தினதியானம்

முகப்பு தினதியானம்

நீ விசுவாசத்தால் நிற்கிறாய்

யூன் 13

“நீ விசுவாசத்தால் நிற்கிறாய்.” ரோமர் 11:20

இயேசுவில் வைக்கும் விசுவாசம் மகா விசேஷமானது. அதை அவருக்குமேல் வைக்காமல் மற்ற எதன்மீது வைத்தாலும் அதை அதிக மேன்மைப்படுத்திவிடுகிறோம். நாம் நீதிமான்களாக்கப்படுகிறோமா? அது விசுவாசத்தனாலாகிறது. நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோமா? அது விசுவாசத்தினால் நம் இதயத்தில் இடம் பெறகிறது. நாம் போராடுகிறோமா? அது விசுவாசப் போராட்டம். நமது விசுவாசம் தான் உலகை ஜெயிக்கிற ஜெயம். விசுவாசத்தினால் இயேசுவை நோக்கிப் போர்க்கிறோம். அவரை ஏற்றுக்கொள்ளுகிறோம். அவரோடு சஞ்சரிக்கிறோம். அவரில் நிலைக்கிறோம். ஏனெனில் விசுவாசத்தின் மூலமாய் தேவ வல்லமையினால் காப்பாற்றப்பட்டிருக்கிறோம்.

கிறிஸ்து நமக்கு எப்படியிருக்கிறார்? அவர் நமக்காக எதையெல்லாம் செய்தார்? அவர் நமக்கு என்னத்தைக் கொடுப்பார் என்று விசுவாசிக்கிறதினால்தான் நாம் நிற்கிறோம். வருத்தமான பாதையில் நடக்க கிறிஸ்துவிடமிருந்து வெளிச்சத்தையும், போராட்டத்திற்கும் விடாமுயற்சிக்கும் வேண்டிய பெலனையும், அவசரமான எந்தச் சூழ்நிலைக்கும் தேவையான கிருபையையும், விசுவாசத்தின்மூலம் பெற்றுக்கொள்கிறோம். ஜீவனுள்ள தேவனை விட்டுப் போவதால் அவிசுவாசமாகிய பொல்லாத இருதயத்தை அடையாதபடி எச்சரிக்கையாய் இருப்போமாக. சந்தேகங்களுக்கு விரோதமாகப் போராடி தேவனிடத்தில் நம்பிக்கை வைத்து, தைரியம் அடைவோமாக. நாம் பொதுவாக தேவனுடைய வசனத்தில் அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கை வைப்பவர்கள் அல்ல. இரட்சகர் முடித்த கிரியையில் மிதமிஞ்சி நம்பிக்கை வைப்பவர்களுமல்ல. தேவனுடைய உண்மையையும் அவ்வளவு உறுதியாய்ப் பிடிப்பவர்கள் அல்ல. ஆயிலும் விசுவாசத்தில் வல்லவர்களாகி, ஆபிரகாமைப்போன்று தேவனுக்கு மகிமை செலுத்துகிறவர்களாய் இருப்போமாக.

சத்துருக்கள் சீறி வந்தாலும்
இயேசுவே என் கன்மலை
அவர் கொடுக்கும் பலத்தால்
நிற்பேன் அவரே துணை.

அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்

செப்டம்பர் 17

“அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்” எரேமி. 50:34

நமது மீட்பர் நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர். கர்த்தராகிய இயேசுவைப்போல நமக்கு மிகவும் நெருக்கமானவர். வேறு யாரும் கிடையாது. பலவிதமான சூழ்நிலைகளிலும் நம்மோடு ஐக்கியப்படுபவர். இவரைப்போல் வேறு யாரும் இல்லை. இவர், தம்முடைய உயிரையே, நம்மை மீட்கும் பொருளாகத் தந்த நமது மீட்பர். நாம் சாத்தானுடைய வலையில் மீண்டும் விழுந்து விடாதபடி நம்மைக் காக்கத் தம்முடைய தூய ஆவியானவரையே நமக்குத் தாராளமாகத் தந்துள்ளார். மரித்தபின் நம்மை உயிரோடு எழும்பத் தம்முடைய மீட்பின் வல்லமையை முழுமையாகப் பயன்படுத்துகிறார். தாம் உலகிற்கு எதற்காக வந்தாரோ அதைப் பரிபூரணமாக நிறைவேற்றியுள்ளார். ஏனெனில், அவர் வல்லமையுள்ளவர். நீதிமான். வாக்கு மாறாதவர். சொன்னதைச் செய்வார்.

அவர், நம்மைச் சிறைபிடித்த சாத்தானிடமிருந்தும், நம்மை ஒடுக்கி ஆண்ட பாவத்தினின்றும் நமது சத்துருவாகிய மரணத்தினின்றும் மீட்ட கர்த்தர். இது மெய்யானது. ஆதலால், நாம் நமது பெலவீனங்களையும், குறைவுகளையும் அவரிடத்தில் அறிக்கை செய்வோமாக. அவர் ஒருக்காலும் நம்மீது சத்துரு ஆளுகை செய்யவிடமாட்டார். அவன் ஒருக்காலும் வெற்றி பெறவிடார். அவருடைய நோக்கமும், விருப்பம் நம்மை உயர்த்துவதே. நம்மோடு மகிழ்ந்திருப்பதே அவருடைய பேரவா. அக்கிரமங்களிலும், பாவங்களிலும் உழன்று கிடந்த நம்மை மீட்டு கிருபையாக நம்மை உயிர்ப்பிப்பதே. நம்முடைய எதிர் காலத்தை அவர் வளமுள்ளதாக்குவார். நமது கரத்தின் கிரியைகளை ஆசீர்வதிப்பார். நம்முடைய காரியங்களை எவ்வகையிலும் செய்து முடிப்பார்.

வல்ல மீட்பர் இயேசுவே
என்னைத் தயவாய் மீட்டீரே
சாத்தானின் கரத்திலிருந்தென்னைத்
தயவாய் மீட்டுக் கொண்டீரே.

கடைசிச் சத்துரு

ஓகஸ்ட் 02

“கடைசிச் சத்துரு” 1.கொரி. 15:26

கிறிஸ்தவனுக்கு அநேகச் சத்துருக்கள் உண்டு. தேவ கிருபையினால் இவன் சகல சத்துருக்களையும் மேற்கொள்ளுவான். அதில் பரிகரிக்கப்பட வேண்டிய கடைசிச் சத்துரு மரணம். மரணம் தான் எல்லா இராஜ்யத்துக்கும் சத்துரு. இது ஞானவான்களையும், தேச தலைவர்களையும், பரிசுத்தரையும் அழித்துப் போடுகிறது. இது சபையின் சத்துரு. இது பக்தியுள்ளவரையும், நன்மை செய்பவரையும், பயனற்றவரையும் நீக்கிப்போடுகிறது. தேவாலயத்துக்கும் சத்துரு இது. பணிவிடைக்காரர்களையும், ஊழியர்களையும், போதிக்கிறவர்களையும், வாலிபரையும் தேவனுக்காய் உழைப்பவர்களையும் மரணம் கொடுமையாக கொண்டுபோய் விடுகிறது. இது குடும்பங்களுக்குச் சத்துரு. தாய் தந்தையையும், மனைவி புருஷனையும், பிள்ளைகளையும் பிரித்துவிடுகிறது. ஊழியர்களையும், பக்திமான்களையும் உலக மனிதரையும் பாவிகளையும் பட்சபாதமின்றி மரணம் விழுங்கி விடுகிறது. நம்முடைய ஆண்டவர் இயேசுவுக்கும் அது சத்துருவாய்தான் இருந்தது.

மரணம்தான் கடைசி சத்துரு.முதல் சத்துரு சாத்தான். இரண்டாம் சத்துரு பாவம். கடைசிய சத்துரு மரணம். இது கடைசியாக நம்மைத் தாக்குகிறது. வியாதியிலும், முதுமையிலும், ஏன் இளமையிலும் மரணம் வந்துவிடுகிறது. இதுவே கடைசியாக அழிக்கப்படுகிற சத்துரு.தேவ தீர்மானத்தின்படி மரணம் கிறிஸ்துவினால் அழிக்கப்பட்டுப்போய்விடும் என்று வாக்களித்திருக்கிறார். பரிசுத்தவான்கள் அதற்காக ஜெபிக்கிறார்கள். அது அழியும் என்று சபையும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த வசனத்தை நிறைவேற்ற இயேசு கிறிஸ்துவும் வரப்போகிறார். அப்பொழுது அது நிச்சயமாய் அழிக்கப்பட்டுப்போம். பூரணமாய் அழிக்கப்பட்டுப்போம். இப்பொழுதும் பக்திமான்கள் அதன் வல்லமையை எதிர்த்து, அது வர சம்மதித்து முடிவுக்கு வாஞ்சித்து, மகிழ்ச்சியாய் அதற்கு உட்பட்டு, அதன் பிடிக்குத் தப்பி சொல்லமுடியாத மகிமையை அனுபவிக்க எதிர்நோக்கலாம்.

தேவா உமது சாயலை
எனக்களித்துப் போதியும்
அப்பொழுது உம் சமுகம்
கண்டு என்றும் களிப்போம்.

உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்

மே 31

“உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்.” சங் 51:12

தாவீது ஒரு காரியத்தில் நஷ்டம் அடைந்தான். அதற்குக் காரணம் அவர் செய்த பாவம். அதைத் திருத்திக் கொள்ளப் பார்க்கிறான். நாம் இரட்சிப்பை இழந்துப் போகாவிட்டாலும், இரட்சிப்பினால் வரும் சந்தோஷத்தை இழந்துப் போகலாம். சந்தோஷம் சுவிசேஷத்திலிருந்து உண்டாகிறது. சுவிசேஷம் நல்ல செய்தி. சுப செய்தி. அதை விசுவாசித்தால் ஏறறுக்கொள்ளும்போது அது நம்மைச் சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்புகிறது. விசுவாசிக்கிற ஒவ்வொரு பாவிக்கும் அது நித்திய ஜீவனைக் கொடுப்பதாக அது உறுதி தருகிறது. தேவனிடமிருந்துப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும்போது அந்த உறுதி நமக்குக் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவில் நமக்கு உள்ள நன்மையை அறிந்து, குற்றம் என்ற சுமை நம்மைவிட்டு நீங்கினதை உணர்ந்து, வாக்குத்தத்தங்களுக்;குள் நமக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியால் நிரப்பப்படுகிறது.

இந்தச் சந்தோஷம் முன்னே கிடைத்தது. ஆனால் அதை இழந்துவிட்டோம். நமது தவறை உணர்ந்தும், சுவிசேஷத்தின் தன்மையை அறிந்தும் அதைச் சொந்தமாக்கிச் கொள்ளுகிற விசுவாசம் இல்லாமற்போகும்போது நாம் அந்தச் சந்தோஷத்தை இழந்துவிடுகிறோம். நாமாய் அடைய முடியாத சந்தோஷத்தைத் தேவனிடம் கேட்கலாம். நாமாய் சம்பாதிக்கக் கூடாததைக் கொடுக்கும்படி தேவனிடத்தில் கெஞ்சலாம். சந்தோஷத்தைத் திரும்பவும் தாரும் என்று கேட்பது நமது பெலவீனத்தைக் காட்டுகிறது. நம்முடைய புத்தியீனத்தை ரூபிக்கிறது. பாவத்தால் நாம் இழந்துவிட்டோம். தேவ ஒத்தாசை தேவை என்று அது காட்டுகிறது. அவர்தாம் நம்மை பாக்கியவான்களாக்கக் கூடும். இனி விழாதபடி நம்மை அது எச்சரிக்கிறது. நமது பாவங்களைக் குறித்துத் துக்கித்து, சோதனையில் விழாதபடி விழித்திருப்போமாக. அவநம்பிக்கைக்கும் இடங்கொடாதிருப்போமாக.

நான் முன்னறிந்த சந்தோஷம்
திரும்ப எனக்குத் தாரும்
உம்மைவிட்டு மறுபடியும்
பின் வாங்காதபடி தாரும்.

அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து

யூலை 01

“அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து.” சங்.103:3

தினந்தோறும் நாம் பாவம் செய்கிறபடியால் தினந்தோறும் நமக்கு மன்னிப்பு தேவைப்படுகிறது. நம்முடைய பாவம் கொடிய தன்மை உடையது. இரத்தக் கிரயத்தைக் கொடுத்து, நம்மை மீட்ட ஆண்டவருக்கு விரோதமாக நாம் பாவம் செய்கிறோம். தன் எஜமான் வீட்டில் வாசம் செய்து அவருடைய போஜனத்தை அவரோடு புசித்து, அவருடைய உதாரத்துவத்தால் சகலத்தையும் பெற்று அனுபவிக்கிற ஊழியக்காரன், இப்படி தனக்கு தயவு காட்டுகிற எஜமானுக்கு விரோதமாய் பாவம் செய்கிறதுபோல நாமும் பாவம் செய்கிறோம். பாசமாய் வளர்க்கப்பட்ட பிள்ளை, ஒரு நல்ல பட்சமுள்ள அன்பான தகப்பனுக்கு விரோதமாய் பாவம் செய்கிறதுப்போலவே நாமும் பாவம் செய்கிறோம்.

நம்முடைய பாவங்கள் அநேகம். அடிக்கடி செய்கிறோம். அது பல வகையானது. அவைகளினின்று தப்ப முடியாது. ஆயினும் கர்த்தர் நம்முடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறார். நிறைவாயும், இலவசமாயும், எவ்வித குறைவுவராமல் மன்னிக்கிற தேவனைப்போல வேறு ஒருவரும் இல்லை. இந்த மன்னிப்பு இயேசுவின் இரத்தத்தால் கொள்ளப்பட்டது. அவர் மன்னிப்பைத்தரும்போது பாவத்தின்மேல் பகையும், துக்கமும், அதை விட்டுவிலகுதலும் உண்டாகவேண்டும். தேவன் நம்மைப் பலமுறை மன்னித்து கொண்டே இருக்கிறார். தகப்பனைப்போல் அன்பாயும், பலமுறையும் மன்னிக்கிறார். தேவன் இரக்கமாய் மன்னிக்கிறார் என்று சாட்சி கொடுத்த தாவீது பெரிய பாவி. அவன் விபசாரம் செய்து மோசம்பண்ணி, கொலைக்கும் ஆளாகி, அது தெய்வ செயல் என்று சொல்லி வெகு காலம் பாவத்தில் உறங்கிக்கிடந்தான். ஆனால் அவன் மனசாட்சி குத்தினபோது தேவனுக்குமுன் பாவங்களை அறிக்கையிட்டான். இதை வாசிக்கிறவரே, நீர் பாவமன்னிப்பு பெற்றதுண்டா? நீர் குற்றவாளி அல்லவா? தேவன் உமக்கு மன்னிக்க காத்திருக்கிறார். பாவத்தை அறிக்கை செய்து, ஜெபம்பண்ணு. இயேசுவின் புண்ணியத்தைச் சொல்லி, கெஞ்சி மன்னிப்பைப் பெற்றுக்கொள்வீராக.

இயேசுவே உமது அருளை
சொல்வது என் பெருமை
அதை என்றும் போற்றவே
மன்னிப்பளித்துக் காருமேன்.

பயப்படாமலும் கலங்காமலும் இரு

மார்ச் 18

“பயப்படாமலும் கலங்காமலும் இரு.” உபா. 1:21

கர்த்தர் நம்மை சோதித்தாலும் நமக்குத் தைரியம் கொடுக்கிறார். அவர் தமது வசனத்தில் முன்னூற்று அறுபத்தாறு முறைக்குமேல் பயப்படாதே என்கிறார். ஆனால் நாமோ அடிக்கடி பயப்படுகிறோம். இதை ஆண்டவர் அறிந்துதான் நம்மைச் சந்தோஷப்படுத்தவும், நமக்கு உற்சாகம் அளிக்கவும் இத்தனை முறை சொல்லியிருக்கிறார். தேவன் நல்ல தேசத்தை நமக்கு முன்பாக வைத்து அதை நமக்கத் தருவேன் என்று வாக்களித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் போங்கள் என்று கற்பித்தபடியால் நாம் அதைரியப்படக்கூடாது. நமது சத்துருக்கள் பலத்திருக்கலாம். ஆனால் நமது சர்வ வல்லவரான தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார். நமது சத்துருக்கள் தந்திரக்காரராய் இருக்கலாம். ஞானமுள்ள ஒரே தேவன் நமது பட்சத்தில் இருக்கிறார். தேவக்கோபம் நம்மீது இருப்பதுப்போல தோன்றலாம். நமது ஜெபங்களுக்கு பதில் அளிக்காமல், காரியங்கள் மோசப்பட்டு போவதாய்க் காணலாம். ஆனால் நமது நற்குணங்களை அதிகப்படுத்த, நமது உத்தமத்தைச் சோதிக்க, கருத்தான ஜெபத்தை ஏறெடுக்க இப்படிப்பட்ட காரியங்களைத் தேவன் அனுமதிக்கிறார் என்று அறிய வேண்டும்.

அன்பர்களே, ஆகவே நம்பிக்கையில் உறுதிப்பட்டு விசுவாசத்தில் விடாப்பிடியாய் இருக்க வேண்டும். கர்த்தர் நமக்காக வெளிப்படுவார். நமது அனுபவத்தால் அவர் வசனம் உண்மையுள்ளது என்று கண்டறிவோம். இப்போது எந்தப் பதிலும் அவர் சொல்லாவிட்டாலும் நமது இருதயம் விரும்புகிறபடி சீக்கிரம் செய்வார். ஆதலால் பயப்பட அவசியமில்லை. பயம், விசுவாசத்தைப் பெலவீனப்படுத்தி, தேவனைக் கனவீனப்படுத்தி, நமது சத்துருக்களை சந்தோஷப்படுத்தும். உங்களோடு தேவன் இருக்கிறார். அவர் உனக்கானவர்.

உமது சமுகம் தேடி
உம்மில் மகிழ்ந்திருப்போம்
உமது வாக்கை நம்பி
பயத்தை அகற்றுவோம்
விக்கினங்கள் பெருகினும்
உம்மால் வெற்றிபெறுவோம்.

தன் காலத்தை மனுஷன் அறியான்

டிசம்பர் 16

“தன் காலத்தை மனுஷன் அறியான்” (பிர.9:12)

வருங்காலத்தில் நேரிடப்போவது யாதென்று நாம் அறியோம். வருங்காலம் ஓர் இருண்ட நேரம் மறைவதைப்போன்று நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. இனி நடக்க இருப்பதென்னவென்று நாம் அறிய முடியாது. நமது எதிர்காலம் நமக்கு மறைக்கப்பட்டுள்ளதால், நாம் அது குறித்து யாதும் செய்ய முடியாது. சாத்தான் நம்மிடம் வரும் நேரத்தையும், நமக்குச் சோதனைகள் வரும் காலத்தையும் நாம் அறியோம். நமது வீழ்ச்சியும், எதிரிகளின் வெற்றியும், எதிரியின் திட்டமும் நமக்குத் தெரியாதவை. நமது மரண நாளும் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதுதான். வெகு அண்மையிலேயே நமது மரணம் இருப்பினும் நாம் அதை அறிய மாட்டோம்.

இதனால் நாம் தேவனையே சார்ந்திருக்க வேண்டும். அவருடைய காரியங்களை அறிய நாம் இன்னும் தாழ்மையைக் கற்கவேண்டும். அவரையே முழு மனதோடு நேசிக்க வேண்டும். அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், எதிர்த்து நிற்கக் கூடாது. நாமிருக்கும் இந்நிலை நமக்கு எச்சரிப்பையும், பயத்தையும் கொடுக்கிறபடியால், நாம் மனமேட்டிமை அடையாமல் அவருக்குப் பயந்து இருக்கவேண்டும். அவருடைய பணிகளைக் கருத்தாகச் செய்ய வேண்டும். நமது வாழ்க்கையில் அவரது நோக்கங்கள் நிறைவேறுமாறு ஜெபிக்கவேண்டும். தேவனுடைய திட்டத்தை நாம் அறிந்துகொள்ள நாம் துதிகளோடும், ஜெபங்களேயாடும் எப்போதும் கருத்தாயிருக்க வேண்டும். பயம், கவலை, வெறுப்பு, ஆகிய பெலவீனங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நம் கால்கள் சாத்தானின் கண்களில் அகப்பட்டிருந்தாலும், சீக்கிரம் அவர் வந்து விடுவிப்பார். நம்மை நித்திய காலத்திற்குமாகத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள, சீக்கிரம் இரண்டாம் முறை வரப்போகிறார். அதுமட்டும் வழித்திருந்து ஜெபம் செய்வோம்.

எங்கள் நாமம் உமது கரங்களில்
எங்கள் நாட்களை நாங்கள்
அறியோமாதலால் எங்கள் நாட்களை
அறியும் அறிவைத் தாரும், கர்த்தாவே.

அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்

நவம்பர் 14

“அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்” அப். 9:11

பவுல் பரிசேயனாக இருந்தபொழுது எழுதப்பட்ட ஜெபங்களைமட்டும் வாசித்து வந்திருப்பான். இப்பொழுதுதான் அவர் மெய்யாகவே ஜெபம் செய்கிறான். இயேசு கிறிஸ்துவில் அவன் புதிய மனிதன் ஆனபடியினாலே அவனுடைய ஆவி புத்துயிரடைந்தது. ஆண்டவர்தாமே அவனுக்குப் போதகர். தனக்கு இரட்சிப்பு வேண்டும் என்று உணர்ந்து, அதற்காக ஜெபம்பண்ணினான். மறுபிறப்பு வேண்டும் என்று உணர்ந்து, அதற்காக ஜெபம்பண்ணினான். மறுபிறப்பு அடைந்தவர்கள்தான் மெய்யாகவே ஜெபம் செய்வார்கள். உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்துமாக்கள் தங்கள் இருதயதாபங்களைக் கர்த்தருக்கு முன்பாக ஊற்றிவிடுவார்கள். ஜெபம் இல்லாவிட்டால் தாங்கள் கெட்டுப்போவார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். ஜெபம் செய்யாவிடில் அவர்கள் சுமக்கும் பாரச் சுமைகளே அவர்களை நசுக்கிப்போடும். அவர்களது இதயம் நிறைந்திருக்கிறபடியால், உள்ளே உள்ள கருத்துக்களை வெளியே கொட்டவேண்டும். ஆதலால் நாம்  ஜெபிக்கும்பொழுது ஜெபத்தில் நம் எண்ணங்களைச் சொல்லி ஜெபிக்க வேண்டும்.

வார்த்தைகள் வராவிட்டாலும் ஜெபிக்கலாம். ஏன் என்றால் ஜெபம் உள்ளத்திலிருந்து வருவது. உதடுகளிலிருந்தல்ல. இதை வாசிக்கும் நண்பனே, இதற்குமுன் நீ ஜெபம் செய்யவில்லை. அக்கிரமத்திலும், பாவத்திலும் செத்துக் கிடந்தாய். பரிசுத்த ஆவியானவரால் நீ உயிர்ப்பிக்கப்பட்டபொழுது, ஜெபம் செய்ய ஆரம்பித்தாய். ஆனால் இப்பொழுது அனலற்றுப் போனாய். நீ ஜெபிக்காவிட்டால் பிழைக்கமாட்டாய். கர்த்தர் தமது மக்ள் செய்யும் ஜெபங்களைக் கேட்டு, ஆச்சரியப்பட்டு, சபையைத் துன்புறுத்தின ஒருவனின் ஜெபத்தைக் கேள் என்று கூறுகிறார். ஜெபிக்கும் ஆத்துமாவை அவர் கவனிக்கிறார். ஆகவே, நீயும் இடைவிடாமல் ஜெபம் செய். ஜெபிக்கும் மனதைத் தாரும் என்று தேவனிடம் கேள்.

ஜெபமே ஜீவன்
ஜெபம் ஜெயம்
ஜெபிக்கும் அவா
தாரும் தேவா.

தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து

செப்டம்பர் 13

“தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து” கொலோசெயர் 1:10

பூமியிலே நமக்கு இருக்கும் அறிவு குறைவுள்ளதே. நாம் அறிந்து கொண்டது அற்பம்தான். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய வசதிகள் நம்மிடம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் மனதில்லாதவர்களாய் நாம் இருக்கிறோம். ஆண்டவரை அறிந்தால் மட்டும்தான், நம்மால் அவரை நேசிக்க முடியும். அவரை நம்பக்கூடும். இல்லாவிடில் நாம் அவருடைய மகத்துவங்களைப் போற்றவும் மாட்டோம். அவரைத் துதிக்கவும் மாட்டோம். தேவனை நாம் தெரிந்து கொண்டால்தான், அவரை நாடி, அவருடைய கோபத்துக்குப் பயந்து, அவருக்குக் கீழ்ப்படிவோம்.

பவுல் இந்தச் சத்தியத்தை அறிந்து கொண்டபடியால் கொலோசெயர் தேவ அறிவில் தேறவேண்டும் என்று ஜெபம்பண்ணினான். நாம் அவரை அறிய வேண்டுமானால், அவருடைய சிருஷ்டிகளையும், செயல்களையும் கவனித்து, அவருடைய வேதத்தை ஆழ்ந்து கற்க வேண்டும். தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே வெளிப்படுத்துகிறார். இதனாலேயே இயேசு கிறிஸ்து என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று கூறுகிறார்.

நீங்கள் தேவனை அறிந்திருக்கிறீர்களா? முன்பு நீங்கள் அவரை அறியாதவர்களாக இருந்ததினால், நன்றியில்லாதவர்களாயிருந்தீர்கள். உங்கள் அறிவு குறைவுள்ளது. ஆகையால் அவரைப்பற்றி மேலும் அறியப் பிரயாசப்படுங்கள். ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என்கிறார் இயேசு. இதை மனதிற்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டால் நித்திய ஜீவன் பெறுவீர்கள். வற்றாத பேறுகளைப் பெறுவீர்கள். தேவ அன்பில் பெருகுவதே உங்கள் நோக்கமாக இருக்கட்டும்.

எம் உள்ளத்தில் நீர் பிரகாசியும்
அதை உம்மைப்பற்றி அறிவால்
என்றும் நிரப்பிடும் உம்மை
அறிவதே எமக்கு நித்திய ஜீவன்.

அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்

யூலை 12

“அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்” ஏசாயா 8:14

இது இயேசுவைப்பற்றி ஏசாயா கூறிய வார்த்தைகள். தேவ கோபாக்கினைக்குத் தப்பித்து, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கும் சாத்தானுடைய பொல்லாத சோதனைக்கும் நாம் தப்பி சுகமாயிருக்கப்பட்ட பரிசுத்த ஸ்தலம் அவர்தான். சத்துருக்களுக்கும், புயலுக்கும், துன்பங்களுக்கும் நாம் தப்பி ஓடவேண்டிய அடைக்கலப் பட்டணம் அவர்தான். இந்தப் பரிசுத்த ஸ்தலத்தில்தான் நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும், அங்கீகாரத்தோடும் கிருபாசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனை நாம் ஆராதிக்கலாம். கிறிஸ்துவினாலே தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்தி நாம் அறிய வேண்டிய காரியங்களைப்பற்றி நமக்குப் போதிப்பார். இந்தப் பரிசுத்த ஸ்தலத்தில் நமக்கு வேண்டிய சகலமும் பயத்தினின்று விடுதலையும், சத்துருக்களை எதிர்க்க பலனும் துன்பங்களின் உதவியும், துக்கங்களால் உள்ளான பரிசுத்தமும், இந்த உலகத்தில் இருக்கும் மட்டும் சுகமும் கிடைக்குமென்று எதிர்பார்க்கலாம்.

நண்பரே, எவ்வகை துன்பத்திலும் நீ இயேசுவண்டை போக வேண்டும். உன் தேவை யாவையும் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள பார்க்க வேண்டும். தேவன் உனக்கு எண்ணளவு கிருபையுள்ளவரென்று காட்டி எல்லா மெய் விசுவாசிகளுக்கும் கிடைக்கும் பாக்கியம் இன்னதென்று அவர் விவரிக்கிறார். அவர் உன் பரிசுத்த ஸ்தலமாய் இருக்கிறாரா? நீ தேவனைக் கிறிஸ்துவுக்குள் எப்போதாவது சந்தித்ததுண்டா? நீ கிறிஸ்துவில் தேவனைத் துதிப்பது உண்டா? அவர் உனக்குப் பரிசுத்த ஸ்தலமானால் அவரை மகிமைப்படுத்தப் பார். எந்த ஆசீர்வாதத்தையும் அவரிலே பெற்றுக்கொள்ளத் தேடு. எந்தத் துன்பத்திலும் மோசத்திலும் அவரண்டை போய் அப்படிப்பட்ட மகிமையின் நிலை உனக்குக் கிடைத்ததற்காக அவரை ஸ்தோத்திரி. இங்கே நீ சுகபத்திரமாய் இருக்கலாம். இங்கே உனக்குச் சமாதானம் உண்டு. கிருபையும் இருக்கும்.

இயேசுவில் எனக்கு
சுகம் பெலன் யாவும் உண்டு
இரட்சகரே நீரே என்றும்
என் அடைக்கலமாய் இரும்.

Popular Posts

My Favorites

உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்

டிசம்பர் 22 "உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்" யோவான் 13:15 இயேசு கிறிஸ்து காட்டின மாதிரியின்படியே நீ நடக்க ஆயத்தமா? அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா? அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா? அவருடைய மாதிரியின்படி நடவாமல்,...