பெப்ரவரி 04
“கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்.” மத். 24:6
அதாவது கவலைக்கொள்ளாதபடி மனமடிவாகாதபடி, திகையாதபடி எச்சரிக்கையாயிருங்கள். துன்பங்களைத் தைரியமாய்ச் சந்தித்து, பொறுமையோடும், மனதிடனோடும் சகித்து தேவனுக்கு முற்றிலும் கீழடங்கப் பாருங்கள். உலகத்தார் கலங்கி நிற்கலாம். நீங்கள் கலங்கக்கூடாது. நீங்கள் என் தொழுவத்தின் ஆடுகள். என் வீட்டின் குமாரர்கள். என் தோட்டத்து வேலையாள்கள். நீங்கள் கலங்கக்கூடாது. உங்கள் காரியங்கள் அனைத்தும் அன்பினாலும் ஞானத்தினாலும் திட்டமிடப்பட்டிருக்கிறது. நீங்கள் என் கரத்தில் சுகமாயிருப்பவர்கள். நீங்கள் உங்களைத் தீங்கிற்கு விலக்கி காப்பதற்கு நான் எப்போதும் உங்களோடிருக்கிறேன். கண்ணீரைத் துடைத்து உங்கள் மனதை லேசாக்குகிறேன். ஆகவே நீங்கள் கலங்கக்கூடாது.
நடக்கிறவைகளெல்லாம் உங்களுக்கு நன்மையாகவேதானிருக்கும். நீங்கள் கவலைப்படும்போது என்னைக் கனவீனப்படுத்துகிறீர்கள். ஆகவே மனகலக்கத்திற்கும் வீண் கவலைக்கும் இடங்கொடாதபடி பாருங்கள். கலங்காதிருக்க என்ன வழி என்று கேட்கிறீர்களா? என் வசனத்தை உறுதியாய் நம்புங்கள். என்னோடு எப்போதும் நடவுங்கள். உங்கள் பயங்கள், எனக்குச் சொல்லுங்கள். உங்கள் கவலைகளையும், சுமைகளையும் என் பாதத்தருகே வையுங்கள். எல்லாவற்றிற்கும் முடிவு வரும் என்று அறியுங்கள். தேவன் உண்மையுள்ளவர். அவர் என்னோடிருக்கிறார் என்று நினையுங்கள். துன்பங்களைச் சகிக்கிறதற்குத் தேவையான உதவி கிடைக்குமென்று எதிர்பாருங்கள். நீங்கள் என்னோடு ஐக்கியப்பட்டவர்கள் என்பதை மறந்துப்போகாதீர்கள். சிநேகிதரே, நாம் கிறிஸ்துவோடிருந்தால் கலங்க வேண்டியதில்லை. நீங்கள் அமர்ந்திருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி இருக்க முயற்சி செய்யுங்கள் என்று அன்பாய் உங்களுக்குக் கூறுகிறேன்.
என் மனமே நீ கலங்காதே
தேவ சித்தமுண்டு காத்திரு
உனக்கு விளங்கா விட்டாலும்
எல்லாம் சுபமாய் முடியும்.