முகப்பு தினதியானம் டிசம்பர் நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்

நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்

டிசம்பர் 06

“நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்” வெளி 1:8

இந்த வசனம் ஆண்டவருடைய மகத்துவத்தையும், மேன்மையையும் குறித்து கூறுகிறது. கிரேக்க மொழியின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்தையும் கூறி, நான் அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வார்த்தையின் எழுத்துக்கள் தேவனுடைய தன்மையை விபரிக்கின்றன. அவரை நமக்கு வெளிப்படுத்தினதே, ஆண்டவராகிய இயேசுதான். அவருடைய தன்மைகளையும், மகத்துவங்களையும் அவர் அப்படியே வெளிப்படுத்துகிறார். கிரேக்க மொழி பேசுகிறவர்கள் தங்கள் உரையாடலில் இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவார்கள்.

இயேசு கிறிஸ்து நமக்கு மேன்மையாக இருப்பவர். நம்முடைய இரட்சிப்புக்கும், ஆறுதலுக்கும், மேன்மைக்கும், கனத்திற்கும் அவசியமானதெல்லாமே அவரிடம் உண்டு. அவரில் ஞானமும் அறிவும், மேன்மையும் கனமும், ஐசுவரியமும் நித்தியமும் நிறைவாக அடங்கியுள்ளது. அவரே இரட்சிப்பின் முதலும் முடிவுமாக இருக்கிறார். அவரிலிருந்து கிருபையின் ஊற்று பாய்கிறது. அது நாம் அவரையே மையமாகக் கொண்டு அவரையே சூழ்ந்திருக்கச் செய்கிறது. எல்லாவற்றிலும் முக்கியமும், நித்தியமுமாய் இருக்கிறவர் அவரே. தேவனுக்குரிய அனைத்து கர்த்தத்துவங்களும் அவர் கொண்டவர். நன்மையும், கிருபையும் அவரிடத்தில் எப்பொழுதும் உண்டு. எனவேதான் தேவனுடைய பிள்ளைகள் அவரைப் புகழ்வதிலும், பிரசங்கிப்பதிலும் ஒய்வதே இல்லை. பாவிக்கு தேவையான சகல தயவும் அவரிடம் உண்டு. இத்தன்மையில் இயேசுவைக் காண்பது எவ்வளவு இனிமை. வெளிப்படுத்தல் புத்தகத்தில் இவ்வசனத்தில் நான்கு முறைகள் கூறப்பட்டுள்ளது. இதைத் தியானித்து நமது ஆன்மீன உணவைப் பெறுவோம்.

கிறிஸ்துவே ஆதியும் அந்தமுமாம்
அவரே கிருபையும் ஆனந்தமுமாம்
கிறிஸ்து தரும் நன்மைகள் யாவும்
அவர் தரும் பேரின்பங்களாம்.