முகப்பு தினதியானம் என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.

என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.

மே 22

“என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.” சங் 119:172

எல்லா கிறிஸ்தவர்களும் இப்படிச் செய்வார்களானால் உலகில் அறியாமை குறையும். தேவனுடைய வசனம் ஒன்றுதான் பெருமையாய்ப் பேச தகுதியுடையது. நாம் அதை வாசித்து¸ விசுவாசித்து¸ நேசித்து¸ அதன்படி செய்து அதை அனுபவித்து¸ மற்றவர்களுக்கும் சொல்லும்படித்தான் அது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது பாவிகளைச் சீர்ப்படுத்தும். ஆகவே அதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அது விசுவாசிகளை ஊன்றக் கட்டும். ஆகவே அதை அவர்களுக்குப் போதிக்க வேண்டும். அது பின் வாங்கிப் போனவர்களை செவ்வையான பாதைக்குத் திரும்பப்பண்ணும். ஆகவே அதை அவர்களுக்கு விளக்க வேண்டும். நம்முடைய ஆத்துமாக்களுக்கு அது ஆறுதலைக் கொடுக்கும். ஆகவே நாம் அதைத் தியானித்து மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும்.

அது தேவனை மகிமைப்படுத்தி இரட்சகரை உயர்த்தும். ஆகையால் நாம் தேவனை¸ நேசிக்கிறதினால் ஏவப்பட்டு அதை விளக்கிச் சொல்லவேண்டும். தகுந்த நேரத்தில் அன்போடும்¸ அறிவோடும்¸ நன்மை உண்டாக அதைச் சொல்ல வேண்டும். வசனம் விதைப்போன்றது. ஆத்திரக்காரனை பொறுமையுள்ளவனாக்கி¸ துக்கமுள்ளவனை ஆற்றி¸ அலைந்து திரிகிறவனை நல்வழிப்படுத்தி¸ மனம் வருந்துகிறவனுக்குச் சமாதானம் அளிக்கும். பசியுள்ளவனுக்கு அது போஜனம்¸ அறிவீனனுக்கு வெளிச்சம். பலவீனனுக்குக் கைத்தடி¸ யுத்த வீரனுக்கு பட்டயம்¸ களைத்துப் போனவனுக்கு மென்மையான தலையணை. ஆகவே கர்த்தருடைய ஒத்தாசையால் அவருடைய வசனத்தை விவரித்துச் சொல்ல தீர்மானிப்போமாக.

சத்தியத்தைப் போதியும்
உம்மைத் துதித்துப் போற்றுவேன்
சுவிசேஷ நற்செய்தியை
எங்கும் பிரஸ்தாபிப்பேன்.