இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே
ஓகஸ்ட் 26
“இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே” யாக். 5:11
நம்முடைய துன்பங்கள் நமக்குச் சோதனைகள். ஒவ்வொருவனும் சோதிக்கப்படுவான். சோதனை நேரத்தில் அநேகர் சோர்ந்து போகிறவர்கள். சிலர் பின்வாங்கிப் போகிறார்கள். துன்பத்திற்குத் தக்கதாக மகிழ்ச்சியடைவோம் என்று மறந்து விடுகிறார்கள். தாழ்மைப்பட்டவன் பயனடைவான். கடினப்பட்டவன் அதை வெறுக்கிறான். துன்பத்தினால் சிலர் இரட்சகருடைய பாதத்தில் இழுக்கப்படுகின்றனர். சிலரோ அவரை விரோதிக்கின்றனர்.
கிறிஸ்தவனைப்போல துன்பத்தைத் தாழ்மையோடும், விசுவாசத்தோடும், திடனோடும், பொறுமையோடும், சகிக்கிறவன் பாக்கியவான். முறுமுறுக்காமல், கசந்துகொள்ளாமல் சகிக்கிறவன் பாக்கியவான். இவன் பிரம்பை அல்ல, அதைக் கையாடுகிறவரைப் பார்க்கிறான். கரத்தை மட்டுமல்ல, அடிக்கிற கரத்தின் மனதையும் பார்க்கிறான். இது ஒரு பாடம் என்றும் இது ஒரு சிட்சை என்றும் தண்டிக்கிறவர் தன் தகப்பன் என்றும் ஏற்றுக்கொள்கிறான். தண்டிப்பது அவருக்குப் பிரியம் இல்லை. நமக்குத்தான் பயன். அவர் பரிசுத்தத்தில் எனக்குப் பங்கு உண்டு. என்னைப் பரிசுத்தவானாக்கும்படி ஜெபம்பண்ணினேன். நான் மோட்சத்துக்குப் பாத்திரவான் என்பதற்கு அத்தாட்சி கேட்டேன். இதுவே அதன் பதில். ஆகவே, நான் முறுமுறுப்பது நியாயமா. பிதா எனக்குக் கொடுக்கும் பாத்திரத்தில் நான் பானம்பண்ணாமல் இருப்பேனா என்பான். இப்படிப்பட்டவன்தான் துன்பத்தைச் சகித்து, பொறுமையோடு அதற்கு உடன்படுவான்.
இவன்தான் பாக்கியாவன். துன்பங்களால் இவனுக்கு நன்மைவராமல் போகாது. நெடுங்காலமாய் அவன் துன்பப்படவும் மாட்டான்.
தேவ ஞானம் நடத்தும்
தேவ கிருபை தாங்கும்
ஒன்றும் அறியா பாவி நான்
தேவ சித்தம் என் பாக்கியம்.