கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு

யூன் 20

“‘கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு.” உபா. 32:9

தேவன் என் பங்கு என்று சொல்லும்போது நாம் நன்றியறிதலாலும், சந்தோஷத்தாலும் நிரப்பப்படுகிறோம். தேவன் தம் ஜனங்களுடைய பங்கென்பதே நம்மை அதிசயத்தினாலும், ஆச்சரியத்தினாலும், நிரப்பத்தக்கது. அவர் எவ்வளவோ பெரியவர். இவர்கள் எவ்வளவோ அற்பர். அவர் எவ்வளவோ பரிசுத்தர். மகிமை நிறைந்தவர். இவர்கள் எவ்வளவோ கொடியவர்கள். ஆனால் பூமியில் எல்லாரயும் பார்க்கிறவர் இந்த ஜனத்தை மட்டும் தனக்காகத் தெரிந்துகொண்டார். கொடுர பகைவன் வலையிலிருந்து மீட்டு தம் பக்கம் இழுத்து, தமது நேசத்தை அவர்கள்மேல் வைத்து, தமக்குச் சொந்தம் பாராட்டுகிறார். தம்முடைய ஆலயமாக அவர்களில் வாசம்செய்து அவர்களைத் தம் பிள்ளைகளாக ஆதரித்து, அவர்களை மோட்சகரை சேர்ப்பார். அவர்கள் கர்த்தருடைய பங்கு. அவருடைய சுதந்தரம். அவருடைய திராட்சத்தோட்டம். அவருடைய பூங்கா.

விசுவாசியே! கர்த்தர் உன்னைத் தம் பங்கென்று நினைத்து உன்மேல் கவனம் வைத்ததை நினைத்துப்பார். முன்னே நீ திரிந்து அலைந்த ஆடாய் இருந்தாய். இப்போது உன் ஆத்தும மேய்ப்பனும், கண்காணியுமானவரிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறாய். தேவதூதர்களையே அவர் தம் பங்கென்றும் ஆபரணங்களென்றும் சொல்லவில்லை. ஆனால் உன்னை அப்படி சொல்லி அழைத்திருக்கிறார். ஆகவே அவரோடு உண்மையான மணவாட்டியாக அவருடன் ஐக்கியப்பட்டு நடந்து பரமவீடு போய்ச்சேர கவனமாயிரு. அவரின் கிருபைக்குச் செலுத்தவேண்டியதைச் செலுத்து. ஏனென்றால் தேவனின் சுத்த தயவால் நீ மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கிறாய்.

தேவ பக்தர்கள் அவர் பங்கு
இராப்பகல் அவர்களைக் காப்பார்
அதே இயேசுவின் களிப்பு
அதில் அவர் மகிழ்வார்.

ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு

யூன் 22

“ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு.” பிலி. 2:14

சுவிசேஷத்தைப் பிடித்துக்கொண்டு கிறிஸ்துவானவரைக் குறித்த வாக்குத்தத்தத்திலும் அவருடைய கிரியையிலும் உள்ள ஜீவனை இது வெளிப்படுத்துகிறது. குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்டவர்களுக்கு ஜீவனை தேவனுடைய இலவச ஈவாகக் கொடுக்கிறது. வசனம் ஆவியானவரின் வல்லமையினால் ஜீவனை அளிக்கப் பயன்படுகிறது. இந்த ஜீவ வசனம்தான் தேவ தயவிலும், கிறிஸ்துவின் ஐக்கியத்திலும், ஆவியானவரைப் பெறுவதிலும், ஜீவ வழியில் சேர்ப்பதிலும், ஆக்கினைத் தீர்ப்புக்கு விலக்குவதிலும், நித்திய மகிமைக்கு சேர்ப்பதிலும் நம்மை நடத்துகிறது. இந்தச் சுவிசேஷம் நமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்காக நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வசனத்தை நாம் அந்தகாரத்தில் வெளிச்சத்தைப்போலவும், பசியினால் வருந்தும் பாவிக்கு உணவுப்போலவும், ஆயுள் குற்றவாளிக்கு மன்னிப்புப்போலவும், மீட்கப்பட்டவர்களுக்கு சட்ட நூலாகவும் தூக்கிப் பிடிக்க வேண்டும். தேவ ஊழியத்தில் பரிசுத்த நடத்தையாலும், கனியுள்ள வாழ்க்கையினாலும், அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். அன்பர்களே, சுவிசேஷத்தை ஜீவனுள்ள வசனமாக ஏற்றுக்கொள்வோமாக. அதைப் பிறர்க்குச் சொல்லுவது நம்முடைய கடமையென்று எண்ணுவோமாக. அந்தக் கடமையைச் சரியானபடி நிறைவேற்றுகிறோமா என்று நம்மை நாமே கேட்போமாக. அச்சிட்டுள்ள அவர் வசனத்தை வாங்கிப் பிறர்க்குக் கொடுப்பதினாலும் அவ்வாறு செய்பவர்களுக்கு உதவி செய்வதினாலும் ஜீவ வசனத்தைத் தூக்கிப் பிடிப்போமாக.

நன்றி உள்ளவர்களாய் என்றும்
சேவை செய்வோம் அவருக்கு
நம் இயேசுவைப் புகழ்ந்து
நம்மையே அவருக்குக் கொடுப்போம்.

சிலுவையைப்பற்றி வரும் இடறல்

யூன் 06

“சிலுவையைப்பற்றி வரும் இடறல்.” கலா. 5:11

சிலுவையில் அறையப்பட்ட ஒரு யூதனாலே இரட்சிப்பு உண்டு என்கிற உபதேசம் பவுல் அப்போஸ்தலனுடைய காலத்தில் பெரிய இடறலாய் இருந்தது. அதனால் அநேகர் இடறி விழுந்து கெட்டுப்போனார்கள். கிறிஸ்துவை விசுவாசிப்பதினால்மட்டும் நிறைவான இரட்சிப்பு உண்டு என்கிற உபதேசம் இன்னும் அநேகருக்கு இடறலாய்த்தான் இருக்கிறது. சுபாவ மனுஷன் தான் விசேஷத்தவன் என்றும் தான் ஏதாவது சாதிக்க வேண்டுமென்றும், தன்னை எல்லாரும் மேன்மையாக எண்ணவேண்டுமென்றும் ஆசைக்கொள்ளுகிறான். ஆனால் கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பைக் குறித்த உபதேசத்திற்கு முன்பாக மனுஷன் ஒன்றுமில்லை.

என்றும் கிறிஸ்துதான் எல்லாவற்றிற்கும் எல்லாம் என்றும், சிலுவையில் அறையப்பட்டவர்தான் நாம் விசுவாசிக்க தக்க இலக்கு என்றும், இது நம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரம் என்றும், இதுவே எல்லாம் ஆசீர்வாதமும் பாய்கிறதற்கு வாய்க்கால் என்றும் நமக்கு முன்னிருத்துகிறது. தேவ அன்பு நம்மை சிலுவையைப் பார்ம:மு கவனித்து, அதையே வாஞ்சிக்கும்படி செய்கிறது. இச்சிலுவை யோக்கியனையும், அயோக்கியனையும், ஞானியையும், வைத்தியக்காரனையும், ஏழையையும், ஐசுவரியவானையும் ஓரே வகையாய் இரட்சித்து ஆண்டவர் முடித்த கிரியைகளை எல்லாரும் ஒன்றுபோல் பற்றிப்பிடிக்கச் செய்து தேவ சமுகத்தில் எந்த மனிதனும் மேன்மைப் பாராட்ட கூடாதென்றே போதிக்கிறனது. சிலுவை மனிதனுடைய பெருமைக்கு பெரிய இடறல். மனுஷீகத்தின்படி சுவிசேஷம் ஒருவனையும் நிதானியாமல் இயேசுவைச் சுட்டிக்காட்டி, நெருக்கமான வாசல் வழியாய், இடுக்கமான பாதையில் நடத்தி, இரட்சிப்புக்குத் தன்னை வெறுத்தல், ஒழித்தல் அவசியமென்று போதித்து, ஒன்று கிறிஸ்துவை விசுவாசி, அல்லது கெட்டுப்போ என்கிறது. இதுவே சிலுவையின் இடறல்.

எவ்வசை நல் ஈவும்
இயேசுவாலே வரும்
அவர் சிந்தின இரத்தம்
நீங்கா தேவ வருத்தம்.

தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்

யூன் 18

“தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.” யோபு 15:4

பக்தன் யோபுக்கு, விரோதமாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தை, நம்மில் அநேகருக்கு விரோதமாகவும் சொல்லப்படலாம். ஜெபமானது விசேஷித்த சிலாக்கியமாக எண்ணப்பட்டு, புத்திரசுவிகார ஆவியினால் அந்தச் சிலாக்கியத்தை அனுபவித்தாலும் நாம் இந்த உலக சிந்தைக்கு இடங்கொடுத்தால் அது இன்பமான காரியமாயிராமல் பாரமான கடமையாய் விடும். நாம் வெறுப்பு உள்ளவர்களாய் குளிர்ந்து உயிரற்றுப்போகிறதினால் கர்த்தரை விட்டு தூர விலகிப் போகிறோம். சரியானபடி இவை நம்மை அவர் சமுகம் கொண்டுப்போக வேண்டும்.

தேவ சமுகத்தில் நம்மை வழிநடத்த, நல்ல இருதயம்வேண்டும். நல்ல நேரம் வரட்டும், ஏற்ற சமயம் கிடைக்கட்டுமென்று இல்லாமல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் சமுகம் தேடி போக வேண்டும். ஜெபம் குறையும்போது நாம் ஆவியின் சிந்தை உடையவர்களாய் இருந்தாலும் சீக்கிரம் குளிர்ந்து கவலையற்று பெலனற்றுப்போவோம். பாவம் நமக்குள் பெலன்கொண்டு நற்குணங்கள் குறைந்து, ஜெபத்தியானம் குறைந்து, தேவ சமாதானம் கலைந்துப்போகும். நம் ஆசைகள் மாம்சத்துக்கு உரியவைகளாகும். ஆகவே மெய்மார்க்கம் வாடிவதங்கி, அழிந்துப்போகிற உலக பொருளை பெரிதென்றெண்ணி, கிருபையின் எத்தனங்கள் பலனற்றதாகி, சாத்தான் நம்மேல் வெற்றி அடைவான். ஜெபத்தியானத்தைக் குறைப்பது வேத வசனத்துக்கு நேர் விரோதமானதாகும். அதனால் சாத்தானுக்கு இடங்கொடுத்து, பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துவதால், எல்லாம் கேடாய் முடியும்.

ஜெபியாதவனுக்கு
மகிழ்ச்சி ஏது?
கேளாதவனுக்கு
கிடைப்பதெப்படி?

அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்

யூன் 14

“அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.” மத். 27:35

பிதா அவரை ஒப்புக்கொடுத்தார். யூதாஸ் காட்டிக்கொடுத்தான். அப்போதுதான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவரின் மரணத்தில் தேவன் கொண்ட நோக்கம் என்னவென்று நாம் யோசிக்க வேண்டும். தமது நீதிக்குத் திருப்தியுண்டாக தம்முடைய இரட்சிப்பில் தம் ஜனங்களுக்கு பங்கம் வராது காக்க, தம் ஞானத்தையும், இரக்கத்தையும் வெளிப்படுத்த நம்முடைய பாவங்களை நீக்கி அன்பின் ஆச்சரியங்களை விளக்க வேண்டுமென்பதே அவர் நோக்கம். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் நமக்குக் காட்டினது என்ன? அவர் குழந்தைப்போன்ற கீழ்ப்படிதல், பிதாவினிடத்தில் அவர் உறுதியாக வைத்த நம்பிக்கை, துன்பத்தில் காட்டின பொறுமை. சாந்தத்தோடு கூடிய மன்னிக்கிற குணம். தம் மக்கள்மீது வைத்த ஆச்சரியமான அன்பு. தேவ சித்தத்திற்கு அவர் கீழிருந்த விதம் போன்ற பலவற்றை நாம் பார்க்கிறோம்.

இவற்றிற்குப் பதிலாக மனிதனிடத்திலிருந்து இவருக்கு கிடைத்ததோ, கொடிய நன்றி கேடு. சொல்லி முடியா கொடுரம். அளவுக்கு மீறிய பெருமை. மிக மிஞ்சின அறிவீனம். உறுதியற்ற குணம். இவைகளைத்தான் தேவனுக்கு முன் காட்டினார்கள். பொருளாசையின் வலிமையும், தன்மையும் யூதாசினிடத்தில் பார்க்கிறோம். சுய நீதிக்குள் மறைந்துக்கிடக்கிற பொறாமையும், கொடுமையும் பரிசேயரிடத்தில் பார்க்கிறோம். மனுஷனுக்குப் பயப்படுகிற பயத்தால் உண்டாகும் கேட்டைப் பிலாத்துவிடம் பார்க்கிறோம். நல்லோரிடத்தில் காணப்படுகிற பெலவீனம் அவருடைய சீஷர்களிடத்திலும் காணப்படுகிறது. பாவத்தின் தன்மை மனிதரிடத்தில் தௌவாய்க் காணப்படுகிறது. மனிதருடைய சரியான தன்மையும் வெளியாகிறது.

ஜீவாமிர்தம் இதுவல்லோ
அளவில் அடங்கா அன்பு
பாவிக்கடைக்கலம் இதுவல்லோ
தூதர் பாடும் பாட்டு.

Popular Posts

My Favorites