வியப்பிற்குரிய நற்செய்தி
மகா பெரியவரும், சர்வ வல்லமையும், நிறைந்த ஞானமும் உடையவரான இறைவனின் படைப்புகளில் மனிதனே அவரது மகுடம். அன்பின் இறைவனாகிய அவர் மனுமக்களையே அதிகமாய் அன்புகூருகிறார். தம்முடைய அற்புதமான படைப்புகள் யாவற்றின் நடுவிலும் மனுக்குலத்தையே அவர் சிறப்பான முறையில் கனம்பண்ணுகிறார். அவர் நித்தியம் முழுவதற்கும் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் ஆகிய யாவருடனும் நட்பும், ஐக்கியமும் கொள்ளவே விரும்புகிறார்.
இறைவன் நீதியுள்ள இறைவனாக இருக்கிறார். பாவ மனிதர்களாகிய நம்மை அவரால் ஏற்றுக்கொள்ள இயலாது. அவரால் பாவத்தைக் கண்டும் காணாதவர்போல இருக்கவும் முடியாது. அவரால் அதைத் தண்டிக்காமல் விட்டுவிடவும் முடியாது. பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் சரியானபடி தண்டிக்கப்படத்தான் வேண்டும். இறைவனுடன் பாவிகள் என்றென்றைக்குமாக வாழ வேண்டுமானால், அவர்களுடைய பாவம் எவ்வகையிலாயினும் அகற்றப்பட வேண்டும். பாவத்திற்கான தண்டனையும் செலுத்தியே தீர வேண்டும். துப்புரவானவர்களாகவும் தூய்மையாக்கப்பட்டவர்களாக உள்ள மனிதர்களே இறைவனுடன் வாழ இயலும்.
ஒரு மனிதனாகிலும் நித்திய அழிவுக்குள்ளாவதை இறைவன் விரும்புவதில்லை. அனைவரும் நித்திய காலமாய் சொர்க்கத்தின் எல்லா மேன்மைகளையும் பேரின்பத்துடன் அனுபவிக்க இறைவன் விரும்புகிறார். ஆனால் தன் பாவங்கள் மன்னிக்கப்படாத எந்த பாவியும் கடவுள் வாழும் நாட்டிற்கு ஒருபோதும் நுழைய முடியாது.
இஃது உண்மையானால், ஒரேநேரத்தில் அவர் நீதி தவறாத இறைவனாகவும் அன்பான இரட்சகராகவும் எவ்வாறு இருக்கமுடியும்? நீதியும் நேர்மையுமுள்ள இறைவன் பாவிகளை மன்னிக்க முடியுமா? இதற்காக தேவன் தம்முடைய அநந்த ஞானத்தின்படி ஒரு மீட்பின் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
மீட்பின் திட்டத்திற்குத் தேவையான ஏழு படிகள்
பாவத்தில் விழுந்துபோன மனித இனத்தைக் காப்பாற்ற இறைவன் எடுத்த தீர்மானம் விவரிக்க இயலாத தயவுள்ள இரக்கமாகும். ஆனால், அவர் எடுக்கும் இந்தத் தீர்மானம் அவருடைய அன்பையும் பரிசுத்தத்தையும் நீதியையும் முழுமையாகத் திருப்தி செய்யும் திட்டமாக அமைவது அவசியம். இத்திட்டத்தின்படி இறைவனுடைய மீட்பு:
* அது எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும்;
* அது எல்லோருக்கும் போதுமானதாக அமையவேண்டும்.
* நிபந்தனையின்றி அதற்கு எல்லோரும் தகுதியுள்ளவர்களாக அமைய வேண்டும்.
* அது எல்லோரும் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
* அது எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும்.
* மனிதனின் தற்பெருமைக்கு எவ்வித வழியும் அதில் இருந்துவிடக்கூடாது.
* இறைவன் அவன்மீது கட்டாயமாகத் திணிக்கும் திட்டமாக அது இருக்கக் கூடாது.
இத்தகைய தெய்வீகச் சிக்கலுக்கான நிரந்தர தீர்வு என்ன? ஆம், மனித இனத்தின் பாவத்திற்காக பதிலாள் ஒருவர் மரிப்பதே இச்சிக்கலின் நிரந்தரத் தீர்வாகும்.
அத்தகைய பதிலாள் ஒருவர் நிறைவேற்ற வேண்டிய சில நிபந்தனைகள் உள்ளன.
* அவ்வொருவர் ஒரு மனிதனாக இருக்க வேண்டும் ..
* அவர் பாவமற்றவராக இருக்க வேண்டும். இல்லையாயின் அவர் தன்னுடைய பாவங்களுக்காகவும் மரிக்க வேண்டி வருமே.
* அவர் இறைவனாக இருக்க வேண்டும். ஏனெனில் குறைவற்றவரும், முடிவற்றவருமாகிய ஒருவரே எண்ணற்ற மக்களின் எண்ணி முடியாத பாவங்களை ஈடுசெய்ய இயலும்.
* இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பது தெய்வீகச் சட்டமாக இருப்பதினால் அவ்வொருவர் தன்னுடைய இரத்தத்தைச் சிந்த வேண்டும்.
* இதை அவர் விருப்பத்துடன் செய்ய வேண்டும். இல்லையேல் மரிக்க விருப்பமில்லாத ஒருவரை தேவன் கட்டாயப்படுத்தி துன்மார்க்கரான பாவிகளுக்காக பலியாக்கினார் என்று குற்றஞ்சாட்ட ஏதுவாகும்.
மனிதனாக வந்த இறைவனாகிய இயேசு கிறிஸ்துவே இவையனைத்திற்கும் தகுதியுள்ளவர்:
* இந்தப் பூமியிலேயே மேற்கூறிய நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவுசெய்யக்கூடிய ஒரே ஒரு நபர் இறைவனாகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.
* பெத்லகேமில் அவர் மனிதனாக அவதரித்தார். கன்னியாக இருந்த மரியாளிடம் பிறந்ததினால் அவர் பாவமற்ற பூரண மனிதர்.
* அவர் இறைவன். படைப்பாளர், எல்லாவற்றையும் அறிந்தவர், எங்கும் பிரசன்னமாயிருக்கிறவர், தொடக்கமும் முடிவும் இல்லாதவர். அவர் வல்லவர்.
* அவர் பாவம் இல்லாதவர்.
* பாவிகளுக்குப் பதிலாக அவர் தம்முடைய இரத்தத்தை சிலுவையில் சிந்தினார்.
* பாவிகள் பாவம் நீங்கி இரட்சிக்கப்படும்படி அவர்தாமே மனமுவந்து முன்வந்தார்.
இதைக் குறித்து வேத புத்தகம் இவ்வாறு கூறுகிறது:
“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.”
மனிதனுடைய பாவத்திற்கான பரிகாரம் முழுவதையும் இறைவனாகிய இயேசு கிறிஸ்து நிறைவு செய்துவிட்டபடியால், இறைவன் அவருடைய இரக்கத்தின் நற்செய்தியை, அவருடைய அற்புதமான இத்திட்டத்தின் மூலம் இப்பொழுது மீட்பின் வழியை உலகெங்கும் பறைசாற்றி வருகிறார். பாவத்திற்காக மனந்திரும்பி,உண்மையான நம்பிக்கையுடன் இறைவனாகிய இயேசு கிறிஸ்து பாவத்திற்காக மரித்தார் என்றும் அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்றும், இறைவனாகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்கிற அனைவருக்கும் அவர் மீட்பை இலவசமாக அருளுகிறார்.
வேதம் சொல்லுகிறது:
ஆ! இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள். அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!