ஏப்ரல்

முகப்பு தினதியானம் ஏப்ரல்

ஆனந்த பாக்கியத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

ஏப்ரல் 25

“ஆனந்த பாக்கியத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” தீத்து 2:13

கிறிஸ்தவன் எதிர்பார்க்க வேண்டியவன். அவனுக்கு வேண்டிய நல்ல காரியங்கள் அவனுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. அவனுக்கிருக்கும் வாக்குத்தத்தங்கள் வெளிப்படப்போகிற மகிமையைப் பற்றியது. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் வரப்போகும் மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் வந்தார். ஊழியம் செய்தார். துன்பப்பட்டார். பிராயச்சித்தம் செய்தார். திருப்பி போகும்போது நான் மகிமையாய் மறுபடியும் வருவேனென்று வாக்குக் கொடுத்தார். மகா பரிசுத்த ஸ்தலத்துக்குப் போய் இப்போது நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். நம்மை ஆசீர்வதிக்க சீக்கிரம் வருவார். அப்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கும் பரிசுத்தவான்கள் ஆறுதல் அடைந்து புத்திரசுவிகாரத்தை அடைவார்கள். நாமும் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆட்டவரோடு என்றென்றுமாய் இருப்போம்.

இது நம்முடை நம்பிக்கை, இந்த நம்பிக்கையை எதிர்ப்பார்த்துதான் நாம் வாழ வேண்டும். மரணம் என்று எங்கும் சொல்லவில்லை. மரணத்தையல்ல, இயேசுவின் வருகையே எதிர்நோக்கி ஜீவிக்க வேண்டும். பக்தனாகிய ஏனோக்கு இப்படித்தான் ஜீவித்தான். அவன் தேவனோடு சஞ்சரித்து அவருக்குப் பிரியமாய் நடந்தபடியால் பரலோகத்திற்கு உயர்த்தப்பட்டான். அப்போஸ்தலர்களும் ஆதி கிறிஸ்தவர்களும் இப்படித்தான் வாழ்ந்ததால் நம்மைப்போல் இவ்வுலக காரியங்களால் அத்தனை வருத்தம் அடையரிருந்தார்கள்.

நம்பிக்கையால் ஏவப்பட்டு
கர்த்தரை எதிர்ப்பார்ப்பேன்
மகிமையோடு வருவார்
என்னையும் தம்மிடம் சேர்ப்பார்.

சமீபத்திற்கு மாத்திரமா தேவன்?

ஏப்ரல் 24

“சமீபத்திற்கு மாத்திரமா தேவன்?” எரேமி. 23:23

தேவபிள்ளை ஒரு சிநேகிதனைத் தேடி தூரமாய்ப் போகவேண்டியதில்லை. கர்த்தர் எப்போதும் அவனுக்குச் சமீபமாயிருக்கிறார். அவர் சமீபத்திலிருக்கிற தேவன். தேவன் நம்மைக் கவனிக்க தயாராயிருக்கிறார். உதவி செய்யவும் ஆயத்தமாயிருக்கிறார். இதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். நாம் கலங்கி இருக்கும்போது இதுவே நம்மைச் சந்தோஷப்படுத்தும். சோதனையில் இது நம்மை ஆறுதல்படுத்தும், பயத்தில் தைரியம் சொல்லும். பாவம் செய்யாதபடி தடுக்கும். கடமைகளை முடிக்க உற்சாகத்தைக் கொடுக்கும். சோர்ந்துப்போன சமயத்தில் எழுப்பிவிடும். நமது நண்பர்கள் நம்மை விட்டு பிரிந்து விடுவார்கள். இனஜன பந்துக்கள் நமது கஷ்டத்தில் அதிகம் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் தேவனோ நமது சமீபத்தில் இருக்கிறார். நமக்கு இரக்கங்காட்டி நம்மைக் கண்டிதஇது புத்தி சொல்லி ஆதரிக்க அவர் சமீபத்தில் இருக்கிறார்.

நமக்கு அவர் சமீபத்திலிருக்கிறது மட்டுமல்லாமல் எங்கும் இருக்கிறார். தூரத்திலிருக்கிற நம்முடைய சிநேகிதர்களோடு இருக்கிறார். மறைவிடங்களில் ஒளித்திருக்கிற நம்முடைய சத்துருக்களோடு இருக்கிறார். அவர்களுடைய யோசனைகளை அழித்து அவர்களுடைய விரோதங்களை நமக்கு நன்மையாக  நடத்துவார். தேவன் சமீபமாயிருக்கிறார். தூங்கும்போது அவர் விழித்திருந்து நம்மைப் பாதுகாக்கிறார். அவர் சித்தமின்றி ஒன்றும் நம் வாழ்வில் நடப்பதில்லை. தேவனுக்குத் திடீரென்று ஒன்றும்  சம்பவிக்கிறதில்லை. எவ்வளவு தூரத்திலிருந்தாலும் பார்க்கிறார். சகலத்தையும் நன்மைக்காக முடிப்பேன் என்று அவர் சொல்லியிருப்பதால் அந்த எண்ணத்தோடு இருப்போமாக. ஆத்துமாவே! நீ ஒருபோதும், உன் தேவன் சமீபத்திலிருக்கிறார் என்பதை மறவாதபடிக்குப் பார்.

தேவனே எனக்கு
உமது மகிமையைக் காண்பியும்
உமது வல்லமையே
என் இதயம் உணரட்டும்.

உண்மையுள்ள இருதயத்தோடு சேரக்கடவோம்

ஏப்ரல் 23

“உண்மையுள்ள இருதயத்தோடு சேரக்கடவோம்” எபி. 10:22

அவிசுவாசத்தினால்தான் நாம் தேவனுக்குத் தூரமாய் இருக்கிறோம். அப்போது ஆவியில் குளிர்ந்துப்போய் ஆறுதலற்றவர்களாகிறோம். தேவன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறார். அவர் இரக்க சிம்மாசத்தில் வீற்றிருக்குpறார். தன்னைப் பலியாய் கொடுத்ததினால் பாவம் பகைக்கப்பட்டுப் போயிற்று. திரைச்சீலையே இரட்சகர் கிழித்துப் போட்டார். அவரிடம் சேர வழி தாராளமாய் திறந்திருக்கிறது. நம்முடைய பிரதான ஆசாரியன் இரத்தத்தோடு அங்கே நிற்கிறார். தூபவர்க்கம் பொற்கலசத்தில் எரிந்துக் கொண்டிருக்கிறது. தேவனுடைய மனது நம்முடைய காரியங்களில் உத்தமமாய் இருக்கிறது.

தேவன் தம் குமாரனைக் கொடுத்த அன்பு வெறும் அன்பல்ல. இரட்சகரும் நம்முடைய விஷயத்தில் உண்மையான அன்பு வைத்திருக்கிறார். இல்லையென்றால் நம்முடைய பாவங்களுக்காக மரித்திருக்கவும்மாட்டார். நமக்காக பரிந்து பேச மேட்சத்திற்கு போயிருக்கவும்மாட்டார். நாம் தேவனுக்கு உத்தம பிள்ளைகளாய் நம்பிக்கையோடே அவரிடம் சேருவோமாக. அவரிடம் மனம் திறந்து பேச மனிதன் ஆசைகளையும், விருப்பங்களையும் தாராளமாய் சொல்லலாம். பயந்த வேலைக்கானைப்போல தூர நில்லாமல், தகப்பனிடத்துக்கு ஓடி அவர் மடியில் தலையை வைக்கிற குழந்தையைப்போல் நெருங்கி சேருவோமாக. கோபாமுள்ள தேவனுக்கு முன்பாக நடுங்குகிறதுபோல் தூரத்தில் நில்லாமல் அவரை உறுதியாய் நம்புகிறவர்களைப்போல அவர் அருவே போவோமாக. அடிமையைப் போல் அல்ல, பிள்ளைகளுக்குரிய அமர்ந்த நம்பிக்கையினால் அவரை மகிமைப்படுத்துவோம்.

இயேசுவின் இரத்தம் நம்பி
தேவனிடம் சேருவேன்
இரக்க ஆசனத்தை நோக்கி
தைரியமாய் ஜெபிப்பேன்.

அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்

ஏப்ரல் 22

“அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” சங்கீதம் 116:12

ஒவ்வொரு நாளும் முடியும்போது இப்படி கேட்பது நல்லதல்லோ? இன்று மாலை துதி செலுத்த வேண்டியதாயிருந்தாலும் இந்த நாளில் கடந்த காரியங்களை மட்டும் நினைக்கக் கூடாது. கர்த்தர் நமக்கு செய்தது என்ன என்று நம்மை நாமே கேட்க வேண்டும். அவர் எண்ணிலா நன்மைகளைச் செய்திருக்கிறார். இல்லாவிட்டால் நன்மையுள்ளவர்களாய், ஆசீர்வாதமுள்ளவர்களாய் நாம் இருக்க மாட்டோம். அவர் கிருபைகளைத் தந்து பயங்களைப் போக்கி, விடுதலையளித்துத் தேவைகளைச் சந்தித்து விசுவாசத்தை உறுதிப்படுத்தி மகிமைப்படுத்துவேன் என்று வாக்களித்திருக்கிறார். நாம் பெற்றுக்கொள்வதெல்லாம் உபகாரந்தான். அது சுத்தக் கிருபையிலிருந்துப் பிறந்து, அபாத்திரருக்கு நன்மையை அளிப்பதாய் உள்ளது.

பிதா நமக்கு தமது குமாரனைக் கொடுத்தார். நாம் நிறைவேற்றின கிருபைகளைக் கொடுத்தார். ஆவியானவர் தமது ஜீவனைத் தந்து நம் இருதயத்தில் குடிகொண்டுள்ளார். ஆகவே அவருக்கு என்னத்தைச் செலுத்துவோம்? நாம் என்ன செலுத்தக்கூடும்? என்ன செலுத்த மனதாய் இருக்கிறோம்? நாம் வரங்கள் பெற்றிருக்கிறோமென்றால், அதை அவர் புகழ்ச்சிக்கென்று பிரயோகிப்போமாக. அவர் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்து, அவர் சத்துருக்களுக்கு விரோதமாய் போராடுவோமாக. அவர் ஊழியத்தில் துன்பங்களைச் சகித்து, ஏழைகளுக்கு நம்முடைய பொருளைக் கொடுப்போமாக. அவரோடு நெருங்கி சஞ்சரிக்கிறதுதான் அவருக்குப் பிரியம். அவர் சுவிசேஷத்தை உலகிற்கு அறிவித்து வியாதியுள்ளவர்களைச் சந்தித்து, அவருடைய எளியவர்களுக்கு உதவிசெய். உன் சம்பத்துக்குத்தக்கபடி உன் நன்றியறிதலைக் காட்டு. ஓரே வாழ்க்கையைக் கிறிஸ்துவுக்காய் பிரதிஷ்டைப்பண்ணி ஜீவியம்பண்ணு. தேவனுக்காய் பிரதிஷ்டை செய்யப்பட்ட சீஷனாக ஜீவனம்பண்ணு.

கர்த்தர் காட்டும் தயவுக்கு
பதில் என்ன செய்வேன்
அவர் வழிகளைக் காத்து
அவர் சொற்படி நடப்பேன்.

கிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு

ஏப்ரல் 21

“கிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு” 1.பேதுரு 3:18

கிறிஸ்து செய்து முடித்த சகல கிரியைகளிலும் பிரயாசங்களிலும் அவர் சகித்த சகல பாடுகளிலும் அவர் கொண்ட நோக்கம் இதுதான். சுபாவத்தின்படி நாம் தேவனுக்கு தூரமானவர்கள்: அவருக்கு விரோதிகள். அவரைக்கண்டால் பயப்படுகிறவர்கள். ஆகவே நாம் பாக்கியத்துக்கும், சமாதானத்திற்கும் தூரமானவர்கள். தேவனோடிருக்கிறது, தேவனைப்போல் இருக்கிறது பாக்கியமாதென்று இயேசுவுக்குத் தெரியும். அவர் தம்முடைய மக்களை நேசித்தபடியால் இந்தப் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கும்படியே விரும்புகிறார். அவரின் பிள்ளைகளுக்காக எதையும் செய்யவும், எதையும் சகிக்கவும் அவர் அதிகம் விரும்பினார். ஆதலால் அவர் மனதார நம்முடைய பாவங்களுக்காகப் பாடனுபவித்து, தம்மை பலியாகத் தந்து பாவங்களை நிவிர்த்தி செய்தார். மகிமையோடு நம்மைத் தேவனோடு சேர்க்கும்பபடிக்கு அவர் நோக்கம் கொண்டார்.

கிருபாசனத்தின்மேல்  வீற்றிருக்கும் பிதாவின் அருகே நம்மைக் கொண்டு வருகிறார். இங்கே நாம் மன்னிப்பைப் பெற்று, சமாதானம் அடைந்து, தேவன்பை ருசிக்கிறோம். கிருபாசனத்தண்டையில் நமக்கு வேண்டியதெல்லாம் பெற்றுக்கொள்கிறோம். பெரிய வாக்குத்தத்தங்கள் அங்கே நிறைவேறுகின்றன. இங்கே நம்மை ஏற்றுக்கெர்டு தயவு காட்டினார் என்பது அங்கே விளங்கும். பரிபூரணராயும், பாக்கியவான்களாயும் அங்கே இருப்போம். அவரும் மகிழ்ச்சி அடைவார். நாமும் திருப்தியடைவோம். நாம் தேவனிடம் சேருவது, அவர் மரணத்தால் உண்டான பலன். தேவனோடிருப்பது அவர் பட்டபாடுகளின் பிரதிபலன்.

நம்மை தேவனண்டை
இழுத்து சேர்க்கும்படி
பாடுபட்டு உத்தரித்து
இரத்தம் சிந்தி மரித்தார்.

கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து அறிகிறார்

ஏப்ரல் 20

“கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து அறிகிறார்” 1.நாளா.28:9

இது பயங்கரமான காரியம்! என் இருதயத்தை அவர் ஆராய்கிறார். அதில் எதைக் காண்கிறார்? பொல்லாத நினைவுகள், அசுத்தங்கள், பயங்கரமான நிர்ப்பந்தம், இவைகள்மட்டும்தானா காண்கிறார்? இல்லையென்று நினைக்கிறேன். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப்ப்றி அதில் நல்ல எண்ணங்களும் உண்டு. என் நினைவுகள் எல்லாம் பொல்லாதவைகள் அல்ல. பொல்லாத நினைவுகளை நான் பகைக்கிறேன். எல்லாம் கேடானதல்ல. சீர்த்திருத்துகிற சத்தியம் உண்டு. எல்லாம் நிர்ப்பந்தம் அல்ல. அதில் நல்லெண்ணங்களும் உண்டு. நம்பிக்கையும் விசுவாசமும் உண்டு. தேவன் என் இருதயத்தை ஆராய்கிறது நிஜமானால் நான் அப்படி செய்வது எத்தனை அவசியம்.

உங்கள் இருதயம் மோசம் போகாதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்றாரே. கூடுமானால் சாத்தான் நம்மை மோசம் போக்குவான். நாம் துணிகரத்திற்கு இடங்கொடுக்கும்படி நமது சாட்சிகளைக் கெடுப்பான். இருதயங்களையெல்லாம் கர்த்தர் ஆராய்கிறதினால் நாம் மாய்மாலம் செய்கிறது மகா புத்தியீனம். அவரை ஏமாற்ற நம்மால் முடியாது. அவருக்கு நாம் கோபமூட்டலாம். ஆனால் அவருடைய இரக்கத்தை மட்டுப்படுத்த கூடாது. தினமும் தேவனுக்கு முன்பாக நம்முடைய இருதயத்தைத் திறந்து கொடுத்து பரிசுத்த ஆவியானவர் சுத்தம்பண்ண வேண்டிக்கொள்ள வேண்டும். திறக்கப்பட்ட ஊற்றாகிய இரட்சகரண்டையில் ஓடி பரிசுத்த தேவ வசனமாகிய தொட்டியில் நித்தம் கழுவிக்கொள்ளப் பார்ப்போமாக. எப்போதும் சங்கீதக்காரனைப்போல் கர்த்தாவே என் இருதயத்தை சோதித்தறியும் என்று அடிக்கடி கெஞ்சுவோமாக. நாம் சொல்கிறதிலும், செய்கிறதிலும் சகலத்திலும் உத்தமமாய் விளங்குவோமாக.

நீர் என்னைப் பார்க்கிறீர்
எங்கே ஓடி ஒளிவேன்
உள்ளத்தை ஆராய்கிறீர்
இதை உணர்ந்து நடப்பேன்.

ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்

ஏப்ரல் 19

“ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்” மத். 15:25

இந்த வார்த்தை ஒர் ஏழை ஸ்திரீயினுடைய இருதயத்திலிருந்துப் பிறந்த ஜெபம் இது. கிறிஸ்துவின் இதயத்துக்குள் சென்றது. இது சுருக்க ஜெபமானாலும் சகலத்தையும் அடங்கிய ஜெபம். எந்த வேளைக்கும் இது ஏற்றதானாலும் சில சந்தர்ப்பங்களில் மிகவும் ஏற்றது. நமது பெலவீனத்தை அறிந்து உணருகிறது பெரிய இரக்கம். அப்போதுதான் கர்த்தரின் பெலனுக்காய் இருதயத்திலிருந்து கெஞ்சுவோம். நாம் செய்ய வேண்டிய எந்தக் காரியத்திலும், சகிக்க வேண்டிய எந்தச் சோதனையிலும், நாம் படவேண்டிய எத்துன்பத்திலும், ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபிக்கலாம். நமக்கு தேவ ஒத்தாசை தேவை. அதைக் கொடுப்பேன் என்று வாக்களித்திருக்கிறார். அதைத் தேடிப் பெற்றுக்கொள்வது நமது கடமை.

முழு மனதோடு இயேசுவுடன் இருக்க உதவி செய்யும். எப்போதும் சந்தோஷமாய் உமது சித்தம் நிறைவேற்ற உதவி செய்யும். எல்லா வருத்தங்களையும் கடந்து பரம அழைப்பிற்குரிய பந்தயப் பொருளை இலக்காக வைத்து ஓடும்படி கிருபை செய்யும். வாழ்வில் நன்றி நிறைந்த உள்ளத்தோடு உம்மைப் போற்றி தாழ்வில் பொறுமையாய் உமது சித்தம் தேட உதவி செய்யும். என் சத்துருக்களை ஜெயிக்க உதவி செய்யும். சோதனைகளை மேற்கொள்ள உதவி செய்யும். என் மரண நாள் மட்டும் உம் பாதத்தில் அமைதியோடு காத்திருக்க உதவி செய்யும் என்று தினந்தோறும் ஜெபிப்போமாக. இப்படி விசுவாசத்தோடு உணர்ந்து ஜெபிப்போமானால், கர்த்தர் எனக்குச் சகாயர், மனிதன் எனக்கு என்ன செய்வான். நான் பயப்படேன் என்று அனுதினமும் சொல்லலாம்.

கர்த்தாவே கிருபை புரியும்
நான் ஏதுமற்ற பாவி
உமக்காக உழைத்து மரிக்க
உமதாவி அளியும்.

என் கனம் எங்கே

ஏப்ரல் 18

“என் கனம் எங்கே” மல்கியா 1:6

கர்த்தர் தமது மக்கள் தம்மை மகிமைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறார். நாமும் இந்த முக்கியமான கடமையை மறந்திருக்கிறோம். மத்தேயுவைப்போல விசுவாசத்திலும் கிரியைகளிலும், பேதுருவைப்போல உண்மையிலும், உற்சாகத்திலும், யோவானைப்போல மிகுந்த அன்பிலும், பவுலைப்போல இரத்த சாட்சியிலும், உருக்க பாரத்திலும் அவரைக் கனப்படுத்த வேண்டும்.

அன்பர்களே, தேவனைக் கனப்படுத்துவது உங்களுக்கு பிரியமா? அப்படியானால் அவர் செயலை நம்புங்கள். அவர் எப்போதும் உங்களைப் பார்க்கிறாரென்று நினைத்து நடவுங்கள். எல்லாரையும்விட அவர் ஜனத்தை அதிகம் நேசியுங்கள். அவர் ஊழியம் சிறந்து நடக்க எது வேண்டுமானாலும் செய்து உதவுங்கள். தேவனுக்காய் காரியங்களைச் செய்யாவிட்டால் அவர் உங்களைப் பார்த்து என் கனம் எங்கேயென்று நன்றாகக் கேட்கலாம். தேவன் விரும்புகிறபடி அவரைக் கனப்படுத்த வேண்டுமானால் அவரின் தன்மைகளை அறிய வேண்டும். இயேசுவின்மூலம் நல்ல ஐக்கியத்தை வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் அவர் சமுகம் முன் நிற்கிறதாக எண்ணவேண்டும். அவர் அதிகாரத்துக்குக் கீழ் அடங்க வேண்டும். அவரின் நேசத்தின் ஆழத்தை ருசித்து, அவரின் சித்தம் செய்ய வேண்டும். அவர் விரும்புகிறதைப் பார்த்து அதன் மேல் நோக்கமாயிருக்க வேண்டும். நீங்கள் அவரைக் கனப்படுத்தினால், உங்களுக்கு நல்ல சமாதானம் தந்து வேண்டிய யாவையும் கொடுத்து, எந்தத் துன்ப வேளையிலும், சகாயத்தையும் தந்து, அன்பாய் உங்களை அடிக்கடி சந்தித்து, எந்தச் சத்துருவையும் கடைசியிலே வெற்றி சிறக்க சத்துவத்தையும், கொடுத்து உங்களைக் கனப்படுத்துவார்.

தேவன் எனக்குப் பிதாவா?
நான் அவரின் பிள்ளையா?
அவரைக் கனப்படுத்தி
அவர் சித்தம் நடப்பேன்.

கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது

ஏப்ரல் 17

“கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” 2.கொரி. 5:14

நேசிக்கிறவர்களுடைய குணத்துக்கும் தன்மைக்கும் தக்கபடியே அவர்களின் நேசமும் இருக்கும். இயேசு கிறிஸ்து நிறைவுள்ளவரானபடியால் மேலான குணங்கள் எல்லாம் அவரிடத்தில் இருந்தது. அவருடைய அன்பு அதிசயமானது, மகிமையானது. அதில் பாவிகளுக்காக உருகும் உருக்கமும் நீதிமான்களுக்கா மகிழும் மகிழ்ச்சியும் இருக்கிறது. பிதா அவரை நேசிக்கிறதுபோலவே நம்மை அவர் நேசிக்கிறார். பிதா அவர்மேல் வைக்கும் அன்பு எவ்வளவு அதிகமென்று நமக்குத் தெரியாததுப்போலவே அவர் நம்மேல் வைக்கும் அன்பின் அளவு தெரிந்துக்கொள்ள முடியாது.

அன்பு அவர் இருதயத்தில் வாசம்பண்ணி அவர் கண்களில் விளங்கி, தமது கைகளினால் கிரியை செய்து, அவர் நாவில் பேசி அவரால் சகலத்தையும் சம்பாதிக்கிறது. இயேசு எந்த நிலைமையும் தாழ்வாக எண்ணவில்லை. எந்தச் செயலையும் கேவலமாய் நினைக்கவில்லை. எந்தக் குறைவையும் பார்த்துவிட்டுப் போகவில்லை. எந்த ஈவையும் பெரியதாக எண்ணவில்லை. எந்தத் துன்பத்தையும் சகிக்கக் கூடாதென்று சொல்லவில்லை. தமது ஜனத்தின் மத்தியில் கண்ட எந்த நன்மையையும் அற்பமாய் எண்ணவில்லை. அவர்களுக்கு நன்மை செய்ய எந்தப் பேதமும் பார்க்கவில்லை. கிறிஸ்துவின் அன்பு, சொல்லுக்கும் நினைவுக்கும் அடங்காதது. இந்த அன்பால் ஏவப்பட்டு நான் அப்போஸ்தலர்கள் உழைத்தார்கள். துன்பத்தைச் சகித்தார்கள். இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். கிறிஸ்துவின் அன்பை நாம் உணருவோமானால் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து சகலத்தையும் வீணென்று தள்ளுவோம். அவருக்காக எதையும் சகிக்க, உழைக்க, மரிக்க கொடுக்க அவரின் அன்பே நன்மை ஏவிவிடுகிறது. கிறிஸ்துவின் அன்பு ஜாக்கிரதைக்கும், வைராக்கியத்துக்கும், உதாரகுணத்துக்கும் உன்னை ஏவி விடுகிறதா?

பாவம் விட்டொழிக்க
கிறிஸ்துவின் அன்பு ஏவுது
அவருக்கு என்னை ஒப்புவிக்க
அது என்னை நெருக்குது.

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிவேன்

ஏப்ரல் 16

“என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிவேன்” யோபு 19:25

மரணத்துக்குரிய உலகில் நாம் வாழ்கிறோம். சிநேகிதரும் இனத்தாரும் ஒவ்வொருவராய் மரித்துக்போகிறார்கள். ஓர் இனத்தான் மட்டும் மரிக்கிறதேயில்லை. இயேசுவே அந்த இனத்தான். நம்மை மீட்கும் சுதந்தரம் அவருக்குண்டு. நம்மை மீட்கும் பொருளைக் கொடுத்ததுமல்லாமல் முற்றும் விடுதலையாக்க உயிரோடிருக்கிறார். தேவ வலது பாரிசத்தில் நமது தன்மையைத் தரித்தவராயிருக்கிறார். மகா பரிசுத்த ஸ்தலத்தில் நமக்காக இருக்கிறார். என்றும் இருக்கிறவராகவே இருக்கிறார். அவரின் இவ்வேலையை வேறு ஒருவரும் செய்ய முடியாது. அவர் நமக்காக மன்றாடி நம்முடைய சத்துருக்களை ஜெயித்து, கிருபைகளைப் பூரணப்படுத்தி மரணத்தினின்று நம்மை மீட்டுக் கொள்வார். அவர் இரண்டாம் முறை பாவமில்லாமல் வருகையில் நம்மை இரட்சித்து மகிமைப்படுத்துவார்.

வேத வசனத்தின்மூலமும், பரிசுத்தாவியானவரின் போதனை மூலமும் நாம் அறிந்துக் கொள்ளலாம். நாம் நம்பியிருக்கும் வண்ணமே அவரை அறிந்துக்கொள்ளுவோம். நான் என் மீட்பராக அவரை அறிவேன். அவர் என்னைச் சாத்தானிடமிருந்தும், பழைய பாவத்திலிருந்தும், பொல்லாத உலகத்திலிருந்தும் மீட்டுக் கொண்டார். அவர் கரத்தில் என் ஆவியை ஒப்புவித்திருக்கிறேன். அவர் என்னை மீட்கும்படி உயிரோடிருப்பதால் நானும் பிழைத்திருப்பேன்.

என்றென்றும் நம்மை நேசித்து என்றுமே நம்மை பிழைப்பிக்கிற ஒரு நண்பன் நமக்கு இருப்பது எத்தனை மகிழ்ச்சி? நாம் அவருக்குப் பிரியமானவர்களானபடியால் நம்முடைய காரியம் அவருடைய கரத்தில் பத்திரமாயிருக்கும். இயேசுவே நான் இன்னும் அதிகம், உம்மை நேசித்தால் எவ்வளவு நலம்.

என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
எனக்காகப் பேசுகிறார்
அவர் அளிப்பது இரட்சிப்ப
ஜீவன் சுகம் பூரிப்பு

Popular Posts

My Favorites

தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு

யூன் 03 "தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு...." 1.கொரி. 15:28 யோகோவா எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார். தமது சகல வழிகளிலும் கிரியைகளிலும் தாம் மகிமைப்படுவதே அவர் நோக்கம். இரட்சண்ய ஒழுங்கில் அவர்தான் சமஸ்தம். அந்த ஒழுங்கு நித்தியத்தில் அளவற்ற...