உன் நோய்களையெல்லாம் குணமாக்கி.

யூலை 06

“உன் நோய்களையெல்லாம் குணமாக்கி.” சங். 103:3

கர்த்தர் ஒருவரே பரிகாரி. அவரே சரீரத்தையும், ஆத்துமாவையும், குணமாக்குகிறவர். விசேஷமாய் அவர் ஆத்துமாவுக்கும் பரிகாரி. எல்லா வியாதிக்கும் துன்பத்துக்கும் காரணம் பாவமே. பாவத்துக்கு இருப்பிடம் இருதயமே. இந்த வியாதி வுருத்தமானதும் அருவருப்பானதும் ஆகும். இது ஞாபகத்தையும் பாசத்தையும், மனசாட்சியையும், சித்தத்தையும் முழு மனுஷனையும் கெடுக்கும். நம் எல்லாருக்கும் இந்த வியாதி உண்டு. இதனால் நாம் யாவரும் வருத்தப்படுகிறோம். கர்த்தராகிய இயேசுதான் நம்மைக் குணமாக்க முடியும். அவர் பெரிய பரிகாரி.. அவரிடத்தில் போனால் சுகமடைவோம்.

இப்படி நீங்கள் தைரியம் கொள்ளும்படி அவர் எப்படிப்பட்டவர் என்று கவனியுங்கள்.அவர் அளவற்ற ஞானமும், உருக்கமும், திறதையும் உள்ளவர். அவரைப்போல் அனுபவம் மிக்க வைத்தியர் எவருமில்லை. அவர் தொட்டால் எந்த வியாதியானாலும் சுகமாகிவிடும். அவரின் ஒளடதமோ திரு இரத்தம், திரு வசனம், பரிசுத்தாவியானவர் என்பவைகள். துன்பங்களாலும், நஷ்டங்களாலும், மெய் உணர்வினாலும், இரகசிய கிரியைகளினாலும் இவைகளை நம்மில் பெலன் செய்யப்பண்ணுகிறார். அவர் சிகிச்சை அளித்து சுகமடையாமல் இருப்பது யாருமல்ல. தாவீதின் வியாதி கொடியதாயிருந்தாலும், என் நோய்களையெல்லாம் குணமாக்கினார் என்கிறான். இதை உணர்ந்து சொல்கிறான். ஆனால் இதை நம்பலாம். நீ பாவியானால் நீ வியாதிஸ்தன். உன் வியாதி மோசமானது. நீ இயேசுவண்டை போ. சத்தியத்தைவிட்டு விலகினவனே, நீ வியாதியாய் இருக்கிறாய். நீயும் இயேசுவண்டைக்கு போ. விசுவாசியே, நீ முற்றிலும் சுகமாக வேண்டுமென்று விரும்புகிறதில்லையா? அப்படிhனால் இன்றே இரட்சகரண்டைக்குப் போ. கர்த்தாவே உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று சொல்.

மன்னித்துக் கிருபை அளித்து
பாவப் பிணியை நீக்கும்
ஆத்தும சுகம் ஈந்து
பூரண சுத்தம் தாரும்.

விடாய்த்திருந்தும் பின்தொடர்ந்தார்கள்

யூலை 05

“விடாய்த்திருந்தும் பின்தொடர்ந்தார்கள்.” நியா. 8:4

கிதியோனுடைய போர்ச் சேவர்கள் அதிகம் வருத்தப்பட்டார்கள், விடாய்த்துப் போனார்கள். ஆகிலும் அவர்கள் கர்த்தர் தெரிந்துகொண்ட சேனை. தங்கள் தலைவனின்பின் அவர்கள் உறுதியாய் சென்றார்கள். பிரயாசத்தினாலும், தங்கள் வெற்றியினாலும், உணவில்லாமையினாலும், இளைத்துப் போனார்கள்.

முற்பிதாக்களின் காலத்தில் அற்புதங்கள் செய்யப்பட்ட யோர்தான் நதிக்கு சமீபத்தில், வெற்றி முற்றுப்பெற்ற கடைசி நேரத்தில்தான் விடாய்த்துப் போனார்கள்.
கர்த்தருடைய ஜனங்களைப்பற்றியும் இப்படியே சொல்லலாம். இவர்கள் கர்த்தருக்கு அருமையானவர்களாய் இருந்தும், சிலுவையின் போர்ச்சேவகராய் இருந்தும் சுமைகளாலும், துன்பங்களாலும், யுத்தங்களாலும், ஞானாகாரக் குறைவினாலும், அடிக்கடி இளைத்து, சோர்ந்து மனமடிவாகிறார்கள். அப்படியிருந்தும் அவர்கள் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பின்தொடருவதை விடுகிறதும் இல்லை. மாம்ச சிந்தைக்கு இடங்கொடுக்கிறதுமில்லை. தேவன் இதைச் செய்வாரோ, மாட்டாரோ என்று யோசிக்கிறதுமில்லை. அவர் கைவிட்டாரோ இல்லையோ என்று வீணாய் கங்குகிறதுமில்லை. இவர்கள் தேவன் கொடுத்த உத்தரவு பிரகாரம் தாங்கள் மேற்கொண்ட சத்துருக்களைப் பின் தொடர்ந்தார்கள். வாக்குத்தத்தங்கள் இவர்களை உற்சாகப்படுத்தின. ஆகவே முழு நிச்சயத்தோடும், விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும், தொடர்ந்து போகிறார்கள்.

நீ சோர்ந்து போகிறாயா? அது உன் ஜெபத்தில், பிரயாசத்தில் பிரதிபலிக்கிறதா? இன்னும் தொடர்ந்து போ. பெலவீனமாய் இருந்தாலும் தொடர்ந்து போ. தேவன் உன்னோடு இருப்பதால் தொடர்ந்து போ.

சத்துருவை ஜெயிக்கும் மட்டும்
ஜெபித்து நின்று போராடு
ஜெயம் கடைசியில் வரும்
ஜீவ கிரீடமும் கிடைக்கும்.

ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.

யூலை 04

“ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.” சங். 63:3

உயிரோடு இருப்பதுதான் ஜீவன். நல்வாழ்வு என்பது அதன் பொருள். சுகமாய், மேன்மையாய், சமாதானத்தோடு குறைவின்றியிருப்பது. மற்றவர்களோடு நல்ல ஓர் உறவை வைத்து மனதிருப்தியோடிருந்தால் அரசன் தன் சிம்மாசனத்திலும், வியாபாரி தன் வியாபாரத்திலும் மாணவன் தன் படிப்பிலும் திருப்தி அடைவான். ஜீவனோடிருப்பவனை நற்காரியங்கள் சூழ்ந்திருக்கும். ஆனால் தேவன் காட்டும் கிருபை எது? அன்பான வார்த்தைகளும், பட்சமான செயல்களுமே. தம்முடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துதலும் ஆகும். நம்மை ஞான நன்மைகளால் அவர் திருப்தி செய்கிறார். இந்த நன்மைகள் ஜீவனைவிட மேன்மையானவை. ஏனெனில் அவை மேலான கனத்தைக் கொடுக்கிறது. அதிக இன்பங்களை அளிக்கிறது.

இந்தக் கிருபைதான் மேலான காரியங்களை எதிர்பார்க்கும்படி நம்மை ஏவிவிடுகிறது. நம்மை அதிக பத்திரமாய் காக்கிறது. அது ஜீவனைவிட நல்லது. அது நித்திய நித்தியமானது. ஆத்துமாவின் தன்மைக்கும் மிகவும் ஏற்றது. மகிமை நிறைந்தது. அது கலப்பற்ற நன்மை. அழியாத இன்பம், குறையாத ஐசுவரியம். ஆகையால்தான் சங்கீதக்காரன் இது ஜீவனைவிட நல்லது. ஆகவே என் உதடுகள் உம்மை துதிக்கும் என்று சொல்லுகிறான். மற்றவர்களோடு பேசும் போதும் அதைப் புகழ்ந்து பேசுவேன் என்கிறான். என் ஜெபத்தில் உமக்கு நன்றி செலுத்துவேன். அதை எனக்குத் தெரியப்படுத்தினதற்காகவும் இப்போது அது எனக்கு கிடைத்தமைக்காகவும், எப்போதுமே அதை அனுபவிப்பேன் என்ற நம்பிக்கைக்காகவும் உம்மைத் துதிக்கிறேன் என்கிறான். நண்பரே, ஜீவன் உனக்கு அருமையானதுதான், ஆனால் அதிலும் தேவகிருபை பெரிதானதென்று எண்ணுகிறாயா?

உம் தயவும் அன்பும்
ஜவனிலும் நல்லதே
தேவ இரக்கம் பூமியைப்
பரலோகமாக்குகிறது.

அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்

யூலை 03

“அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.” மீகா 7:18

தேவனை விரோதிப்பவர்கள்மேல்தான் தேவ கோபம் வரும். தேவனுடைய கோபம் யார்மேல் வருகிறதோ அவர்களுடைய நிலை மகா வருத்தமானது. கொஞ்ச காலம் அவருடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் அது வரலாம். ஒவ்வொருவனும் நீர் என்மேல் கோபமாயிருந்தீர் என்று சொல்லக்கூடும். தேவனுடைய கோபத்திற்கு காரணம் பாவம். அவர் தம் பிள்ளைகள்மேல்தான் கோபப்படுகிறார். அது தகப்பனுக்கொத்த கோபம். நம்மைச் சீர் செய்யவேண்டும் என்பதே அவருடைய கோபத்தின் நோக்கம். அந்தக்கோபம் பல விதங்களில் நம்மை வருத்தப்படுத்தக்கூடும்.

தேவ கோபத்தால் உலக நன்மைகள் கெட்டு ஆவிக்குரிய ஆறுதலும், சந்தோஷமும் குறைந்து போகலாம். அது குறுகிய காலம் தான் இருக்கும். அவர் கோபம் ஒரு நிமிஷம். அவருடைய தயவோ நீடிய வாழ்வு. தேவன் நம்மேல் கோபமாய் இருக்கும்போது ஒரு மணிநேரம் ஒரு நாள்போலவும், ஒரு மாதம், ஒரு வருடம்போலவும் இருக்கும். ஆகையால் அவர் எப்பொழுதும் கோபம் வைக்கிறதில்லை என்ற உண்மை நமக்கு இன்பமாய் இருக்கவேண்டும். கோபப்படுவது அவர் இயல்பு அல்ல. அவர் சுயசித்தமாய் கோபிக்கிறவரும் அல்ல. அவர் வெகுகாலம் கோபம் வைக்கிறதில்லை. அவர் பிராயசித்த பலியை நோக்கி சீரடைந்தவனுடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கிறார். தம்முடைய உடன்படிக்கையை நினைக்கிறார். இரக்கம் காட்டுவதே அவருக்குப் பிரியம் என்று நிரூபிக்கிறார். அவருடைய கோபம் பாவிகளுக்கு விரோதமாக, பாவத்தால் நெருப்பு மூட்டப்பட்டு எப்பொழுதும் எரியும். ஆனால் அவர் பிள்ளைகளின்மேல் வைக்கும் கோபம் சீக்கிரம் அணைந்துப்போம். தேவனின் அன்பு என்கிற நீர் அதை அவித்துப்போடும்.

பாவத்தை ஒழித்து
முற்றும் மன்னிப்பார்
கோபம் ஒரு நொடி மாத்திரம்
அவர் அன்போ என்றும் உள்ளது.

இராக்காலம் வருகிறது

யூலை 02

“இராக்காலம் வருகிறது.” யோவான் 9:4

இரவு என்பதில் பயமும், திகிலும் உண்டு. இராக்காலம் மரணத்தின் அறிகுறி. மரணத்திற்குப் பிறகு இந்த உலகில் நன்மை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடையாது. ஆகவே, நிகழ்காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும். மரணம் வரும்போது நம்முடைய எல்லா வேலைகளும் முடிந்து விடும். முடியாவிட்டால் அரைகுறையாய் அதை விட்டுப்போக வேண்டும். ஆதலால் காலம் இருக்கும்போதே அதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மரணம் வரும்போது நாம் சிநேகிதரை விட்டுப் போக வேண்டும். ஆகவே உயிருள்ளபோதே அவர்கள் நட்பைக் காத்துக்கொள்வோமாக. ஒரு நாள் மரணம் வரும்போது எல்லாரையும்விட்டு இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்போம். நம்முடைய ஆத்துமா அமைதியாய் இளைப்பாறும். அது ஆண்டவர் சமுகத்தில் தங்கி அங்கே இளைப்பாறி திருப்தி அடையும்.

இராக்காலம் வருகிறது. அது தூரத்தில் இல்லை. சிலருக்கு அது வெகு அருகில் இருக்கலாம். திடீர் என்றும் வரலாம். ஆகவே நாம் ஆயத்தமாய் இருக்க எச்சரிக்கப்படுகிறோம். இயேசுவை விசுவாசித்தவர்களாக காலத்தை ஆதாயப்படுத்தி, நாள் முழுவதும் வேலை செய்து, இரவுக்கு ஆயத்தப்பட்டவர்களாய் இருப்போமாக. நம்முடைய வேலை முடிந்தது. தேகம் இளைத்தது. பரம பாக்கியத்தின் பேரில் ஆசை மிகுந்தது. எப்போது பேரின்ப வீட்டுக்குப் போகலாம் என்று சந்தோஷமாய் எதிர்பார்க்கிறவர்களைப்போல இருக்கக்கடவோம்.

தேவனிடம் கிட்டி சேர்ந்து
அவரைப்போல் இருப்பது
எப்போ கிடைக்கும், அப்போ
பாவம் முற்றிலும் ஒழியும்.

அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து

யூலை 01

“அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து.” சங்.103:3

தினந்தோறும் நாம் பாவம் செய்கிறபடியால் தினந்தோறும் நமக்கு மன்னிப்பு தேவைப்படுகிறது. நம்முடைய பாவம் கொடிய தன்மை உடையது. இரத்தக் கிரயத்தைக் கொடுத்து, நம்மை மீட்ட ஆண்டவருக்கு விரோதமாக நாம் பாவம் செய்கிறோம். தன் எஜமான் வீட்டில் வாசம் செய்து அவருடைய போஜனத்தை அவரோடு புசித்து, அவருடைய உதாரத்துவத்தால் சகலத்தையும் பெற்று அனுபவிக்கிற ஊழியக்காரன், இப்படி தனக்கு தயவு காட்டுகிற எஜமானுக்கு விரோதமாய் பாவம் செய்கிறதுபோல நாமும் பாவம் செய்கிறோம். பாசமாய் வளர்க்கப்பட்ட பிள்ளை, ஒரு நல்ல பட்சமுள்ள அன்பான தகப்பனுக்கு விரோதமாய் பாவம் செய்கிறதுப்போலவே நாமும் பாவம் செய்கிறோம்.

நம்முடைய பாவங்கள் அநேகம். அடிக்கடி செய்கிறோம். அது பல வகையானது. அவைகளினின்று தப்ப முடியாது. ஆயினும் கர்த்தர் நம்முடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறார். நிறைவாயும், இலவசமாயும், எவ்வித குறைவுவராமல் மன்னிக்கிற தேவனைப்போல வேறு ஒருவரும் இல்லை. இந்த மன்னிப்பு இயேசுவின் இரத்தத்தால் கொள்ளப்பட்டது. அவர் மன்னிப்பைத்தரும்போது பாவத்தின்மேல் பகையும், துக்கமும், அதை விட்டுவிலகுதலும் உண்டாகவேண்டும். தேவன் நம்மைப் பலமுறை மன்னித்து கொண்டே இருக்கிறார். தகப்பனைப்போல் அன்பாயும், பலமுறையும் மன்னிக்கிறார். தேவன் இரக்கமாய் மன்னிக்கிறார் என்று சாட்சி கொடுத்த தாவீது பெரிய பாவி. அவன் விபசாரம் செய்து மோசம்பண்ணி, கொலைக்கும் ஆளாகி, அது தெய்வ செயல் என்று சொல்லி வெகு காலம் பாவத்தில் உறங்கிக்கிடந்தான். ஆனால் அவன் மனசாட்சி குத்தினபோது தேவனுக்குமுன் பாவங்களை அறிக்கையிட்டான். இதை வாசிக்கிறவரே, நீர் பாவமன்னிப்பு பெற்றதுண்டா? நீர் குற்றவாளி அல்லவா? தேவன் உமக்கு மன்னிக்க காத்திருக்கிறார். பாவத்தை அறிக்கை செய்து, ஜெபம்பண்ணு. இயேசுவின் புண்ணியத்தைச் சொல்லி, கெஞ்சி மன்னிப்பைப் பெற்றுக்கொள்வீராக.

இயேசுவே உமது அருளை
சொல்வது என் பெருமை
அதை என்றும் போற்றவே
மன்னிப்பளித்துக் காருமேன்.

Popular Posts

My Favorites

நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்

யூலை 19 "நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்" சங். 41:11 எல்லா விசுவாசிக்கும் இது தெரிந்ததே. ஆயினும் இதைச் சரியாக புரிந்துகொள்ள எவரும் முயற்சிப்பது இல்லை. தேவன் நம்மேல் பிரியமாயிராவிட்டால் நாம் இன்னும் பாவத்தில்...