நவம்பர்

முகப்பு தினதியானம் நவம்பர்

அற்பமான ஆரம்பத்தின் நாள்

நவம்பர் 29

“அற்பமான ஆரம்பத்தின் நாள்” சக. 4:10

தேவன் சிலரிடத்தில் அதிகக் கிரியைகள் நடப்பித்தாலும் அவை வெளியே தெரிவதில்லை. அவர்களின் விசுவாசம் பெலவீனமானது. அவர்களுடைய வேத வசன அறிவு மிகவும் குறைவுதான். அவர்களுடைய அன்பு ஆழமானதல்ல. தேவனுக்கு செய்ய வேண்டிய எதையும் அவர்கள் வெளிப்படையாகச் செய்வதில்லை. மனம் திறந்து பேசவும் மாட்டார்கள். எப்பொழுதும் எந்தப் பாவத்திற்காவது அடிமைப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் இப்படிப்பட்டவர்களும் கர்த்தருடைய பிள்ளைகள்தான். வெறுமையான உலகத்தையும், பாவத்தையும் வெறுத்து கிறிஸ்து இயேசுவின் அருமை பெருமைகளை அறிந்துக் கொள்ளக் கூடிய அறிவு அவர்களுக்கிருக்கிறது. அவர்களும் அவருடைய அன்பை ருசிக்க ஆவல் உள்ளவர்கள்தான். எல்லாவற்றையும், சிறப்பாக வேதனையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனாலும் நாங்கள் கிறிஸ்துவில் அன்புகூருகிறோம் என்று வெளிப்படையாகக் கூறும் தைரியம் அவர்களுக்கு இல்லை. எனினும் மறைவான அவரை அவர்கள் நேசிக்கிறார்கள். அவர்களுக்கு பயங்கள் அதிகமாயிருப்பதால் மகிழ்ச்சி குறைவாயிருக்கிறது.

அவர்கள் ஜெபிக்காவிடில் தேவ சமுகத்தில் நாடாவிடிலும் பிழைக்கமாட்டார்கள். கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவதில் வாஞ்சையுள்ளவர்களான கர்த்தரின் பிள்ளைகளைப்போல் பாக்கியசாலிகள் யாருமில்லை. அவ்வாறானவர்களின் விஷயத்தில்தான் அற்பமான ஆரம்பத்தின் நாள் காணப்படும். அந்த நாளில் இரட்சிப்புக்கானவை உண்டு. சிறிய விதைகளிலிருந்துதான் பெரிய மரங்கள் வளருவதுபோலத்தான் இதுவும் அற்பமான ஆரம்பத்தின் நாளைத் தாழ்வாக எண்ணாதே. ஆண்டவர் அதைக் குறைவாக மதிப்பதில்லை. விருப்பத்துடன் ஏற்பார். ஆகவே எவருடைய அற்கமான ஆரம்ப நாளையும் நாம் தாழ்வாக எண்ணலாகாது.

சிறு மழைத்தூறல் பெரும் வெள்ளமாம்,
சிறிதான பொறியும் பெரு நெருப்பாம்
சிறிதான ஆரம்பம் விசுவாசியாக்கும்
சிறது எதையும் அசட்டை செய்யாதே.

அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்

நவம்பர் 28

“அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” யோபு 13:15

கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருப்பதைத்தவிர நாம் செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை. இவ்வாறு நம்பிக்கை கொண்டிருப்பதே நலமாகும். நம்பியிருப்பதையன்றி நாம் வேறு ஒன்றும் செய்யக்கூடாது. ஆனால் என் சொத்துக்களை என்னைவிட்டு அகற்றி, என் சுகத்தை நோயாகமாற்றி, என் நண்பர்களை எனக்கு பகைஞராக்கிக் கர்த்தர் தமது முகத்தை எனக்கு மறைத்துக் கொண்டால், நான் என்ன செய்வது? ஆம் அப்பொழுதும் நீ அவரை நம்பத்தான் வேண்டும். இவைகள் போதாதன்றி பட்டயம் கரத்திற்கொண்டு அவர் என்னைக் கொல்லு முயற்சித்தால் என்ன செய்வது? அப்பொழுதும் நீ அவரை நம்பத்தான் வேண்டும்

உனக்கு அவருடைய வாக்குகள் இருக்கிறன. அவ்வாக்குகளை அவர் மாற்றார். நிறைவேற்றாது போகார். அவர் உண்மையுள்ளவர். அன்புள்ளவர். அழுகிற குழந்தையைத் தாய் அணைப்பதுபோல், உன்னை அவர் அணைத்துக் கொள்வார். அவருடைய சிம்மாசனத்தின்முன் அவருடைய வாக்குத்தத்தங்களைச் சொல்லி கேட்கும்போது, அவர் தமது வாக்குகளை நிறைவேற்றியே தீருவார். அவரை நம்பியிரு. அவர் உன் விசுவாசத்தை சோதிக்கிறார். இனி அவர் உனக்குத் தரவிருக்கும் பாக்கியங்களை எண்ணி மகிழ்ந்திரு. அவர் அனுப்பிய சோதனைக்காக நீ ஒரு நாள் அவரைத் துதிப்பாய். அவர் உன்னை சோதித்தபின் நீ பொன்னாக விளங்குவாய். எப்பொழுதும் கர்த்தரையே நம்பியிரு. என்ன நேரிட்டாலும் அவர்மீது கொண்ட நம்பிக்கையை விடாதே.

தேவனே, உம் கரம் என்னை
எவ்வழி நடத்தினாலும் நலமே
உம் அன்பே எனை நடத்துவதால்
உம்மை நம்பி நிற்பேன்.

மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்

நவம்பர் 08

“மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்” சங். 100:2

நம்முடைய தேவன் இணையற்ற பேறுகள் உள்ளவர். தம்முடைய மக்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியோடிருக்கவே அவர் விரும்புகிறார். ஆதி முதல் அவர் யாவற்றையும் அவர்களுக்காக சேமித்து வைத்திருக்கிறார். ஆனால், பாவம் அவர்களுக்கு வரும் நன்மைகளைக் கெடுத்து போட்டது.

இப்பொழுதும் நாம் அவருக்கு ஊழியம் செய்யும் பாக்கியம் பெற்றிருக்கிறோம். அதை அவர் விரும்புகிறார். நித்திய சுவிசேஷத்தில் உனக்கு பாக்கியமானதை சேமித்து வைத்திருக்கிறேன். நீ அதை விசுவாசி. இலவசமாக உனக்கு பாவமன்னிப்புக் கிடைக்கும். முழுமையான நீதியை உனக்குத் தருவேன். உன் இதயத்தைச் சுத்திகரிப்பேன். உனது குறைவுகளை நிறைவு செய்வேன். என் சமுகத்தின் உன்னை ஏற்றுக்கொள்வேன். உன் வாழ்நாளெல்லாம் என் கிருபையைத் தருவேன். மரண பரியந்தம் உன்னை மகிமைப்படுத்துவேன் என்கிறார்.

நீங்கள் மகிழ்ச்சியுள்ள  பாக்கியவான்களாகக் கர்த்தருக்கு ஆராதனை செய்ய, உங்களை உற்சாகப்படுத்த இது போதுமே, தேவனுடைய ஊழியம் நமக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். நாம் புத்திரசுவிகாரம் பெற்றது உண்மை என்ற அறிவுடன் உள்ளான அன்புடன் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும். மறுமையில் நாம் பரலோகத்தில் ஆளகை செய்யப் போகிறோம் என்னும் நம்பிக்கையுடன், இன்மையில் அவருக்கு நாம் ஊழியம் செய்வோம். நமது நடத்தையினால், நான் கர்த்தருக்குச் சந்தோஷமாய் ஊழியம் செய்கிறேன். நான் வேறு எருக்கும் ஊழியம் செய்யேன் என்று மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும்.

இயேசுவே என் பாவம் நீக்கி
என்னை இரட்சித்திடும்
மகிழ்ச்சியோடு உம்மை
நான் ஆராதிக்கட்டும் என்றும்.

தேவன் என்னென்ன செய்தார்

நவம்பர் 05

“தேவன் என்னென்ன செய்தார்” எண். 23:23

தேவன் தமது ஜனத்தைப் பாவத்தினின்றும், அறிவீனத்தினின்றும் விடுவித்து, அவர்களுக்கு அதிகமான நன்மைகளைக் கொடுக்கிறதினால் புறவினத்தாரும் அதைப் பார்த்து பொறாதை கொள்ளலாயினர். தம்முடைய சபையைத் தேவன் தமது குமாரனின் பாடுகள் மரணத்தால் மீட்டுக்கொண்டார். அவருடைய சபையைச் சேர்ந்த அவருடைய அவயவங்களை உயிர்ப்பித்து குணமாக்கி தூய்மைப்படுத்துகிறார். அவர்களைப் பூமியின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒன்றாகக் கூட்டி சேர்க்கிறார். அவர்களின் குறைகளைச் சந்தித்துப் பராமரித்து பாதுகாத்து தமது வல்லமையால் அவர்களுடைய விசுவாசத்தின்மூலம் இரட்சிப்பைத் தந்து காக்கிறார்.

தமது ஆத்துமாவைப் பிசாசின் பிடியிலிருந்து விடுவித்து தமது குமாரனுடைய வீட்டிலேகொண்டு போய்ச் சேர்க்கிறார். அவரின் இரத்தத்தினால் நம்முடைய பாவங்களை மன்னித்து, அவரின் கிருபையினால் நீதிமான்களாக்குகிறார். நமது இருதயத்தில் விசுவாசத்தை ஏற்படுத்திக் கிருபையினால் மேலான நன்மைகளைக் கொடுத்து, பரிசுத்த ஆவியால் நம்மை நிரப்புகிறார். நமக்காக சத்துருக்களை வென்று நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை நீக்குகிறார்.

தேவன் எவ்வளவு பெரிய காரியங்களை நமக்குச் செய்திருக்கிறார்? அற்புதமானவைகளை நடப்பித்திருக்கிறார். யாருக்காக இவைகளைச் செய்தார்? பாவிகளான நமக்காகத்தான். ஏன்? தமது நாம மகிமைக்காகவே.

பிரியமானவர்களே, தேவன் இம்மட்டும் செய்த காரியங்கள், வரும் நாள்களுக்கு நம்மைத் தைரியப்படுத்த வேண்டும். அவருடைய வாக்குத்தத்தங்கள் இன்னும் நிறைவேறும். தாம் சொன்னபடியெல்லாம் செய்தார்.

தேவன் இம்மட்டும் செய்தது
இனி செய்வதற்கும் ஆதாரம்
விசுவாசக் குறைவின்றியே நாம்
அவரில் தைரியமாயிருப்போம்.

தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு

நவம்பர் 18

“தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு” உன். 8:5

ஒவ்வொரு விசுவாசியும் இயேசு நாதரையே நேசிக்க வேண்டும். உலகம் விசுவாசிக்கும் பாழ்நிலம். பரலோகமோ அவனுக்குத் தந்தையார் இல்லம். அவன் வாழப்போகும் வாசஸ்தலம். கிறிஸ்துவையே துணையாகப் பற்றிக் கொண்டு இந்த உலகில் அவன் பயணம் செய்கிறான். இந்த வசனம் தன் நேசர்மேல் சாய்ந்து கொண்டு இருக்கும் மணவாட்டியைப்போல விசுவாசியைக் குறிப்பிடுகிறது. இது மணவாட்டிக்கு இருக்கும் பலவீனத்தையும், நேசருக்கு இருக்கும் பலத்தையும், அவர் மேல் அவளுக்கு இருக்கும் நம்பிக்கையையும் காட்டுகிறது. அவர் மவாட்டிக்கு துணையாகவும், பெலனாகவும் இருக்கிறார். திருச்சபை கிறிஸ்துவின் மணவாட்டி. சொரிந்து ஆறுதலளிக்கிறார். திருச்சபை தம்மேல் சார்ந்திருப்பதையே அவர் விரும்புகிறார்.

பிரியமான விசுவாசியே, உன் நேசரோடு நெருங்கியிரு. இக்கொடிய வனாந்தரமான உலகில் அவரை விட்டுப் பிரியாதே. எப்பொழுதும் அவர்மேல் சார்ந்திரு. உன் பெலவீனத்தை உணர்ந்துகொள். அவருடைய வலிமையான கரம் உனக்கு உதவ ஆயத்தமாயிருக்கிறது. உன்னைத் தூக்கி எடுத்து நடத்துவார். அவர்மேல் நீ எவ்வளவு அதிகமாக சார்ந்திருக்கிறாயோ, அவ்வளவு அதிகமாக அவர் உன்மேல் அன்பு செலுத்துகிறார். அவரை நேசிக்கும் அளவுக்கு அவருடன் ஐக்கியமாவாய். அவரே உன்னை நடத்தட்டும். அவரையே நம்பு. வல்லமையுள்ள அவரைப் பற்றிக்கொள். என்றும் அவரோடேயே நடந்து அவரையே போற்று. நீ அவரோடிருக்கும் மட்டும் எனக்குப் பமில்லை. அவருடைய சமுகத்தில் உன் இருதயம் கொழுந்து விட்டெரியும் அனுபவத்தைப் பெறுவாய். உன் நேசரை விசுவாசித்து, அவரை அறிந்து, எப்பாழுதும் அவர் பேரில் சார்ந்துகொள்.

எச்சோதனையிலும் நீ
உன் நேசர்மேல் சார்ந்திரு
அவரே உன் மீட்பர், இரட்சகர்
அவரே உன்னைக் காப்பார்.

என்னைக் கழுவியருளும் அப்போது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்

நவம்பர் 27

“என்னைக் கழுவியருளும் அப்போது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்” சங். 51:7

தாவீது பெரும் பாவத்தைச் செய்து பாதகமானதை நடப்பித்தவன். தன் பாவம் கொடுரமானது என்று அவனே நன்கு அறிவான். அதை அறிக்கையும் இட்டான். ஆனாலும், தேவனுடைய மன்னிக்கும் தன்மை மிகவும் பெரிதாகையால், தன் பாவக்கறை முற்றிலும் நீங்கிவிடுமென்று நம்பினான். கர்த்தர் தன்னைத் தூய்மையாக்கினால், முழுத்தூய்மை  அடைவான் என்றும், பாவத்தின் கறை முற்றிலும் நீங்கிப்போகும் என்றும், தூதனைப்போல் தூய்மை அடைவான் என்றும் அவன் நம்பியிருந்தான். அதேபோல், அவருடைய மன்னிப்புக்கும் ஆளானான். அந்த நொடியிலிருந்தே அவன் தேவ கிருபையை அனுபவித்தான்.

அன்பானவரே, உமது பாவமும் கொடியதாக, கணக்கிலடங்காப் பெரியதாயிருந்தாலும், கிறிஸ்துவின் இரத்தம் அதை அறவே நீங்கக் கழுவிவிடும். உன் தேவன் உன்னைக் கழுவினால் உன்னில் எந்தப் பாவக்கறையும் தங்காது. உனக்கு முன்பு இப்பூவுலகில் பாவிகளாயிருந்து, இப்பொழுது பரலோக வாசிகளாயிருப்பவர்களைக் குறித்து, வேத வசனம், இப்பொழுது அவர்கள் குற்றமற்றவர்களாக தேவ ஆசனம்முன் நிற்கிறார்கள் என்று கூறுகிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. கிருபை நிறைந்த தமது சமுகத்தில் மிகுந்த சந்தோஷத்தோடே குற்றமற்றவர்களாக உம்மை நிறுத்தக்கூடியவர் கிறிஸ்து என்றும் கூறுகிறது. இரட்சகருடைய இரத்தத்தின் பெருமையைக் கவனியும். அதனால் வரும் நன்மைகளை நோக்குங்கள். அது சகல பாவங்களையும் கழுவி நீக்கிவிடும். விலைமதிப்பற்ற அந்த இரத்தம், மனிதருடைய பாவங்களுக்காக பிராயச்சித்தமாக சிந்தப்பட்ட தேவ இரத்தம். அது உம்மை உம் பாவங்களறக் கழுவ வேண்டுமெனக் கேள்.

பாவக் கறையைப் போக்கும்
குருதி ஊற்றுப் பாயுது கல்வாரியில்
அதென்னைத் தூய்மையாக்கும்
கறை நீங்கித் தூய்மையாவேன் நானும்.

கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்

நவம்பர் 24

“கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” ரோமர் 5:6

பரிசுத்தமானவர்களுக்காக அல்ல, துன்மார்க்கருக்காகவும், கெட்டுப் போனவர்ர்களுக்காகவும், பலவீனருக்காகவும், அபாத்திரருக்காகவும் கிறிஸ்து மரித்தார். தேவ சாயலை இழந்தவர்கள், தேவன் அளிக்கும் ஜீவனைக் காணாதவர்கள், அவருக்கு அந்நியர்களாகிச் சத்துருக்களானவர்களுக்காகவும் அவர் மரித்தார். இவ்வாறானவர்களுக்காக மரிப்பதுமான் மிகப் பெரிய தயவு. நல்லவர்களுக்காகவும், பக்திமான்களுக்காகவும் மரித்திருப்பாரானால், இப்பாவிகளாகிய நமக்காக மரிக்கவில்லையென்று நாம் சொல்லி விடலாம். ஆனால் இயேசுவோ அக்கிரமக்காரருக்காக மரித்தார். நாம் இப்படிப்பட்ட அக்கிரமக்காரரே. நாம் அவரை விசுவாசிப்போமானால், நமக்காகவேமரித்தார் என்று அறிவோம். நமக்குப் பதிலாக, நமக்கு பிணியாளியாக அவர் மரித்தார். நான் மரணத்தை அனுபவியாதிருக்க அவர் மரித்தார். நாம் அவருக்குள் நீதியாகும்படிக்குப் பாவமில்லாத அவர் பாவிகளான நமக்காக மரித்தார்.

அக்கிரமக்காரர்களும், பாவிகளுமான நாம் பிழைத்திருப்பதற்கு இயேசு கிறிஸ்து மரித்தார் என்பதை நினைத்து ஆறுதல் அடைவோமாக. நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவரே, நமது சரீரத்தில் நம் பாவங்களைச் சுமந்தார். இதற்காக அவருக்கு நன்றி சொல்லுவோம். இனி நாம் மரிப்பதில்லை. நமது பாவங்களுக்காகப் பிரதிபலன் செய்தாயிற்று. நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்தாயிற்று. அவர் நமக்கு நித்திய ஜீவனைப் பெற்றுத் தந்தார். என்னிடத்தில் விசுhசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று அவர் கூறியிருக்கிறார். மாட்சிமை நிறைந்த மீட்பரே உமது அளவற்ற அன்புக்காக எவ்வாறு உம்மைத் துதிப்போம்.

சிலுவையில் என்க்காய்
ஜீவனைவிட்ட கிறிஸ்துவே
உம் அன்பிற்காகவென்றும்
உம்மைத் துதி செய்வோம்.

தமது கிருபையுள்ள வசனம்

நவம்பர் 20

“தமது கிருபையுள்ள வசனம்” அப். 14:3

அருமையான நமது வேதாகமத்திற்கு இது மற்றொரு பெயர்தான் தேவனுடைய கிருபையான வசனம், கிருபையற்ற பாவ மனிதருக்குக் கிருபையுள்ள வார்த்தைகள். இது தேவ கிருபையினால் பிறந்தது. தேவனுடைய உள்ளத்தில் பலகாலம் மறைந்து கிடந்தது. இது பரலோகத்திலிருந்துப் பூமிக்கு இறங்கி வந்தது. கிருபைதான் இதுவரை வசனத்தை வைத்திருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற யாவருக்கும் மீட்பை இலவசமாகக் கொடுக்கிறது. கர்த்தருடைய ஆசனத்தருகில் வருகிறவர்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுகிறது. நம்முடைய குறைவுகளுக்கெல்லாம் தேவையான நிறைவை மீட்பரின்மூலமாக நமக்குத் தருவதற்கு ஆயத்தமாக வைத்திருக்கிறது. கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவர்களுக்குப் பரம வீடு நியாயமாகக் கிடைக்கச் செய்கிறது.

நமக்கு மீட்பு கிருபையால்தான் வருகிறது. அதன்மூலமாகவே கர்த்தர் நமது செயல்களை நம் இதயத்தில் நிறைவேற்றுகிறார். கிருபைக்கும், நியாயப்பிரமாணத்திற்கும் வெகுவாக வேறுபாடுகள் உண்டு. கிருபை, தேவன் நமக்குக் காட்டிய இரக்கத்தை எடுத்துக்கூறி, எண்ணிலா மேன்மையான நன்மைகளை நமக்குக் காட்டி, நித்திய மீட்பை நமக்கு அறிவிக்கிறது.

அன்பானவர்களே, விசுவாசத்தை நியாயப்பிரமாணமாக மாற்றிக்கொள்ள வேண்டாம். சுவிசேஷம் எதையும் கட்டளையிடுகிறதில்லை. சுவிசேஷம் மகிழ்ச்சியின் கீதம். அது உங்களுக்குப் பாவ மன்னிப்பையும், சமாதானத்தையும், விடுதலையையும் பிரசங்கிக்கிறது. அது தேவ இரக்கத்தையும் கிருபையையும்பற்றிய சுபசெய்தி. மனதுக்கு மங்களச் செய்தி. கிரயமுமின்றிக் காசுமின்றிக் கிடைக்கும் இலவச நன்மைகளைப்பற்றிக் கூறும் தேவ செய்தி.

கர்த்தாவே, உமது நேசம்
என்றும் குறையாப் பொக்கிஷம்
எங்கள் பாவங்கள் போலவே
அளவிலடங்காததே.

மேன்மைக்கு முன்னானது தாழ்மை

நவம்பர் 30

“மேன்மைக்கு முன்னானது தாழ்மை” நீதி. 18:12

தேவன் நம்மை உயர்த்துமுன் நமது நிலை தாழ்ந்துதான் இருக்க வேண்டும். நல்ல ஆடைகளை அவர் நமக்கு உடுத்துவிக்குமுன்னர், அவர் நமது கந்தை ஆடைகளை அகற்றிப் போடுவார். தமது கிருபைகளால் நம்மை நிரப்ப, நம்மை வெறுமையானவர்களாக்குவார். அவருடைய பிரபுக்களுக்குச் சமமாக நம்மை உயர்த்துவதற்கும் நாம் தாழ்மையை அனுபவிக்க வேண்டும் என்கிறார். அவர் பெலவீனருக்குப் பெலன் கொடுத்து ஏழைகளை ஆதரிக்கிறார். குற்றவாளியையே அவர் நீதிமானாக்க விரும்புகிறார். தகுதியற்றவர்களைத் தகுதியாக்கி தம்முடைய மகிமையால் முடிசூட்டுவார். நாம் தாழ்வில் இருந்தால் தான் உயர்த்தப்படுவோம். யாவற்றையும் நமது உடைமையாக்க வேண்டும். தேவன், நாம் வெறுமையாயிருந்தால்தான் நம்மை நன்மைகளால் நிரப்புவார்.

தாழ்மையுள்ளவர்களுக்குத் தேவன் கிருபை அளிக்கிறார். யோசேப்பு பார்வோனுக்கடுத்த இடத்திற்கு வரவேண்டுமானால், அவன் சிறையில் வாட வேண்டும். தாவீது இஸ்ரவேலின் மன்னனாவதற்கு முன்னால், பறவையைப்போல வேட்டையாடப்பட வேண்டும். பவுல் சிறந்த அப்போஸ்தலனாவதற்கு முன்னால் தன்னைப் பாவியென்று ஒப்புக்கொள்ள வேண்டும். இதுதான் தேவனுடைய முறை. இப்பொழுது உலகில் தாழ்வாக எண்ணப்படும் பரிசுத்தவான்களே பிதாவின் ஆட்சியில் சூரியனைப்பேலா ஒளி வீசுவார்கள். பிரியமானவனே, நீ தாழ்ந்திருக்கிறாயென்று அஞ்சாதே. எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்திருக்கிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு உயர்த்தப்படுவாய். எவ்வளவாய் துக்கிக்கிறாயோ அவ்வளவாக மகிழ்ச்சியடையலாம். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

நம்முடைய தாழ்வில்
நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை இன்றுமென்றும்
நமக்குள்ளதே.

நீர் உண்மையாய் நடப்பித்தீர்

நவம்பர் 03

“நீர் உண்மையாய் நடப்பித்தீர்” நெகே. 9:33

தேவன் எதையும் உண்மையாகவே நடப்பிப்பார் என்பது யாருமே ஒப்புக்கொள்ளுவதுதான். ஆனால் துன்ப நேரத்தில் இது உண்மை என்று உணர்ந்து அதை நம்பி நடப்பது நம்மால் முடியாமற் போகிறது. கர்த்தர் தாம் ஏற்படுத்திய முறைபடியே என்றுமே செயல்படுவார். அவருடைய உண்மையும் ஒழுங்கும் அவருடைய ஞானத்திலிருந்தும், அன்பிலிருந்தும் பிறக்கின்றன. அவர் தாம் செய்யப்போகிறதெல்லாவற்றையும் ஏற்கெனவே தீர்மானித்துள்ளார். தமது தீர்மானங்கள் யாவும் நல்லவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

நாம் பணப்பிரியம், தற்பிரியர், திருப்தியற்றவர்கள், ஏழைகள். நாம் தேவனுடைய செயல்களை மனதிருப்தியுடன் ஏற்றுக்கொள்வதில்லை. காரணமின்றி எல்லாக் காரியங்களிலும் முறுமுறுக்கிறோம். நாம் தேவனைப் புரிந்துக்கொள்வதில்லை.

ஆனாலும், சிலவேளைகளில் நமக்கு வரும் இழப்புகள், துன்பங்கள், சோதனைகள் கண்ணீர்போன்று துயர நேரங்களில்தான் தேவரீர் எல்லாவற்றையும் உண்மையாய் நடப்பிக்கிறீர் என்று அறிக்கையிடுகிறோம். எகிப்தில் யாக்கோபு, யோசேப்பை அணைத்துக்கொண்டபோது இவ்வாறு உணர்ந்தான். யோபு இரட்டத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றதுபோதுதான் இதை உணர்ந்தான்.

தானியேல் சிங்கங்களிடமிருந்து மீட்கப்பட்டபோது விசுவாசித்ததினால் இதை உணர்ந்தான். சோதனைக்குள் நாம் இருக்கும்போது இவ்வாறு நாமும் அறிக்கை செய்வது மிகவும் அவசியம். ஆண்டவர் நம்மை சோதிக்கும்போது நீர் உண்மையாய் நடப்பித்தீர் என்று உணர்ந்து சொல்வோமாக. இத்தகைய விசுவாசம் நமக்குள் வளர வேண்டும்.

கர்த்தர் செய்வதெல்லாம் நலமே
முடிவை நாமறியோம் அவர் அறிவார்
அவர் செய்வதெல்லாம் நமக்கு
முடிவில் பாக்கியமாகவே நிகழும்.

Popular Posts

My Favorites

நான் என்னை அருவருக்கிறேன்

அக்டோபர் 24 "நான் என்னை அருவருக்கிறேன்" யோபு 42:6 தேவன் எவ்வளவாக தம்மை தெரியப்படுத்துகிறாரோ, அவருடைய ஆவியானவர் எவ்வளாக நம்மில் கிரியை செய்கிறாரோ, அவ்வளவாக நாம் நம்மைத் தாழ்த்த வேண்டும். தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிறவர்கள், தேவனோடு...