உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்
பெப்ரவரி 08
“உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்.” யோவான் 21:15
நான் எவ்வளவோ குறைவுள்ளவனாயிருந்தாலும், உம்மை அடிக்கடி துக்கப்படுத்தியும், உம்முடைய அன்புக்கு துரோகஞ்செய்தும் உம் வார்த்தைகளை நம்பாமலும், இவ்வுலகப்பொருளை அதிகமாய் பற்றிப்பிடித்தும், கொடியதும் அக்கிரமுமான கேடுபாடுகள் செய்தும், சில வேளைகளில் சாத்தானுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தபோதும் நீர் என் இருதயத்தை ஆராய்கிறீர். என் ஆத்துமாவின் அந்தரங்க கிரியைகள் எல்லாவற்றையும் பார்க்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேனா என்பதையும் நீ அறிவீர். உம்மையல்லாமல் திருப்தியடையக் கூடாத உரு வஸ்து என் உள்ளத்தில் புதைந்து கிடக்கிறதென்பதை நீர் அறிவீர். ஆதலால், உம்மை நினைத்து, உம்முடைய அன்பு என் உள்ளத்தில் ஊற்றப்படவேண்டுமென்று நாடி, உம் மகிமை என் ஆத்துமாவுக்குப் பிரசன்னமாக வேண்டுமென்று ஜெபித்து, எல்லாவற்றிற்கும் மேலாக நீர் என்னுடையவரென்றும் சொந்தம் பாராட்டி உம்மை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். உம்மை நேசிக்கிறபடியால் என் இருதயத்தில் பக்தி வைராக்கியம் கொண்டிருக்கிறேன். உம்மை நேசிக்கிறபடியால் உலகத்தை வெறுக்கிறேன். உம்மை விரும்புகிறபடியால் உமக்குப் பிரியமாய் நடக்க ஆசிக்கிறேன். எப்போதாவது உம்மை விட்டுப் பிரிந்தால் அதுதான் எனக்கு மனவருத்தம் கொடுக்கிறதேயன்றி வேறொன்றுமில்லை.
இன்னும் உம்மை அதிகம் நேசிக்க வேண்டாமா? உம்மைத் தியானிக்கும்போது ஆத்துமா ஆனந்தத்தால் பொங்கவேண்டாமா? எப்போதும் உம்மை நேசிக்கவும் எந்த நிமிடமும் உம் அன்பைத் தியானிக்கவும் உம்மேல் ஒரு பெரிய பாசத்தை வளர்ப்பியும் கர்த்தாவே.
என் அன்பு குளிர்ந்தது
என்பதே என் துக்கம்
நேசம் பெருகச் செய்யும்
நீரே என் துருகம்.