Home Blog Page 21

நான் என்னை அருவருக்கிறேன்

அக்டோபர் 24

“நான் என்னை அருவருக்கிறேன்” யோபு 42:6

தேவன் எவ்வளவாக தம்மை தெரியப்படுத்துகிறாரோ, அவருடைய ஆவியானவர் எவ்வளாக நம்மில் கிரியை செய்கிறாரோ, அவ்வளவாக நாம் நம்மைத் தாழ்த்த வேண்டும். தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிறவர்கள், தேவனோடு நெருங்கி வாழ்வது என்பதை உணராதவர்கள். நாம் தேவனோடு நெருங்கி வாழ்ந்தால், நம்முடைய சரியான நிலையை அறிந்து கொள்வோம். தேவனுக்குத் தூரமாய் இருக்கும்பொழுது நாம் நம்மைக் குறித்தே மிகப்பெருமையாக யோசித்துக்கொள்ளலாம். ஆனால், அவரின் முன்னிலையில் வந்தடைந்தால், நாம் அழகானவை என்றெண்ணியதெல்லாம் அவலட்சணமாக நமக்குத் தோன்றும். நாம் அழுக்கானவர்கள் என்று உள்ளபடியே உணருவோம். நாம் ஒன்றுமில்லை என்று தெரிந்துகொள்வோம்.

யோபு தற்பெருமை பாராட்டித் தேவனோடு வழக்காடினான். அவன் தேவனுக்கு அருகில் வந்தவுடன் அவனுடைய சிந்தனைகள் முற்றிலும் மாறி, என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால், நான் என்னை அருவருத்து, தூளிலும், சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். நாம் நம்மைப் பாவிகள் என்றும், தீய வழியில் நடப்பவர்கள் என்றும் எண்ணி நம்மையே அருவருக்கலாம். நம் நேசர் நம்மை இரட்சிக்க வலிமையற்றவர். விருப்பமில்லாதவர் என்றும் நாம் கூறலாம். ஆனாலும், தேவனுக்குமுன் நம்மை நாமே வெறுத்துத் தாழ்த்தும்போதுதான் தேவகிருபை நமக்கு மேன்மையாகத் தோன்றும். கிறிஸ்துவை நாம் ஒப்பற்றவராய் எண்ணுவோம். நாம் நம்மை வெறுத்து, தாழ்த்தி தேவனை உயர்த்துவோம்.

நான் என்னை வெறுக்க
உம்மாட்சி எனக்குக் காட்டும்,
உம்மைப் பார்த்து நான்
என் தாழ் நிலை அறிவேன்.

பரிசுத்த ஆவியில் பலத்தினாலே

அக்டோபர் 23

“பரிசுத்த ஆவியில் பலத்தினாலே” ரோமர் 15:13

பரிசுத்த ஆவியானவர் தெய்வத் தன்மையுள்ளவர். பிதாவுக்கும் குமாரனுக்கும் வல்லமையிலும், மகத்துவத்திலும், மகிமையிலும் ஒப்பானவர். இவர் கிரியை செய்வதில் வல்லவர். இவரது கிரியை இல்லாவிட்டால் இரட்சிப்பு இல்லை. அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்துக்கிடக்கிற நமக்கு அவர்தான் மறு உயிர் அருளுகிறார். நாம் அறியாமையினால் கலங்கி நிற்கிறபோது அவர்தான் நமக்குப் போதிக்கிறார். பாவத்தால் கெட்டுப்போயிருக்கிற நம்மை அவர்தான் தூய்மைப்படுத்துகிறார். நாம் சோர்ந்து மனமடிவாக இருக்கும்பொழுது நம்மைத் தூய ஆவியானவர் ஆற்றித்தேற்றுகிறார். ஜெபிக்க நமக்கு உதவி செய்து நமக்காகப் பிதாவினிடத்தில் பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார். தேவனுடைய உயர் பண்புகள் நம்மில் மிளிரும்படி செய்கிறார். நமக்கு வல்லமையைத் தருகிறார். அது மங்கும்போது, அதைத் தூண்டிவிட்டு அதைப் பயனுள்ளதாக்கினார். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கு அவர் சாட்சி கூறி, மீட்கப்படும் நாளுக்கென்று நம்மை உறுதியாக்குகிறார்.

நாம் அவருடைய கைகளின் கிரியை. அவர் வாசம் செய்யும் தேவாயலம். அவரே நம் போதகர். ஆறுதல் அளிக்கிறவர். நமக்காகப் பரிந்து பேசுகிறார். அவருடைய வல்லமையே தேவ வசனத்தை அதிகம் பலனுள்ளதாக்குகிறது. கிறிஸ்து இயேசுவைப்போல நம்மை மாற்றுகிறவர் தூய ஆவியானவரே. அவரின் உதவி நமக்கு எப்பொழுதும் தேவை. நாம் இடைவிடாது அவரைப் பற்றியிருக்க வேண்டும். கிறிஸ்து நாதரின் நீதியைக் கொண்டு நம்மைக் கிறிஸ்துவோடு ஒப்புரவாக்குகிறார். இன்றையத் தேவை தூய ஆவியானவர் தரும் இந்த அனுபவம்தான்.

தேவாவியே, நீர் வாருமே
வந்தென்முன் தங்கிடும்
பயம் இருள் நீக்கியே
அன்பால் எம் இதயம் நிரப்பும்.

மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?

அக்டோபர் 22

“மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?” பிர. 6:12

உலகக்காரியங்களில் மூழ்கியிருப்போருக்கு இக்கேள்வி வருத்தத்தைக் கொடுக்கும். தேவனுடைய செயல்கள்தான், இதற்கும் பதில் அளிக்கக்கூடும். சில நேரங்களில் வாழ்வும், சில நேரங்களில் தாழ்வும் நலமானவை. சில நேரங்களில் உடல் நலம் நல்லது. சில நேரங்களில் உடல் நலக்குறைவும் நலமாகும். பூமியிலே சில நேரங்களில் காரியம் கைகூடாமையும், சில நேரங்களில் கை கூடுதலும் நலமாயிருக்கும். நாம் அதிகமாக விரும்பும் காரியங்தான் நமக்குத் தீங்கு ஆகக்கூடும். தேவன் நம்மைத் தடுத்து, நம்மைவிட்டு எடுத்து விடும் காரியம் நமக்கு நன்மையாக இராது.

நமக்கிருப்பது எதுவோ அதை நாம் சரியானபடி பயன்படுத்திக் கர்த்தருடைய மகிமைக்கு அதைப் பயன்படுத்துவோமானால், அது நன்மையாகவே இருக்கும். நமக்கு நாம் மகிமை தேடாமல், தேவனுக்கு மகிமையைத் தேடும்பொழுது அது நன்மையே ஆகும். அன்பானவர்களே நீங்கள் உங்களுக்கு இல்லாததொன்றைத் தேடி அதையே நாடுவீர்களானால் அது தீமையாகவே முடியும். தேவ சித்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய வசனத்தின்படி செயலாற்றுவதே நன்மையைத் தரும். தினமும் விசுவாசத்தினால் இயேசுவோடு ஜெபம்பண்ணி, தேவனோடு சஞ்சரித்து, பரலோகத்தில் உங்களுக்குச் செல்வங்களைச் சேமித்து வைத்து, நம்மைச் சூழ்ந்த யாவருக்கும் நன்மை செய்ய முயற்சிப்பதே மிகவும் நல்லது. இவ்வுலகில் நன்மையைத் தேடுவதில் கவனமாய் இருப்போம். இந்த உயிர் இருக்கும்பொழுதே தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதை நாடித்தேடுவோம்.

கர்த்தர் என் தந்தை, எனக்கு
நலமானதையே அவர் தருகிறார்
இவ்வுலகை விட்டுச் செல்கையில்
தருவார்மோட்ச பாக்கியம்.

நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம்

அக்டோபர் 21

“நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம்” ரோமர் 14:8

கர்த்தர் தமக்கென்று சொந்தமான ஒரு ஜனத்தை வைத்திருக்கிறார். அவர்கள் மற்றெல்லாரையும்விட மாறுபட்டவர்கள். கர்த்தரே அவர்களைத் தெரிந்து கொண்டு, தமது இரத்தத்தால் அவர்களக் கழுவித் தூய்மைப்படுத்தினபடியால், அவர்கள் எல்லாரிலும் மேம்பட்டவர்கள். அவர்க அவர்களைத் தமது நித்திய அன்பினால் நேசிக்கிறார். அதனால் அவர்களைத் தமது பிள்ளைகளைப்போல நடத்துகிறார். தமது சிறப்பான செல்வங்களாக அவர்களை மதிக்கிறார். அவர்கள்மீது அன்பு செலுத்தி அவர்களோடு ஒன்றாகி விடுகிறார். தமது மணவாட்டியான அவர்களைப் பாதுகாக்கிறார். அவர்களைத் தமது கண்ணின் மணிகளாகப் பாவிக்கிறார்.

இந்தப் பாக்கியம் நமக்கும் உண்டு. நாம் கர்த்தருடையவர்கள். இதை நாம் அறிவோம். நாம் தூய ஆவியானவரால் உயிர்ப்பிக்கப்படுகிறோம். ஆண்டவரின் சிம்மாசனத்தின்முன் நிற்கத் தகுதியுள்ளவர்களாக்கப்பட்டோம். தமக்கு ஊழியம் செய்யவும், தமக்கென்று உழைக்கவுமே அவரால் நாம் பிரித்தெடுக்கப்பட்டோம். அவருடைய குடும்பத்தின் அங்கமாகி, அவருடைய வசனத்தின்படி நடந்து, அவருடைய மகிமைக்காக வாழ்கிறோம். அவருடைய உறவைப்பெற்ற நாம் அவரை நேசிப்பதனால் திருப்தியடைகிறோம். இதனால் நாம் மகிழ்வோம். இது நமக்குக் கிட்டிய பெரும் பேறாகும். அவருடைய பரிசுத்தவான்களோடு இணைந்து கொள்வோம். பூவுலகில் சிறந்தவர்கள் அவர்களே. அவருடைய வசனத்தை வாசித்து கேட்டறிந்து உள்கொண்டு, விசுவாசித்து அவைகளின்படி நடப்போம். துன்பம் வரும் நேரத்திலும், நாம் கர்த்தருடையவர்களாய் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

நான் உம் சொந்தம் இயேசுவே
இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம்முடையோனாம் என்னையே
கிருபை தந்து கடாட்ச்சியும்.

என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?

அக்டோபர் 20

“என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?” எரேமி. 32:27

சிருஷ்டிகரைவிட அதிகக் கடினமான காரியங்கள் சிருஷ்டிகளுக்கே உண்டு. சிருஷ்டிகரின் ஞானம் அளவிடமுடியாதது. அவருடைய வல்லமையைக் கணக்கிட முடியாது. அவருடைய அதிகாரத்திற்குட்படாதது ஏதுவுமில்லை. சகலமும் அவருக்குக் கீழானதே. அவர் யாவற்றையும் ஒழுங்காகவே ஏற்படுத்தியுள்ளார். கிரமமாக அவர் யாவற்றையும் நடத்துகிறார். அனைத்து காரியங்களையும் தம்முடைய சொந்த சித்தத்தின்படியே செய்கிறார்.

சில வேளைகளில் நாம் பல சிக்கல்களில் அகப்பட்டுவிடுகிறோம். மனிதர் உதவி செய்ய மறுத்து விடுகிறார்கள். நமது விசுவாசம் குறைகிறது. மனம் சஞ்சலப்படுகிறது. சோர்வடைந்து நாம் பயப்படுகிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் கர்த்தர் தலையிடுகிறார். நம்மைச் சந்தித்து என்னாலே செய்யக்கூடாத காரியம் ஒன்று உண்டோ? அதை என்னிடத்தில் கொண்டுவா. என்னை முற்றிலும் நம்பி உன்னை முற்றும் அர்ப்பணி. என் சித்தம் செய்யக் காத்திரு. அப்பொழுது நான் உன் காரியத்தைச் செய்து முடிப்பேன். அதை எவராலும் தடுக்க இயலாது என்கிறார்.

அன்பானவர்களே, உங்கள் கேடுகள், உங்கள் சோதனைகள் உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். உங்கள் தேவன் உங்களை விடுவிக்கக் கஷ்டப்படுபவரல்ல. உங்களுக்கு வரும் தீங்கை நீக்கி, உங்கள் துன்பங்களிலிருந்து உங்களை இரட்சிப்பார். உங்களது பெலவீனத்தில் அவருடைய பெலன் பூரணமாய் விளங்கும். கொடுக்கப்பட்ட இவ்வசனத்தில் கேட்கப்படும் கேள்வி, உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தட்டும். நம்பிக்கையை வளர்க்கட்டும். உங்களுக்குத் தைரியம் தரட்டும். ஜெபிக்க உங்களை ஏவி விடட்டும். உங்கள் பெலத்தையே நோக்குங்கள். பெலவீனத்தை அல்ல. விடுவிக்க வல்லு அவருடைய கிருபையைத் தேடுங்கள்.

என் தேவனால் ஆகாதது
ஒன்றுண்டோ? அவர்தம்
கிருபை எனக்கு
எப்போதும் போதுமன்றோ!

அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை

அக்டோபர் 19

“அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” புல. 3:22

நண்பனுடைய அன்பு ஒரு நாள் முடிந்துவிடும். உறவினரின் பாசம் முறிந்துவிடும். தாய் தன் குழந்தைக்குக் காட்டும் அன்பு மாறிப்போகும். ஆனால், தேவனுடைய இரக்கம் ஒருக்காலும் மாறாது. சொல்லிமுடியாத இந்த இரக்கத்திற்கு முடிவே இல்லை. அது வற்றாப் பெருங்கடல். மறையாக் கதிரவன். சிலவேளைகளில் அது இருண்டதுபோல் தோன்றும். அதினின்று நன்மை வராததுபோல் தோன்றும். ஆனால் அது எப்பொழுதும்போல் பிரகாசமுள்ளதாகவும் மேன்மையுள்ளதாகவே இருக்கும்.

நண்பரே, இன்று அவர் உனக்கு இரக்கம் காட்டியிருக்கிறார். இப்பொழுதும் உன்மீது உருக்கமான அன்பைக் காட்டியிருக்கிறார். தாராளமாகக் கிருபை அளிக்கிறார். அவர் தமது பிள்ளைகளிடத்தில் இரக்கம் காட்டுவதுபோல் எவருக்கும் காட்டுவதில்லை. ஆகவே, நீ எங்கிருக்கிறாய் என்பதைப் பார்த்துத் திரும்பு. வறண்ட பூமியையும், உலர்ந்த ஓடைகளையும் விட்டுத் திரும்பு. பயத்தையும், திகிலையும் விட்டுவிடு. தேவ இரக்கத்திற்காகக் காத்திரு. இயேசு கிறிஸ்து, தம்மைப் பின்பற்றிய மக்கள் உண்ண உணவில்லாதிருந்ததைக் கண்டு அவர்கள்மேல் மனதுருகினார் அல்லவா? உன்மீதும் அவர் மனதுருகுவார். உன் பலவீனங்களில் உன்னைத் தாங்குவார். உன் துக்கத்தை நீக்குவார். உனது ஆன்மாவை வலுப்படுத்துவார். தம்முடைய மகிமையில் உன்னைச் சேர்த்துக் கொள்ளுவார். ஏனென்றால், அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. இக்கூற்று மாறாத உண்மையானது. உனக்கும் எப்பொழுதும் அவருடைய இரக்கம் கிடைக்கும். வேத வசனம், அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை என்று கூறுகிறது. அது என்றும் பொய்யாகாது.

ஐயங்கள் பயங்கள் பிடித்தாலும்
கவலை என்னை வாட்டினாலும்
தேவ இரக்கம் என்றும் உள்ளதே
அவர் தயவால் அவற்றை வெல்வேன்.

கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்

அக்டோபர் 18

“கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்” சங். 30:9

நமது வாழ்க்கையில் எப்பொழுதும் நமக்குத் தேவ ஒத்தாசை தேவை. நமக்குச் சாயம் செய்பவர் கர்த்தரே. அவர் நமக்குச் சகாயம் செய்ய நாம் அவரைக் கருத்தால் வேண்டிக்கொள்ள வேண்டும். பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய வாக்குகளை நாம் நமது ஜெபங்களாக்க வேண்டும். உமது வாக்கின்படியே எனக்கு ஆகட்டும் கர்த்தாவே என்று ஜெபிக்கும்பொழுதுதான் நமது ஜெபம் சரியானதாகிறது. இப்பொழுதும்கூட கர்த்தாவே, நீர் என்குச் சகாயராய் இரும் என்று கருத்தாய் ஜெபிப்போம். அநேகர் விழுந்து போகிறார்கள். நீர் என்னைத் தாங்காவிடில் நானும் விழுந்துபோவேன். என் சத்துருக்கள் பலத்திருக்கிறார்கள். என் இருதயம் கேடானது. மனுஷனை நம்புவது விருதா. என்னையே நான் நம்புவதும் வீண் அகந்தையாகும். உமது ஒத்தாசை இல்லாவிடில் உமது கிருபை என்னை வந்தடையாது. ஆகையால் கர்த்தாவே எனக்குச் சகாயராயிரும் என்று ஜெபி.

எந்தக் கடமையிலும், எந்தப் போராட்டத்திலும், எந்தச் சோதனையிலும் கர்த்தருடைய உதவிதான் நம்மைத் தூக்கிவிடும். எந்த நேரத்திலும் அவருடைய சகாயத்தைத் தேடும் ஜெபம் நமக்கு ஏற்றதாகும். அந்த ஜெபம் மெய்யானதாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். கர்த்தர் நமக்குச் சகாயராயிருப்பதனால் நமது கடமைகளை நாம் செவ்வனே நிறைவேற்றுவோம். நம் ஜெபங்களுக்குப் பதில் கண்டடைவோம். எத்துன்பத்தையும் மேற்கொள்ளுவோம். சகல குறைகளும் தீரும். துன்பங்கள் இன்பங்களாக மாறும்.

கர்த்தாவே, நான் பெலவீனன்,
உம்மையே பற்றிப் பிடிப்பேன்
நீர் என் துணை, என் நண்பன்
நான் வெற்றி பெற்றிடுவேன்.

சர்வ வல்லவருடைய சிட்சை

அக்டோபர் 17

“சர்வ வல்லவருடைய சிட்சை” யோபு 5:17

தேவனுடைய பிள்ளை எவரானாலும் அவருக்குத் தேவனுடைய சிட்சை உண்டு. அவர் சர்வ வல்லவருடைய அன்பினால் சிட்சிக்கப்படுகிறார். தேவன் அதிக ஞானமாகவே எப்போதும் சிட்சிக்கிறார். தேவ கிருபை நமக்கு அதிகமாக விளங்கவும், நல்வழிகளில் நாம் வளரவும், கனிதரும் வாழ்க்கையில் விளங்கவும் நம்மை அவர் சிட்சிக்கிறதுண்டு. நம்மைத் தாம் நேசிக்கிறதினால்தான் கர்த்தர் நம்மைச் சிட்சிக்கிறார். ஆதலால், நமக்குத் துன்பங்கள் நேரிடுகையில் நாம் அவைகளைத் தவறாக எண்ணலாகாது. அவைகள் யாவும் இரக்கங்கள். நமது நன்மைக்காகவே வருகிறவை. அவைகள் நமக்கு அவசியம் தேவை. கிருபையும் இரக்கமும், நிறைந்தவர் நமது பரமபிதா. அவர் நமக்கு என்றும் தீங்கு நினையார், அனுமதியார்.

நமக்குச் சோதனைகள் வரும்பொழுது எக்குற்றத்திற்காகத் தேவன் நம்மைத் திருத்த ஆசிக்கிறார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவர் ஞானமாக நம்மைச் சிட்சிக்கிறார் என்பதை அறிக்கையிட்டு, அதை அவர் நமக்கு ஆசீர்வாதமாக மாற்ற வேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். கர்த்தர் விரும்பும் கோல் துளிர்த்துப் பூத்துக் கனிகொடுக்கும். இளக்காரம் பெற்ற அடிமையாக இருப்பதைவிட, சிட்சை பெற்ற பிள்ளையாயிருப்பது நலம். இக்காலத்தில் நமக்கு நேரிடும் சிட்சை இனிவரும் நன்மைகளுக்கும், மகிமைக்கும், கடமைகளுக்கும் நம்மை நடத்தும். தேவனுடைய சிட்சை எல்லாம் நலம்தான். நாம் அவற்றால் நன்மையையே பெறுகிறோம். இன்று சிட்சை நமக்குத் துன்பமாய் காணப்பட்டாலும், இனிவரும் காலங்களில் அதனால் நமக்கு நீதியும், சமாதானமும் கிடைக்கும்.

கர்த்தாவே, என் துன்பத்தை
இன்பமாக மாற்றியருளும்
உம் சிட்சை ஆசீர்வாதமே
அதென்னைத் தூய்மையாக்கும்.

நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்கள்

அக்டோபர் 16

“நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்கள்” தீத்து 2:14

தேவனுடைய சுத்தக் கிருபையால் நாம் இரட்சிக்கப்பட அவருடைய மகிமையைத் தேட வேண்டும். நற்கிரியைகளுக்காகத்தான் நாம் கிறிஸ்து இயேசுவில் புது சிருஷடிகளாக்கப்பட்டோம். தேவனுடைய செயல்களில் சிருஷ்டிகளாகிய நாம் நன்மைகளைப் பெறக் கவனத்துடனிருக்க வேண்டும். நற்கிரியை செய்தால் மட்டும் போதாது, அதற்காகப் பக்திவைராக்கியமும் உள்ளவர்களாயிருக்க வேண்டும். அப்படியே மற்றவர்களையும் உற்சாகப்படுத்த வேண்டும். நமக்காகத் தம்மையே கொடுத்தவருக்கு நாம் எதையும் செய்யத் தயங்கக்கூடாது. நம்முடைய எண்ணங்களும், செயல்களும் தேவ வசனத்தால் நடத்தப்பட்டு, அவருக்கே மகிமையைக் கொண்டு வருகிறவைகளாக இருக்க வேண்டும்.

தேவன் நம்மைத் தெரிந்து கொண்டார் என்று நாம் பெருமையடைதல் கூடாது. நாம் பிதாவின்மேல் வைத்திருக்கும் அன்புக்குச் சமமாக அவருடைய மக்களுக்குப் பணிசெய்வதில் தவறக் கூடாது. தேவன் நமக்கு எதையும் செய்வார் என்ற எண்ணத்தோடு எக்காரியத்தையும் செய்தல் கூடாது. தேவனுக்கு நாம் பிள்ளைகள். அவர் நம்மை நேசிக்கிறார். நாமும் அவரை முழுமனத்தோடு நேசிக்க வேண்டும். இச்சிந்தையோடுதான் நாம் எதையும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், அதன் பலனை நாம் பெறுவோம். மோசேயைப் போல இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருப்போம். பவுலைப்போல் அதிகமாக உழைப்போம். நான் அல்ல, என்னில் உள்ள தேவகிருபை தான் என்று மனதாரச் சொல்லுவோம். தேவகிருபையை உள்ளத்தில் அனுபவிக்கிறவர்களாக, எப்பொழுதும் அவரை நேசித்து, அவருக்காகப் பக்திவைராக்கியம் கொண்டவர்களாக, நற்கிரியைகளைச் செய்வதில் இறங்குவோம்.

நான் பிழைப்பது உமக்கென்று
உம் முகத்தையே என்றும் நோக்கி
என் செயலிலெல்லாம் என்றும்
நான் உம்மையே சேவித்திட அருளும்.

உங்கள் இருதயம் துவள வேண்டாம்

அக்டோபர் 15

“உங்கள் இருதயம் துவள வேண்டாம்” உபா. 20:3

உன் நாள்களைப்போலவே உன் பெலனும் இருக்கும் என்னும் வசனத்தை நினைத்துக்கொள். என் கிருபை உனக்குப் போதும் என்று கூறிய ஆண்டவரை நினைத்துப்பார். ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய், என்று சொன்ன தேவனின் வல்லமையைப் பார். கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவெட்டார் என்ற கர்த்தருடைய வாக்குறுதியை மறவாதே. நான் ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று தாவீதரசனைப் போல் உணர்ச்சியுடன் கூறு.

துவண்ட உன் ஆத்துமா தேவனின் செயலை நம்பட்டும். சோர்ந்து போகிறவனுக்கு அவர் பென் கொடுத்து, சத்துவம் இல்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்றும் கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையால் பெலன்படு என்றும் பவுலடியார் கூறியதைச் செய். நீ கலங்க வேண்டாம். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. சத்துருக்களுக்குத் தண்டனை கொடுத்தாயிற்று. உனது பரமவீடு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறதுது. உனக்குத் தேவையானவை எல்லாம் உறுதியாக உனக்குக் கிடைக்கும். ஆண்டவர் உனக்காக அக்கறை கொள்கிறார். உன் பரமபிதா உன்மீது கரிசனை கொண்டவர். நடப்பவை அனைத்தும் உன் நன்மைக்காகவே நடக்கிறது. எதற்கும் நீ அஞ்சத்தேவையில்லை. மனம் துவண்டு போகத் தேவையில்லை. விசுவாசத்துடனிரு. அவர் உன்னை எல்லாத் தீங்கினின்றும் காப்பார். உனக்குத் தெரியாத பலத்த காரியங்களை அவர் உனக்காகச் செய்வார். நீ மனம் துவள வேண்டாம்.

என் வல்லமையுள்ள நேசர் இயேசு
என் நேசர் உண்மையுள்ளோர்,
என்னைக் கடைசி மட்டும் காப்பார்
எனக்குத் தம் வீட்டைத் தருவார்.

Popular Posts

My Favorites

சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற

https://youtu.be/_cgX9bHvpLQ?si=d3LI5Yy9WR3KvINk சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற தேவனே நமஸ்காரம் சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற தேவனே நமஸ்காரம் உத்தமராக நம்மை வழிநடத்தும் நல்ல இயேசுவே நமஸ்காரம் உத்தமராக நம்மை வழிநடத்தும் நல்ல இயேசுவே நமஸ்காரம் மனுமகன் அவதாரம் எடுத்து வந்தே உலகை காத்தவரே நமஸ்காரம் மனுமகன் அவதாரம் எடுத்து...