தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 3

மேன்மைக்கு முன்னானது தாழ்மை

நவம்பர் 30

“மேன்மைக்கு முன்னானது தாழ்மை” நீதி. 18:12

தேவன் நம்மை உயர்த்துமுன் நமது நிலை தாழ்ந்துதான் இருக்க வேண்டும். நல்ல ஆடைகளை அவர் நமக்கு உடுத்துவிக்குமுன்னர், அவர் நமது கந்தை ஆடைகளை அகற்றிப் போடுவார். தமது கிருபைகளால் நம்மை நிரப்ப, நம்மை வெறுமையானவர்களாக்குவார். அவருடைய பிரபுக்களுக்குச் சமமாக நம்மை உயர்த்துவதற்கும் நாம் தாழ்மையை அனுபவிக்க வேண்டும் என்கிறார். அவர் பெலவீனருக்குப் பெலன் கொடுத்து ஏழைகளை ஆதரிக்கிறார். குற்றவாளியையே அவர் நீதிமானாக்க விரும்புகிறார். தகுதியற்றவர்களைத் தகுதியாக்கி தம்முடைய மகிமையால் முடிசூட்டுவார். நாம் தாழ்வில் இருந்தால் தான் உயர்த்தப்படுவோம். யாவற்றையும் நமது உடைமையாக்க வேண்டும். தேவன், நாம் வெறுமையாயிருந்தால்தான் நம்மை நன்மைகளால் நிரப்புவார்.

தாழ்மையுள்ளவர்களுக்குத் தேவன் கிருபை அளிக்கிறார். யோசேப்பு பார்வோனுக்கடுத்த இடத்திற்கு வரவேண்டுமானால், அவன் சிறையில் வாட வேண்டும். தாவீது இஸ்ரவேலின் மன்னனாவதற்கு முன்னால், பறவையைப்போல வேட்டையாடப்பட வேண்டும். பவுல் சிறந்த அப்போஸ்தலனாவதற்கு முன்னால் தன்னைப் பாவியென்று ஒப்புக்கொள்ள வேண்டும். இதுதான் தேவனுடைய முறை. இப்பொழுது உலகில் தாழ்வாக எண்ணப்படும் பரிசுத்தவான்களே பிதாவின் ஆட்சியில் சூரியனைப்பேலா ஒளி வீசுவார்கள். பிரியமானவனே, நீ தாழ்ந்திருக்கிறாயென்று அஞ்சாதே. எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்திருக்கிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு உயர்த்தப்படுவாய். எவ்வளவாய் துக்கிக்கிறாயோ அவ்வளவாக மகிழ்ச்சியடையலாம். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

நம்முடைய தாழ்வில்
நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை இன்றுமென்றும்
நமக்குள்ளதே.

சத்தியத்தை அறிவீர்கள்

மார்ச் 09

“சத்தியத்தை அறிவீர்கள்.” யோவான் 8:32

கிறிஸ்துவானவர் நமக்கு போதிக்கிறவரானால், நாம் பிள்ளைக்குரிய குணத்தோடும் கற்றுக்கொள்கிற மனதோடும் இருப்போமானால் சத்தியத்தை அறிந்துக்கொள்வோம். சீயோன் குமாரர்களும் குமாரத்திகளும் கர்த்தரால் போதிக்கப்படுகிறார்கள். தேவ போதனையைக் கேட்கிற எவரும் கிறிஸ்துவில் வளருவர். இயேசுவிடம் வருகிற எல்லாரும் இரட்சிப்புக்கேற்ற ஞானம் பெற்று சத்தியத்தை அறிந்து கொள்வர். கிறிஸ்துவுக்குள் சத்தியம் இருக்கிறது. அதன் மையம் அவர்தான். அவர் வசனத்தை நம்பி, அவர் பலிபீடத்தின்மேல் சார்ந்து அவருடைய சித்தத்தை அப்படியே செய்யும்போதுதான் அவரை அறிந்துக்கொள்ளுகிறோம். அவரை அறிந்துக்கொள்ளுகிறதே சத்தியத்தை அறிந்து கொள்வதாகும்.

சத்தியம்தான் நம்மை விடுதலையாக்கும். அது அறியாமையிலிருந்தும், தப்பெண்ணத்தினின்றும், புத்தியீனத்தினின்றும், துர்போதகத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கும். சாத்தானுடைய அடிமைத்தனத்தினின்றும், நியாயப்பிரமாணத்தினின்றும் பொடுமையிலிருந்தும், அது நம்மை தப்புவிக்குpறது. பாவத்தின் குற்றத்தினின்றும் குற்ற மனசாட்சியினின்றும் அது நம்மை விடுவிக்கிறது. தேவனைப்பற்றி உண்மையான அறிவை நமக்குப் புகட்டி, சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் நமக்குத் தெரியப்படுத்துகிறது. நாம் கிறிஸ்துவின் சத்தியத்தை அறிவோமானால் உலகத்தை ஜெயிப்போம். பரம இராஜ்யத்தில் பிரவேசிப்போம். தேவ சமாதானம் பெற்று அவர் சித்தம் செய்வோம்.

தேவ பக்தியே நமது ஆனந்தம்.
கர்த்தாவே நீர் போதிக்கும்போது
பாவம் அற்றுப்போவதால்
உமதாவியில் நடத்திடும்.
கிருபையால் என்னைப் பிரகாசியும்.

நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்

ஜீலை 28

“நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்” யோவான் 13:18

விசுவாசிகள் எல்லாரும் நித்திய ஜீவனுக்கென்று தெரிந்துக்கொள்ளப்படுகிறார்கள். தமது சுய சித்தத்தின்படி அவர்களைத் தெரிந்துகொண்டார். பிதாவினால் தமக்குக் கொடுக்கப்பட்டவர்களாகவே அவர்களைத் தெரிந்துகொள்கிறார். தமது ஜனங்களை, தமது மணவாட்டியாகவும் ஊழியர்களாகவும், சாட்சிகளாகவும் இருக்கத் தெரிந்துகொண்டார். அவர் இவர்களைத் தெரிந்துகொண்டதால்தான் இவர்கள் அவரைத் தெரிந்துக்கொண்டார்கள். அவர் தாம் தெரிந்துக் கொண்டவர்களை அறிவார். ஆகவே அவர்களுடைய மனம், விசுவாசம், நம்பிக்கை, அன்பு, பயம், துக்கம், குறைவு இவைகளையெல்லாம் அறிந்திருக்கிறார். தேவன் இவர்களைத் தெரிந்துக்கொண்டதால் ஆறுதல் அடைகிறார்கள். இவர்களை அங்கீரித்து மற்றவர்களினின்று இவர்களை வித்தியாசப்படுத்துகிறார்.

இப்படி இயேசு தம்முடைய ஜனங்கள் எல்லாரையும் அறிந்திருக்கிறபடியால் அவர் தேவனாய் இருக்க வேண்டும். தேவனைத் தவிர வேறு யாரும் எண்ணமுடியாத இக்கூட்டத்தாருடைய தொகை, பேர், இருப்பிடம், எண்ணம், மனநிலை எல்லாவற்றையும் திட்டமாய் அறிந்திருக்க முடியும். அன்பர்களே நம்முடைய பெருமையைத் தாழ்த்த, விசுவாசத்தை கனம்பண்ண, குறைகளை நிறைவாக்க நம்முடைய வழிகளை உறுதிப்பண்ண, நற்கிரியைகளுக்குப் பலன் அறிக்கத்தக்கதாக அவர் நம்மை அறிவார். இயேசு நான் எங்கிருந்தாலும், வீட்டிலும் வெளியிலும், தேவாலயத்திலும் எப்படி நடக்கிறேன் என்று அறிவார். தகப்பன் தன் பிள்ளையை அறிந்திருக்கிறதுப்போலவும், கணவன் தன் மனைவியை அறிந்திருக்கிறதுபோலவும், அவர் தாம் தெரிந்துகொண்டவர்களை அறிவார். இவ்விதமாய் என்னையும் அறிவார்.

தேவன் நம்மை மீட்டது
நித்திய சந்தோஷ கிருபையே
நேசத்தால் சேர்த்தார்
இலவசமாய் மீட்டார்.

எக்காலமும் அவரை நம்புங்கள்

மே 27

“எக்காலமும் அவரை நம்புங்கள்.” சங் 62:8

எப்பொழுதும் தேவனை நம்பலாமென்று நமக்குத் தேவனே தைரியம் கொடுக்கிறது மட்டுமல்ல¸ எக்காலத்திலும் நம்முடைய நம்பிக்கைக்கு அவர் பாத்திரர்தான். இப்படி எப்போதும் அவரை நம்பச் சொல்லியும் நாம் அவரை எப்போதும் நம்பாமல் போகிறோம். நாம் அவரை நம்புவது மிக அவசியம். சிருஷ்டியானது நம்பாமல் இருக்கலாமோ? அவரைச் சார்ந்திருக்கிறோம் எப்பதற்கு அது அத்தாட்சியானதால் அந்த நம்பிக்கையைப்பெற முயற்சி செய்ய வேண்டும். வேலைக்காரன் எஜமானை நம்ப வேண்டும். சிநேகிதன் சிநேகிதனை நம்ப வேண்டும். பிள்ளை தகப்பனை நம்பவேண்டும். விசுவாசி தேவனை நம்ப வேண்டும். அவருடைய வார்த்தை உண்மையானதால் அதை நம்ப வேண்டும். இரட்சகர் செய்த கிரியை பூரணமானதால் அதை நம்ப வேண்டும். தெய்வ செயலை நம்புவது நியாயமானதே.

அவர்மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை ஒன்றும் கலைக்கக்கூடாது. அவுருடைய தன்மை அன்பு. அன்புகூற அவர் உடன்பட்டுள்ளார். அவர் பொக்கிஷம் குறையாதது. அவர் இரக்கம் என்றுமுள்ளது. ஆகையால் துக்கத்திலும்¸ சந்தோஷத்திலும்¸ அந்த காரத்திலும்¸ வெளிச்சத்திலும்¸ நிறைவிலும்¸ குறைவிலும்¸ சோதனையிலும்¸ அமைதியிலும் அவரை நாம் நம்புவோமாக. அவரை நம்பினால் பயங்களை ஜெயிப்போம். துன்பங்களைச் சகிப்போம். வேலையில் காரியசித்திப் பெறுவோம். கவலைகளை ஒழித்து சத்துருக்களை விழத்தாக்குவோம். நாம் அவரை நம்பும்படிக்குதான் தம்முடைய குணாதிசயங்களை வெளிப்படுத்தி¸ தம்முடைய வாக்கையருளியுள்ளார். நம்மீது கோபமாய் இரேன் என்று சொல்லி¸ தாம் மாறாதவர் என்று உறுதிமொழி சொல்லியிருக்கிறார். ஆகையால் என்றைக்கும் கர்த்தரை நம்புவோமாக.

எக்காலமும் கர்த்தாவே
உம்மையே நம்புவேன்
நீரே எனக்கு எல்லாம்
என்றும் உம்மில் மகிழுவேன்.

உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்

மே 31

“உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்.” சங் 51:12

தாவீது ஒரு காரியத்தில் நஷ்டம் அடைந்தான். அதற்குக் காரணம் அவர் செய்த பாவம். அதைத் திருத்திக் கொள்ளப் பார்க்கிறான். நாம் இரட்சிப்பை இழந்துப் போகாவிட்டாலும், இரட்சிப்பினால் வரும் சந்தோஷத்தை இழந்துப் போகலாம். சந்தோஷம் சுவிசேஷத்திலிருந்து உண்டாகிறது. சுவிசேஷம் நல்ல செய்தி. சுப செய்தி. அதை விசுவாசித்தால் ஏறறுக்கொள்ளும்போது அது நம்மைச் சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்புகிறது. விசுவாசிக்கிற ஒவ்வொரு பாவிக்கும் அது நித்திய ஜீவனைக் கொடுப்பதாக அது உறுதி தருகிறது. தேவனிடமிருந்துப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும்போது அந்த உறுதி நமக்குக் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவில் நமக்கு உள்ள நன்மையை அறிந்து, குற்றம் என்ற சுமை நம்மைவிட்டு நீங்கினதை உணர்ந்து, வாக்குத்தத்தங்களுக்;குள் நமக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியால் நிரப்பப்படுகிறது.

இந்தச் சந்தோஷம் முன்னே கிடைத்தது. ஆனால் அதை இழந்துவிட்டோம். நமது தவறை உணர்ந்தும், சுவிசேஷத்தின் தன்மையை அறிந்தும் அதைச் சொந்தமாக்கிச் கொள்ளுகிற விசுவாசம் இல்லாமற்போகும்போது நாம் அந்தச் சந்தோஷத்தை இழந்துவிடுகிறோம். நாமாய் அடைய முடியாத சந்தோஷத்தைத் தேவனிடம் கேட்கலாம். நாமாய் சம்பாதிக்கக் கூடாததைக் கொடுக்கும்படி தேவனிடத்தில் கெஞ்சலாம். சந்தோஷத்தைத் திரும்பவும் தாரும் என்று கேட்பது நமது பெலவீனத்தைக் காட்டுகிறது. நம்முடைய புத்தியீனத்தை ரூபிக்கிறது. பாவத்தால் நாம் இழந்துவிட்டோம். தேவ ஒத்தாசை தேவை என்று அது காட்டுகிறது. அவர்தாம் நம்மை பாக்கியவான்களாக்கக் கூடும். இனி விழாதபடி நம்மை அது எச்சரிக்கிறது. நமது பாவங்களைக் குறித்துத் துக்கித்து, சோதனையில் விழாதபடி விழித்திருப்போமாக. அவநம்பிக்கைக்கும் இடங்கொடாதிருப்போமாக.

நான் முன்னறிந்த சந்தோஷம்
திரும்ப எனக்குத் தாரும்
உம்மைவிட்டு மறுபடியும்
பின் வாங்காதபடி தாரும்.

உக்கிரம் என்னிடத்தில் இல்லை

யூலை 24

“உக்கிரம் என்னிடத்தில் இல்லை” ஏசாயா 27:4

தேவனுடைய தன்மைகளைப்பற்றி நாம் சரியான ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறோம். அவரைக் கோபமுள்ளவராகவே அடிக்கடி பார்த்து பயப்படுகிறோம். தேவன் இயேசுவிலே நம்மைச் சந்தித்து நம்மை ஆசீர்வதித்து, நம்மிடத்தில் எரிச்சலாயில்லை என்று செல்லுகிறார். இது தான் நம்முடைய நம்பிக்கையின் ஆதாரம். தேவனிடத்தில் எரிச்சலில்லை. ஆனால் அன்பு உண்டு. ஆகவே நாம் நம்பிக்கை கொள்ளலாம். அவர் என் வேண்டுதலைத் தள்ளார். என் ஜெபத்தைக் கேட்காது என்னைத் தமது ஆசனத்தண்டையிலிருந்துத் துரத்தமாட்டார். இதுதான் ஆறுதலுக்கு ஊற்று. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால் மனிதனுடைய கோபம் விருதா. பாதாளத்தின் எரிச்சலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இது நமது பயத்திற்கும், சந்தேகத்திற்கும் நல்ல மாற்று மருந்து. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால், சாவைப்பற்றிய பயம் இருக்காது. மாறாக தேவன் என்னைத் தள்ளிவிடுவார் என்ற பயம் இருக்காது. நியாயத்தீர்ப்பை குறித்த பயம் இருக்காது. இதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தி துதிக்க வேண்டும். தேவனிடத்தில் உக்கிரம் இல்லாததால் நாம் அவர் சமீபமாய்ப் போகலாம். அவரை நம்பி, அவர் நன்மை செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே நாம் அவரைத் துதிக்க வேண்டும். தேவனிடம் உக்கிரம் இல்லாததால் நாம் யாருக்கும், எதற்குப் பயப்பட வேண்டும்? இது துன்பத்தில் அடைக்கலம். வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்று. அவாந்தரவெளியில்  திராட்சை தோட்டம். தேவனுடைய பட்டணத்தைச் சந்தோஷப்படுத்துகிற வாய்க்கால் சுரக்கும் நதி. தேவன் உக்கிரம் உள்ளவர் அல்ல. அவர் அன்புள்ளவர். அவர் இருள் அல்ல, ஒளி. அன்பானவர்களே. நீங்கள் உங்கள் தேவனைப்பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். அது வசனத்துக்கு ஒத்திருக்கட்டும். புது உடன்படிக்கைக்கு இசைந்திருக்கட்டும்.

தேவன் அன்பானவர்
தன் சுதனையே தந்தார்
என்றும் நம்மை மறவார்
கடைசிவரை காப்பார்.

நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்

ஜனவரி 15

“நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்.”  ஏசாயா 64:6

மாறாத நித்திய தேவனுக்கும், இலையைப்போல வாடிவிடுகிற பாவிக்கும் எவ்வளவு வித்தியாசமிருகஇகிறது. நமது இம்மைக்குரிய வாழ்நாள் இப்படித்தான் பசுமையாய்ச் செழிப்பாய் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்தில் வாடி வதங்கி போகலாம். ‘ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன், வாழ்நாள் குறுகினவனும், சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போல் பூத்து அறுப்புண்டு, நிழலைப்போல் நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்’. இந்நிலை நம்மை எவ்வளவு மோசமாக்கி விடுகிறது. ஆயினும் அது நமக்குப் பிரயோஜனமே. நாம் சீக்கிரம் மாண்டுபோவது நிஜமா? ஆம்மென்றால், நமது வாழ்வில் நடக்கிற காரியங்களைக் குறித்து பெரிதாக எண்ணக்கூடாது. பூமிக்குரியவைகளைவிட்டு மேலானவைகளை நாடி, பரலோக பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கக்கடவோம்.

இயேசுவின்மேல் விசுவாசம் வைத்து, தேவனோடு சஞ்சரித்து, நாம் செய்யும் எல்லாவற்றிலும் அவரைப் பிரியப்படுத்தப்பார்ப்போம். நாம் உலகில்வாழும் நாள்வரையிலும் உலக சிந்தனைக்கு இடம் கொடாமல், பயபக்தியாய் கர்த்தர்முன் செலவழிக்கவேண்டும். சுகம், வியாதியாக மாறலாம். பலம் பலவீனமாய் மாறலாம். வாலிபம் வயோதிபமாகலாம். மரணப்படுக்கை சவப்பெட்டியாகலாம். நமக்கு முன்னே நமது கல்லறை தெரிகிறது. அதற்கு முன்னே நமது தெரிந்துக்கொள்ளுதலையும் அழைப்பையும் நிச்சயித்துக் கொள்வோமாக. தேவனோடு தேவ விள்ளைகளாக நெருங்கி வாழ்வோமாக. நாம் ஆழமாய்த் தோண்டி கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடுவோமாக. பிரியமானவரே, நமது வாழ்நாள்கள் குறுகினது. மகிமை நிறைந்த நித்தியம் நமக்கு முன்னே இருக்கிறது. நாம் எல்லாரும் இலைகளைப் போல் வாழப் போகலாம்.

நித்திய ஜீவ விருட்சம்
என் நம்பிக்கைக்கு ஆதாரம்
என்றென்றும் பசுமையாம்
இதன் இலை வாடாதாம்.

யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே

ஜனவரி 23

“யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே.”  ஏசாயா 41:14

மற்றவர்களின் பார்வையில் நாம் சிறியவரும் அற்பமுமாய்க் காணப்பட்டாலும், நாமே நம்மைக் குறித்து பலவீனர்களென்று அறிந்தாலும் தேவன் நம்மைப் பார்த்து பயப்படாதே என்கிறார். நாம் ஒரு பூச்சியைப்போலிருந்தாலும் ஜெபிக்கிற யாக்கோபைக் போலிருந்தால் பயப்படத் தேவையில்லை. ஏன் பயப்படவேண்டும்? பயம் ஆத்துமாவைச் சேதப்படுத்தி சத்துருவைத் தைரியப்படுத்துகிறது. அது சிநேகிதரைக் கலங்கடித்து தேவ நாமத்தைக் கனவீனப்படுத்துகிறபடியால் பயப்படவேண்டாம். இப்படி தேவன் அடிக்கடி நம்மைப் பார்த்து சொல்வது எத்தனை அருமையானது. வேதத்தில் இந்த வார்த்தை எங்கே காணலாம். நாம் ஏன் பயப்படவேண்டும்? ஓடுகிறதற்கு வேகமும், யுத்தத்திற்குச் சவுரியவான்களின் சவுரியமும் இருந்தால் போதாது, பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களாயிருந்தாலும் போதாது. தயவு அடைவதற்கு வித்வான்களின் அறிவும் போதாது.

அவைகளுக்கெல்லாம் தேவ செயலும் காலமும் நேரிட தேவனே விழித்திருப்பார். நாம் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கிறோமா? அப்படியானால் நாம் பயப்படத் தேவையில்லை. தேவன் நமது சிநேகிதர், அவர் எந்தக் காலத்திலும் எந்தக் காரியத்திலும் நம்மேல் கவலை கொள்கிறார். நமது தேவைகளைச் சந்திக்கிறார். எல்லா விசுவாசிகளையும் அவர் பார்க்கிறார். நம்மை நம்புகிற ஒவ்வொரு பூச்சியையும் சுகமாய் வாழ பாதுகாக்கிறார். அவர் வல்லமை சர்வ வல்லமை. அவரின் ஞானம் சர்வத்தையும் அறியும். அவரின் அன்புக்கு இணையாக ஒன்றுமில்லை. அவர் உன்னைக் காப்பவர். ஆகவே யாக்கோபு என்னும் பூச்சியே பயப்படாதே.

உன்னை யார் இகழ்ந்தாலும்
உன் தேவனை நம்பு
விழுந்த உன்னை தூக்குவார்
யாரும் உன்னை மேற்கொள்ளார்.

சகோதரரே நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்

யூன் 08

“சகோதரரே நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்.” ரோமர் 8:12

அபாத்திரருக்குத் தயைக் காட்டுகிறதினால் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் அதிகரிக்கின்றன. சிருஷ்டிகளாக நம்மைப் பார்த்தால் நாம் கடன்காரர். புது சிருஷ்டிகளாய் பார்த்தாலோ இன்னும் பெரிய கடன்காரர். தேவதீர்மானத்தின்படி வாக்குத்தத்தப் புத்தகத்தில் நம்முடைய பேர் எழுதப்பட்டுள்ளதாலும் ஆண்டவரின் ஊழியத்தில் பங்கிருப்பதாலும் அவரின் கீழ்ப்படிதல், மன்றாட்டு, மரணம் இவைகளின் நன்மைகள் நமக்காயிருப்பதினாலும், நாம் தேவ கிருபைக்குக் கடன்பட்டவர்கள். பிராயசித்த, இரத்தத்தால் நீதிக்கு திருப்தி உண்டாக்கி நாம் தேவ கோபத்தினின்று விடுவிக்கப்பட்டதாலும், பிசாசின் வல்லமைக்கு தப்புவதாலும் நாம் அவருக்குக் கடன்பட்டவர்கள்.

அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்துக்கிடந்த பொழுது, நாம் தேவ வல்லமையால் உயிர்ப்பிக்கப்பட்டு, தேவ சித்தத்தைக் கற்று, சுயாதீனத்திற்கும், சுகத்திற்கும் உள்ளானபடியினால் நாம் கடன்பட்டவர்கள். அனுதினமும் நிமிஷந்தோறும் நாம் பெற்றுக்கொள்ளுகிற விலையேறப்பெற்ற நன்மைகக்காகத் தேவனுக்குக் கடன்பட்டவர்கள். அன்பர்களே, நம் கடமையை உணர்ந்துப் பார்ப்போமாக. அன்பு நன்றியறிதல் என்னும் கடமை நமக்குண்டு. ஆகவே நமது பரம பிதாவின் கற்பனைகளை நன்கு மதித்து, ஆண்டவரின் வழிகளைக் கவனித்து, பரிசுத்தாவியானவரின் வழி நடத்துதலுக்கு இடங்கொடுத்து, தேவ வசனத்துக்கெல்லாம் சந்தோஷமாய் கீழடங்குவோமாக. கடனாளிகளாக நம்மைத் தாழ்த்தி, யோக்கியமாய் நடந்து, நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல என்றும், நமது காலமும் பலமும் நமக்கு உரிமையல்லவென்றும் ஒத்துக்கொண்டு எல்லாம் கர்த்தருடையவைகளே என அறிக்கையிடுவோமாக.

நான் மன்னிப்படைந்த பாவி
என் கடன் மகா பெரியது
அவர் செய்த நம்மைக்கீடாக
எதைப் பதிலாய்த் தருவேன்.

தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்

பெப்ரவரி 11

“தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்.” ரோமர் 8:32

தமது ஜனங்களை இரட்சிக்கும்படிக்கு பிதா தம்முடைய குமாரனையும் பெரிதாக எண்ணவில்லை. இவர்களை ஆறுதல்படுத்த அவரைத் தண்டித்தார். பாவம் செய்த தூதர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. உலகத்தில் அதிகமாய் பாவம் செய்தவர்களையும் தண்டித்தார். ஆனால் நம்மையோ இரட்சிப்பதற்கு அதிகம் விருப்பம் கொள்கிறார். இந்த அன்பை யோசித்தால் ஆச்சரியமானது. அவரே நம்மை இரட்சித்தார், இரட்சிக்கிறார், இரட்சிப்பார். இதற்காகத்தான் இயேசுவையும் ஒப்புக்கொடுத்தார். நமக்hகத்தான் பிதாவும் அவரோடு உடன்படிக்கை செய்தார். நமக்காகவே அவர் உலகத்தில் வந்தார். நமக்காகவே சகல நீதியையும் நிறைவேற்றினார். நமக்காகவே பாவ பலியானார். நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து பரமேறி பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

கிறிஸ்து நம்முடைய பதிலாளி. மேலான உடன்படிக்கைக்குப் பிணையாளி. ஆகையால்தான் நம்மை விடுவிக்க தேவன் அவரை தண்டித்தார். நம்மைத் தப்பிவிப்பது மட்டுமல்hமல் ஜீவனும், புத்தியும், சகல உரிமையையும் இலவசமாய் தருகிறார். எங்கள் அருமை இரட்சகரே, எங்களுக்காக பிதா உம்மைத் தண்டித்தார். பிசாசும் உம்மைச் சும்மா விட்டு வைக்கவில்லை. குற்றவாளியான மனுஷர்களும் உம்மைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் நாங்களோ, உம்மைக் கோபப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும், உம்மை மனம் நோகச் செய்யாதபடி காத்துக் கொள்ளவும், உமது நாமத்தை வீணிலே வழங்காதிருக்கும்படி நடக்கவும், எங்களுக்குக் கீழ்ப்படிகிற இருதயத்தைத் தந்தருளும்.

முள்கிரீடத்தில் எங்களுக்கு
மகிமை சம்பாதித்தீர்
ஐங்காயங்களால் பாவிகட்கு
சுகம் வரப்பண்ணினீர்.

Popular Posts

My Favorites

என் கனம் எங்கே

ஏப்ரல் 18 "என் கனம் எங்கே" மல்கியா 1:6 கர்த்தர் தமது மக்கள் தம்மை மகிமைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறார். நாமும் இந்த முக்கியமான கடமையை மறந்திருக்கிறோம். மத்தேயுவைப்போல விசுவாசத்திலும் கிரியைகளிலும், பேதுருவைப்போல உண்மையிலும், உற்சாகத்திலும், யோவானைப்போல...

நீதிபரன்