தினதியானம்

முகப்பு தினதியானம்

நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்

செப்டம்பர் 05

“நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்” ஆப. 3:18

இது நல்ல தீர்மானம். நமக்கிருக்கும் எந்தச் சூழ்நிலை மாறினாலும், மனிதர்கள் மாறினாலும் கர்த்தர் மாறாமல் இருக்கிறார். வெளிச்சம் இருட்டாயும், சாமாதானம் சண்டையாயும், இன்பம் துன்பமாயும், சுகம் வியாதியாயும் மாறினாலும் நாம் அவருக்குள் மகிழ்ச்சியாய் இருக்கலாம். நமக்கு சம்பவிக்கும் காரியங்கள் எப்படியிருந்தாலும் நாம் இன்னும் கர்த்தருக்குள் மகிழலாம். ஆபகூக்கைப்போல நாம் இருக்கவேண்டுமானால், கர்த்தர் நமக்குச் சொந்தமாக வேண்டும். அவருடைய வாக்குத்தத்தங்கள் நம்முடையதாக வேண்டும்.

அவருடைய நாமத்தைக் குறித்து நம்முடைய மனதிற்கு தெளிவான, வேத வசனத்திற்கு இசைந்த எண்ணங்கள் உண்டாக வேண்டும். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது. நாம் தேவனோடு ஒப்புரவாயிருக்கிறோம். ஆகவே, அவர் நம்முடைய உத்தம சிநேகிதன் என்று உணர வேண்டும். அப்போது எக்காலத்திலும் அவரில் நாம் மகிழலாம். அவரின் நிறைவுகள்தான் நமக்குப் பொக்கிஷம். அவருடைய வல்லமை நமக்கு ஆதரவு. அவருடைய அன்பு நமக்கு ஆறுதல். அவருடைய வாக்கு நமக்குப் பாதுகாப்பு. அவருடைய சிம்மாசனம் நமக்கு அடைக்கலம். அவருடைய சமுகம் நமக்குப் பரலோகம், தேவனிடத்திலுள்ள எதுவும் நமது சுகத்தை விருத்தியாக்கும்.

அன்பானவர்களே, இந்த இரவு கர்த்தரிடத்தில் போய், அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து வந்துள்ளோம் என்று சொல்லுங்கள். நீங்கள் அவருடைய நன்மையை உணர்ந்து, அவருடைய வாக்குத்தத்தங்களை எடுத்துச் சொல்லி, அவருடைய கிருபைக்காகக் கெஞ்சுகிற சத்தத்தை அவர் கேட்கட்டும்.

தேவனே என் ஆஸ்தி
என் மகிழ்ச்சியின் ஊற்று
வறுமையிலும் அது வற்றாது
மரணத்திலும் ஒழியாது.

அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

மார்ச் 19

“அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்.” சங். 23:3

காணாமற் போன ஆட்டைப்போல் விழி தப்பினோன். நாம் எப்போதும் அலைந்து திரிய ஏதுவானவர்கள். அப்படி அலைந்துதிரியும்போது அந்த நல்ல மேய்ப்பர் நம்மைத் தேடி கண்டுபிடிக்குகும் வரையில், நாம் சரியான பாதைக்குத் திரும்புகிறதேயில்லை. அவருடைய பார்வையோ, அலைந்து தரிகிற ஆட்டின்மேல்தான் இருக்கிறது. அவருடைய உள்ளமோ காணாமற்போன ஆட்டின்மேலே இருக்கிறது. அதைக் கண்டு அதன்மேல் அன்புகாட்ட தகுந்த நேரம் வரும் என்றே காத்திருக்கிறார். நயமாயும், பயமாயும், கண்டித்தும், போபித்தும் அதைப்பின் தொடர்ந்து போய் கண்டுபிடித்து வருகிறார்.

தொழுவத்தைவிட்டு அலைந்து திரிவது, புத்தியீனமென்று அந்த ஆத்துமா உணரும்போது, அலைந்து திரிகிறதினால் மனவருத்தமடைந்து, உள்ளுக்குள்ளே ஜெபித்து, எப்போது திரும்பலாமென்று கவலைப்பட்டு மேய்ப்பனின் அடிகளைத் தேடி வந்து, தன் பாவத்தையும், அறியாமையையும் அறிக்கையிட்டு, இரக்கத்திற்காக கெஞ்சி, உம்முடைய இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்குத் திரும்ப கட்டளையிடும் என்று சத்தமிடும். மேய்ப்பனோ தன் கரத்தினால் அதைத் தூக்கி, தோளின்மேல் போட்டு அன்பாய்க் கண்டித்து தொழுவத்திற்குக் கொண்டு போகிறான். கிருபையால்தான் இப்படி திருப்ப ஏதுவுண்டு.

மேய்ப்பனுடைய கரிசனையில்தான் அலைந்து திரிகிற ஆத்துமா சீரடையும். சீர்ப்பட்டவன் மேய்ப்பனால் சுத்தமாக்கப்படுகிறார். அவன் மனம் மிருதுவாகிறது. பாவத்தின்மேல் பகை ஏற்படுகிறது. தன்னைத்தான் வெறுத்து தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறான். மேய்ப்பனின் இரக்கமே நம்மை இப்படி நடத்துகிறது. நம்மை மீட்டு மேய்ப்பனின் இரக்கத்தை அனுதினமும் நினைப்போமாக.

வழி தப்பி திரிய
என் இருதயம் பார்க்கிறது
உமக்கே அதைப் படைக்கிறேன்
அதை நீரே திருத்துமேன்.

என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்

யூலை 22

“என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.” நீதி. 8:32

கர்த்தருடைய வழிகள் பலவகையானவை. அவை எல்லாம் மகிமைக்கும், கனத்திற்கும், சாவாமைக்கும் நித்திய ஜீவனுக்கும் நம்மை நடத்தும். இரட்சிப்பின் வழி குற்றத்தினின்றும் பாவத்தின் வல்லமையிலிருந்தும், தண்டனையினின்றும் நம்மைத் தப்புவிக்கும். சமாதான வழி சமாதானத்தை அடையவும் அதைக் காத்துக் கொள்ளவும் ஏற்ற பரிசுத்த வழி ஆகும். அதிலே சமாதானத்தை அடைந்து அதில் விருத்தியடைவோம். சத்திய வழியும் உண்டு. சத்தியத்தை அறிந்து, அனுபவம் பெற்று அதில் நடந்து வளருவோம். இன்னும் மேலான வழி அன்பின் வழியாகும். அதனால் நமது விசுவாச மார்க்கத்தை அலங்கரித்து பிறர்க்கு நம்மை செய்கிறோம். தங்கள் கண்களை அந்த வழிகளின்மேலும், இருதயத்தை அவ்வழிகளிலும், தங்கள் பாதங்களை அவைகளிலும் விசுவாசிகள் வைக்கிறார்கள்.திடமாய்ப் பார்த்து, செம்மையானதைத் தெரிந்து, பயபக்தியாய் நடந்து, விழிப்பாய் ஜீவனம்பண்ணி, விருத்தி அடைந்து, மேன்மையாய் நடந்து, மகிமையாய் முடிக்கிறார்கள். இதை வாசிக்கும் நண்பரே, நீவிர் கர்த்தருடைய வழிகளில் நடக்கிறீரா? மற்ற எல்லாவற்றையும்விட அவருடைய வழிகளையே நேசித்து அவைகளை நல்லது என்று எண்ணுகிறீரா?

விசுவாசத்தால் மட்டுமே இவ்வழிகளில் பிரவேசிக்க முடியும். அவற்றிலே நடக்கவும் முடியும். விசுவாசத்தினாலே கிருபையைக் கொண்டு இரட்சிக்கப்படுகிறோம். விசுவாசத்தினாலே தேவனோடு சமாதானம் பெறுகிறாம். விசுவாசத்தினால் இதயம் சுத்தமாகிறது. தேவ சத்தியத்தை விசுவாசத்தால் மட்டுமே அறிகிறோம். விசுவாசம் அன்பினால் கிரியை செய்கிறது. என் வழிகளைக் காப்பார்கள் என்று வேத வசனம் புகழ்ந்துக் கூறுகிறது.

அலைந்து திரியும் என்னை
உம்மிடம் வைத்துக்கொள்ளும்
நீர எனக்குப் போதியும்
என் நாவு உம்மைப்பாடும்.

சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்

மார்ச் 29

“சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” மத். 28:20

அப்படியானால் இயேசு இந்த நாளிலும் நம்முடன் இருக்கிறார். இனி சகல நாள்களிலும் இருப்பதுப்போல் இப்போதும் இருக்கிறார். இனிமேலும் இருப்பார். நம்மை பாதுகாக்க, ஆறுதல்படுத்த, நமக்கு பயத்தை நீக்கு, நமக்குள்ளே நம்பிக்கையைப் பிறப்பிக்க அவர் நம்மோடிருக்குpறார். நம்மோடு தம்மை ஒன்றாக்கிக் கொள்ளுகிறார். நமது காரியங்களைத் தமது காரியங்களாக்கிக் கொள்ளுகிறார். அவர் நம்மோடிருப்பேன் என்று வாக்களித்தபடியால் அந்த வாக்கு நம்மை காக்கிற கேடகம். நம் இருதயத்தின் பலன். நமது சந்தோஷத்தின் ஊற்று. நாம் தனிமையாய் ஓர் அடிவைத்தாலும் நம்மைவிட்டு போகமாட்டார். ஒரு நொடிப்பொழுதும் தமது கண்களை நம்மிதிலிருந்து எடுக்கமாட்டார்.

ஓர் அன்பு தாயிக்குத்தன் ஆசை குழந்தையின்மேல் இருக்கும் பாவத்தைவிட நம்மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். இவ்வுலக கட்டுகளைவிட கிருபையின் கட்டுகள் அதிக பலத்ததும் உருக்கமுமானவைகள். இயேசுவானவர் நம்மோடிருக்கிறார். அவர் எப்போதும் நமக்க முன்னே இருக்கிறாரென்று நமது மனிதல் வைக்க வேண்டும். இவ்வுலகத்தில் கடைசி மட்டும் ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறவர் அவரே. ஆதலால் ஒன்று மட்டும் நமக்கு நிச்சயமாய் கிடைக்கும். அது இயேசுவின் சமூகம். அது தேவதூதர்களுக்குச் சந்தோஷத்தையும், மோட்சத்தில் ஆனந்தத்தையும், நித்திய நித்திய காலமாய் மகிமையையும் கொடுக்கும். ஆகNவு, ‘இதோ உலகத்தின் முடிவு பரியந்தமும் சகல நாள்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்ற இயேசுவின் வாக்குகளை நம்பி இந்த இராத்திரியில் படுக்கச் செல்வோமாக.

என் ஜீவ காலம் எல்லாம்
உமக்கொப்புவிக்கிறேன்
உம்மைத் துதிப்பது இன்றும்
என்னோடிருப்பேன் என்றதால்.

எனக்கு எதிரே உத்தரவு சொல்

செப்டம்பர் 08

“எனக்கு எதிரே உத்தரவு சொல்” மீகா 6:3

நம்முடைய நடத்தை பல நேரங்களில் மாறக்கூடியதாய் இருக்கிறது. தேவனைவிட பெரியதாக உலகத்திலும், உலகத்தில் உள்ளவற்றிலும் அன்பு கூர்ந்தால் தேவன் அங்கு அசட்டை செய்யப்படுகிறார். நாம் அவரைக் குறைவுபடுத்துகிறோம். அவரை நேசிக்காமல் இருக்கும்போது, அவருக்கு மிகுந்த விசனமளிக்கிறோம். இதைக் கண்டு, அவர் மனம் நொந்து, என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? எதினால் உன்னைத் துக்கப்படுத்தினேன் எனக்கு எதிரே பதில் சொல் என்கிறார்.
நீ தனி ஜெபத்தை அசட்டை செய்கிறாயா? கிருபையின் வசதிகளைக் குறித்து கவலையற்றிருக்கிறாயா? வேதாகமத்தை வாசியாமல் அசட்டையாயிருந்து அதை ஒதுக்கி வைத்து விட்டாயா? தேவனே நேசிக்க வேண்டிய நீ உலகத்தின்மேல் அன்பு செலுத்துகிறாயா? ஏன் அவரை விட்டுப் பின்வாங்கினாய்? இதனாலேயே அவர் உன்னிடம் இவ்வாறு கூறுகிறார்.

மேலும் அவர், என்னில் நீ கண்ட குறை யாது? என் அன்பில் குறை கண்டாயா? என் வாக்குகளை நான் நிறைவேற்றவில்லையா? தேவனுக்குரிய மகத்துவமான காரியங்களை நான் செய்யவில்லையா? ஏன் என்னை அசட்டை செய்தாய்? என்னைவிட உலகத்தையும், சத்துருவையும் ஏன் அதிகம் நேசித்தாய்? எனக்கு எதிரே உத்தரவு சொல். என்று கேட்கிறார். விசுவாசியே உன்னிடம் தவறுகள் இல்லையா? உன் ஆண்டவரை நீ துயரப்படுத்தவில்லையா? உன் பாவங்களை அறிக்கை செய்து, மனந்திரும்பி, ஆண்டவரின் அன்பினுள் வந்து சேர். அவருடைய சமுகத்திற்குள் வா. அவருடைய அன்புக்குள் உன்னை மறைத்துக்கொள்.

நான் நிர்பந்தன், தேவா
என்னைத் தள்ளாதிரும்.
உமது சமுகத்திலேயேதான்
நான் என்றும் மகிழட்டும்.

தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்

டிசம்பர் 05

“தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்” பிர. 9:7

நாம் ஆண்டவருக்கு சத்துருக்களாக மாறும்போதும், அவருக்கு எதிரடையாய் செயல்படும்போதும், தேவன் நாம் செய்வதை அங்கீகரிக்கவேமாட்டார். அப்படி ஒருவேளை அவர் அங்கீகரிப்பாரானால், அது அவர் கலகக்காரரையும், துரோகிகளையும் அங்கீகரித்தது போலாகிவிடும். நாம் தேவ குமாரனை எப்பொழுது ஏற்றுக்கொள்ளுகிறோமோ அப்பொழுதுதான் அவர் நம்மை அங்கீகரிப்பார். சுவிசேஷம் இயேசு நாதரைத் தேவன் கொடுத்த ஈவாகவும், இரட்சகராகவும் நமக்குக் காட்டுகிறது. பொதுவாக நாம் இந்த ஈவைத்தான் அசட்சை செய்கிறோம். இந்த இரட்சகரைத்தான் புறக்கணிக்கிறோம். ஆனால், தூய ஆவியானவர் நம்முடைய ஆத்துமாக்களை உயிர்ப்பித்து நமக்கு ஒளி தந்தார்.

அவர் நம்முடைய இருதயத்தில் விசுவாசத்தை உண்டு பண்ணினபோதோ, நாம் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டோம். தேவனுடைய கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்டதால், நம்மை அவர் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகிறார். நாம் அவரில் மகிமை உள்ளவர்களாக மாற்றுப்படுகிறோம். அவருடைய அருமையான பிள்ளைகளாக மாறுகிறோம். அவருக்காக ஏதாவது நாம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் நமக்கிருந்தால், அவர் அதையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகிறார். இது எத்தனை இன்பமான காரியம்! எவ்வளவு மகத்துவமானது! எத்தனை மேன்மையானது! இதை நாம் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாகும்படி தூய ஆவியானவர்தாமே நம்மை நடத்துவாராக.

இயேசு என்னை ஏற்றுக்கொண்டார்
என்னை அவர் அங்கீகரிப்பார்
இயேசுவுக்காய் என்றும் உழைப்பேன்
என் இயேசுவின் நாட்டை சேருவேன்.

அவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை

செப்டம்பர் 15

“அவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை” தானி. 4:35

தேவனுடைய கை என்பது அவருடைய செயல். அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் விளங்கும் அவருடைய ஞானம், வல்லமை, மகத்துவம் போன்றவைகளே. அவுருடைய நோக்கத்தை அறிந்து கொள்ள ஒருவனாலும் கூடாது. அவர், தமது நோக்கத்தை உறுதியாய்ச் கொண்டு செயல்படுகிறார். எக்காரியமாயினும் அவர் மிகவும் எளிதாக முடித்துவிடுவார். அவர் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் அவருடைய கரங்களில் இருக்கிறபடியால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காக அவருடைய கரம் பாதுகாப்பாக இருக்கிறபடியால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காக அவருடைய கரம் கிரியை செய்கிறபடியால் சேதமின்றி வாழ்கின்றனர். அவர் தம்முடைய வசனங்களுக்கேற்பத் தமது செயல்களை நடப்பிக்கிறார்.

அவர் சொன்னது சொன்னபடி நிறைவேற வேண்டும். நாம் நம்மை அவரிடம் சமர்ப்பித்துக் கொண்டால் சுகபத்திரமாயிருக்கலாம். அன்பானவர்களே, தேவனுடைய கரம் உங்கள்மேல் உயர்ந்திருக்குமானால், உங்களுக்கு ஒரு குறைவும் வராது. அவருடைய கைகள் உங்களைத் தாங்குகிறபடியால் நீங்கள் விழமாட்டீர்கள். அவருடைய கரத்தின் செயல்கள் யாவும் உங்களுக்கு நம்மையாகவே முடியும் என்று விசுவாசியுங்கள். உங்களுடைய சத்துருக்களிடமிருந்து அவருடைய கை உங்களை மீட்கும். உங்களை ஆதரித்து, உங்கள் குறைவுகளை நிறைவாக்கும் வனாந்தரத்தில் நடந்தாலும் அவருடைய கரத்தால் நீங்கள் காக்கப்பட்டு உயர்த்தப்படுவீர்கள். அனைத்தையும் அவருடைய கரம் ஒழுங்குபடுத்தும். சொல்லிமுடியாத அன்பினால் அவருடைய உள்ளம் நிறைந்திருக்கும். உங்களுக்காக அவர் செயல்படும்பொழுது, எவராலும் அவரைத் தடுத்து நிறுத்தமுடியாது.

தெய்வ கரங்கள் தாமே உனை
பெலப்படுத்தி என்றும் காக்கும்
தம் வாக்குகளை நிறைவேற்றி
எப்போதுமவர் வெற்றிதருவார்.

தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்

யூலை 21

“தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்” எபி. 12:24

பாவத்திற்காகச் சிந்தப்பட்ட இரத்தம் பாவியின் மேலே சிந்தப்பட்டது. முந்தினது பாவநிவர்த்தியை உண்டாக்கிற்று. பிந்தினது செலுத்தினவன் சுத்தமானான் என்று காட்டிற்று. இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்ட இரத்தம். அது பாவிகளுக்குச் சமாதானத்தை உண்டாக்கிற்று. சமாதானத்தைக் கூறுகிறது. அது சகல பாவத்தினின்றும் நம்மைச் சுத்திகரிக்கிறது. இது நமக்குத் தவறாமல் புண்ணியமாய்ப் பலிக்கத்தக்கதாய் நடப்பிக்கிறது. அது காயப்பட்ட மனச்சாட்சியை ஆற்றி, நம்முடைய ஊழியத்தைச் சுகந்த வாசனையாக்கி உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறது. பஸ்காவின் இரத்தம் இஸ்ரவேலரைக் காத்ததுப்போல இயேசுவின் இரத்தம் நம்மை பத்திரப்படுத்தி, நித்திய நீதிக்குத் திருப்தி உண்டாக்குகிறது.

இந்த இரத்தம் குற்றவாளிக்கு மன்னிப்பையும், செத்தவனுக்கு ஜீவனையும் சிறைப்பட்டவனுக்கு விடுதலையையும், கிருபையற்றவனுக்கு கிருபையையும் கொடுக்கிறது. இந்தத் தெளிக்கப்பட்ட இரத்தத்தண்டைக்குத்தான் விசுவாசிகளாக வருகிறோம். இந்த இரத்தம் நமக்காகப் பரிந்து பேசுகிறதைக் கேட்க வருகிறோம். ஆபேலின் இரத்தத்தைவிட அது மேலான காரியங்களைச் சொல்கிறது. தேவனண்டைக்கு நம்மை ஒப்புரவாக்குகிறதினால் அதன்மேல் நம்பிக்கை வைக்க வருகிறோம். அதை ருசிக்கவும், அதனால் ஏற்படும் பாக்கியத்தை அனுபவிக்கவும் வருகிறோம். இரக்கத்தையும் அவசியமான வேலைக்கு வேண்டிய கிருபையைப் பெற்றுக்கொள்ளவும், அவர் இரத்தமூலமே வருகிறோம். இதில் நாம் சந்தோஷப்பட வருகிறோம். ஏனெனில் அது ஆறுதலுக்கும், சந்தோஷத்திற்கும் ஊற்று. குற்றத்தால் வருத்தப்பட்டு, பயத்தால் கலங்கி, சாத்தானால் பிடிபட்டு, குறைவால் வருத்தப்பட்டு மரணம் நம்மை சமீபித்து வரும்போது நாம் அதனண்டையில்தான் போகவேண்டும்.

கிறிஸ்து சிலுவையில்
தன் குருதி சிந்தினார்
அவர் தேகம் பட்ட காயம்
எனக்களிக்கும் ஆதாயம்.

கர்த்தாவே என்னைச் சேதித்துப்பாரும்

யூலை 10

“கர்த்தாவே என்னைச் சேதித்துப்பாரும்” சங். 26:2

கர்த்தர் மனிதரைப் பார்த்து, ஒவ்வொருவனும் தன்னைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறார். தேவ பிள்ளை தன்னைச் சோதித்துப் பார்த்து தான் செய்தது போதுமென்றிராமல் தேவனை நோக்கி, கர்த்தாவே நீர் என்னை சோதித்துப்பாரும் என்பான். தன் இருதயம் மோசமானதென்று அறிந்து இன்னும் மிகுதியாக மோசப்பட்டு போவேமோ என்று பயப்படுகிறான். என்னதான் கேடுள்ள ஒருவனிருந்தாலும் அவன் நல்லதை அறியவே விரும்புகிறான். தன் இருதயம் செம்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிற ஒளியினிடம் வருகிறான்.

ஆத்துமாவில் தேவ கிருபை இருக்கிறது என்பதற்கு இது நல்ல அத்தாட்சி. தேவனால் போதிக்கப்படுபவர்கள்தான் கர்த்தாவே என்னைச் சோதித்துப்பாருமென்று கேட்பார்கள். சிநேகிதரே இன்று இரவு இப்படி ஒரு ஜெபத்தைபண்ணுவீரா? தேவன் உங்களை சோதித்து பார்ப்பது உங்களுக்குப் பிரியமா? கர்த்தாவே என் இருதயத்தை சோதித்துப்பாரும். நான் உமது கிருபையைப் பெற்றவனா? என் நோக்கங்களை சோதித்துப்பாரும். அவைகள் சுத்தமானவைகளா? அவை தேவ வசனத்தோடு ஒத்திருக்கிறதா? என் எண்ணங்களைச் சோதித்துப்பாரும். உம்முடைய மகிமையையும் சித்தத்தையும் நாடுகிறேனா என்று கேளுங்கள். உன்னை நீயே சோதித்துப் பார்ப்பது தான் இந்த ஜெபத்தின் நோக்கம். என்னைச் சோதித்துப்பாருமென்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். உத்தமன்தான் தன் காரியங்களை நன்றாய்ச் சோதித்துப் பார்க்க கேட்பான். உத்தம சிந்தையுள்ள கிறிஸ்தவர்கள்தான் தேவன் தங்களை ஆராய வேண்டுமென்று மனதார ஜெபம்பண்ணுவார்கள்.

என்னைச் சோதித்தறியும்,
உமது ஆவியை அருளும்
சூது கபடு ஒழியட்டும்
நான் உமதாலயம் ஆகட்டும்.

என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.

மே 22

“என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.” சங் 119:172

எல்லா கிறிஸ்தவர்களும் இப்படிச் செய்வார்களானால் உலகில் அறியாமை குறையும். தேவனுடைய வசனம் ஒன்றுதான் பெருமையாய்ப் பேச தகுதியுடையது. நாம் அதை வாசித்து¸ விசுவாசித்து¸ நேசித்து¸ அதன்படி செய்து அதை அனுபவித்து¸ மற்றவர்களுக்கும் சொல்லும்படித்தான் அது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது பாவிகளைச் சீர்ப்படுத்தும். ஆகவே அதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அது விசுவாசிகளை ஊன்றக் கட்டும். ஆகவே அதை அவர்களுக்குப் போதிக்க வேண்டும். அது பின் வாங்கிப் போனவர்களை செவ்வையான பாதைக்குத் திரும்பப்பண்ணும். ஆகவே அதை அவர்களுக்கு விளக்க வேண்டும். நம்முடைய ஆத்துமாக்களுக்கு அது ஆறுதலைக் கொடுக்கும். ஆகவே நாம் அதைத் தியானித்து மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும்.

அது தேவனை மகிமைப்படுத்தி இரட்சகரை உயர்த்தும். ஆகையால் நாம் தேவனை¸ நேசிக்கிறதினால் ஏவப்பட்டு அதை விளக்கிச் சொல்லவேண்டும். தகுந்த நேரத்தில் அன்போடும்¸ அறிவோடும்¸ நன்மை உண்டாக அதைச் சொல்ல வேண்டும். வசனம் விதைப்போன்றது. ஆத்திரக்காரனை பொறுமையுள்ளவனாக்கி¸ துக்கமுள்ளவனை ஆற்றி¸ அலைந்து திரிகிறவனை நல்வழிப்படுத்தி¸ மனம் வருந்துகிறவனுக்குச் சமாதானம் அளிக்கும். பசியுள்ளவனுக்கு அது போஜனம்¸ அறிவீனனுக்கு வெளிச்சம். பலவீனனுக்குக் கைத்தடி¸ யுத்த வீரனுக்கு பட்டயம்¸ களைத்துப் போனவனுக்கு மென்மையான தலையணை. ஆகவே கர்த்தருடைய ஒத்தாசையால் அவருடைய வசனத்தை விவரித்துச் சொல்ல தீர்மானிப்போமாக.

சத்தியத்தைப் போதியும்
உம்மைத் துதித்துப் போற்றுவேன்
சுவிசேஷ நற்செய்தியை
எங்கும் பிரஸ்தாபிப்பேன்.

Popular Posts

My Favorites

சகல கிருபையும் பொருந்திய தேவன்

ஏப்ரல் 01 "சகல கிருபையும் பொருந்திய தேவன்." 1. பேது.5:10 யேகோவா தேவன் தம்மைக் குறித்துச் சொல்வது எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது. நாம் தேவனது மேலான குணநலன்களையும் தகுதிகளையும் பார்த்துவிட்டு, அவருக்கு எதிராக தகாத பல காரியங்களையும் செய்து...