Home Blog Page 20

கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்

அக்டோபர் 18

“கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்” சங். 30:9

நமது வாழ்க்கையில் எப்பொழுதும் நமக்குத் தேவ ஒத்தாசை தேவை. நமக்குச் சாயம் செய்பவர் கர்த்தரே. அவர் நமக்குச் சகாயம் செய்ய நாம் அவரைக் கருத்தால் வேண்டிக்கொள்ள வேண்டும். பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய வாக்குகளை நாம் நமது ஜெபங்களாக்க வேண்டும். உமது வாக்கின்படியே எனக்கு ஆகட்டும் கர்த்தாவே என்று ஜெபிக்கும்பொழுதுதான் நமது ஜெபம் சரியானதாகிறது. இப்பொழுதும்கூட கர்த்தாவே, நீர் என்குச் சகாயராய் இரும் என்று கருத்தாய் ஜெபிப்போம். அநேகர் விழுந்து போகிறார்கள். நீர் என்னைத் தாங்காவிடில் நானும் விழுந்துபோவேன். என் சத்துருக்கள் பலத்திருக்கிறார்கள். என் இருதயம் கேடானது. மனுஷனை நம்புவது விருதா. என்னையே நான் நம்புவதும் வீண் அகந்தையாகும். உமது ஒத்தாசை இல்லாவிடில் உமது கிருபை என்னை வந்தடையாது. ஆகையால் கர்த்தாவே எனக்குச் சகாயராயிரும் என்று ஜெபி.

எந்தக் கடமையிலும், எந்தப் போராட்டத்திலும், எந்தச் சோதனையிலும் கர்த்தருடைய உதவிதான் நம்மைத் தூக்கிவிடும். எந்த நேரத்திலும் அவருடைய சகாயத்தைத் தேடும் ஜெபம் நமக்கு ஏற்றதாகும். அந்த ஜெபம் மெய்யானதாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். கர்த்தர் நமக்குச் சகாயராயிருப்பதனால் நமது கடமைகளை நாம் செவ்வனே நிறைவேற்றுவோம். நம் ஜெபங்களுக்குப் பதில் கண்டடைவோம். எத்துன்பத்தையும் மேற்கொள்ளுவோம். சகல குறைகளும் தீரும். துன்பங்கள் இன்பங்களாக மாறும்.

கர்த்தாவே, நான் பெலவீனன்,
உம்மையே பற்றிப் பிடிப்பேன்
நீர் என் துணை, என் நண்பன்
நான் வெற்றி பெற்றிடுவேன்.

சர்வ வல்லவருடைய சிட்சை

அக்டோபர் 17

“சர்வ வல்லவருடைய சிட்சை” யோபு 5:17

தேவனுடைய பிள்ளை எவரானாலும் அவருக்குத் தேவனுடைய சிட்சை உண்டு. அவர் சர்வ வல்லவருடைய அன்பினால் சிட்சிக்கப்படுகிறார். தேவன் அதிக ஞானமாகவே எப்போதும் சிட்சிக்கிறார். தேவ கிருபை நமக்கு அதிகமாக விளங்கவும், நல்வழிகளில் நாம் வளரவும், கனிதரும் வாழ்க்கையில் விளங்கவும் நம்மை அவர் சிட்சிக்கிறதுண்டு. நம்மைத் தாம் நேசிக்கிறதினால்தான் கர்த்தர் நம்மைச் சிட்சிக்கிறார். ஆதலால், நமக்குத் துன்பங்கள் நேரிடுகையில் நாம் அவைகளைத் தவறாக எண்ணலாகாது. அவைகள் யாவும் இரக்கங்கள். நமது நன்மைக்காகவே வருகிறவை. அவைகள் நமக்கு அவசியம் தேவை. கிருபையும் இரக்கமும், நிறைந்தவர் நமது பரமபிதா. அவர் நமக்கு என்றும் தீங்கு நினையார், அனுமதியார்.

நமக்குச் சோதனைகள் வரும்பொழுது எக்குற்றத்திற்காகத் தேவன் நம்மைத் திருத்த ஆசிக்கிறார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவர் ஞானமாக நம்மைச் சிட்சிக்கிறார் என்பதை அறிக்கையிட்டு, அதை அவர் நமக்கு ஆசீர்வாதமாக மாற்ற வேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். கர்த்தர் விரும்பும் கோல் துளிர்த்துப் பூத்துக் கனிகொடுக்கும். இளக்காரம் பெற்ற அடிமையாக இருப்பதைவிட, சிட்சை பெற்ற பிள்ளையாயிருப்பது நலம். இக்காலத்தில் நமக்கு நேரிடும் சிட்சை இனிவரும் நன்மைகளுக்கும், மகிமைக்கும், கடமைகளுக்கும் நம்மை நடத்தும். தேவனுடைய சிட்சை எல்லாம் நலம்தான். நாம் அவற்றால் நன்மையையே பெறுகிறோம். இன்று சிட்சை நமக்குத் துன்பமாய் காணப்பட்டாலும், இனிவரும் காலங்களில் அதனால் நமக்கு நீதியும், சமாதானமும் கிடைக்கும்.

கர்த்தாவே, என் துன்பத்தை
இன்பமாக மாற்றியருளும்
உம் சிட்சை ஆசீர்வாதமே
அதென்னைத் தூய்மையாக்கும்.

நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்கள்

அக்டோபர் 16

“நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்கள்” தீத்து 2:14

தேவனுடைய சுத்தக் கிருபையால் நாம் இரட்சிக்கப்பட அவருடைய மகிமையைத் தேட வேண்டும். நற்கிரியைகளுக்காகத்தான் நாம் கிறிஸ்து இயேசுவில் புது சிருஷடிகளாக்கப்பட்டோம். தேவனுடைய செயல்களில் சிருஷ்டிகளாகிய நாம் நன்மைகளைப் பெறக் கவனத்துடனிருக்க வேண்டும். நற்கிரியை செய்தால் மட்டும் போதாது, அதற்காகப் பக்திவைராக்கியமும் உள்ளவர்களாயிருக்க வேண்டும். அப்படியே மற்றவர்களையும் உற்சாகப்படுத்த வேண்டும். நமக்காகத் தம்மையே கொடுத்தவருக்கு நாம் எதையும் செய்யத் தயங்கக்கூடாது. நம்முடைய எண்ணங்களும், செயல்களும் தேவ வசனத்தால் நடத்தப்பட்டு, அவருக்கே மகிமையைக் கொண்டு வருகிறவைகளாக இருக்க வேண்டும்.

தேவன் நம்மைத் தெரிந்து கொண்டார் என்று நாம் பெருமையடைதல் கூடாது. நாம் பிதாவின்மேல் வைத்திருக்கும் அன்புக்குச் சமமாக அவருடைய மக்களுக்குப் பணிசெய்வதில் தவறக் கூடாது. தேவன் நமக்கு எதையும் செய்வார் என்ற எண்ணத்தோடு எக்காரியத்தையும் செய்தல் கூடாது. தேவனுக்கு நாம் பிள்ளைகள். அவர் நம்மை நேசிக்கிறார். நாமும் அவரை முழுமனத்தோடு நேசிக்க வேண்டும். இச்சிந்தையோடுதான் நாம் எதையும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், அதன் பலனை நாம் பெறுவோம். மோசேயைப் போல இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருப்போம். பவுலைப்போல் அதிகமாக உழைப்போம். நான் அல்ல, என்னில் உள்ள தேவகிருபை தான் என்று மனதாரச் சொல்லுவோம். தேவகிருபையை உள்ளத்தில் அனுபவிக்கிறவர்களாக, எப்பொழுதும் அவரை நேசித்து, அவருக்காகப் பக்திவைராக்கியம் கொண்டவர்களாக, நற்கிரியைகளைச் செய்வதில் இறங்குவோம்.

நான் பிழைப்பது உமக்கென்று
உம் முகத்தையே என்றும் நோக்கி
என் செயலிலெல்லாம் என்றும்
நான் உம்மையே சேவித்திட அருளும்.

உங்கள் இருதயம் துவள வேண்டாம்

அக்டோபர் 15

“உங்கள் இருதயம் துவள வேண்டாம்” உபா. 20:3

உன் நாள்களைப்போலவே உன் பெலனும் இருக்கும் என்னும் வசனத்தை நினைத்துக்கொள். என் கிருபை உனக்குப் போதும் என்று கூறிய ஆண்டவரை நினைத்துப்பார். ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய், என்று சொன்ன தேவனின் வல்லமையைப் பார். கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவெட்டார் என்ற கர்த்தருடைய வாக்குறுதியை மறவாதே. நான் ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று தாவீதரசனைப் போல் உணர்ச்சியுடன் கூறு.

துவண்ட உன் ஆத்துமா தேவனின் செயலை நம்பட்டும். சோர்ந்து போகிறவனுக்கு அவர் பென் கொடுத்து, சத்துவம் இல்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்றும் கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையால் பெலன்படு என்றும் பவுலடியார் கூறியதைச் செய். நீ கலங்க வேண்டாம். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. சத்துருக்களுக்குத் தண்டனை கொடுத்தாயிற்று. உனது பரமவீடு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறதுது. உனக்குத் தேவையானவை எல்லாம் உறுதியாக உனக்குக் கிடைக்கும். ஆண்டவர் உனக்காக அக்கறை கொள்கிறார். உன் பரமபிதா உன்மீது கரிசனை கொண்டவர். நடப்பவை அனைத்தும் உன் நன்மைக்காகவே நடக்கிறது. எதற்கும் நீ அஞ்சத்தேவையில்லை. மனம் துவண்டு போகத் தேவையில்லை. விசுவாசத்துடனிரு. அவர் உன்னை எல்லாத் தீங்கினின்றும் காப்பார். உனக்குத் தெரியாத பலத்த காரியங்களை அவர் உனக்காகச் செய்வார். நீ மனம் துவள வேண்டாம்.

என் வல்லமையுள்ள நேசர் இயேசு
என் நேசர் உண்மையுள்ளோர்,
என்னைக் கடைசி மட்டும் காப்பார்
எனக்குத் தம் வீட்டைத் தருவார்.

முடிந்தது

அக்டோபர் 14

“முடிந்தது” யோவான் 19:30

எவைகள் முடிந்தன? ஆண்டவருடைய பாடுகள் முடிந்தன அவருக்கு முன்கூட்டியே உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் முடிந்தன. அவருடைய துன்பங்கள் முடிந்தன. பூலோகத்தில் அவர் செய்ய வேண்டியிருந்த ஊழியம் முடிந்தன. மக்களுக்கு அவர் செய்ய வேண்டியிருந்த பணிகள் முடிந்தது. பாவிகளை நீதிமான்களாக்ககச் செய்ய வேண்டிய கிரியைகள் முடிந்தன. நியாயப்பிரமாணம் நிறைவேறி முடிந்தது. பாவத்திற்கு நிவாரண பலியாய்ச் செய்ய வேண்டிய கடமைகள் முடிந்தன.

சாத்தான் முறியடிக்கப்பட்டான். சாபங்கள் நீக்கப்பட்டன. மேய்ப்பனின் இரத்தத்தால் ஆடுகள் பாவமறக் கழுவப்பட்டாயிற்று. சந்தோஷத்திற்கும், சமாதானத்திற்கும் இரட்சிப்புக்கும் நித்திய அஸ்திபாரம் போடப்பட்டது. சகல பாவங்களையும் கழுவிச் சுத்தப்படுத்தும் பணி ஆரம்பமாயிற்று. நமக்காகப் பரிந்து பேசும் பிரதான ஊழியம் கிடைக்கப்பெற்றது. மரணத்தின்மீது வெற்றி ஏற்பட்டது. உலகம் நித்திய ஜீவனை அடைய ஜீவ நதி ஊற்றாகப் புறப்பட்டது. அனைத்தையும் சேர்த்துக் கூறவேண்டுமானால், பிதாவே எல்லாப் பணிகளையும் செய்து முடித்தார். சமாதான உடன்படிக்கையைச் செய்தார். நமக்குப் பெரிய இரட்சிப்பை உண்டுபண்ணினார். பிதாவின் காரியங்களைத் தேவ குமாரன் பூமியில் செய்து முடித்தார். பிதாவை மகிமைப்படுத்தினார். எனவே அவர் முடிந்தது என்கிறார். நமக்கிட்ட கட்டளைகளைச் சரியாக நாமும் செய்து முடிப்போமாக.

முடிந்த தெனக்கூறியே
ஆண்டவர் இயேசு மரித்தார்
மீட்பை நிறைவேற்றியே
சாத்தானை வென்றார்.

கர்த்தாவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்

அக்டோபர் 13

“கர்த்தாவே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்” ஆப. 3:2

தேவன் எப்போதும் தம்முடைய கிரியைகளுக்குப் புத்தியிரளிக்க வல்லவர். அவர் இச்செயலைத் தொடங்கி, அதை நடத்துபவர். அதைத் தாமாகவே முடிக்கவும் வல்லவர். தம்முடைய கிரியைகளைப் பல உபகரணங்களைக் கொண்டு செய்து முடிக்க வல்லவர். நாம் எழும்புதல் அடைய வேண்டும் என்று நமக்குக் கூறகிறார். அவ்வாறு செய்ய நம்மைத் தூண்டிவிடுகிறார். நாம், பல நேரங்களில் அவருடைய பாதத்தருகில் அதிக நேரம் செலவிட மறந்து விடுகிறோம். அவரின் சமுகத்தில் அதிகம் ஜெபிக்காமல் இருந்து நேரத்தை வீணாக்கி விடுகிறோம். ஆனால், அவர் சமுகத்தில் அதிக நேரம் செலவிடும் பொழுது ஒரு வேகத்தையும் தைரியத்தையும் பெறுகிறோம். அப்போது அந்தத் தீர்க்கன் சொன்னதைப்போல் உம்முடைய ஜனங்கள் உம்மில் மகிழும்படிக்கு எங்களைத் திரும்பவும் உயிர்ப்பிக்கமாட்டீரா என்று நாமும் சொல்லலாம்.

கர்த்தர் தமது கிரியைகளை உயிர்ப்பிக்கும்போது நம்முடைய விசுவாசத்தைப் பெலப்படுத்துவார். நமது நம்பிக்கையை வளர்ப்பார். நமது அன்பிற்கு அனல் மூட்டுவார். தாழ்மையைக் கற்றுக்கொடுப்பார். நமது பக்தி வைராக்கியத்தை உறுதிப்படுத்துவார். நம்முடைய எழுப்புதலின் ஆவியைத் தூண்டிவிடுவார். அப்போது ஜெபம் நமக்கு இனிமையாகும். ஆலயம் அருமையாயிருக்கும். சபையில் தேவ மக்கள் மகிழ்ச்சியோடு உலாவும் நந்தவனம்போல் இருக்கும். வசனம் விருத்தியாகும். மோட்சத்தையே நாம் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருப்போம். தேவன் நம்மை என்றும் உயிர்ப்பிக்க வல்லவராகக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உயிர்ப்பிக்கும் ஆவியானவர் நம்மை அவரண்டை நேராக நடத்துவார்.

உமது தயவினாலே
எம்மை உயிர்ப்பியும்
நாங்கள் ஒளிவிட்டெழும்ப
கிருபை பாராட்டியருளும்

நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன்

அக்டோபர் 13

“நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன்” யோவான் 8:12

இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வராதிருந்தால், இவ்வுலகம் பாவம் நிறைந்து இருண்டிருக்கும். பாவம் நோய், கொடுமை, அறிவீனம் நீங்கு போன்றவைகளுக்கு அடிமைகளாகவே மக்கள் வாழ்ந்திருப்பார்கள். ஏழு திரிகள் கொண்ட ஒரு விளக்குத்தண்டை யூதர்கள் தங்கள் தேவாலயத்தில் வைத்திருப்பார்கள். அது தேவாலயத்திற்கு மட்டும் ஒளி வீசும். ஆனால் இயசு கிறிஸ்துவோ உலகத்திற்கே ஒளியாய் இருக்கிறார். புற ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும் அவர் வந்தார். அவரில் பூரண ஒளி உண்டு. அது என்றுமே அணையாமல் எப்போதுமே பிரகாசித்துக்கொண்டிருக்கும். அவர் தம்முடைய வசனத்தின்மூலம் ஒளிவீசுகிறார். தம்முடைய ஆவியானவரைக் கொண்டு நம் உள்ளத்திற்கு ஒளிதருகிறார். அவர் வீசும் ஒளியினால் பாவிகள் மன்னிப்புப் பெறுகிறார்கள். அவருடைய ஒளியில் வெளிச்சம் காண்கிறார்கள்.

அவர்கள், அவரையே தங்கள் தெய்வமாகக் கொண்டிருப்பதால், வெட்கமடையார்கள். ஜீவ ஒளியைப் பெறுகிறார்கள். பிசாசின் கண்ணிகளுக்குத் தப்பி அவர்களால் நடக்கமுடிகிறது. அவர்கள் பாவம் செய்யாது வாழவே விரும்புகிறார்கள். ஞானத்தோடும் தெய்வ பயத்தோடும் நடக்க முயற்சிக்கிறார்கள்.

அன்பானவரே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெளிச்சத்தில் நீர் நடக்கிறீரா? அவருக்காக ஒளி வீசும் சாட்சியாக நீர் வாழ்கிறீரா? மற்றவர்களை இவ்வொளிக்கு நடத்துகிறீரா? உமக்கு அவருடைய ஒளி கிடைத்துள்ளதா? இல்லையானால், அவரிடம் வந்து ஒளியைப் பெற்றுக்கொள்ளும். உமக்கு ஒளிதேவை. அதைத் தரும்படி இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிக்கொள்ளும்.

ஜீவ ஒளியே, உம் ஒளி தாரும்
உம் ஒளியால் என் உள்ளம் மிளிரும்
உம் ஒளியால் என் வழி காண்பேன்
அதில் என் வாழ்வு பிரகாசிக்கும்.

அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்

அக்டோபர் 11

“அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்” உன். 6:3

விசுவாசிகள் லீலி மலர்களுக்கு ஒப்பிடப்பட்டுள்ளார்கள். இம் மலர்கள் வெளிகளில் வளர்வன அல்ல, தோட்டத்தில் பயிரிடப்படுபவை. தேவ பிள்ளைகள் அவருடைய தோட்டத்தில் வளர்க்கப்படுகிறார்கள். அவர் அவர்களை அதிகம் நேசிக்கிறார். எப்பொழுதும் அவர்களைச் சந்தித்து உரையாடி அவர்கள் நடுவில் உலாவுகிறார். இந்தத் தோட்டத்தில் உள்ள தேவ பிள்ளைகளின், ஜெபங்கள், துதிகள், சாட்சிகள், செய்யும் ஊழியம் ஆகியவை தேவனுக்கு மிகவும் பிரியம். அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தும்போது, அவரின் குரலை அவர்கள் கேட்கும்போதும் விசுவாசிகள் மிக மகிழ்ச்சிகொள்ளுகிறார்கள்.

இது ஓரு விசுவாசியின் உயர்ந்த தன்மையைக் காட்டுகிறதல்லவா? தொடுகிற எவரையும் காயப்படுத்தும் முள்ளைப்போலவோ, எதிரியையும் எவரையும் தாக்கும் கொடிய விலங்குபோலவோ இல்லாது, இவர்கள் லீலி மலர்களைப் போன்று உயர் பண்புடையவர்கள். உள்ளான அழகும், நற்குணங்களாகிய நறுமணமும் கொண்டு யாவராலும் விரும்பப்படுகிறார்கள்.

நண்பனே, நீ எவ்வாறு இருக்கிறாய்? உன் விசுவாச வாழ்க்கை நறு மணத்துடனுள்ளதா? பிறருக்கு தேவ சாட்சியாக வாழ்கிறாயா? எவ்விடத்திலிருப்பினும் ஒளி வீசும் சுடராய் நீ விளங்க வேண்டும். பலருக்குப் பயன்படும் பாத்திரமாக நீ இருக்க வேண்டும். மணம் வீசும் லீலி மலராகத் திகழ வேண்டும். அப்பொழுதுதான் உன் நேசர் உன் நடுவில் வந்து மேய்வார். உன்னோடு உரையாடுவார். உன்னுடனேயே அவர் தங்கியிருக்கும்படிடி அவரை வருந்தி வேண்டிக்கொள். அவர் உன் பிரியமான பிரியா நேசராயிருப்பார். நீ வருந்தி அழைத்தால் அவர் வருவார்.

உம் வல்லமையால் என்னை
உம்முடையவனாக்கும்
உம் லீலி மலர்களைப்போல்
உமக்குக் காத்திருக்கச் செய்யும்.

முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்

அக்டோபர் 10

“முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்” எபி. 10:32

நடந்து முடிந்த காரியங்களைத் திரும்பிப்பார்ப்பது அதிக பலனைத் தரும். நமந்து முடிந்த காரியங்களை நாம் இன்னு தியானிப்பது நல்லது. நமது நாடு முற்றிலும் இருண்டு, சிலை வணக்கத்திலும் அவ பக்தியிலும், கீழ்ப்படியாமையிலும், பாவத்திலும் வளர்ந்துள்ளது. இவைகளின் மத்தியில் தேவன் நம்மைத் தம்முடைய பிள்ளைகளாகத் தெரிந்துக்கொண்டார். முன்னால் நாம் பிசாசுக்கும் பாவத்திற்கும் அடிமைப்பட்டிருந்தோம். சாத்தானால் ஆளப்பட்டோம். வழிதவறி உலகப்பற்றுள்ளவர்களாக வாழ்ந்து வந்தோம். தேவனோ நம்மேல் இரங்கிக் கிருபையால் நம்மைத் தெரிந்துகொண்டார். பாவத்திலும் அக்கிரமத்திலும் முழ்கிக் கிடந்த நம்மை உயிர்பித்துக் கிறிஸ்துவுடனே சேர்த்துக் கொண்டார். அன்று இரட்சகர் நம்மை நினைத்ததால், இன்று அவரை நாம் இனியவராக அறிகிறோம். சுவிசேஷம் நம்மைக் தேடி வந்தது நமக்கு எத்தனை பெரும் பேறு.

தேவன் நம்மைத் தெரிந்துகொண்ட அந்த நாள் ஆனந்த நாள். அவருடைய ஆலயம் நம்கு இன்பமான வாசஸ்தலமாக மாறியது. ஆத்துமாவே, உனது இன்றைய நிலை யாது? ஆண்டவரைப் பற்றிய பக்தி வைராக்கியம் இன்று குறைந்திருக்கிறதா? வேதத்தின்மேல் முன்போல் வாஞ்சையாயிருக்கிறாயா? தேவ ஊழியத்தில் பங்குகொள்கிறாயா? உனது ஜெப வாழ்க்கை முன்னேறியுள்ளவதா? ஆத்துமா பாரம் உனக்கு உண்டா? ஆவிக்குரிய காரியங்களில் அனல்குன்றிவிட்டாய். முந்தைய நாள்களை நினைத்துக்கொள். ஆதி அன்பை விட்டுவிடாதே. கர்த்தர் உன்னைப் போஷித்து நடத்தினார். உன்னைத் தூய்மைப்படுத்தினார். இன்று உன்னை உன் முந்தின நாள்களை நினைத்துப் பார்க்கச் சொல்லுகிறார்.

முந்தின நாள்களிலெல்லாம்
முனைப்பாய்க் காத்து வந்தீர்
பிந்திய காலத்தில் பின் வாங்கிப்போன
பாவியென்னைத் திருப்பியருளும்.

இஸ்ரவேலில் நம்பிக்கை

அக்டோபர் 09

“இஸ்ரவேலில் நம்பிக்கை” எரேமியா 14:8

தேவன் இஸ்ரவேலின் நம்பிக்கைக்குக் காரணர். அந்த நம்பிக்கை அவருடைய ஆவியானவராலும், அவருடைய வசனத்தினாலும் உண்டாகிறது. வாக்கில் அவர் உண்மையுள்ளவராதலால், அவருடைய வாக்கிலும் ஆழமான கருத்துள்ள நித்திய வசனங்களிலும் நம்பிக்கை கொள்ளவேண்டும். இஸ்ரவேல் கர்த்தரை நம்புகிறான். தேவ பிள்ளைகள் அவரை நம்பியிருப்பார்களாக. கர்த்தரிடத்தில் கிருபையும், திரளான மீட்பும் உண்டு. மனிதனை நம்புவதில் பயன்யாதும் கிடையாது. மனிதன் பெலவீனன். மாறக்கூடியவன், உண்மையற்றவன். சுயநலக்காரன். அவனை நம்பாதே, கர்த்தரோ பெரியவர். உயிர் நண்பர், மன்னிப்பளிப்பவர், ஞானத்தோடு நடத்துபவர், கிருபையாகக் காப்பவர், இரக்க உருக்கம் உள்ளவர், மாறா அன்புள்ளவர். ஆகவே அவரையே நம்பு.

அவருடைய கிருபை நமக்குப் போதும். அவருடைய பெலன் நமக்குப் பூரணமாய்க் கிடைக்கும். அவர் இஸ்ரவேலின் கன்மலையாக நம்பிக்கைக்குரியவர். உறுதியானவர். அவரே அடைக்கல பட்டணமானவர். எனவே, ஆபத்துக்காலத்தில் அவரே நமக்கு ஒதுக்கிடமானவர். ஜீவ ஊற்றாகிய அவரில் நம் தாகம் தீர்த்துக்கொள்ளலாம். அவர் பாவத்தினின்று நம்மை இரட்சிக்கும் இரட்சகர். ஆதலால் அவரிடம் போவோம். அவரை நம்புவோம், அவரில் விசுவாசம் வைப்போம்! யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் தன் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். எனவே, இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. அவரை உன் முழுமனதோடும், முழுப்பெலத்தோடும் நம்பு. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்.

இஸ்ரவேல் நம்பும் கர்த்தாவே
என் வேண்டுதல் கேட்டிடும்
எத்துன்பத்திலும் எனைக்காப்போரே,
என் முழுமையும் உம்மையே நம்பும்.

Popular Posts

My Favorites

என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது

பெப்ரவரி 17 "என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது." சங். 119:25 இப்படி சரியான அறிக்கை செய்வது சாதாரணமானாலும், மிக உண்மையானது. உலகம் வெறும் மண். அதன் பணமும் பதவிகளும் மண்தான். மேலான இராஜ்யத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது...