முகப்பு தினதியானம் பலனைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்

பலனைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்

யூன் 30

“பலனைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்.” 1.தீமோ. 6:2

சுவிசேஷம் தேவன் தரும் மகத்தான ஈவுகளில் ஒன்று. அதைப் பெற்றுக்கொள்ளுகிற ஒவ்வொருவருக்கும் அது பலன் தருகிறது. ஒருவனின் அறிவுக்குப் பலன் தந்து அதை வளர்க்கிறது. அவன் இருதயத்திற்குப் பலன் தந்து அதைச் சுத்தப்படுத்துகிறது. அவன் மனட்சாட்சிக்குப் பலன் தந்து அதைச் சமாதானப்படுத்துகிறது. அவன் குணத்திற்குப் பலன் தந்து அதைச் செவ்வைப்படுத்துகிறது. அவன் நடக்கைக்கு பலன் தந்து அவனை தீமைக்கு விலக்கி நன்மையை அளிக்கிறது. அவன் குடும்பத்திற்கும் பலன் கிடைக்கிறது. இது எஜமானைப் பட்சமுள்ளவனாகவும், எஜமாட்டியைப் புத்திசாலியாகவும், வேலைக்காரரைக் கவனமும் சுறுசுறுப்பும் உள்ளவர்களாகவும், பெற்றோரை நல்லவர்களாகவும், பிள்ளைகளைக் கீழ்ப்படிகிறவர்களாகவும் இருக்கப்பண்ணுகிறது.

உலக அரசுகளுக்கும் அதனால் பலன் கிடைக்கிறது. நல்ல சட்டங்களை ஏற்படுத்தி ஆளுகைகளைத் திடப்படுத்துகிறது. குடி மக்களை நல்லவர்களாக மாற்றுகிறது. இந்தப் பலனை நாமும் பெற்றிருக்கிறோமா? பெற்றுக்கொள்வதன் பொருள் என்ன? இது தெய்வீகமானதென்றும், அதன் உபதேசத்தை ஒத்துக்கொண்டு, அதன் நன்மைகளை ஏற்றுக்கொண்டு, அதன் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, அதன் நியமங்களை ஆதரித்து, அதன் சந்தோஷங்களைப் பரீட்சை செய்து, எந்தப் பயனுள்ள காரியங்களுக்கும் அதை உபயோகிப்பதே அதன் பொருள். சிலர் வசனத்தைக் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு செவிகொடுக்க மறுக்கிறார்கள். சிலர் செவி கொடுத்தும் அதை ருசிக்க மறுக்கிறார்கள். ஆனால் சிலரோ அதை ஏற்றுக்கொண்டு ருசித்து அதன் பலனை அடைகிறார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் குற்றமற்றவர்களாய் மாறி, பரிசுத்தராகி, பாக்கியவான்களாய் மாறுகிறார்கள். சகலமும் அவர்களுடைய நன்மைக்கு ஏதுவாகிறது. நீ சுவிசேஷத்தினால் இந்தப் பலனைப் பெற்றவனா?

இந்த நன்மை எனக்கீயும்
சுவிசேஷத்தின் மகிமையை
கண்டு களிக்கச் செய்யும்
என் உள்ளம் உம்மைப் போற்றும்.