம்மிடம் சமாதானம் சமாதானம் என்றே சொல்லுகிறது.

பாவத்தைப் பரிகரிக்க இயேசு மரித்ததால் சமாதானம், மோட்சத்தில் உனக்காகப் பரிந்து பேச இயேசு உயிர்த்ததால் சமாதானம், சகலத்தையும் ஆளும் இயேசுவின் கரத்தில் உன் பிரச்சனைகள் இருப்பதால் உனக்குச் சமாதானம். கிறிஸ்து உன்னை நேசிக்கிறதினால் உனக்குச் சமாதானம். அவரின் மரணத்தில் நீ ஒப்புரவாக்கப்பட்டபடியினால் உனக்குச் சமாதானம். மனம் கலங்கவேண்டாம், உன்னைப்பற்றி தேவன் கொண்டிருக்கும் எண்ணம் எல்லாமே சமாதானம். உன்னைக் குறித்துத் தேவனால் தீர்மானிக்கப்பட்டதெல்லாம் சமாதானம். பரலோகமும் உன்னோடு சமாதான உறவை ஏற்படுத்திக் கொள்கிறது.

கிறிஸ்து உனக்காக மரித்தபோதும், உன் பாவம் தொலைந்தபோதும் உன் சமாதானம் நிறைவேறி முடிந்தது. உனக்குச் சமாதானம் உண்டாக்குகிற அவரையே நோக்கிப்பார். கெத்செமனே கொல்கொதா இவைகளை அடிக்கடி நினைத்துக்கொள். தேவனைச் சமாதானத்தின் தேவனாகவும் பரலோகத்தைச் சமாதானத்தின் வீடாகவும் சிந்தனை செய். உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் என்கிற வாக்கை அடிக்கடி தியானி. உன் மனதில் கர்த்தரின் சமாதானம் தங்கட்டும்.

விசுவாசம் வர்த்திக்கப்பண்ணும்
சமாதானம் அளித்திடும்
உமது பெலனை நம்புவேன்
பாவத்தால் கலங்கிடேனே.

நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்

ஏப்ரல் 04

“நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்.” 1.தீமோ. 1:12

கிறிஸ்துவை அறிந்துகொள்வது பெரிய கிருபை. நம்முடைய ஜெபத்துக்கு அதுதான் காரணம். நம்முடைய விசுவாசத்துக்கு அதுதான் ஆதாரம். அவரை அறிந்துக்கொள்ளுகிற பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அவருடைய வசனத்தினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். தேவனுடைய பிள்ளைகள் கூறிய சாட்சிகளால் தேவனை அறிந்துகொள்ளுகிறோம். இதற்கும் மேலாக பரிசுத்த ஆவியானவரின் போதனையினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். ஆனாலும் நாம் அறிந்துகொள்ளுகிறது மிக குறைவுதான். அவரை நேசிக்கத்தக்கதாக, அவருடைய தன்மையை அறிந்துகொள்ளுகிறோம்.

தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட அவர் முடிந்த பூரணகிரியையை நம்பினவர்களாக அவரையே அறிய வேண்டும். நமக்குத் தேவையானதையெல்லாம் பெற்றுக்கொள்ள அவரிடத்தில் நிறைவு உண்டென்று அறிய வேண்டும். துன்பத்திலும், துக்கத்திலும் அவர் அருகில் செல்ல அவருடைய இரக்கத்தையும், உருக்கத்தையும் அறியவேண்டும். மற்றப் பாவிகள் ஜீவனையும் சமாதானத்தையும் அடைய அவரிடத்தில் செல்லுங்கள் என்று சொல்லுத்தக்கதாக, பாவிகளை ஏற்றுக்கொள்ள மனதுள்ளவரென்று அறிய வேண்டும். இரட்சகர் வல்லமையுள்ளவர் என்று நாம் அறிவோம். விசுவாசிக்கத்தக்கவரென்றும் நாம் அறிவோம். அவரை விசுவாசிக்கிற எந்த ஏழைப்பாவியையும் அவர் கைவிடமாட்டாரென்றும் அறிவோம். இவ்வாறு நாம் அறிவதினால்தான் நம்முடைய சகல காரியங்களையும் அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறோம். அவரை அறிந்திருக்கிறபடியால்தான் அவரை நம்முடைய கர்த்தரும் தேவனும் என்று சொல்ல நாம் வெட்கப்படுகிறதில்லை. அவர் தேவ குமாரன் என்றும், இரட்சகர் என்றும், தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்றும் அறிவோம். நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நம்மை நீதிமான்களாக்க உயிர்த்தெழுந்தார் என்றும் மறுபடியும் தம்மண்டையில் நம்மைச் சேர்த்துக்கொள்வார் என்றும் அறிவோம்.

யாரை விசுவாகித்தேனென்று
நான் அறிவேன் அது நல்லது:
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை
பாதுகாத்திடவார் எந்நாளும்.

விசுவாசத்துக்குக் கீழ்ப்படியும்படிக்கு

ஏப்ரல் 03

“விசுவாசத்துக்குக் கீழ்ப்படியும்படிக்கு.” ரோமர் 16:25

நமது மனதும் அறிவும் நடத்தையும், தேவனுக்கு மழுவதும் கீழ்ப்படிய வேண்டுமென்று விசுவாசம் விரும்புகிறது. சுவிசேஷம் விசுவாசம் வைக்கும் சட்டம். தேவன் அன்பாகவே இருக்குpறார் என்று பாவிகளாகிய நமக்குப் பதிலாக கிறிஸ்து மரித்தார் என்றும் விசுவாசப் பிரமாணம் நம்மை நம்பச் செய்கிறது. நமக்கு இரக்கத்தையும் மன்னிப்பையும் கொடுக்கிற ஈவாக ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. கிறிஸ்துவின் புண்ணியங்களை ஏற்றுக்கொண்டு அதையே நம்பி, நமக்குத் தேவையான யாவற்றிற்கும் அதையே சொல்லி கேட்கவேண்டும் என்கிறது. நமது தேவைகளை இயேசுவில் தினந்தோறும் கேட்கவும், அவர் வாக்களித்த யாவையும் அவரிடத்தில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கவும் வேண்டுமென்றும், தேவனுக்காய், தேவனுக்கென்று, தேவனைப்போல் ஜீவிக்கவேண்டுமென்று கற்பிக்கிறது.

ஓரே வார்த்தையில் தேவன்தான் பெரியவர். மனிதன் ஒன்றுமில்லை என்று ஜீவிக்க கற்பிக்கிறது. நமது இதயம் விசுவாசித்து கீழ்ப்படியவேண்டுமென்று தேவன் கேட்குpறார். அவர் சொல்வதை நம்பி, அவர் வாக்குகளை எதிர்ப்பார்த்து, அவர் சொன்னபடி செய்வது நமது கடமை. இது நாம் விசுவாசித்து வாழ உதவுகிறது. சாத்தான் இதற்கு விரோதமாக செய்வான். பரம சிந்தை பலவிதமாய் இதைத் தடுக்கப் பார்க்கும். உலக சிநேகம் தன்னால் ஆனதை செய்யும். ஆனால் நானோ போராடி யுத்தம் செய்து அதை மேற்கொண்டு என் தேவன் சொல்வதை நம்புவேன். என் கர்த்தருக்குக் கீழ்ப்படிவேன். என் இரட்சகரைப்போல் இருக்கப் பார்ப்பேன். விசுவாசத்தால் பொறுமையுடன் வாக்குத்தத்தத்தைச் சுதந்தரித்துக்கொள்கிறவர்களைப் பின் செல்லுவேன் என்று தீர்மானிக்க வேண்டும்.

ஆவியானவரே என்னை உயிர்ப்பியும்,
என் இதயத்தை நிரப்பும்
என் மனதில் தேவசட்டம்
எழுதி கீழ்ப்படியப்பண்ணும்.

நான் திரும்பி வருமளவும் இதைக் கொண்டு வியாபாரம் பண்ணுங்கள்

ஏப்ரல் 02

“நான் திரும்பி வருமளவும் இதைக் கொண்டு வியாபாரம் பண்ணுங்கள்.” லூக்கா 19:13

நமது நேசர் நமக்கு தேவையானதெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார். அவர் பயப்படாதே என்கிறார். தாலந்துகளை நமக்குத் தந்து தமது திரவியத்தை நமக்கு ஒப்புவித்திருக்கிறார். தமது பிதாவினிடமிருந்து சீக்கிரம் திரும்பி வருவார். அவர் வருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்கிறார். நாம் தேவனுடைய கரத்தில் அதிக ஜாக்கிரரையாய் இருக்க வேண்டும். கிறிஸ்துவின் காரியத்தில் சுறுசுறுப்பாயிருக்கவேண்டும். தமது வேலையை எப்படி செய்தோம, எந்த நோக்கத்தோடு அதைச் செய்தோம் என்று விசாரிக்க திரும்பவருவார். அவர் வந்து நமது செய்கைகளுக்குத் தக்கபடி நம்மீது கோபப்படுவார், அல்லது மகிழ்ச்சியடைவார். கடிந்துக் கொள்ளவும், புகழ்ந்துக் கொள்ளவும் செய்வார். ஒவ்வொருவனுக்கும் அவனவனுக்குத் தக்கப் பலன் அளிப்பார். இதை நாம் விசுவாசிக்கிறோமா? இதை நம்பினவர்கள் போல் வாழ்ந்து வருகிறோமா?

நாம் ஒருநாள் கிறிஸ்துவின் நியாயசனத்துக்கு முன்பாக நிற்க வேண்டும். அவருக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோமா? அன்பரே, நமது நேரமும், நமது தாலந்தும், ஏன் நாமும்கூட கர்த்தருடையவர்கள். அவருக்கென்றே அவைகளைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். அவருக்காகவே எல்லாவற்றையும் உபயோகிக்க வேண்டும். இந்த நாளை கிறிஸ்துவுக்கென்று செலவிட்டோமா? இன்று நமது வேலைகளை கர்த்தருக்குமுன் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்ற நோக்கோடு செய்திருக்கிறோமா? நாம் மற்றவர்களைப்போல தூங்கச் கூடாது. நமக்கென்று வாழாமல் அவருக்கென்று மட்டும் தீர்மானிக்க வேண்டும். கிறிஸ்துவை நோக்கி ஜீவனம்பண்ணி அவருக்காக மாத்திரம் பிழைப்போமாக.

என் தாலந்தை உபயோகித்து
இயேசுவில் நான் பிழைத்து
அவர் சித்தப்படி செய்து
அவரைச் சேர்வதே நலம்.

சகல கிருபையும் பொருந்திய தேவன்

ஏப்ரல் 01

“சகல கிருபையும் பொருந்திய தேவன்.” 1. பேது.5:10

யேகோவா தேவன் தம்மைக் குறித்துச் சொல்வது எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது. நாம் தேவனது மேலான குணநலன்களையும் தகுதிகளையும் பார்த்துவிட்டு, அவருக்கு எதிராக தகாத பல காரியங்களையும் செய்து விடுகிறோம். அவர் சகல கிருபை பொருந்தின தேவனாயிருக்கிறதுமல்லாமல் நீதியுள்ள தேவனாயும் இருக்கிறார். அளவற்ற நித்திய கிருபையுள்ள தேவன். இரக்கத்தின் ஐசுவரியமும் அவரிடத்தில் உண்டு. குற்றவாளியை மன்னிக்கிறதும், மரித்தோரை உயிர்ப்பிக்கிறதும், ஆறுதல் அள்ளவர்களுக்கு ஆறுதல் தருபவரும், பெலவீனரைப் பெலப்படுத்துகிறதும், வழி தப்பி திரிகிறவர்களைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கிறதும், கெட்டுப்போனவர்களை இரட்சிக்கிறதுமான கிருபை அவரிடத்தில் உண்டு.

தம்முடைய மக்களுக்கு அவர் செய்கிற கிரியைகளில் தமது கிருபையை வெளிப்படுத்துவதில் எவ்வளவு தாராளமாய் அந்தக் கிருபையைக் காட்டினார். சிலுவையில் அறையப்பட்ட கள்ளனை இரட்சித்ததில் ஏற்ற காலத்தில் கிருபையைக் காட்டினார். காட்டத்தி மரத்தினின்று சகேயுவை இறங்கி வரச் சொன்னபோது, அவன் எதிர்பாராதவிதமாய் இந்தக் கிருபையை வெளிப்படுத்தினார். இவைகளெல்லாம் கிருபை நிறைந்த தேவன் நமக்கு காட்டும் இரக்கமாகும். தேவனை நாம் அளவற்ற கிருபை நிறைந்தவராய்ப் பார்ப்போமாக. அபாத்திரரும் பாவிகளுமான நம்மிடத்தில் தான் அவர் மாட்சிமையும், கிருபையும் மகிமையும் அதகமாய் விளங்குகிறது. இது நமது ஐயங்களை நீக்கி ஜாக்கரதையுள்ளவர்கள் ஆக்க வேண்டும். நம்பிக்கையோடும் நன்றி உணர்வோடும் அவருக்கு ஒப்புவிக்க இது நம்மை ஏவ வேண்டும். நமது தேவன் சகல கிருபையினாலும் நிறைந்தவர் என்ற சிந்தையினால் உண்டாகும் மகிழ்ச்சியோடு இன்று இரவு நித்திரைக்குச் செல்வோமாக.

தேவனே நான் உம்மைவிட்டு
கெட்டு அலையாமல்
மன்னித்து மகிழ்ச்சியாக்கும்
உம் சமுகம் என்னைக் காக்கும்.

Popular Posts

My Favorites

எல்லாம் உங்களுடையதே

ஜனவரி 4 "எல்லாம் உங்களுடையதே"  1.கொரி. 3:21 என் பிரிய சகோதரரே, கேளுங்கள். 'தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின இராஜ்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துக்கொள்ளவில்லையா?" இது என்ன...