நீர் எங்களுடனே தங்கியிரும்

அக்டோபர் 06

“நீர் எங்களுடனே தங்கியிரும்” லூக்கா 24:29

இரண்டு சீஷர்கள் எம்மாவு என்னும் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வழியில் இயேசுவானவர் அவர்களோடு சேர்ந்து கொண்டார். ஆனால் அவரை இன்னாரென்று அறியவில்லை. வழியில் அவர் அவர்களுக்கு தேவ வசனத்தை விளக்கிக் கூறினார். பின்பு வேறு வழியிற் செல்பவர்போல் காணப்பட்ட அவரை அவர்கள் நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காம் ஆயிற்று, பொழுதும் போயிற்று, என்று அழைத்தார்கள். ஆண்டவருடைய சமுகத்தை அனுபவித்த எவரும் இப்படிச் சொல்லக்கூடும். உண்மையான தேவ பிள்ளைகள் அவர் தங்களைவிட்டுப் போவதை விரும்பமாட்டார்கள். தாங்கள் தேவனோடு இருக்கவும், அவர் அவர்களோடு இருப்பதையும் விரும்புவார்கள். ஆண்டவர் எப்பொழுதும் நம்மோடு இருக்கிறார். நாம்தான் அதை உணருவதில்லை.

இந்த நாளில் அவருடைய சமுகம் உங்களோடு இல்லை என்றாலும் உடனே அதைத் தேடுங்கள். எங்களோடு தங்கும் என்று கெஞ்சுங்கள். உங்கள் உள்ளத்தில் அனல்மூட்டி எழும்பும்படி அவரைக் கெஞ்சிக்கேளுங்கள். உங்களைவிட்டு அவர் கடந்துபோக விடாதேயுங்கள். அவரும் எப்போதும் நம்மோடேயே இருக்க விரும்புகிறார். நீங்கள் அவரை விரும்புவதிலும் அதிகமாக அவர் விரும்புகிறார். நீங்கள் கர்த்தரோடிருந்தால் அவர் உங்களோடிருப்பார். அவரைத் தேடி கண்டுபிடித்து, அவரை விட்டுவிடாது பற்றிக்கொள்ளுங்கள்.

பிரியமானவர்களே, நீங்கள் கர்த்தரின் சமுகத்தை அனுபவித்ததுண்டா? அதைக் கண்டு உணருகிற சந்தோஷத்தை உணர்ந்திருக்கிறீர்களா? அவர் சமுகமே மோட்சம். அவருடைய பிரசன்னம் இன்பம். நமது துக்க துன்பங்களை நீக்கும் வழி அவரே. அவர் நம்மோடிருப்பின் மகிழ்வோம். களிகூருவோம். அவரை நாம் கண்டு பிடித்துப் பற்றிக்கொண்டால் மரணபரியந்தம். ஏன், மரணத்திற்குப் பின்னும் சந்தோஷம் பெறுவோம்.

இயேசுவே என்னிடம் வாரும்,
வந்தென்னை ஆசீர்வதியும்
நீங்காதிரும் மாநேச கர்த்தரே
வெளிச்சம் மங்கி இருளாயிற்றே.

உத்தமமானவர்களை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக

அக்டோபர் 05

“உத்தமமானவர்களை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக” பிலி. 1:9

எடுத்த எடுப்பில் எதையும் நம்பாமல், அதை வேதவசனத்துடன் ஒப்பிட்டு பரீட்சித்துப் பார்க்கவேண்டும். நலமானது எது? பயனுடையது எது? அவசியமானது எது? முக்கியமானது எது? சேதம் விளைவிப்பது எது என்று சோதித்துப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு வேறுபடுகிற காரியங்களைப் பகுத்தறிந்து உத்தமமானவைகளை ஒப்புக்கொள்ளவேண்டும். நல்ல கடமைகளை விடாப்பிடியாய்ப் பற்றிக்கொள்ள வேண்டும். நல்ல கடமைகளை நிறைவேற்றுவதுடன், உயர்வான காரியங்களைத் தேடிப் பிடிக்க வேண்டும். சிறந்த, ஒழுங்கான காரியங்களைத் தேடிப்பிடிக்கவேண்டும். ஒழுங்கான முறையில் வாழவேண்டும். வேதவாக்கியங்களை ஆராயவேண்டும். நற்காரியங்களுக்காக ஜெபிக்கவேண்டும். தெளிவான பார்வையுடையவனெ;றும் சத்திகரிக்கப்பட்ட இதயமுள்ளவனெ;றும் உலகம் உன்னில் காணவேண்டும்.

நியாயப்பிரமானம், சுவிசேஷம், தேவகிருபை, நல்உணர்வு, இதயமாறுதல் போன்றவைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். வாய்வார்த்தைக்கும் உண்மையான உத்தமத்திற்கும், வேத சத்தியத்திற்கும் தவறுதலான உபதேசத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்னெ;னவென்றறிந்து, உத்தமமானவைகளை ஒப்புக்கொள்ளவேண்டும். நல்லவைகளைக் கண்டுபிடித்து அவற்றை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் அறிந்து nனுபவிப்பதைப் பிறருக்கு எடுத்துக் கூறுங்கள். தேவ ஞானத்திற்காகத் தேவ ஆவியானவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள். நலமான எதையும் மறக்காமல் செய்பவர் அவர். விசுவாசத்தோடு கேட்டாய் பெற்றுக் கொள்வாய்.

உமக்கூழியம் செய்வதே
என் மீதான கடமை
உமக்குக் கீழ்ப்படிந்திருப்பதே
என் பாக்கியம். சிலாக்கியம்.

நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்

அக்டோபர் 04

“நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்” மத். 5:13

உலகத்தின் உப்பாயிருக்கவேண்டிய நம்மைப் பாவமானது சாரமற்றவர்களாக மாற்றிவிடுகிறது. தேவ கிருபையால்தான் அது சுத்திகரிக்கப்பட்டுச் சாரம் உள்ளதாக்கப்படுகிறது. இந்த நன்மைகள் கிறிஸ்துவால் உண்டாகிய அவருடைய ஜனங்களுக்குப் பயனுடையதாகப் பரவுகிறது. தம்முடைய பிள்ளைகளை இயேசு உப்பைப்போல் இருக்கு வேண்டுமென்கிறார். இவர்கள் மற்றவர்களைப் பாதுகாக்கத்தக்கவர்கள். கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குப் பயனுடைய சாட்சிகளானவர்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஓர் உப்புக்கல். இதனால் அவன் தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பயன் உள்ளவனாகிறான். கிறிஸ்தவனை வழிநடத்துபவை வேதவசனங்கள். அவனுடைய வாழ்க்கை மற்றவர்களுக்குப் போதனை தருவதாக இருக்க வேண்டும்.

பரிசுத்தவான்கள் இல்லாவிடில் இந்தப் பூமி எரியுண்டு அழிந்துபோயிருக்கும். தேவ பிள்ளைகள் இல்லாதிருக்கும் இடம் இருள் நிறைந்த இடம். பிரியமானவர்களே, நீங்கள் உப்பாக இருக்கிறீர்களா? உங்களைச் சூழ்ந்து இருப்போருக்கு உங்களால் நன்மைகள் உண்டா? உங்கள் பேச்சு, வாழ்க்கையும், தேவனுடைய சாரத்தைப் பெற்று எழுப்புதலோடும், கிருபையோடும் எல்லாரையும் சந்திக்கிறதா? நீங்கள் எல்லாருக்கும் பயன்படும் பாத்திரங்களாக இருக்கிறீர்களா? உங்களுடைய நடத்தையால், உலகத்தார் நலமானவைகளைத் தெரிந்து கொள்ளுகிறார்களா? இவ்வாறெல்லாம் இருந்து நீங்கள் உப்பாக வாழ்வீர்களானால், மற்றவர்களுக்கு நீங்கள் பயனுடையவர்களாயிருப்பீர்கள். நன்மைகளையும் செய்வீர்கள். நீங்கள் பாவத்துக்கு மரித்து நீதிக்கு உயிர்த்திருப்பீர்கள். நீங்கள் உப்பென்று உண்மையானால் அதன் குணங்கள் உங்களில் விளங்கும். கிருபை பெற்றவர்களாகிய நீங்கள் உப்பாயிருப்பீர்களானால் சாரமுடையவர்களாகிய நலமானதைச் செய்வீர்கள். சாரம் உள்ள உப்பாயிருங்கள். கிறிஸ்துவே உங்களிலுள்ள சாரம்.

இயேசு எனக்காய் மரித்தார்
என்னில் சாரம் ஊட்டினார்
சாரம் உள்ள உப்பைப்போல்
என்றும் வாழ்வேன், அவருக்காய்.

விசுவாசத்தில் பலவீனமுள்ளவன்

அக்டோபர் 03

“விசுவாசத்தில் பலவீனமுள்ளவன்” ரோமர் 14:1

இந்த வார்த்தைகள் சில நேரங்களில் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. தேவனுடைய ஜனங்கள் அவருடைய வார்த்தையைப் பற்றி அறிய வேண்டிய முறைப்படி சரியாக, ஆழமாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அதனால், அவர்களது விசுவாசம் பெலனற்றும் போகிறது. ஆண்டவர் அருளிய வாக்குகள், தேவத்துவத்தின் மகத்துவங்கள் போன்றவைகளை இவர்கள் நன்கு விளங்கிக் கொள்வதில்லை. இதனால் இவர்கள் பயம், சந்தேகம் ஆகியவற்றால் கலங்குகிறார்கள். தெளிவான, சரியான விசுவாசத்தைக் கொண்டிருப்பார்களானால், தேவ மகிமையைப் பற்றின நம்பிக்கையில் என்றும் மகிழ்ந்திருப்பார்கள்.

தேவன் உங்களை அங்கீகரிக்கவேண்டுமானால், லேசான விசுவாசம் போதாது. ஆழ்ந்த விசுவாசம் தேவை. தேவனுக்குள் மகிழ்ந்திருக்கவேண்டுமானால், தேவ வசன அறிவில் பலப்பட வேண்டும். அவரில் திடன் அடைய வேண்டும். அப்பொழுதுதான் விசுவாசத்தில் பெலப்படமுடியும். பெலன் கர்த்தரின் பேரில் வைக்கும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. உங்கள் செயல்களையெல்லாம் கர்த்தருக்காகவே செய்ய வேண்டும். நீங்கள் அவருக்கே சாட்சிகளாயிருக்கவேண்டும். சந்தேகங்கள், விசுவாசத்தின் பெலன் குறைந்து விடுகிறது. தேவனுக்கு ஊழியம் செய்யாதிருக்கும்பொழுது உங்கள் திடனை இழந்து விடுகிறீர்கள். ஜெபத்தில் உறுதியாகத் தரித்திராதபொழுது உங்களுக்கு அவர் தரும் பெலன் கிட்டுவதில்லை. தேவ கிருபையை நீங்கள் சார்ந்திராதபொழுது, அவருடைய கிருபை உங்களை வந்தடைவதில்லை. எனவே, சகோதரரே, நாம் தேவனால் அங்கீகரிக்கப்படுவது தேவ கிருபையே. நமது ஆத்துமாக்கள் கிறிஸ்துவையே நோக்கியிருக்கட்டும். அவரையே நாம் என்றும் சார்ந்திருப்போம்.

நீ பெலவீனனானால் இயேசுவைப்பிடி
உன் பெலவீனம் நீங்க அவரையே பிடி
உன் பெலவீனம் நீக்க வந்திடுவார்
அவரில் விசுவாசங்கொண்டிரு.

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்

அக்டோபர் 02

“முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்” ரோமர் 8:37

ஒவ்வொரு விசுவாசியும், தன் சுபாவத்தோடும், உலகத்தோடும், மாம்சத்தோடும் போராட வேண்டியிருக்கிறது. ஊழியம் செய்யத் துவங்கினால் அவனுக்கு மனமடிவுண்டாக்கும் காரியங்கள் அவனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. சாத்தான்தான் விசுவாசிக்கு முக்கிய சத்துரு. சாத்தான் சோதனைகளையும், நோய்களையும் மரணத்தையும் கொண்டுவரும்பொழுது தேவபிள்ளை இவைகளின்மீது ஜெயங்கொள்கிறான். இந்த வெற்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம்தான் கிடைக்கிறது. இயேசுவின் அன்பே இவர்களைத் தாங்கி வெற்றியைப் பெற்றுத் தருகிறது.

இவர்களின் ஆண்டவரும் இரட்சகரும், சிநேகிதருமான இயேசு ஞானத்தையும், வல்லமையையும் அளிக்கிறார். இவற்றினால் விசுவாசிகள் வெற்றியடைகிறார்கள். இவ்வெற்றியை அடைவது இயேசு நாதர்மீது கொண்ட விசுவாசத்தினாலேயே. பொறுமையும் ஆழ்ந்த நம்பிக்கையும் வெற்றியடையப் பெலன் தருகின்றன. இவர்களுக்குக் கிடைக்கும் வெற்றி, தோல்வியே காணாதது. இதுபோன்ற முழு வெற்றியை உலகில் எவரும் பெறமுடியாது. இயேசுவன்றி வேறு எவரும் வெற்றி தரவும் முடியாது. அவர் காட்டிய முன்மாதிரியை நாம் பின்பற்றுவோமானால், நாம் வெறும் வெற்றிபெறுகிறவர்களாய் மட்டுமல்ல, முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாவும் மாறுவோம். விசுவாசியே, இயேசுவின் ஞானத்தின்மீதும், வல்லமையின்மீதும், பாதுகாப்பின்மீதும் உன் நம்பிக்கையை வைத்திருக்க மறவாதே. அவரையே உனது முன் மாதிரியாகக் கொண்டிரு. அப்பொழுது வெற்றி உனக்கு நிச்சயம். வெற்றியடைபவன் மகுடம் பெறுவான். உன் வெற்றிக்கிரீடம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

எம் தலைவர் இயேசுவே,
துன்பம் அவருக்காகப்பட்டால்
இன்ப வெற்றியைத் தருவார்
என்றும் வெற்றி வீரராவோம்.

இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப் பண்ணினார்

அக்டோபர் 01

“இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப் பண்ணினார்” ரோமர் 5:11

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காகச் சிலுவையில் சகல பாடுகளையும் சகித்து, நமக்கு நீதியுண்டாகப் பாவமன்னிப்பையும், நித்திய பாக்கியத்தையும் சம்பாதித்தார். அவர் பலியானது நம்முடைய பாவங்களுக்காகவும், சர்வ லோகத்தின் பாவத்திற்காகவுமே. அவர் செய்த அனைத்தும் நற்செய்தியாகச் சுவிசேஷங்களில் வேத புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினால் நாம் அதை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பதினால் சமாதானம் பெறுகிறோம். மனுக்குலத்திற்குத் தேவையானதை எல்லாம் அவர் கல்வாரியில் செய்து முடித்தார். இதை ஏற்றுக்கொள்ளாத எவரும் வாழ்வில் சமாதானம் அடைய முடியாது.

ஒவ்வொரு நாளும் இந்த ஒப்புரவாக்குதலில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் நம்மால் அவரோடு மகிழ்ச்சியாக நடக்க முடியாது. முன்னே நாம் அதைப் பெறாமலும், நம்பாமலும் இருந்தோம். இப்பொழுதோ இயேசுவின் கல்வாரி இரத்தத்தினால் அதைப் பெற்று இருக்கிறோம். முன்னே நாம் அதன் தன்மையையும், அருமையையும் அறியாமலிருந்தோம். இப்பொழுது அவர் அவற்றை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய இரக்கமே நமக்குத் தைரியம் கொடுக்கிறது. இயேசுவின் மரணம் நமக்கு வாழ்வு. நமது சமாதானம் அவரே. அவருடைய நீதியின் மேலும், மகத்துவத்தின் மேலும் நாம் நமது கண்களை வைத்துக்கொண்டேயிருக்கவேண்டும். இதை மறந்தால் நாம் சாத்தானால் அடிமைகளாக்கப்படுவோம். நமது குற்றங்கள் நம்மைக் கலங்கடிக்கும் போதும், பயம் நம்மை ஆள்கொள்ளும்போதும், நாம் அவருடைய கல்வாரிப் பலியை விசுவாசித்தால், பற்றிப்பிடித்தால், நாம் தைரியசாலிகளாகவும், நீதிமான்களாகவும் பாக்கியமுள்ள தேவ மைந்தர்களாகவும் இருப்போம்.

இயேசுவே, உம் பிராயச்சித்தம்
எவருக்கும் அருமையானதே
சிலுவையையே நித்தம் யாம்
கண்டு பற்றிக் கொள்வோம்.

Popular Posts

My Favorites

கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்

நவம்பர் 24 "கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்" ரோமர் 5:6 பரிசுத்தமானவர்களுக்காக அல்ல, துன்மார்க்கருக்காகவும், கெட்டுப் போனவர்ர்களுக்காகவும், பலவீனருக்காகவும், அபாத்திரருக்காகவும் கிறிஸ்து மரித்தார். தேவ சாயலை இழந்தவர்கள், தேவன் அளிக்கும் ஜீவனைக் காணாதவர்கள், அவருக்கு அந்நியர்களாகிச் சத்துருக்களானவர்களுக்காகவும்...