துண்டு பிரதிகள்

முகப்பு துண்டு பிரதிகள் பக்கம் 2

பானம் பண்ணுவோம் வாருங்கள்

உற்பத்தியைப் பெருக்கும் தொழிற்கூடங்கள் நிறைந்திருந்த ஒரு பெரிய பட்டணத்தில் ஒருநாள், நான் ஒருவரோடு சம்பாஷித்துக்கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து, “வாருங்கள், நாம் பானம் அருந்தி செல்வோம்’ என்றார். அதற்கு நான் அவர் அழைத்த நோக்கத்தை அறிந்துகொண்டு, ‘வேண்டாம், உம்முடைய அழைப்புக்கு மிக்க நன்றி” என்று சொன்னேன். அச்சமயததில் என் உள்ளத்தில் அநேக ஆண்டுகளுக்குமுன் நான் கேள்விப்பட்ட: ‘ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” (யோவான் 7:37). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோ.6:35) என்ற வேத வசனங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அவைகளை அவருக்குச் சொன்னேன்.

மேற்கூறிய அழைப்புகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் இப்பூவுலகில் இருந்தபோது கூறியவைகள், அவரது ஆசீர்வாதமான உதடுகளால் அப்பொழுது சொல்லப்பட்டவைகள், இன்றும் உண்மையுள்ளவைகளாக இருக்கின்றன. உலகிலுள்ள ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் அவர் அறிந்து, “ஒருவன் தாகமாயிருந்தால்” எனக் கூறியுள்ளார். உண்மையான ஆத்தும தாகமுள்ள ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் இன்றைக்கு பல சிற்றின்ப ஊற்றுகளால் தங்களுடைய ஆத்தும தாகத்தை தீர்த்துகொள்ள முயற்சித்தும் வெற்றிபெறாமலிருக்கிறதை அவர் நன்கு அறிவார். துக்கம், துன்பம், துயரம், வேதனை, கொடுமை மனச்சித்திரவதை, உபத்திரவம் ஆகிய பாவ நோய்களின் மூலம் அவர்களின் ஆத்துமாக்கள் மன நிறைவு அடையாமல் ஏங்கித் தவித்து நிற்பதையும் அவர் அறிந்துள்ளார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கிறிஸ்துவினால் மட்டும் அம்மன நிறைவு அருளப்படக்கூடும். இதினிமித்தமே “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” எனக்கூறினார்.

அவரிடம் வந்து சேராத ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இங்கே திட்டவட்டமான பரிகாரம் உண்டு. முதலாவதாக இதனை ஒரு தனிப்பட்ட அழைப்பாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். மனுக்குலத்தோர் யாராயினும் தங்களுடைய ஆத்தும தாகத்தை உணர்ந்து அவரண்டை வரக்கூடும். தேவனுடைய அருமையான குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பது எவ்வளவு ஆச்சரியமானது. ஆனால் என் அருமை நண்பனே ! நான் உம்மிடத்தில் மிக மிக முக்கியமான கேள்வி ஒன்றினைக் கேட்க அனுமதி கிடைக்கட்டும். இந்த அன்பும் கிருபையுமான அழைப்பிற்கு நீ இதுவரை எப்பொழுதாவது தக்க மறுமொழி கூறினதுண்டா?

உனது உள்ளம் தனிமையான நிலையில் துக்கத்தோடு பாவச் சுமையினால் அழுத்தப்பட்டு இருக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சமாரியப் பெண்ணுடன் சம்பாஷிக்கையில் “இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகம் உண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்’ என்று உரைத்தபோது அப்பெண்ணுக்கு உண்டானதுபோல, நீ இதை வாசிக்கையில் கர்த்தரின் பரிசுத்தாவியானவர் அதனை உணரும்படி உன் மனதுக்குள் உன்னை ஏவவில்லையா ?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதனை என்ன கருத்துடன் கூறியுள்ளார் என்பதனை வேறு விதமாக சொல்வோமானால் ‘நான் குடிக்கக் கொடுக்கும் தண்ணீர்’ என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் அந்த வாழ்வளிக்கும் ஊற்றாக இருக்கிறார். உடலுக்குப் புத்துயிர் அளிக்கத்தேவையானது இயற்கையான தண்ணீராகும். ஆனால் மரிக்காமல் என்றும் நிலைத்திருக்கும் ஆத்மாவின் உள்ளான தேவைகளை நிறைவேற்ற அந்த ஜீவத் தண்ணீர் தான் தேவைப்படுகிறது. எனது அருமை நண்பனே நீ ஒரு ஏழ்மையான, ஆதரவற்ற அனாதியான இழந்துபோன பாவியாக உள்ள நிலையில், நம்பிக்கையின் அடிப்படையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, உன் மீட்பராக ஏற்றுக்கொள்ளமாட்டாயா? தேவன் எங்குமுள்ள எல்லா மனுமக்களுக்கும் “இப்பொழுதே மனந்திரும்புங்கள்’ (அப்போஸ்தலர் 17:30) என்று கட்டளையிடுகிறார். மனந்திரும்பு என்பது பாவத்தினின்று விலகிவா என்பது பொருள். உன்னில் காணப்படும் அசுத்த நிலை, இழந்து போன சீரழிந்த நிலை இவைகளை உணர்ந்து பேதுருவைப் போல, கர்த்தரின் முந்நிலையில் இவைகளை ஒப்புக் கொண்டு.’ஓ கர்த்தாவே நான் ஒரு பாவி” என அறிக்கையிடு. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7). தெய்வத்தின் அதிசயமான அழைப்பை ஏற்றுக்கொள்ளாத எல்லோரும் நியாயத்தீர்ப்பின்போது அக்கினிக் குழியில் தள்ளப்படுவார்கள் என்று உணர்ந்து, நரகத்திலே தள்ளக்கூடிய வல்லமையுள்ள “அவருக்கே பயப்படுங்கள்’ (லூக்கா 12:5) என நான் உனக்குக் கூறிக்கொள்ளுகிறேன்.

“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16)

ஓர் அனுபவம்! ஓர் அறிமுகம்! ஓர் அழைப்பு!

ஓர் அனுபவம்!

ஒவ்வொருவருக்கும் பலவிதமான அனுபவங்கள் உண்டு. கிராமத்திலுள்ள ஒருவர் முதல் முறையாக பட்டணத்திற்குச் சென்று சுற்றிப்பார்ப்பது ஓர் ஆச்சரியமான அனுபவமாக இருக்கும். தாய் நாட்டை விட்டுகடல் கடந்து கப்பலிலோ, அதிலும் சிறப்பாக ஆகாய விமானத்திலோ வெளி நாடுகளுக்குச் சென்று திரும்புவது மகிழ்ச்சிகரமான ஒரு அனுபவமாக இருக்கும். பெருந் தலைவர் ஒருவர் நம் வீட்டிற்கு வந்து தங்கிச் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும் அல்லவா? பத்து மாதங்கள் சுமந்து குழந்தையைப் பெற்றெடுப்பது ஒரு பெண்மணிக்கு விலையேறப்பெற்ற அனுபவமாக இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒருவர் தன்னுடைய கடின உழைப்பு, அயராத முயற்சி. கட்டுப்பாடு, திறமை காரணமாக போட்டியில் வெற்றி பெறுவது பெருமிதம் அடையக்கூடிய அனுபவமாக இருக்கும்.

மேற்கூறிய அனுபவங்களை விடயெல்லாம்சிறப்பானது ஆன்மீக அனுபவமாகும். ஒவ்வொரு மனிதனும் இறைவனோடு தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொண்டு அவரோடு நிலையான உறவிற்குள் வருவது எல்லாரும் பெற வேண்டிய ஓர் ஒப்பற்ற அனுபவமாகும்! மனித உள்ளத்தில் இறைவன் தங்க விரும்புகிறார். மனிதன், இறைவனின் அவதாரமாகிய இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக் கொள்வது ஓர் உன்னதமான அனுபவமாகும். இருள் இருந்த இடத்தில் வெளிச்சம் வருவதைப் போலவும் வெறுமையும் குறைவும் மாறி நிறைவடைவதைப் போலவும் உயிரற்ற நிலைமாறி உயிர் பெறுவதைப்போலவும் இந்த அனுபவம் மறக்க முடியாத மகத்தான ஓர் அனுபவமாகும். உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறதா? நீங்கள் இந்த ஆன்மீக அனுபவத்தைப் பெற விரும்புகிறீர்களா?

ஓர் அறிமுகம்!

2000 ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் மனிதனாக அவதரித்த இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளுதல் அவசியம். இயேசு கிறிஸ்துவை, வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஓர் மகாத்மாவாக மக்கள் கருதுகின்றனர். இயேசு கிறிஸ்துவை அல்லாமல் மக்கள் மறுமை வாழ்வில் மோட்ச பாக்கியத்தை அடைய முடியாது. இயேசு கிறிஸ்துவை நீங்கள் நம்புவதும் அவரை ஏற்றுக்கொள்வதும் அவரைத் தொடர்ந்து பின்பற்றுவதும் ஓர் அற்புதமான புதிய வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஓரளவிற்கு கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரைப் பற்றிய சரியான உண்மைகளை தெரிந்துகொள்வது உங்களுடைய வாழ்வை நிறைவுபடுத்தும் வாய்ப்பாக அமையமுடியும். இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார்!

ஓர் அழைப்பு!

இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் சோர்வுறச் செய்யும் சூழ்நிலைகள் பல உண்டு’ விடுதலைக்காகவும் ஏங்கி நிற்கும் மக்களை ஆண்டவராகிய இயேசு அழைக்கிறார் “வருந்தி மன பாரத்தினால் சோர்வுற்றவர்களே! என்னிடத்தில் வாருங்கள். நான் உங்கள் உள்ளத்தை இளைப்பாற்றி உங்களுக்கு என் ஆறுதலை அருளிச் செய்வேன்’ என்று ஆண்டவர் இயேசு அன்புடன் அழைக்கிறார். இவ்வுலக வாழ்க்கையோடு மனித வாழ்க்கை முடிவு பெறுவதில்லை. மரணத்திற்குப் பின் உள்ள நித்திய வாழ்வை மோட்சத்தில் நீங்கள் அவருடன் என்றென்றும் வாழவேண்டும் என்று உங்களை அழைக்கிறார். இவ்வுலக வாழ்க்கையின் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறுவது ஆசீர்வாதமே. அதற்கு மேலாக உலகத்தின் பல கவர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் பரிசுத்தமாய் வாழ்வதற்கென தம்முடைய வழிகளில் நடக்க ‘நீ என்னை பின்பற்றி வா’ என்று இயேசு இன்று உங்களை அழைக்கிறார்!

நன்றியுள்ள ஒரு நண்பன்

குடியானவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அதிகபிரயோஜனமான ஒரு நல்ல நாய் அவனிடம் இருந்தது. இந்த நாய் மிகவும் வயதானதாகிவிட்டதால். நன்றி கெட்ட தன் எஜமான் அதை கொண்டுபோய் தண்ணீரில் மூழ்கச்செய்து கொன்றுபோட்டுவிட தீர்மானம் செய்தான. ஒருநாள் இக்குடியானவன் நாயை அழைத்துக் கொண்டு தன் வயலுக்கு பக்கத்திலிருந்த ஒருநதியண்டை போனான். அங்கே ஒரு படகில் தன் நாயை ஏற்றிக் கொண்டு நதியின் ஆழமான இடத்துக்கு படகை ஓட்டிக்கொண்டு வந்தான். பிறகு அவன் தன்னோடு கொண்டு வந்திருந்த ஒரு பாரமான கல்லை ஒரு கயிற்றில் கட்டி, அந்த கயிற்றை நாயின் கழுத்தில் கட்டி, நாயை கொன்றுபோட்டுவிட தண்ணீருக்குள் தள்ளிவிட்டான். அந்த நாய் தண்ணீரில் மூழ்கிப் போகும்போது, திடீர் என்று கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்துபோயிற்று. அப்போது நாய் ஊளையிட்டுக்கொண்டு மறுபடியும் படகுக்குள் வர முயற்சித்தது. கொஞ்சமேனும் இரக்கமற்ற எஜமான் கருணையற்றவனாய் அந்த வயது சென்ற நாயை பலமுறை தன் கையிலிருந்த துடுப்பால் தண்ணீரில் அமிழ்ந்துபோக தள்ளினான்.

கடைசியில் கல் நெஞ்சம் படைத்த அம்மனுஷன் நாயை பலமாக துடுப்பால் ஒரே அடி அடித்து நதியின் தண்ணீரின் ஆழத்தில் தள்ளிப் போட கையை ஒங்கினான். அச்சமயம் தவறி அவனே தண்ணீரில் விழுந்துவிட்டான். பின்பு நீந்தி வெளியே வர முடியாமல் தவித்து அமிழ்ந்துபோகும் தருணத்தில் இருந்தான். தன் எஜமான போராடிக்கொண்டிருக்கிறதை கண்ட நாய் அவன தன்னை அவ்வளவு கொடூரமாய், நன்றி கெட்டவனாக அப்போது நடத்திஇருநதபோதும், அவனுடைய உடுப்பை தன் வாயால் கடித்து, இழுத்துக்கொண்டு வந்து அவனை பத்திரத்தோடு கரையில் சேர்த்தது.

என் அருமை நண்பா ! சற்று நிறுத்தி யோசித்துப் பார்! எல்லா அன்புக்கும் நேர்மைக்கும் விரோதமாக பாவம் செய்து பயங்கரமான குற்றவாளிகளாக நாம் இன்றைக்கு இருக்கிறோம். யோசித்துப்பார். சுமார் 2000 ஆண்டுகளுக்குமுன் இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்ததைப் பார்ப்போம். அவர் தேவாதி தேவன்; சத்தியமும் ஒளியும் நிறைந்தவர்; அழிவுக்குள்ளும் தரித்திரததிலுமுள்ள மனுஷனுக்கு தம் பரம அன்பையும் ஆசீர்வாதத்தையும் அளித்தார். அவர் வியாதியஸ்தரை குணமாக்கினார்; குருடருக்கு கண்பார்வை அளித்தார்; மரித்தோரை எழுப்பினார்; பசியுள்ளோரை போஷித்தார்; சோர்ந்துபோனவர்களுக்கும் துக்கமுள்ளவர்களுக்கும் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து நன்மை செய்து சுற்றித்திரிந்தார். இப்படிப்பட்டவருக்கு மனுஷன் என்ன செய்தான்? அவனை அகற்றும் அகற்றும் என்று சத்தமிட்டு கூவி சிலுவை மரததில் அறைந்தான். ஐயோ ! மனுஷனுடைய இருதயம் எவ்வளவு மோசமாய் கெட்டுப்போய் கசப்பு நிறைந்து இருக்கிறது ! நம்முடைய இருதயத்தின் நிலையும் இன்றைக்கு இப்படிதான் இருக்கிறது. பரிசுத்த வேதம் போதிப்பதாவது: எல்லாவற்றைப் பார்க்கிலும் (மனுஷனுடைய) இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. அதை அறியத்தக்கவன் யார் (எரேமியா 17:9). ஒரேஒரு நொடியில் அவருடைய கரத்திலிருந்து நாம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளக் கூடும். ஆனால் நாம் அவருடைய பாதையை விட்டு விலகிப்போனால் உடனே அவர் நம்மை விட்டுவிலகி போய்விடுவார் !

இந்த மாட்சிமையான தேவ மனுஷன் நடு சிலுவைபில் கோர காட்சியோடு தொங்குகிறது தேவனுடைய உள்ளம் எப்படிப்பட்டது என்று நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இவர் எதிர்த்து ஒரு இழிவான வாரத்தையோ, வெறுப்பான வார்த்தையோ தன் விரலை சுட்டிக்காட்டி எதிர்த்து பேசவில்லை. அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும் தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் இருந்தார். இவை எல்லாம் உலகத்தில் இருக்கிற எல்லா குற்றவாளிகளுக்கும் பாவிகளுக்கும் தேவன் காண்பிக்கிற பரம அன்பு.

ஓ ! என்ன அருமையான அன்பின் குணம் இது
அவர் இன்றைக்கு திறந்த இருதயத்தோடும்
ஆணிகளால் கடாவப்பட்ட
விரிக்கப்பட்ட கரங்களோடும் நிற்கிறார் !
ஓ! அவரது இரக்கம் இணையற்றது
இந்த இணையற்ற இரக்கத்தை
தம் சத்துருக்களுக்காக எடுத்துக்காட்டுகிறார்.

பிறகு இவர் “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதெனறு. அறியாமலிருக்கிறார்கள்’ என்று ஜெபித்தார்.

மனுஷன் அவரை சிலுவையில் அறைந்து அங்கே அவருக்கு ஒரு முடிவு கட்ட எண்ணமிட்டான். ஆனால் சபிக்கப்பட்ட அதே கல்வாரி சிலுவையின் கொடூர மரணத்திலிருந்து, மனந்திரும்பி, தன் பாவங்களை அறிக்கை செய்து, அவரைத் தன் சொந்த இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ள விரும்புகிற ஒவ்வொரு பாவியான மனுஷனுக்கும் இரட்சிப்பின் கிருபையின் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

நாம் படித்த கதையில் அந்த நன்றியுள்ள நாய் தன் எஜமானின் ஜீவனை காப்பாற்றியது. இயேசு கிறிஸ்து இரட்சிக்கும்போது நம்மை மீட்டு இரட்சிக்கிறார்;. அவர் சொற்ப காலத்துக்காக மட்டுமல்ல் நித்திய காலத்துக்கென்று நம்மை இரட்சிக்கிறார் “தன்னை விசுவாசிப்போருக்கு அவர் நித்திய ஜீவனை கொடுக்கிறார்.
இதை வாசிக்கும் என் அருமை நண்பா! இந்த ஆச்சரியமான இரட்சகரை இன்னும் உன் இரட்சகராக அறியாமல் இருப்பாயானால், கிருபையின் நாளாகிய இதே நாளில், இன்றைக்கு, அவரண்டை வந்து அவர் அளிக்கும் இலவச இரட்சிப்பை பெற்றுக்கொள்ள நான் உன்னை துரிதப்படுத்துகிறேன். இவ்வுலகத்தை நியாயம் தீர்க்க அவர் சீக்கிரத்தில் வரப்போகிறார் அப்போது அவருடைய கோபம் பற்றி எரியும். அந்த பயங்கரமான நாளில் தெய்வ பக்தியற்றவர்களும், பாவிகள் எல்லோரும் அவருக்கு முன்பாக நிற்பார்கள் ஒருவரும் தப்பித்துக்கொள்ள முடியாது.

“தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது”.

“நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாக தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உணடாயிருக்கிறது” (1யோவான் 4:9,10)

செவிகொடுங்கள்

இயேசு சொன்னார்: எனக்குச் செவிகொடுங்கள். (மாற்கு 7:14).

எல்லோரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். (லூக்கா 4:22).

இயேசு சொன்னார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (லூக்கா 21:33).

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. (யோவான் 5:24).

இப்புஸ்தகம் தேவனுடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமத்திலுள்ள வாக்கியங்கள் அடங்கியது. நீங்கள் பரிசுத்த வேதாகமத்தைப் பெற்றுக்கொள்ளவும் வாசிக்கவும் ஊக்கமாய் ஏவுகிறோம். ஏனெனில் அது  எல்லா மனிதருக்கும் தேவ வெளிப்படுத்துதலாயிருக்கிறது.

இரண்டு வீடுகள்

இயேசு சொன்னது : நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷலுக்கு ஒப்பிடுவேன்.

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழைசொரிந்து, வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.

இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். (மத்தேயு 7:24-29).

போடப்பட்டிருக்கிற அஸ்திவாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல வேறே எந்த அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. (1 கொரிந்தியர் 3:11).

காணாமற்போன ஆடு

இயேசு இந்த உவமையைச் சொன்னார்: உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து,

அவைகளில் ஒன்று காணாமறபோனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே வீட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

கண்டுபிடித்த பின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து”: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடேகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷமுண்டாயிருக்கும். (லூக்கா 15:3-7).

நாம் எல்லாரும் ஆடுகளைப்போல் வழி தப்பித் திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். (ஏசாயா 53:6).

காணுமற் போதலும் கண்டுபிடித்தலும்

இயேசு சொன்னார்: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்தான்.

சில நாளைக்குப் பின்பு இளைய மகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு தூரதேசத்துக்குப்  புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பணணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக் கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களிலே பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.

அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான். ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

அவனுக்குப் புத்த தெளிந்தபோது அவன் என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனை பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது. நானோ பசியினால் சாகிறேன்.

நான் எழுந்து. என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே. பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதரகு நான் பாத்திரனல்ல. உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி, எழுந்து புறப்பட்டு தன் தகப்பனிடத்தில் வந்தான்.

அவன் தூரத்தில் வரும்போதே அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதறகு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.

அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து. இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரடசையையும் போடுங்கள்: கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள், நாம் புசித்துச் சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணுமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். (லூக்கா 15:11-24).

மன்னிப்பு ஈயாத ஊழியக்காரன்

இயேசு சொன்னார் : பரலோக ராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.

அவன் கணக்கு பார்க்கத் தொடங்சினபோது பதினாயிரம் தாலந்து கடன்பட்டவன் ஒரு வனை அவனுக்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள். கடனைத் தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும அவன் பெண்சாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படி கட்டளையிட்டான்.

அப்பொழுது அந்த ஊழியக்காரன் தாழவிழுந்து வணங்கி: ஆண்டவரே, என்னிடத்தி ல் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி. அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.

அப்படியிருக்க அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப் போகையில், தன்னிடத்தல் நூறு வெள்ளிப் பணம் கடன்பட்டிருந்தவனகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத்தீர்க்கவேண்டும் என்றான்.

அப்பொழுது அவன் உடன் வேலைக்காரன் அவன் காலில் விழுந்து, என்னிடத்தல் பொறுமையாயிரும், எலலாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அவனோ சம்மதியாமல் அவன் பட்ட கடளைக்கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.

நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.

அவனுடைய ஆண்டவன் அப்பொழுது அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் கொடுத்துத்தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். (மத்தேயு 18:23-34).

ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து. கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:32).

பேராசையுள்ள கமக்காரன்

இயேசு சொன்னார்: பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தியிருந்தாலும் அது அவனுக்கு ஜீவனல்ல.

அல்லாமலும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன் நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்துவைக்கிறதற்கு எனக்கு இடமில்லையே?

நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும், என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு என் ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருட்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது: நீ இளைப்பாறி புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.

தேவனோ அவனை நோக்கி : மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது நீ சேகரித்தது யாருடையதாகும் என்றார்.

தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சோத்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான். (லூக்கா 12:15-21).

தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். (லூக்கா 12:31).

பெருமையும் தாழ்மையும்

இயேசு தங்களை நீதிமான்களென்று நம்பி மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக் குறித்து இந்த உவமையைச் சொன்னார்:

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள். ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

பரிசேயன் நின்று, தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுரைப் போலவும். இந்த ஆயக்காரனைப் போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன். என் சமபாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு, தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

அவனல்ல இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். (லூக்கா 18:9-14).

உங்கள் செவியைச் சாய்த்து என்னிடத்தில் வாருங்கள்; கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும், கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். (ஏசாயா 55:3, 6).

கடன் தீர்த்த மாமன்னன்

புகழ்பெற்ற இரஷ்ய நாட்டு மாமன்னர் (ஃஸார்) நிக்கோலாஸ், இரவில் சாதாரணச் சிப்பாய் போல உடையணிந்து, சிப்பாய்கள் தங்கள் முகாமில் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வெளியே உலாவுவார்.

ஒருநாள் நள்ளிரவு, விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருக்க வேண்டிய நேரம். வழக்கம் போல கண்காணிக்க புறப்பட்ட மாமன்னர், பொக்கிஷசாலை அதிகாரியின் அறையில் விளக்கு எரிவதை கவனித்தார். மெல்ல உட்சென்று, கட்டளையை மீறிய நபரை தண்டிக்க எண்ணினார். விளக்கை அணைக்காமல் இருப்பவர், மாமன்னரின் நெருங்கிய நண்பரின் மகன். இந்த இளம் அதிகாரி, மேஜையில் தலைசாய்த்தபடி தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாரியை எழுப்ப எண்ணின மாமன்னரின் கண்களில், குண்டுகளால் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கியும், ஒரு கத்தை பணமும், அதிகாரியின் கையிலிருந்து நழுவிய பேனாவும் தெரிந்தது. விளக்கின் ஒளியில் அதிகாரியால் எழுதப்பட்டிருந்த பட்டியலை படித்த மாமன்னர் நிலைமையை உடனடியாக புரிந்துக்கொண்டார்.

அந்த நீண்ட பட்டியலில், சூதாட்டம் போன்ற தீயகாரியங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த தன் மாபெரும் கடனைத் தீர்க்க இவர் ராணுவ நீதியில் கையாடல் செய்திருந்தார். இப்பொழுதோ, இரவில் கணக்கை சீர் செய்ய அமர்ந்தவர், கையிருப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பற்றாக்குறையான தொகை பல லட்சக் கணக்கில் இருப்பதை முதலாவதாகக் கண்டுபிடித்ததும், கலங்கிப் போனார், ஏனெனில் திரும்ப செலுத்துவோம் என்ற நம்பிக்கைக்கே இடமில்லாத அளவுக்கு அது மாபெரும் தொகையாக இருந்தது. அந்த கடன் பட்டியலின் கீழ் ஒரு கேள்வியை எழுதியிருந்தார்.

“இவ்வளவு பெரிய கடனைத் தீர்ப்பவர் யார்?“

அவமானத்தை சமாளிக்க தைரியமற்றவராக, தன்னைச் சுட்டு தற்கொலை செய்ய நினைத்தவர். தூரத்திலுள்ள தன் வீட்டாரை நினைத்தவுடன் கலக்கமடைந்தவராக மெய்மறந்து தூங்கிவிட்டார்.

நடந்ததை அறிந்த மாமன்னர், இளம் அதிகாரியை உடனடியாக கைது செய்ய எண்ணினார். இப்படிப்பட்ட குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவை, மேலும் ராணுவத்தில் நீதி நேர்மை காக்கப்பட இவ்வகையான குற்றங்கள் ராணுவ நீதிமன்றத்திற்கு எடுத்துரைக்கப்பட வேண்டும். ஆனால் மாமன்னர் இந்த அதிகாரியின் தகப்பனார் தன் நெருங்கிய நண்பர் என்பதை நினைவுகூர்ந்ததும், அன்பினால் நீதியாக வழங்கப்பட வேண்டிய நியாயத்தீர்ப்பை மேற்கொண்டார். ராணுவத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அதே நேரத்தில் குற்றவாளியைத் தண்டனையிலிருந்து காத்து நீதிமானாக்கவும் மாமன்னர் ஒரு திட்டம் வகுத்தார். நம்பிக்கையிழந்த அந்த அதிகாரியின் பேனாவை எடுத்து அந்தக் கேள்வியின் கீழ் “நிக்கோலாஸ்” எனத் தன் பெயரை எழுதினார்.

மாமன்னர் நிக்கோலாஸ் மனமார கடனைத் தீர்க்க தீர்மானித்தாரே! தண்டனைக்குரியவன் மீட்கப்பட்டான். இந்த தியாக மனப்பான்மை இயேசு இரட்சகர் தம்மிடம் வரும் எல்லோருக்கும் வழங்கும் பாவ மன்னிப்பை நினைவுபடுத்துகிறது. மாமன்னர் வெளியேறிய சிறிது நேரத்தில் விழித்து, தன்னையே சுட்டுக்கொள்ள முயன்ற இளம் அதிகாரி தன் கேள்வியின் கீழ் மாமன்னரின் கையெழுத்தைப் பார்த்து அசந்து போனார். இது உண்மையானது தானோ என்பதைக் கண்டறிய தன் வசமுள்ள தஸ்தாவேஜுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததும் விவரிக்க முடியாத மகிழ்ச்சியடைந்தார். ஆனாலும், தன் துணிகரமான செய்கை மாமன்னருக்கு தெரிந்தும், கடன் சுமையை தன் மேல் சுமத்தாமல் அவர் தாமே ஈடுசெய்ய முன்வந்ததை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். மன்னிக்கும் மாமன்னர் நிக்கோலாஸ் குற்றவாளியை நீதிமானாக்கி விட்டார். மறுநாள் மாமன்னரிடமிருந்து வந்த பணம், கடன் தொகைக்கு போதுமானதாக இருந்தது.

நண்பரே! நாம் அனைவரும் பாவம் செய்தவர்கள். பாவக் கடனைத் தீர்க்கவேண்டியவர்கள். “யார் இதைத் தீர்க்க முடியும் ?” தேவனுடைய அன்பு இக்கேள்விக்கு விடையளிக்கிறது. மாமன்னர் விடையெழுதினதுபோல இதுவும் ஒரு பெயர்.

இயேசு!

ஆம் அன்பரே ! இயேசு பெருமான் நம் பாவக்கடனையும், நாம் எப்படி இந்த இக்கட்டான நிலைக்கு உள்ளாகி அவமானத்துடன் இருக்கிறோம் என்பதை நன்கு அறிவார். ஆனாலும் அவர் நம்மை நேசித்து நம் பாவக்கடன் எல்லாவற்றையும் அவரே செலுத்தினார். அன்பான வாசகரே ! இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மாண்டது நம் பாவக்கடனைத் தீர்ப்பதற்காகத்தான். அத்துடன் நம்மை நீதிமானாக்க அவர் வெற்றி வேந்தராக மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்து இன்றும் ஜீவிக்கிறார். நிக்கோலாஸ் என்ற பெயர் அதிகாரியின் கடன் பிரச்சனையைத் தீர்த்தது. அதுபோல, இயேசு கிறிஸ்து என்கிற ஒப்பற்ற நாமம் நம் எல்லா பாவபாரச் சுமையினின்றும் நம்மை விடுவித்துக் காக்க வல்லது. “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று இயேசு இரட்சகர் நம்மை அன்போடு அழைக்கிறார்.

“ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், விசுவாசிக்கிறவன் எவனும்………… இவராலே (இயேசு கிறிஸ்துவினால்) விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.’ (அப்.13:38,39)

Popular Posts

My Favorites

நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி

மார்ச் 15 "நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கையைப்பற்றி." தீத்து 1:3 உத்தம கிறிஸ்தவன் ஒருவன் இப்படித்தான் ஜீவியம் செய்ய வேண்டும். அவன் இருதயம் கீழான உலக காரியத்தைப்பற்றாமல் நித்திய ஜீவனுக்கென்று இயேசுவின் இரக்கத்தையே நோக்கிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்தவனின்...